மறுமொழிப் பெட்டிக்குள்ள எவ்வளவோ கூத்தெல்லாம் பாத்திருப்பீங்க. இங்க ரெண்டு நாளா நடந்த கூத்தைத் தொகுத்துப் போடுறேன்! அரைச்சு அரைச்சுத் தின்னுத் திகட்டினதை மறுபடியும் ஏண்டான்னு கேக்காதீங்க, படிக்கவும், வேணும்னா வெளியில கொண்டு போகவும் இது சுலபம், அதான். துண்டு துண்டாப் போட்டிருக்கலாம், அட போங்கப்பா எத்தனை நாள் இந்தக் கதைன்னு ஆகிப்போயிரும்கறதால மொத்தமாப் போட்டுட்டேன், மூச்சடக்கிப் படிச்சுக்கங்க!
இந்தக்கதைக்கு மூலம் கேட்டா எந்தச் சித்தருகிட்ட போயி நிக்கிறதுன்னு தெரியாதுங்க. மெய்யப்பன் போட்டதுல ஆரம்பிப்போம். அதைப் பின்தொடர்ந்து நானொன்னு போட்டேன். அந்தப் பதிவுல பாரி வந்து மறுமொழிப் பொட்டியத் தொறந்து ஒன்னு போட்டார், ரமணீதரன் ஒரு கேள்விக் கெக்கலிப்போடயும், பரி ஒரு
அளுவாச்சியோடயும் நிறுத்திக்கிட்டாங்க. நடுவுல வந்த பெருஞ்சித்து மெய்யப்பன் சிரிச்சுட்டு கஞ்சி செய்முறை எதுனா இருக்கான்னு கேக்கப்போக, அப்பதான் ஆரம்பிச்சது வினை. நானொரு பாட்டெடுக்க, எதிர்ப்பாட்டு மெய்யெடுக்க, ஆடிவந்த ரமணி அவருமொரு பாட்டெடுக்க, பாட்டுக்குப் பாட்டெடுக்க, அதுக்கெதிர் பாட்டெடுக்க, வந்த பாலாஜி, கார்த்திக்கு, செல்வராஜு, ஆளுக்கு நாலெடுக்க, நீங்களே பாத்துக்கங்க. ஆனா ஒன்னு சொல்வேன், யப்பா...என்னமா எழுதுறாங்க, முக்கியமா மெய்யப்பனும், ரமணியும். எல்லாருக்கும் மனக்கடல் ஆழமென்றாலும், இவர்கள் முங்கி முத்தெடுக்குற அழகே அழகு. நம்ம வீட்ல வந்து சக்கை போடு போட்டதற்கு கவிஞர்களுக்கோர் நன்றி. கைதட்டின பரி, மதி, சாரா, ஆச்சிமகன் எல்லோருக்கும் நன்றி. முடிந்தவரை நடுநடுவே வந்து விளக்குகிறேன்.
அப்புறம் இன்னொன்னு, இது எல்லாமே அப்பப்ப எழுதினவை, இதிலே இருக்கும் சொற்குற்றம், பொருட்குற்றம், இலக்கணக் குற்றம் அல்லாத்தையும் பின்னாடி போட்டுட்டுப் படிக்கவும். இது ஒரு அழகான புதுமையான அனுபவம்.
மெய்யப்பனின் கஞ்சி செய்முறைக் கேள்விக்கு நான் சொன்ன பதில்,
சு.வ:
மதத்துக் கொன்றாய் முறையொரு நூறிருந்தாலும்
கேளப்பா முக்கண்ணன் தாள்வணங்கிச் சொன்னேன்
கரைத்துக் கொதிப்பது மாவுக்குப்பதமாகும் நன்றே
கொதித்துக் கரைப்பதுவே பயறுக்குப் பதமாகும்
பாரப்பா தயிரும் ஊறுகாயும் உப்புக்குத் தோதாகும்
மெய்யப்பா தேங்காய்ப்பூயேலமுமே குணமாம் சக்கரைக்கு!
இதுக்கு மெய்யப்பனின் பதில்,
மெய்:
அண்டம் மாயமிக் காற்றடைத்த பிண்டம் மாயமென
தோண்டிக் கலயத்தைப் போட்டுடைத்த
ஆண்டிப் பண்டாரம் எல்லாம் மாயமெனப் பேசிவைத்த
தண்டப் பேச்சினிற்கே தக்கதொரு பதிலாய்த்தான்
மண்டி மரக்கறியும் மணமிகுந்த மாமிசமும்
பண்டம் பலகாரம் பக்குவமாய் சமைத்துவைத்து
உண்டிவளர்த்தாலே உயிரும் வளருமப்பா
கண்டே சொன்னது மந்திரத்திரு மூலரப்பா.
மந்திரத்திருமூலன் சொன்னமொழி படித்தேன் யான்
சுந்தர வடிவேலன் நீ சொல்லிவைத்தாய் கஞ்சிவழி.
சொல்லிவைத்த சங்கதியை செய்தே வடித்திடுவேன்
வடித்துவந்த கஞ்சியினைக் குடித்தேமகிழ்ந்திடுவேன்.
சு.வ:
அய்யா! சிரிச்ச சிரிப்புல பக்கத்து சீட்டுக்காரன் வந்துட்டான் :)
கலக்காக் கஞ்சிக் கட்டிக் களி
காக்கா மெய்யு மிடிச்சப் புளி
சீராய்ச் சொன்னாய் பித்துக்குளி-பெருஞ்
சித்தே உன்னால் சிரித்துக் களி.
இப்பதான் நம்ம கதையில சடாரென்ற திருப்பம். தந்தனத்தோம் என்று சொல்லியே...ஒடியற்கூழோடிச்செத்த ரமணி வாரார்.
ரமணி:
சித்தனென்று சொல்லி சிவசிவன்னு எதிர்பார்த்தா
குத்தமென்னு சொல்ல வச்சான் 'அப்பன்' - 'மகன்'
பித்தமென்று பாராமல் உப்புத்தயிரும் உவந்தான்
செத்தனென்று எண்ணிக் கலி/களி/கழி
குளிர் சுட்டுத்தின் வடகிழக்குச்சுப்பனும் அப்பனும்
இத்தனைநாள் உப்பா புளியா உண்ணச் சரியா
குத்தலா அரிசி குழைந்ததா கஞ்சியென்று துளி
துப்பியும் செப்பவில்லை பாரீர் -அருஞ்சூரர்
அத்தனையும் ஒளித்துவிட்டு அடிப்பிடித்த கஞ்சியை
வித்தகமாய் விதவிதமாய் எத்தனை நாழி
விற்றார் சுந்தரமெய்ச்சக்கையாய் இணையம்
விட்டோமா, கஞ்சிப் பக்குவம் விளக்குமென்றே
வேண்டிக் கை வெளித்தது பார் விளக்குமாறு.
கழியும் ஆண்டிப்பண்டாரம் தின்றொழித்த கஞ்சி
கலயம் வேண்டிப்பண்டாரம் விண்டொழித்த கஞ்சி
கலியும் நோண்டிப்பண்டாரம் நோய்ப்படுத்து கஞ்சி
தாண்டிப்பார் குளம் தாவி அருங்கூழுண்டு கலி
கழியும் கூனி இறால் மணக்கக் களி.
நுதல் வதங்க மேல் நொந்து நாள் நீங்க
குடல் முடங்க புத்தி பெயரப் புலம் வேறு
வத்தலுக்குப் போட்ட வாழைக்காயான உடல்
வெத்திலைமேல் வேகெண்ணையாகிச் சோர,
உட்கொண்டு உயிர்பெற்றலுக்குப் பேறாகும்
நொய்நோன்புக்கஞ்சிக்கும் நெய்நோய்க்கஞ்சிக்கும்
நூறுண்டு உண்/ள்நோக்கு வேறு.
இந்தப் போடு போட்டா யாருதான் நிப்பா, என் கஞ்சிக்கலயம் உருண்டோட, அடுத்ததாக அண்ணன் மெய்யப்பனை அழைக்கிறேன் என்று மெல்லப் பதுங்கினேன். இப்போது விளம்பர இடைவேளை மாதிரி மதியும், ரமணியும் கொஞ்சம் உரையாடினார்கள். அப்போது பாரி தன் முதற்கவிதையை நுழைக்கிறார்:
பாரி:
ஓடி ஓடி இங்கு நான் கஞ்சிகுடி காண வந்து
தேடித் தேடிப் போகவில்லை அப்பன் கேட்ட வேலன்சொன்ன
உள் நோக்கி(ய)முன்(ம்) இருந்த கஞ்சிச் சுமை கலம் காணா.
வெஞ்சீராய் ஒடியற்கூழோடு ஓடிச் செத்தானும்
சாகவில்லை கஞ்சிச் சுமை கலம் காண.
மெய்:
களமடித்த நெல்லும் கருத்த மலைமிளகும்
அளமறுத்த உப்பும் அளவான சுக்கும்
துளிர்த்த மல்லியிலையும் துளிகடுகு முளுந்தும்
தாளித்த தயிரும் சேர்த்தாலே தனிச்சுவைதான்
மா(ர்)டி கிராவென்று மதப்பாய் நீஇருக்கையிலே
நாடிவரும் பனி(ணி)யிங் குனக்கே இருக்குதப்பா
குளிர்விட்டுப் போவதற்கே குளிர்சுட்டுத் திங்கனுமே
தளிர்விட்டு வளரயிலே தண்ணி ஊத்தனுமே
மஞ்சம மர்ந்து மதுவருந்தி மயங்கவுமாசை
நெஞ்சமு ணர்ந்து ஞானவழியறிய வுமாசை
கஞ்சியும் கூழுமாசை கடவாய்மீசையுமாசை
இஞ்சி இடித்துத்தின்ன குரங்கெனவே நானிங்ஙே!!
ஒடியங்கூழென்ன ஓட்சுகஞ்சியென்ன
தடியடிப் பாவென்ன தடுத்தாளுந் தகையென்ன
இடியிடிச் சிரிப்பென்ன இரமணியின் பாவென்ன
கடிகார மணியென்ன.. கடந்ததே நாலரெயன்ன..
கட்டுவேன் என் பெட்டிபொட்டியை :)
ரமணிக்கு ஆஹா லட்டு, எசப்பாட்டுக்காளு! என்று வெறிகாண,
ரமணி:
மப்பென்ன? மா(ர்)டிகிராவென்ன?
மதர்த்த மார்பென்ன? மக்காள்!!
மழை தொப்பென்று பெய்யது உளம்
சொக்கச் சொக்க"வெனப் 'பொப்'பிசைத்தால்,
எக்குத்தப்பாகிப் போகும் எதிர்த்தாளம்
எனக்கென்பதனால், காளவாய்ப்பொத்திப்
பக்குவமாய்க் பருவேன் பழங்கூழ்; அடுத்தாற்போல்
ஐயவிழி அடங்கிச் சொருகுவேன் பார் மதியம்;
படிப்பென்ற பழம்போர்வைக்குட்
அடித்தளப்பார்த்ததெல்லாம் பல்லாண்டாய்,
பாடலும் படமும் பருகலும் பின் ஒடுங்கிப் படுத்தலுமே,
வேறென்ன சொல்ல? வெளியிலே வெகுவெயில்!
உள்ளோடும் ஏசி ஓயாதாம்! அருகிலே ரிமோட்டு
மேலே எவனோ நடமாடும் பிளாட்டு!
கீழே கார்ப்பட்டு! கண்முன்னே கார்ப்பார்க்கு!
ஆகாயம் அப்பப்போ தெரியும்! அதன்கீழே ஏதோ புள்!
காலக்குமிழுள்ளே அகப்பட்டுக் கிழப்பட்டு
கடைப்பட்டு கடிகாரமுள்ளேறி நகர,
முனகி முனகி மூச்சடைத்து மொத்துண்ண,
அக நோய்ப்பட்டு நெடுக நான் குடிப்பேன்
கைப்படு'பிழா'விலே பெய்கிறவேளை
நொய்கூழோ நொழுகஞ்சியோ
நீர்மோரோ வேறெதெதுவோ
ஆள்தின்னு ஊழ்வினையிதுவென்றால்,
அடிப்புண்ட பழம்பாண்டத்திலே
ஊத்துண்டதெல்லாம் உணவு;
உண்பதெல்லாம் உகவை;
உவத்தற்கேயாம் இவ்வுலகு.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! :)
சு.வ:
சொல்லுக்கூழைச் சுழற்றிவடித்தோய்
ஒடியக்கூழைவழித்துக் குடித்தொழித்தோய்
படியக்கூழைக் கும்பிட்டனையோ
குடிக்கக்கூழைக் காய்ச்சுமஞ்சட்டிக்கே?
கடலில் விழுகுது பரிதியின் கதிரே
சட்டியில் உறையுது காலைத் தயிரே
குடலில் இறையுது நேற்றைய பயறே
பொட்டியுள் சுருளுது மெய்யன் கயிறே.
ரமணி:
மெய்யன் கயிறென்ன கழுத்துக்கா, வயத்துக்கா?
நல்லரவம் கழுத்தறுத்தும் நஞ்சுண்ட மெய்யப்பன்,
கட்டுவானோ பெட்டி கூழன் பீட்பாக்ஸ் அறுவைக்கு..
வீட்டுக்குப் போவார்! வேகமாய்ச் சாப்பிடுவார்
- வெறுமரிசிநீர்க்கஞ்சி யென நீர் எண்ணிவேண்டா
மாங்காய்த்தொக்கென்ன புதினாத்துவையலென்ன
வந்த அத்தை கைப்பக்குவமே தனியென்று
ஒத்தி ஒத்தி ஒரு வண்டி உணவு மொத்தியபின்
எடுப்பார் கணிப்பெட்டி; ஏறுவார் மேல்மாடி;
படுக்கப்போவாரல்லர்; படிக்கவும் போவாரல்லர்!
மிடுக்காய் நெடுக்கக்கிடத்தி யதன் நெஞ்சைப் பிளந்து
முன் வேலைத்தளம் பொத்திச் சுத்திச்சென்ற பொட்டி
சத்தமின்றிக் கயிறவிழ்ப்பார்; அரவம் படமெடுக்கும்.
அட அங்கே கணணியை மெல்லக் கவனி...
இனி, இங்கிரவு முற்றுமுற்றாய் கொட்டும்
அரிசிக்கஞ்சிமேல் பஞ்சப்பட்டோன் பசிபோல,
முத்துமுத்தாய்ச் சித்தன் சோத்துப்பதிகம்.
பொய்க்கும் விடுவானா மெய்ச்சித்தன்
அகமும் புறமும் தின்/செஞ்சோத்துப்பாட்டு!
சு.வ:
பத்தினிவிட்டுப்போய் பட்டினிச்சாவானுக்குச்
செத்ததாசையெனச் சித்தமடங்கிடுதா
தொக்குந்தொகையலுமாய் வாயமுதூறுதே
வித்தாரமாய்ச்சமைக்க விடுமென்னைவீட்டுக்கே.
இப்ப கொஞ்ச நேரத்துக்கு யாரையும் காணலை, நான் வை ராஜா வைன்னு கூவிப்பாத்தேன். வந்தாரையா கார்த்திக் வந்தாரையா!
கார்த்திக்:
கஞ்சி சுவைத்ததென்ன நெஞ்சு நிறைந்த தென்ன
அஞ்சா மல்சொல்வேன் யான் மிஞ்சுது வாசனைதான்
கெஞ்சிக் கேட்கின்றேன் கொஞ்சம் சொல்வீரோ
கஞ்சிதான் செய்யும் விதம் கரம்பக்குடியாரே?
வாயிலே புகைவிட்டபடி கார்த்திக் தொடருகிறார்:
பத்தினிதான் போனாலும் பட்டினிதான் போகலையே
செத்ததாசை என்றாலே சித்தம் விழித்துளதே
சித்தம் கேட்குது உம்தவறொன்று மிலையே
சித்தக் கவனமுடன் சமைப்பீர் கரம்பக்குடியாரே!
கரம்பக் குடியாரே ஒரு கஞ்சிக் குடிவாரே
விரும்பிக் குடிப்பாரே முகம் அரும்பித் துடைப்பாரே
கிறங்கி களிப்பாரே பின் உறங்கிக் களிப்பாரே !
உறங்கிய பின்னும் கனவில் கஞ்சி குடிப்பாரோ??
நான் தூக்கக் கலக்கத்துல முழிச்சுக்கிட்டு இருக்கப்ப, தூங்கியாச்சான்னு கேட்டுக்கிட்டே கிளம்பப் போனவரைக் கவ்விப் பிடித்தது இது,
ரமணி:
வாய்யா கார்த்திக்குராமாசு - மதுர
வாசனை வீசுதாய்யா? - முன்பூசி
முடித்த சிங்கப்பூர் செண்ட் பாட்டிலா,
இல்லை, முடிந்த பெருங்காயடப்பாவா
பாட்டிலே பீடிங்புட்டியிலேபீல் பண்ணிப்
பீல் பண்ணிப் பாலூட்டிவிட்டோம் நாம்?
வர்ரே வா! வாசனை வீசுதாம் ராமாஸ்வாசத்திலே!
இதைத்தொடர்ந்து கார்த்திக்கு போட்ட சின்னப்பிள்ளை வேடத்தை நீங்களே பார்க்கலாம் :) அவருக்குச் சமையல் சொல்லித்தருகிறார் ரமணி, இப்படி,
ரமணி:
பத்தினி போனது பத்தி பலகதை பேசுவார்
பக்கத்தைப் பார்த்தோமென்றால் ஆள் தனி.
கஞ்சிக்குக் கலயம் வாலாயப்படுத்தல் சுலபம்;
உப்பென்ப தொரு பிடி; உள்ளி கை மறுபிடி
பின் எட்டிப்பிடி அரிசி ஏதோ ஓரிரு ஆழாக்கு
சட்டையைக் கழட்டு; கவிழ்த்த சட்டியைத் திருப்பு
அப்பனே, கொட்டுள்ளே உப்போடு அரிசியும் உள்ளியும்
வெப்பேற்றமுன்னே, வேணும் வெறுந்தண்ணீர் கால்முழம்
மீதி ஒப்பேத்து, தின் நாக்குன்னதில்லையா? உன்னோட
இஷ்டம் கஞ்சிக்கு இஞ்சி சேர்ப்பதும் மஞ்சள் பூப்பதும்.
ஆகி வந்தால் தின்னு, அல்லாங்காட்டி அப்புடியே கொட்டி
அமுக்கு நாலு கருவேப்பிலை சேர்த்து; அடுக்களைக்குக்
காலை விடிந்துபோனால், புளித்ததிலே போட்டுப்பார்
பூக்கப்பூக்க அருந்தோசை. சட்டினி இல்லையென்று
சங்கடப்பட்டுப் பட்டினி கிடக்காமல், எட்டிப்போய்த்
தொட்டுக்க சயாமிய சில்லிஸோர்ஸ்; செமகாரம் பலகாரம் :)
கார்த்திக்:
நன்றா நவின்றீர்கள் கஞ்சிதான் செய்யு விதம்
இன்றிலை என்றாலும் என்றேனும் செய்திடுவேன்
குன்றுடை மேனியனே நன்றி உனக்கு
இன்றியமையாதென நாமிங்கு பகன்றிடுவோம்...
டேங்ஸ் அண்ணாத்தே, சோக்கா சொன்ன போ!
இந்த நேரத்திலே இதற்கு மேல் தாங்காதென்று நான் தூங்கக் கிளம்பியபடிச் சொன்னேன்,
சு.வ:
வெளிருங்காலையில் லிருளும்மாலையே
திறக்கும்மிமையே கிறக்கும்முழியே
ஒருகஞ்சிச்சூடு மறுகஞ்சிக்கோல்டே
சுற்றிச்சுழலுது சொக்கப்பம்பரமே.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!
ஹி ஹி:)
சாந்தி யாரு எவருன்னு கேட்டு ஐம்பது அடிச்சுக் குதிக்கிறாரு கார்த்திக்ராமாஸ். புதுக்கவிதை சொத்தை என்று என்னோடு அன்பாய்ச் சண்டை போடும் நண்பர் ஆச்சிமகன் வந்து, பாரய்யா வடிவேலா மரபிலே துள்ளும் உற்சாகத்தை என்று சொல்லிப் போனார். போனார் என்று நினைத்திருந்த மெய்யப்பன் திரும்பி வந்தார்,
மெய்:
கழுதை கெட்டால் குட்டிச்சுவரய்யா
பொழுதை போக்ககணிப் பொட்டிப் பாக்சய்யா
ஆர்வம் தலைக்கேறத் தேடி ஓடுமய்யா
அரவம் படமெடுத்து ஆடிப் பாடுமய்யா
அத்தை இங்கிருந்தால் அப்போதே வந்திருப்பேன்
மெத்த விரும்பியே உறவினர் அழைத்ததினால்
அத்தை சென்றிட்டார் ஒருவாரப் பயணமுமே.
மொத்தச் சமையலுமே மெய்யன் தலையினிலே
கத்தி கரண்டியுடன் கரிப்பானை நானெடுத்து
கருணைக் கிழங்கெடுத்து, கத்தரிக்காய் காம்பெடுத்து,
முத்திநெருஞ்சியில்லா முருங்கைக் காயெடுத்து
துவரம் பருப்பெடுத்து தோதான பொடியெடுத்து
வீட்டுக்காரியவள் விருப்பக் குறிப்பறிந்து
கூட்டுக்கறிகாயும் குண்டுமல்லி இட்டலியும்
சூட்டுக் குறையாமல் சுவையாகப் பண்ணிவைத்து
ஊட்டி உணவளித்து மாலையே போனதய்யா.
பக்காப் பிரமச்சாரி யானாலும் நம் சமையல்
பக்கத்தில் அமர்ந்தே பார்த்தாலும் நம் சமையல்
பத்தினிமார் பிளைட்டேறி போனாலும் நம் சமையல்
பைத்தியமாய் ஆக்குகின்றார் பாவையவர் பாரினிலே.
இதற்கு நடுவிலே அண்ணாச்சி சொருகினார் தனது மொந்தைப் பழங்கஞ்சியின் சுட்டி. கொடுத்துவிட்டு மெய்யனைக் கண்டு உற்சாகந் தாளாமல்,
ரமணி:
ஆஹா! வாருமய்யா மெய்யா
மெய்யாலுமே உம் அத்தை
அன்புறவு அழைத்துப்போனாரா, அல்லது
உம் தொக்கலும் துவையலும்
விக்கிவிக்கி விழுங்கும் வில்லங்கம் கண்டு
சமைத்துச் செத்த்ய்ஹே போவோமோ என்றெண்ணித்
தப்பிப்போனாரோ தலை பரோலில் ஒரு கிழமை?
உள்ளங்கை உருட்டி உருட்டி
உண்ணத்தெரிந்தவனுக்கும்
உணரவேணும் உண்மையிலே
கறிவெட்டிக்களைத்தார் கலை
என்றே கழன்றுபோனாராக்கும்.
ஆஹா! ஆசைப்படியே ஆழாக்கு அரிசிபோட்டு
ஆக்கித்தின்னும் நீர் அரிசிக்கஞ்சி. அரிச்சுவடி
அதுக்குவேணுமென்றால், மாதம் தனியான யேல்
நவதானியச்சித்தரைக் கேளும் கஞ்சி ரெஸப்பி கெஞ்சி.
மலை மலையாய்க் குவித்து
மாதமெல்லாம் தின்றதுக்கு
மாலை ஒன்று போனாலென்ன
மாய்ந்தா போனாய் நீ - மெய்யாலுமே
கில்லாடிதான் மெய்யா நீ
அமெரிக்கா அத்தை வந்தக்கால் ஐயா
அடுக்களை பொய்யாகவேனும் புகுந்து
காட்டுவாராம் பொறுப்பான ஆளென்று.
அய்யோ! மல்லிகைப்பூவும் மனம்வாட
இட்டலியாய் இட்டு அளிப்பாராம்;
தொட்டுக்கொள்ள என்ன, பொடியா? பொய்யா? :)
இந்தக் கூத்திலே யாருக்காச்சும் தூக்கம் வருமா, அல்லது வந்த தூக்கந்தான் நிற்குமா? தூக்கங் கலைந்து என் சரட்டை விட்டேன்:
சு.வ:
சாந்தியென்றுசொல்லிச் சாயப்போனவேளையிலே
சந்திலோரெலியாச் சிந்தையிலேகுறுகுறுக்க
எட்டிப்பார்த்தேனெம் மெய்யன்றலையினிலே
கொட்டிவிழுந்ததுவாம் மொத்தமுழுச்சமையல்
தள்ளியோரிடத்தே யென்னசெய்யப்போனாரோ
குண்டாய்வெடியாய்க் கரும்புகைகிளப்பிக்
கடைசியிற்கடையிற் தின்கதைசொன்ன
பிரதாபங்கேட்டுயாம் தின்றதுரைப்போம்
சில்லிட்டப் புட்டிப்பீரிரண்டு மெலிசாய்ச்
சீவிவறுத்தக் கொழுப்புருளை யொருகொத்து
நிதானத்துக்குப் பிடித்தொரு இலையுந்தழை
நின்றுதின்று குந்தினேன் பொட்டிக்கடேய்.
ரமணியின் கிண்டலுக்கு மெய்யப்பன் சளைத்தாரா, பதில் சொல்லுகிறார்,
மெய்:
அழைத்துப் போனாரா களைத்துப் போனாரா இல்லை
பிழைத்துப் போனாரா பகுத்து நானறியேன்
கொக்கிப் பட்டனெல்லாம் பட்டென்று தெரித்திடவே
ஆக்கிப் போட்டதனால் அளவின்றிப் பெருத்திட்டேன்
வைப்பில்லை தொடுப்பில்லை வகையறியா மனசில்லை இருந்தாலும்
கைப்பிள்ளைக் குழவியெனல் கணக்காய் கண்ணயர்ந்து
மாப்பிள்ளைப் பண்டாரம் மணியடிச்சா சோறுண்டு
மழையடிச்சு பேய்ஞ்சாலும் நகலாத எருதெனவே
மதுரைமத்தியில ஆனைக்கல்லெனவே மண்
குருதை மேலமர்ந்த அய்யனாரெனவே மெய்யன்
இருந்த விதங்கண்டு அரண்டு போனாரே
தெரிந்த வீட்டிற்கே அத்தை போனாரே.
பொய்யைப் பொடிசெய்து பக்கத்தில் வைத்தாலும்
கைய்யைக் காற்றில் ஆட்டியே கறியமுது என்றாலும் வெறும்
பைய்யைக் காட்டிப் பசியாறு என்றாலும்
தைய்யல் மனைவிவள் தைரியமாய் உண்பாள் - பதிபக்தியது
பாருமய்யா - நீர் இங்குவந்து பாருமய்யா!!!
மேலே சொன்னதிலே ஆனைக்கல்லென்று ஒரு வார்த்தை வந்ததில்லையா, நான் அந்தக் கல்லைப் பிடித்துப் பெயர்த்துப் போட்டேன்,
சு.வ:
ஆனைக்கல்சிம்மக்கல் ஆடுதுபார்குழவிக்கல்
கல்கல்லென்று கற்றுங்கவ்வியும்
அடக்கல்ஒடுக்கல் தடக்கல்முடக்கல்
கல்லாதிருந்தேன் யானோர்குத்துக்கல்.
எனக்கும் மெய்யப்பனுக்கும் சேர்த்தொரு அடி கொடுக்கிறார் ரமணி,
ரமணி:
அவருக்குப் பீர்புட்டி இவருக்குச் சோத்துமணி
போச்சுதடா 'சுப்பர்' 'அப்பர்' வாழ்க்கையெல்லாம்
டெம்பரரியா தேவதாசு பாட்டை, பவ்லோ லைனு.
கஞ்சா குடிச் சித்தரெல்லாம் பஞ்சத்துக்காண்டியென்றால், காண்க
கஞ்சி குடிச்சித்தரெல்லாம் சூழ்பரம்பரையாலானார் பசிக் காண்டி!
ரமணியின் கடைசி வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ஒரு ஆண்டியாட்டம் போட்டேன்,
சு.வ:
பசிக்காண்டி புசித்தாண்டி
படிசேந்திக் குடித்தாண்டி
நடித்தாண்டி படித்தாண்டி
சித்தாண்டி செத்தாண்டி!
மேலே பீரைப் பற்றிய பேச்சு வந்ததல்லவா உடனே வாயூறிய மெய்யப்பன்,
மெய்:
காரைச் சுண்ணாம்புக் கலர் வெள்ளை மனதெனக்கு
பீரைப்பருகிவிட்டு பெட்டியினைத் தட்டிடவே ஆசைதான் எனக்கும்
நீரைப் பருகிவிட்டு நித்திரையைத் தேடுகிறேன்.
அத்தைமனங்கவர ஆக்கிட்டுக் கொடுக்கிறேனா - பாருமவர்
போனபின்னே பருகிடுவேன் எட்டுப்பெக்கு.
ரமணி (மெய்யின் பதிபக்தி குறித்ததற்கு):
கையைக் காட்டி கறியமுது என்றுரைக்க
சரியென்ற இணை கருத்தை
பதிபக்தியென்று பகர்வீரோ? கேட்டால்,
"விதியென்றுரைக்க வேறு வழியின்றி
இருந்தேன் நான்; விட்டால்,
"விழுந்தாள் கால்; புகழ்ந்தாள்
என்கையூட்டுப்போசனம்" என்றும்
விளக்குவீர் துலக்குவீர்" எனும் சதி
துரித கதியிலே உம்கை குத்தி
சமையற்கத்தி முறிந்தால்,
விதியென்றுரைக்க வேறு வழியின்றி
இருந்தார் ஆரென்று நானுரையேன்.
அப்படியே என் ஆண்டியாட்டத்துக்குமொன்று கொடுக்கிறார் ரமணி,
ரமணி:
பசிச்சாண்டி, புசிச்சாண்டி
பரமக்குடிக் கமலாண்டி
சித்தாண்டி செத்தாண்டி
என்னானான் விருமாண்டி?
ஆனாண்டி அடுத்தாப்பல
வசூல் ராஜா யெம்பிபியெஸ்ஸ¤.
எனக்கு மேலே பேசிக்கிட்ட கத்தி, வெட்டுக் குத்து வெளங்காமப் போயி,
சு.வ:
கத்தியோகையோ முறிந்ததையானறியேன்
வேலுக்குவேல்பறந்து வெற்றிவேல்சுழன்றுவந்து
அடித்துத்தெறிக்கும் நட்டநடுராவினிலே
ஐயாஉம்கவிதையிலே முறிந்ததுபோட்டபெக்கு!
எழுபத்தி அஞ்சுக்கு ஒரு விசிலையடிச்சு ஆட்டம் போட்டது ஒரு விசிலடிச்சாங்குஞ்சு!மெய்யப்பனுக்குத் தூக்கம் வந்துடுச்சு போல, மங்களம் பாடுறார்,
மெய்:
சுவையாöப் பொழுதின்று சிரிப்பாய்ச் சென்றதே
சாந்தி ஓம் சாந்தியென்று உரக்கச் சொல்லிட்ட்டால்
உறக்கத்தில் இருந்தே கண்ணை உருட்டியே எழுந்திடுவாள்.
சாந்தி யாரெனவே சட்டைபிடித்திடுவாள் - கத்திமுனையுடைத்தும்
கற்று உணரலையே கழுத்தைப் பிடிப்பாளே - மெதுவாவே சொல்லுகிறேன்
வணக்கம் வணக்கமப்பா - பார்ப்போம் நாளையப்பா!!
ஆனா விடுமா ரமணியின் மதுவிலக்குப் பிரச்சாரமும், தேத்தண்ணிப் பரிந்துரையும்,
ரமணி:
பெக்கினைத் தேடின் பெறும்பேறில்லை
பீக்கோ டீயினைத் தேடுமின்; பிறப்பது அறுமாம்
எட்டுத்திக்கினைப் பெயர்ந்தும் ஏழு பெக்கினைத் தேடின்
முக்கினும் மோட்ஷம் முன்னே வராது.
பெக்கது விசமாம்; பொக்கென்று போவீர்
பக்கென்று பயந்தால், பக்குவமாய்ச் சொல்வேன்;
எக்குத்தப்பான பெக்கினை அறுமின்; எந்நாளும்
பெருங்கப்(பு) வடிக்கருங்காப்பியினை அறுமின்.
புக்கும் புக்கும் பீக்கோ டீயினைப் புகட்டும்.
(அப்புடியே தாளத்தை மாத்தி பாரதியின் வசன கவிதையடி அடிக்கிறார்)
டீயே என் வாயினைத் திறந்து வைக்கிறேன்!
டீயே என் திறந்த வாயினுள் நுழைந்தொழுகுக!
டீயே துரிதகதிக்குத் துணையான தேவன்!
டீயே மந்தபுத்திக்கு அருமருந்தாவான்!
டீத்தேவனே உன்னை நான் போற்றுகிறேன்!
டீயே என் நெடுவளருதி! டீயே என் பெருவாரிதி!
டீயே என் திவ்யஜோதி! டீயே என் த்ரேஷாப்ராட்டி!
டீயென்ற பெயரிலேயே சுறுசுறுப்பாகி மெய்யப்பன் போகிற போக்கில் தட்டிப் போனார்,
மெய்:
வெறும் டீயே உமக்கெல்லாம் - கொஞ்சம் நீட்டி
முழக்கினால் எமக்கெல்லாமெது வெனத் தெரியும்
கடும்டீயும் அதுதான், சுடும்டீயும் அதுதான் - எதுவெனக்
கேட்டீ ராயின் சொல்வேனே - பெண்டாட்டீ :)
இப்படியாய் ஆட்டம் போட்டு நாளைக்கு வந்து நூறடித்துக் கொள்ளலாமென்று கடையைக் கட்டித் தூங்கப் போனோம். விடிந்து பார்த்தால் கருக்கலோடு கருக்கலாய்ப் பாரி உருட்டிக் கொண்டிருக்கிறார்,
பாரி:
சித்தம் செப்பும் சித்த வரையரையிலியை
சித்தமாக செப்ப வந்தான் யூத சித்தனொருவன்
செப்பினவன் தானும் செப்ப
சித்தனாகி நின்றனன் மீசைமுண்டாசுடனே
எச்சித்தம் உசிதம் என்றறியா இப்பலகாலம்
அச்சித்தம் நோக்குங்கால் இணையத்தில்-நானிடறி
பூவிலே வலையாம் சிக்கியே சீக்கியடித்து
செப்பும் பாம்பே என்றுரை பாமரனே!!
முன்னிருந்த சித்தர் கோடி எண்ணமிங்குலவி
தெளியும் தேரையும், பாம்பும் என உரைக்க
பூஜ்ஜியத்தில் உரையாடி தெளிந்த
நன்நண்ப அழகு வேலே, உறைந்தாள் மாது
உன் உள்ளம் அறிந்தவேளை என்றுரை பாமரனே!!
அண்ணங்கார ஆகார சுகமாய் உள்ளெடுத்து
தின்னுங்கார நானாகி நன்னினேன் நன்றியிலே
நன்றிதனை நுனக்கு நானீந்தேன் தரணியாம்
அடிகொண்ட முடிகொண்ட ரமணி என்றுரை பாமரனே!!
என்னடா என்னமோ பாமரனே, பாமரனேங்கறாரேன்னு நானும் பாமரனேன்னு ஒன்னு போட்டேன்,
சு.வ:
முட்டிமுழிபிதுங்கிக் கொட்டிக்கவிவளர்த்து
முடங்கியுறங்கிக்கனாக்கண்டு விழித்தெழுந்து
பொட்டித்திறந்துபார்த்தேன் - பாரீர்பாரியென்று
வெட்டியடிக்குதுமின்னல் ஓயேன்பாமரனே!
பாரியும் தொடர்ந்து இன்னும் மூனு பாமரனைப் போட்டார்,
பாரி:
கஞ்சிக் கலயந்தொட்டு மணி வேறு பலகொண்டு அப்பனுக்குக்
கஞ்சிக் கலயந்தொட ஆற்றுப்படுத்திய தகப்பன்சாமி
கஞ்சிக் குடி கரம்பக் குடியோன் -அவனுக்
கஞ்சி நிற்பான் வேந்தன் என்றுரை பாமரனே!!
அன்பிற்கு ஆட்பட்டு அத்தை-தனை நாடனுப்பி
செத்தாலும் நா உயிர்க்க கஞ்சிக்குடியோன் கருணையினால்
குருணைக் கஞ்சிக் கஞ்சாமல் ஒடியற்கூழோடி செத்தானை
சங்கமித்து வாழ்வான் என்னப்பன் மெய் என்றுரை பாமரனே!!
அங்கிங்கெணாது எங்கும் இறைத்து இறையே தேடி
இங்குள சித்த புத்தி சத்தி காண சந்த குற்றம்
தான் பொறுத்து இங்கும் உளேன் என்பதறி
எனக்கூறி நிற்கும் கார்-தீ யே என்றுரை பாமரனே!!
பாரிக்கு ஒரு ஷொட்டுக் கொடுக்க நான் இதைச் சொன்னேன்,
சு.வ:
முல்லைக்கீந்தாயுருட்டுந்தேர் குதலைப்
பிள்ளைக்கீந்தாய்த் துடிக்குந்தோள்
கிள்ளைக்கீந்தாய் கனிக்கொவ்வை
இல்லையென்னாது இல்லையென்றோனே.
என் ஆட்டம் முடிந்து நான் கிளம்புகிறேனய்யா, நீங்க பாத்து சதமடிங்கன்னு பாரி கிளம்புறார்,
பாரி:
சதமடிச்சான் அண்ணங்காரன் அன்னைக்கு
சதமடிச்சான் தம்பியென்பேன் இன்னைக்கு
நான் ஆட்டை-யிலயிருந்து ஆகின்றேன் ரிடையர்டு-ஹர்ட்டு
பார்த்து எல்லோரும் அடிச்சிடுங்க ஒரு ஷாட்டு-ஹட்டுக்கு.
வந்துட்டார் வந்துட்டார், மெய்யப்பன் வந்துட்டார், தன் காலைக் கணக்கைத் துவக்குகிறார்,
மெய்:
இங்கே பொறியாளர் இரவிலு றங்கையிலே
அங்கே பெங்களூரில் பொட்டி திறந்திடுவார்
பொட்டிதட்டும் வேலை பொழுதுசாய்ந்திட்டால் - ஆன்
சைட்டுவிட்டு ஆஃப்ஷோரு போவதறிவாய் - அவுட்சோர்சிங்
பட்டியலில் பாட்டையும் சேர்த்திட்டார் பாரியின்றே
கட்டுக்கவியு மிப்போ நூறைத் தொட்டிடுமே.
இதுல வர்ற அவுட்சோர்ஸிங்கைப் போட்டுக் குழப்பியடித்து நானிட்டது இது,
சு.வ:
ஆற்றுக்களி மண்ணெடுத்தும் ஆங்கோர்விலா
வெலும்பெடுத்தும் ஊதியூதியுயி ராக்கேனென்றே
யவன் அவுட்சோர்ஸிங்செய்யப் புளுத்துத்
தள்ளாடிமோடிக் கிறுக்குதே பூமிப்பந்து - அவுட்டுக்
கவியிலேயென் பொட்டிரொம்புதே பாடுசிந்து.
இப்போ 98 மறுமொழியோட திக்கு திக்குன்னு யாருடா அடிப்பான்னு நெனக்கயில, மெய்யப்பன் வந்து, யப்பா யாராச்சும் அடிங்கப்பா, கிளம்புவோம்னு கேக்குறாரு,
மெய்:
தேத்தண்ணி யடித்துவிட்டு தூங்கியவரெங்கே? - ஏசி
காத்தடிச்ச சொகத்தினிலே கட்டிலிலே தூங்குறாரா
நேத்துவடிச்ச சோறில்பூந் தோசைஊத்துறாரா - திருப்பாட்டு
சேத்தடிச்சி ஒருநூறாய்ஆக்குமப்பா - திருநீறைப்பூசி
--மலையேறிப்போவோமப்பா.
இந்த சைக்கிள் கேப்புல பரி குதிரையை டடக் டடக்குன்னு விட்டார், என்னாங்கடா இன்னும் முடிக்கலையா உங்க பாட்டைன்னு கேட்டுட்டு, வந்த வேகத்துல இன்னொன்னு சேத்தடிச்சு நூறாக்கினார். நூத்துக்கு ஒரு வான வேடிக்கையும் காட்டியாச்சு. நூறடிச்சாலும் நான் ஆடியே தீருவேன்னு நேத்து போன ரமணி ஒரு அரசியல் பத்தியத் தூக்கிக்கிட்டுத் திரும்பி வந்தார்,
ரமணி:
வெளிப்போகு வேலைக்காய்க் கவிபடைத்தார்,
சடக்கூடு படபடக்க உயிர்கொடுத்தார் - பார்த்தாரா,
'மிளிர்நாடு' கோஷமெல்லாம் தோஷமாகி
தடங்கேடு தமக்கான என்டிஏ?
கஞ்சிக்காய்க் களமிறங்கினோர் களம் காண்
விஞ்சியதாம் தொகை நூறு வீறில்; நெல்லரிசிக்
கஞ்சிக்கு முந்திய பந்திக்கு வினை நூறென்றால்
பஞ்சப்பாட்டெல்லாம் சொல்வாரார் பஞ்சிப்பாட்டென்று?
இம்மென்னும் முன்னே இருநூறும் முன்னூறும்
அம்மென்றால் ஐநூறும் ஆகாதோ? - பங்குக்குக்
கம்மென்றிருப்பவர் களமிறங்கித் தட்டின், (அரிசிக்)
கஞ்சியும் விஞ்சும் கவி/டி/ளி/லி கோடி
தேத்தண்ணி எங்கே தூங்கியது? தெரியாமல்
நேற்றிரவு எடுத்துப் பார்த்தாரா ஸ்ரோம்பலி
கூத்தாச்சு கதை; ஒரு கோதாரியும் புரியாமல்
போர்த்துப் படுத்தாரா, புழுக்கமில்லைத்தான்,
புரண்டார் புரண்டார் புழுப்போல, இமைமூட
முன்வெளித்து முன்னே இரவி.
இது ஏதடா இருநூறு முன்னூறென்று அடி போடுகிறாரே என்று பயந்த நான், இருநூறாசையெல்லாமில்லைன்னு சொல்லிட்டு ஒன்னைப் போட்டேன்,
சு.வ:
நாளுரெண்டுங் கூட்டியே நூறடித்த பாவலோய்
தூங்கும்மூளைக்கிண்டியே பாவடித்தோ மாவலாய்
ரெண்டுநாலுமெண்ணியே எட்டடிப்போங் காவலாய்
தொல்லைதுயரோடவைக்கும் பொட்டிதட்டுங் கார/லமே.
டாய், எங்கடா ஓடுறீங்க, இங்க வாங்கன்னு ரமணி இழுக்குறதப் பாருங்க,
ரமணி:
வயித்துச்சோத்துக்குத் தூக்கிப் போட்ட பாட்டெல்லாம்
உள்ளார ஏத்திக்கிட்டதா ஒரே கிக்கு? பாத்திருக்க,
படமெடுத்து, புத்துப்பாம்பாட்டம் திசை மாத்திமாத்தி
ஆட்டமென்றால் ஆத்தோட்டமைய்யா ஓட்டம்!!
மலையேறும் சாமிக்குப் பழனி மொட்டை
மெய்யேறும் சாமிக்குப் பொட்டி தட்டல்
காத்திக்கு ஸ்வாமிக்கு சம்போ மஹாதேவா
அக்கா மதிக்கு ரகுபதி ராகவ ராஜாராம்
தேரோடும் பாரிக்கு நட ராஜா நட நீ
திண்ணைதூங்கிக்கு (த் தன்) வாத்தியோட (தீவிர)வாள்பைட்
அம்மணி இன்னிய இன்னிங்ஸ¤ இதோ இஸ்ரார்ட்டு!! :-(
ஐயா, வேலையிடத்திலே உக்காந்து கவிபாடியது போதுமென்று நான் சொன்னது,
சு.வ:
பாட்டுக் கொடுத்தக்கிக்கு
பாம்பாட்டம் கொடுத்தகிக்கு
நேத்தைக்கிருந்த கிக்குக்கொக்குக்
கழுத்தாநீண்டா லடுத்தவாரம்
இருக்கெனக்கு வாத்திக்கிக்கு :)
ரமணி படம் பார்த்த கதைக்குப் பதில் சொல்லுறார் மெய்யப்பன்,
மெய்:
நானிங்கே ஸ்ரோம்பலி எடுத்துப்பார்த்தால்
தூணிங்கே தலையில் இறங்கும் - கலைப்
படமே தடையாம் அதில் கருப்புவெள்ளைத்
தடம் பார்த்தால் ஆவேன் நான் முடம். :)
என்னமோ சினிமாப்படங்களப் பத்திப் பேசிக்கிட்டாங்க, நமக்கொன்னும் புரியல,
ரமணி:
சும்மாவா சொன்னார் ஸினிமா ஸ்ரோம்-பலி என்று!
புயலடிக்காமற் போகுமா? பலியெடுக்காமல் ஆகுமா?
அம்மாடி! போன கிழமை நோரா இனு; அடுத்ததுக்கு,
ஐரிசு, அப்பாலுக்குமப்பால், த கார்டின் ஒப் த பின்ஸி-கொண்டினி.
வீட்டம்மணி கொன்றாலும்விடுவேனோ, விட்டாரியோ டி ஸிகா!
அம்மணிக்கும் சொல்லியாச்சு, "கண்மணி நீயும் காணவேணும்,
பெண்மணியின் வாழ்க்கையெல்லோ ஸ்ரோம்பலியும் ஐரிசும்"
வைக்கிற மாதிரி வைத்தால், ஐஸ¤ ம் அப்பப்போ
வெகு நைஸா வேர்க் அவுட்டாகும்; அத்தியும் பூக்கும்!
பரி மறுபடியும் வந்தார், யோவ் நிறுத்துங்கய்யா நிறுத்துங்கய்யான்னு ஏதோ சினிமாவுல யாரோ கேக்குற மாதிரி கேட்டார், மாறாக மதியோ, அய்யோ என்ன முடிஞ்சுதான்னு அழப் போனார். ரமணியோ, நான் எதுக்கய்யா நிறுத்தனும்னு இப்படிப் போட்டார்,
ரமணி:
அரிசிக்கஞ்சின்னு அசரீரீயாகப் பேசுற நாஸ¤வாக்காரரை நிறுத்தச்சொல்லுங்க;
நா நிறுத்திடுறன்
நவதானியமுன்னு நாக்கைச் சப்பை கொட்ற யேலரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
வாசனைநாசியோட அலையுற மேரி லாண்டரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
அப்பப்ப வந்து தேர்வுடுற பெங்களூருக்காரரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
வேலைலாம வேலை பத்திப்பேசுற மேடம் கியூபெக் அம்மையாரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
அப்பப்ப நோவுற கையாலயும் ப்ளாக்ஸ்பாட்டுக்கு ப்ளாக்ஸ்பாட் வெக்குற
மிசூரியரை நிறுத்தச் சொல்லுங்க;
இந்த ஒடியற்கூழோடிச்செத்தான் நிறுத்திடுறேன்...
...அதுவரைக்கும்
குடிப்பேன் குடிப்பேன் குடிச்சிக்கிட்டிருப்பேன்;
நாக்கும் கூழும் உள்ளவரை
அடிப்பேன் அடிப்பேன் அடிச்சிக்கிட்டிருப்பேன்;
அம்மணி வந்து அதட்டும்வரை...
அய்யோ.. வந்திட்டாங்க..வரட்ட்ட்ட்ட்ட்ட் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நான் வேறு சும்மாயிருக்காமல், சாமியை மலையேத்துறேன் என்று சொல்லி,
சு.வ:
அண்ணே கண்ணே ஆலிலைத் தொன்னே
பண்ணே தின்னே புளியேப்பஞ் சொன்னே(ன்)
கொட்டிக் கவிழ்த்துக் கலயங் காலி
கூட்டிக் கழித்து நாளுங் காலி!
என்று சொல்ல ரமணியைக் காணவில்லை. அம்மணிக்குப் பயந்து போனாரா, போதும் தொலைங்கடான்னு பாவப்பட்டுப் போனாரா? மதி வந்து யாரோ வர்றாங்கன்னு பயமுறுத்தி நானலறப் பெரும் இடைவெளிக்குப் பிறகு செல்வராஜ் வந்தார்,
சும்மாவா என்றால், அதுதானில்லை, தானும் ஒரு பாட்டோடு,
செல்வா:
நாவெல்லாம் சுழன்றாடும்
நிலைகாணா திருந்தேனே
ஆட்டம் காணேனால்
யாதோரு கவலையில்லை
கஞ்சி எதுவும் உண்டென்றால்
கடிதுசொலும் குடிக்க வருவேன்!
ஐம்பதடித்துப் போன கார்த்திக் கிட்டத்தட்ட 123க்கு மறுபிறப்பெடுத்து வருகிறார்,
கார்த்திக்:
அழைத்த குரல் கேட்டு ஓடி வந்தோம்
பிழைத்து ஆர்? செத்தது ஆர்?
குழைத்த கஞ்சி அருந்தி அருள் பெறவும்
விழைந்து விரைந்து வருவது ஆர்?
அடடே ஐம்பதில் விட்டுச் சென்றேன்
விடடா என்றாலும் விட்டாரில்லை
சட சட வென வரும் கவிகள் பாரீ(ர்)
மடமட வெனத் தாண்டும் மனமும் நூறையுமே
நா நிறுத்திடுறேன் என்றாரே
நாணி யா நிறுத்தபோறார் நவிலுவாரா?
நான் நிறுத்தியபின்னும் கஞ்சி சுவையில் சுழன்று
வான் மழைபோல் பொழிவார்கவி பார் ரமணியாரே!
செல்வராஜரே செல்வரே ராஜரே
செல்வம் செவிச்செல்வம் அறிவீர் நீர் - செவிக்
கல்வி இல்லாக்கால் சிறிது கஞ்சி
உள்ளெ டுப்பீர் பசியுங்காலே!
சரி, இந்தக் கச்சேரி மறுபடியும் நீளப்போகுதேன்னு ஒரு பக்கம் இருந்தாலும், இவர்கள் இருவரின் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை!
சு.வ:
செல்லுவோம்யாமென்றே மங்களம்பாடி
வில்லெடுத்துப்பெட்டிவைத்தோம் வந்தார்
நின்றார், கண்ணாற் கதைசொல்லும் செல்வா
தின்போமுங் கஞ்சியிருந்தாலென்றார்,
பாரியின் தோழற்கு இலவென்று சொல்வருமோ?
சொல்வாய் செல்வா செல்லாதே வா.
அழைகுரற்கேட் டோடி வந்தோய்
அழைத்ததுயாமோ நீயோ அவரோ?
யாரும் யாரும் நீயாகியரே
நீரும் நீரும் யாமாகியமே
ஊரும் நீரும் யாமாகியதினால்
பிழைத்தோர்ச் செத்தோர் நாமாகினமே.
பவுண்டரி, சிக்ஸர் ஆட்களெல்லாம் போதுமப்பா என்று கழன்று உருப்படியான வேலைகளுக்குப் போன பிறகு, நானும் கார்த்தியும் கலயமுருட்டினோம்,
கார்த்திக்:
கூழ் குடிப்பதென்ன உம் ஊழ்விதியோ?
கூழோனே மலை பெயர் பெரியோனே
ஏழு பெக்கு வேண்டாம் என சொன்னீரே - நலமான
வாழ்வு தரும்; குடியும் கூழ் நாள் முழுக்க!
நடுவில் கார்த்திக் சிரிக்கும் ஸ்மைலியொன்றை ஒரு கவிதைக்குப் பரிசாய்ப் போட்டார், அதுக்குப் பதில்,
சு.வ:
மணக்கு மஞ்சள்முகஞ் சிரித்தாற் போதுமோ
வார்த்தை வேண்டாவோ மணக்கும் புட்டியே
பிணக்குப் பொடிசெய்யு நகையைக் காட்டியே
கோர்த்துப் போடுவாய் பாவொன்று கூட்டியே.
சு.வ:
அம்மணி வந்தாரா எம்மணிரமணியை
அள்ளிப்போனாரா, படங்காட் டென்றாரா
படமொன்று போட்டாரா பாரோரே
பாரீர்க் கேளீர் இம்மணியெங்கே
இழுத்துவாருமிம் மாலையிற்குறையுதே மணி.
கார்த்திக்:
கஞ்சி வெறுத்தனரா?
அஞ்சி ஒதுங்கினரா?
மஞ்சம் அடைந்தனரா?
எஞ்சினோர் நாமா? நாம் மட்டும் மாட்டுனமா?
சு.வ:
மாட்டுனமென்றும் கூட்டுனமென்றும்
ஆட்டினமெய்யை ஓட்டடா
மாட்டினதாரே கூட்டினதாரே
ஓட்டினதய்யன் சீட்டடா.
கார்த்திக்:
நாமே செய்வோம் நல்மாலை
நாறு இன்றிசெய்வோம் சொல்மாலை
வார இறுதி இது; வந்தது மாலை
சோரப் போவதில்லை இந்தப் பொன் வேலை/வேளை
கஞ்சிக்குடி கவிதை படைத்திடும் இடையில்
செஞ்சாந்து சிகப்பு முத்திரை குடித்த நண்ப
மிஞ்சித் தலைக்கேறிய போதையின் போது எம்மை
இஞ்சி கடித்தாற் போல் செய்வாரே இடைஞ்சல்
உணவருந்து வேளையிது வந்தது பார்
மனமது வேண்டேல் என்று சொன்னது பார்
தினமது சமைக்கும் ஒரே சாம்பார் பார்
இன்னும் மட்டும் கஞ்சி இங்கு இனிக்கும், பார்
வேங்கட மலையில் அமர் பாலாசீ
வெங்கஞ்சி நீர் வடிப்பீர் பால் காய்ச்சி
திங்க சுவைகொண்ட மோர் பீய்ச்சி - நா
தங்கும் அமுதூறும் சுந்தரவேலர் கஞ்சி
சு.வ:
கஞ்சிக்கஞ்சிக் கழனிக்கஞ்சி
சொல்லுக்கஞ்சிச் சுவையினுக்கஞ்சி
பண்ணுக்கஞ்சிப் பழத்துக்கஞ்சி
உண்ணுக்கஞ்சி உருத்தெரியானே :)
கார்த்திக்:
சந்திர மதி வதனாள் சொன்னாள்
தனித்து நான் இங்கு வந்த இன்னாள்
இன்னுமொரு கஞ்சிக் குடியர் பண்ணாய்
தின்னுவார் நம்முடன் என்(றா)னாள்
சு.வ:
உற்றுற்றுப் பார்த்தேன் உமைத்தான் சொன்னாளா
உமைத்தாள் பற்றியே உரைத்தேன் இன்னாளே
பற்றற்றுப் பார்த்தேன் தினைத்தேன் தின்னேனே
சமைத்தேன் வடித்தேன் குடித்தேன் நின்னேனே.
கார்த்திக்:
கஞ்சிக் கஞ்சியவர் பாட்டில்
கஞ்சி வந்து புகுந்ததென்ன அதுபாட்டில்?
கழனிக்கஞ்சியவரா? பழத்துக்கஞியவரா?
பழனிமீது கோவணனாய் விளையாட்டு செய்தவரார்?
இன்னொரு குடியரென்றாள் என்னையன்று
நான் நேற்றைய குடியனென்று அறிவாள்
இன்றும் கஞ்சியா நேற்று போல் இல்லையேல்
இன்றும் கஞ்சியா நேற்றைய கஞ்சியேதானா?
சு.வ:
கோவண விளையாட்டு
ஆட்டுத் தலையாட்டு
கோவெனத் தாள்போற்று
வீட்டுத் தளையோட்டு
இதுல இருந்த என்னத்துக்கோ கார்த்திக்குக் கோவம் வர,
கார்த்திக்:
வீட்டுத் தளையோட்டிவிட
ஆட்டுத் தலையாட்டு
கோவம் வரச் செய்தீரெனில்
கோவணமும் மிஞ்சாது மீட்ட :)
சு.வ:
இன்றுநேற்றும் பந்தின்சுழற்சி
இனியுதவாதே தூசியுமலர்ஜி
தும்மிச்சிவக்குதே நாசியும்வாசி
இம்மியும்பிரியேன் சிவசிவயோசி.
கோவமோ குணமோ கார்த்தியுநீரே
தாபமோ தவமோ வேலருநீரே
நீலமோ வெள்ளையோ உஜாலாநீரே
காலமோ மேளமோ குஜாலாதானே.
கார்த்திக்:
உண்மை சொன்னீர் மிக
நன்மை சொன்னீர் வெகு
வெண்மை மனத்தோனே
மின்னல் போல் தும்பும் நோயேன் ? நோவேன்?
சு.வ:
நோவெனப்படுதல் காட்சியின் பிறழ்வே
சாவெனப்படுதல் ஆட்சியின் திரிபே
நாமெனப்படுதல் ஆச்சியின் மதலேய்
தாமெனக்கெடுதல் பூச்சியின் கொடுக்கே.
கார்த்திக்:
சுந்தரரே சிந்தை லேசாய் சொக்குதே
இந்ததினம் இனிதேதான் கழிந்ததே
விந்தையிது நாமிருவர் மட்டுமே கவிபாட
மந்தைக் கவியர் எந்தவிடம் சென்றனர்?
சு.வ:
மந்தையது ஆட்டிடைய னோட்டுவழி
சிந்தையது ஓட்டுடைய னேட்டுவழி
மந்தையுஞ் சிந்தையு மோராகிடுமோ
வெந்தயம்பயறு கஞ்சி காய்ச்சிடுவீரே?
கார்த்திக்:
ஆட்டிடையோன் யாரே சொல்வீரோ?
வீட்டுக்கு அனுப்பும் மாலை வேளையோ?
பாட்டுடைக் காவலனே பகன்றிடிவீர் உம்
வீட்டில் காய்ச்சும் கஞ்சிக்கேன் வெந்தயம்?
மந்தையிலிருந்து இரு ஆடுகளாய் நாம்
சிந்தை சிதறிப் பிரிந்தது போல் ஆனோம்
கந்தம் கமழ் வடிவேல் உடையோரே நாளின்
அந்தம் இதுவெனச் சொல்வோமா நாம்?
கார்த்திக்:
வேலரே நீர் எமைப் போற்றியதுண்மை
சூலரே வீட்டு தளையோட்ட நான்சொன்ன தன்மை
எம்மிடமிருந்து நீர் கோவம் தவிர்க்க அல்ல
அம்மணி உம் வீட்டின் பெண்மணியின் கோபமதெனக் காண்
வயிறு நிறைஞ்சாச்சு
பயிறு தீர்ந்தாச்சு
ஞாயிறு மறைந்தாச்சு தூக்கக்
கயிறு திரிஞ்சாச்சு
சு.வ:
அந்தம் ஆர் ஆதி ஆர் பூதம் ஆர்
தொந்தம் ஆர் தொகுதி ஆர் விகுதி ஆரே
பந்தம் பார் பார் பார் பறங்கி பார்
நொந்தம் பார் கிறங்கிப் பார் பகுதிப் பாரே.
கார்த்திக்:
அண்ணே தூக்கம் என்னை அள்ளிக் கொண்டு போகுதே
கண்ணே சொக்க உடலும் தள்ளிக்கொண்டு போகுதே
பொன்னேபோல் பாட்டெழுதி பாட்டெழுதி களைத்தீரே
அண்ணி இல்லை கவனிக்க நிற்க உறங்குவீர் இனிதே!!
சு.வ:
பத்துப் பதினெட்டு
பரணியின்மேல் தட்டெட்டு
தட்டிலே லட்டெட்டு
தானுண்டுநீ யிமைவெட்டு.
இப்படி வெட்டிப் போட்டுப் போனவர்களை செல்வராஜ் அழைத்தார், பின் அவரே அடுத்த நாள் பயணத்துக்கு ஆகிறதைப் பார்க்கணுமென்று சொல்லிக் கிளம்பினார், அதையே நம் கூத்துக்கு மங்களமாக வைக்கிறோம்,
செல்வா:
நீர் உறங்கச் சென்றால் என்ன?
நான் வந்த திப்போ(து) தானே
நாலு வார்த்தை சொல்லா திங்கே
கஞ்சி மட்டும் குடிக்க மாட்டேன்.
காச்சி ஒரு தண்ணீர் குடியும்
கலங்கி ஓடித் தும்மல் விலகும்
ஆச்சி பெற்ற ஒருமகன் எழுதி
அங்கு வைத்தனன் கண்டீர் நீரோ
கஞ்சிக் குடியார் கவியாட்டம்
கட்டின்றித் தொடரட்டும்
காலை எழுந்த அதிநேரம்
காரோட்டி வேறூர் போகோணும்
கார்த்திக் ராமாசு தூங்காமல்
கண்ணை இமையோ மூடாமல்
கவிதை பாடித் திரியட்டும்
கஞ்சிச் சித்தர்கள் வாழியவே !
பின் குறிப்பெச்சரிக்கை: இனி வரும் சித்துக்களின் பாட்டுக்கள் (தப்பித் தவறி வந்தால்) அடுத்த மறுமொழிக் கவியருவியில் கொட்டும்!
மறுமொழிக் கவியருவி
Posted by சுந்தரவடிவேல் at 3 comments
சித்தப் புரட்டு
நான் சும்மாயிருந்தாலும் யாராச்சும் பழசைக் கிளப்பி விட்டுர்றாங்க. விளைவு? மாட்டுறது நீங்க. நாம்பாட்டுக்கும் போயிக்கிட்டிருந்தேன், மெய்யப்பன் கூப்பிட்டு இங்க பாருங்க சித்துச்சாமி பாட்டுன்னு காமிச்சார். அந்த மாதிரி பெருஞ்சித்தா இல்லன்னாலும், 1999 வாக்குல நாந்திரிச்ச கயித்தை நெனப்புலேருந்து உருவிப் போடுறேன்.
அதுக்கு லேசா ஒரு முன்னுரை (இது வேறயா?). எனக்குக் கஞ்சின்னா ரொம்பப் பிடிக்கும். நவமோ அல்லது அதோட பன்னாட்டுத் திரிபுகளோ எந்தத் தானியம் கிடைச்சாலும் தனித்தனியாவோ அல்லது கலந்தோ காய்ச்சியடிச்சிருவேன். கஞ்சி பாருங்க, சமைக்கிறதுக்கும் சாப்பிடுறதுக்கும் வெகு சுலபம். தீவிர கஞ்சிக்குடியனாயிருந்த ஒரு காலத்திலே தங்கமணி, சாரா போன்ற நண்பர்கள் அடேய் ஒழுங்கா சமைச்சு சாப்பிடு, கஞ்சிக்குடியனா அலையாதேன்னு சொல்லுவாங்க. "கஞ்சிக்குடி" இந்தப் பேருக்குப் பின்னாடி இருந்த கவர்ச்சியில அது பின்னாடியே போயி, கஞ்சிக்குடியார் ஞானப் பொலம்பல்னு நாலைக் கிறுக்கினேன். அர்த்தம் இருந்தால் அதைக் கண்டு பிடிப்பதை அவரவர் பொறுப்புக்கே விட்டு விடுகிறேன்!
சொல்லென்னே பொருளென்னே சோளக் கஞ்சியென்னே
கற்றதென்னே மற்றதென்னே கம்மங் கஞ்சியென்னே
பொல்லாத குரங்காட்டம் நில்லாது பேயாட்டம்
புற்றீச லாசைகொல்வாய் கஞ்சி யேகம்பனே.
கல்லான் ஒருவழிநில்லான் பெருஞ்
சொல்லான் சரியான சுள்ளான்
என்றெல்லாம் என்னை எத்தித்
தள்ளுவையோ கஞ்சி யேகம்பனே?
உடுப்பான் உண்டு கொளுப்பான்
வஞ்சி மளுப்பான் நெஞ்சுபுளுப்பான்
என்றெல்லாம் என்னை எத்தித்
தள்ளுவையோ கஞ்சி யேகம்பனே?
அரிசிக் கஞ்சிகுடி அந்தரடிச்சான் முன்நிற்பான்
சோளக் கஞ்சிகுடி சொக்கன்வந்து முன்நிற்பான்
முன்வந்து நிற்பானுக்கு நீபடை தினைக்கஞ்சி
தினைக்கஞ்சி குடித்தானைத் திருவிழாக் கூத்தனை
கூத்தனைக் கூத்தாட்டும் கோலக் குரங்கை
குரங்கைக் குளிப்பாட்டும் கொக்கோகக் குளத்தை
குளத்தினுள் ளாடும் செவ்விய கமலத்தை
கமல மேந்திய காராம்பசுக் கன்றினை
கன்றிக் கன்றிக் கரைந்தேத் துவையே.
ஒரு பான்னா இந்தப்பா, அந்தப்பா, சித்தப்பான்னு எதாச்சும் பேர் இருக்கனுமில்ல. இதுகளுக்கு நான் வச்ச பேரு தடியடி குருட்டுப்பா. நீங்கள் என்னைத் தடியடிக்காமல் இருக்கும் வரை சரியப்பா!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
அரோரா-அரோகரா!
ரெண்டு நாளா வேலையைக் கழட்டுறேன். அடுத்த வாரம் என்ன செஞ்சேன்னு சொல்லியழணும். ("வாயைத் திறக்க மாட்டேன்"னு நிக்கிற பசங்களைப் பார்த்து எங்க பள்ளிக்கூடத்து இங்கிலீஷ் வாத்தியார் அப்படித்தான் சொல்லுவார், ஏலெ சொல்லியழு!). சரி சூட்டோட சூடா இந்தக் காத்தடிக்கிறப்பவே அறிவியலைப் பத்தி எதாச்சும் எழுதிப்புடுவோம்னு ஒரு சின்னத் துணுக்கு:
அரோரா அப்படிங்கற மூலக்கூறை முடக்குவதன் மூலம் புற்று நோய்க்குப் புதுசா ஒரு பரிகாரம் கண்டுபிடிச்சிருக்காங்களாம். அதைப்பத்திக் கொஞ்சம் அறிவியல் கூட்டுப்பதிவுல எழுதிருக்கேன். படிச்சுப் பாருங்க!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
மனம் போன போக்கில்
இங்க தூறிக்கிட்டிருக்கு. மிக மிக மெல்லிதாக. நீங்கள் நன்றாய் உற்றுப்பார்த்தால்தான் தெரியும். ஆனால் மின்கம்பிகளில் சேர்ந்த துளிகள் பெருந்துளியாய்ச் சேர்ந்து சொட்டும். அமைதியாயிருக்கிறது. ஞாயிறு மாலையென்றால் இப்படித்தான் இருக்கிறது. இது மற்ற மாதிரியும் இருந்திருக்கிறது. அது இனிமையும் கூட. அப்போதெல்லாம் கொண்டாட்டம் முடிந்திருக்காது. ஞாயிற்றின் மாலையும் கொண்டாட்டத்துடனேயே நிரம்பியிருக்கும். இப்போது இது ஒரு ஓய்வுக்கான நேரம் போல். இது மிகவும் ஓய்வான நேரம். சன்னலினருகே உட்கார்ந்து ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு மெல்லிய மழையின் இருளில் படித்துக் கொண்டிருக்கலாம். இருந்தேன். சில ஞாயிற்று மாலைகள் ஏனோ திங்களுக்கான கட்டியத்தைக் கூறி மனதுக்குள் ஒரு கலக்கத்தினை உண்டாக்கிக் கொண்டு கவிந்திருக்கும்.
மதியத்திலே வெயிலடித்தது. காரைச் சாலையிழுத்த வழியெல்லாம் ஓட்டினேன். அது ஒரு கடற்கரைச் சாலை. நேற்றைய மென்குளிர்க்காற்றுக்கு மாறுபாடாய் இன்றைய சூடான வெயிலிலே மக்கள் பந்தாடியும், படுத்தும், உட்கார்ந்துமிருந்தார்கள். நான் திறந்திருந்த என் கார்ச் சன்னல் வழியே பார்த்துப்போனேன். ஆளரவமில்லா ஒரு சாலை முடிவில் என் காரை நிறுத்திவிட்டு இறங்கிக் கடலைப் பார்த்தபோது இரண்டு கடற்பருந்துகளோ அல்லது கனேடியப் பெண்வாத்துக்களோ பறந்து போயின. கடல் நீலமும் கருமையும் கலந்ததாயிருந்தது. அவர்கள் வந்த பிறகு நானும் மணலில் விளையாடுவேன்.
பிறகு வந்து தென்றல் வானொலியில் சில பாட்டுக்களைக்கேட்டேன். தலைப் பத்துப் பாடல்கள். போட்டுத் தாக்கு என்று தாக்கினது. மக்களுக்கு வேகம் பிடிக்கிறது. இது நல்லது. தங்குதடையின்றி முழங்கும் இசை நன்று.
விருந்து முடிந்து இரண்டு நாட்களாயின. மதுக்கோப்பைகள், தட்டுகள், குவளைகள். கழுவிப்போட்டேன். வெள்ளியன்று என்னோடு சேர்த்து ஏழு பேருக்கு இட்லி, தோசை, சாம்பார்...இதெல்லாம் உங்களுக்கு முக்கியமில்லாததாயிருக்கலாம். நான் நன்றாகத்தான் சமைத்தேன். தரையில் உட்கார்ந்து கையால் பிரட்டிக் குழப்பிச் சப்பிச் சாப்பிட்டு, கிட்டத்தட்ட எல்லாச் சட்டிகளையும் காலி செய்து விட்டுப் போன என் பிரெஞ்சு நண்பர்களை நான் நேசிக்கிறேன்.
உங்களுக்கு வேறென்ன சொல்லலாம். ஒன்றுமில்லை. நன்றாயிருங்கள். அவன் ஊருக்குப் போயிருக்கான். அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள். நான் இங்கிருக்கேன்.
எவ்வளவு பைத்தியக்காரத்தனமாயிருந்தாலும் இதை இப்படியே உங்களுக்குச் சொல்லுவேன். அதில் நான் மகிழ்வடைகிறேன்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
தொடர் நினைவு
வாழ்க்கையெனும் ஓடத்தில் நான் போன இடங்களில் டில்லியும் ஒன்னு. ஓடத்துல போகலை. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ். ரெண்டு ரா, ஒரு பகல். ரயில்ல உட்கார்ந்து எழுதப் பிடிக்கும். படிக்கலாம். நல்லா நீட்டிப் படுத்துத் தூங்கலாம். கதவுக்கிட்ட நின்னு சூரிய உதயம், மறைவு, போற ஆறு, மலை, நிலத்தையெல்லாம் பார்த்துக் கரையலாம். ரயில்லேருந்து தாஜ்மகால் தெரியுமா, யமுனை தெரியுமா, மதுராபுரி தெரியுமா? ம்ஹூம். காட்டுக்குள்ள ரயில் போறப்ப அந்த அடர் பச்சையுள் யாரையோ தேடுவேன். புல்லரிக்கும் சில நேரம்.
ஆரவாரமாய் ஓடிய ரயில், ஒரு ஆளில்லா வெளியில் அமைதியாய்ச் சமிக்ஞை விளக்குக்கு நின்றிருக்கும் வேளைகளில் கால்களின் கீழ்க் கருங்கற்கள் சரக் சரக்கென்று நெரிபடக் கையில் கடப்பாறையோ என்னவோவுடன் ஒரு ரயில்வேத் தொழிலாளி
நடந்து கொண்டிருப்பார். அவரின் தனிமையின் பின்னாடியே மனசு போகும். சமிக்ஞை கிடைத்து ரயில் போகும்.
சில நேரங்களில் கதை பேசவும், உட்கார்ந்து விளையாடவும் சின்னப் பிள்ளைகள் வாய்ப்பதுண்டு.
ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும் ஒரு கதை சொல்லலாம் போல் நிறைய நடக்கும். ஒன்று மட்டும். நாக்பூரோ எங்கேயோ, ஒரு நிலையத்தில் ரயில் நின்றிருந்தது. திடீரென்று ஹே கரம்பக்குடி என்று சத்தம். என்னை இப்படியும் சில நண்பர்கள் அழைப்பதுண்டு என்று முன்பொருமுறை சொல்லியிருக்கிறேன். யாரடா இந்த ஊரிலே என்னைக் கூப்பிடுவது என்று திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒருத்தர் தட்டில் ஏதோ பலகாரத்தை வைத்துக் கொண்டுதான் இப்படிக் கூப்பாடு போட்டார். பார்த்தால் அது சூடான பக்கோடா. (கரம்னா சூடு, பக்கோடாவை பக்கோடி என்று ஹிந்திக்காரர்கள் சொல்வார்கள்.) கூவி விற்கும் ராகத்தில் குடி, கொடி, கோடி எல்லாம் ஐக்கியம். கதையை டில்லியில் சொன்னபோது என் ஊர்ப்பெயர் இன்னும் நன்றாய்ப் பதிந்து போனது அவர்களுக்கு!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
பாதாளக் கரண்டி
தம்பி எங்கே ஆளைக்காணோம்?
கெணத்தடியில நிக்கிறான்.
என்னவாம்?
பந்து கேணிக்குள்ள விழுந்துருச்சாம்.
மறுபடியுமா?
வாளிய வுட்டு எடுக்கப்போனானாம், அதுவும் விழுந்துருச்சாம்.
அட.
சீத்தா வீட்டுல பாதாளக் கரண்டி வாங்கியாந்து போட்டுப் பாத்துக்கிட்டிருக்கான்.
கூத்துதான்.
பின்குறிப்பு: பாதாளக் கரண்டின்னா "கிட்டத்தட்ட" இப்படி இருக்கும். அந்த வளையத்துல கயிறு கட்டிக் கேணிக்குள்ள விட்டுத் துழாவணும். வாளின்னா சீக்கிரம் மாட்டிரும். கொடம் கொஞ்சம் கஷ்டம். சில நேரங்களில், இங்க பாருங்க தங்கச்சி முந்தி போட்ட சொம்புன்னு தூர் வாரும் வரை அடியிலேயே கிடக்கும்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
அன்றொரு நாள்
பழைய டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
மே 25 2001
நாங்கள் கண்டவை
இன்று மாலை சுமார் 6 மணியளவில் எமது வீட்டிலிருந்து நானும் என் நண்பர் திரு ஆத்மசகாயமும் ஓடக் கிளம்பினோம். ஆத்ம சகாயத்துக்கு என்னைப் போன்ற அல்லது 'இதை'ப் போன்ற உடம்பு கிடையாதாகையால் நான் அவரைச் சுமந்தபடி ஓட வேண்டியிருந்தது. அவருக்குச் சிறகுகள் இருக்கின்றன என்ற மேல் விபரத்தை உங்களுக்காக இங்கே சொல்கிறேன். அவர் பேசிக் கொண்டே வந்தார். என்னிடம் ஏதாவதொன்றைக் கூறுவார். காற்றின் இரைச்சலில் நான் மறுபடியும் என்னவென்று கேட்பேன். தனக்குள்ளாகவே முனகிக் கொண்டு சும்மாயிருந்து விடுவார்.
நீங்கள் என்றைக்காவது அண்டாவில் நெல்லைக் கொட்டித் தண்ணீர் ஊற்றி, அதனை முக்கோணமாய் வைத்த மூன்று பெருங்கற்களின் மேலேற்றி, சவுக்கு செத்தையைப் போட்டுக் கொளுத்தி அவித்திருக்கின்றீர்களா? அப்படி இல்லையென்றால் ஒரு முறை அவித்துப் பாருங்கள். ஏன் என்று என்னிடம் கேட்காதீர்கள். நயாகரா அருவியைப் போய்ப் பாருங்கள் என்று யாரேனும் சொன்னால் ஏன் என்றா கேட்கிறீர்கள்?
செடிகளின் தூர்களில் பரப்பிப் போடும் பைன் செத்தை (pine straw என்று இன்னொரு மாதிரியில் சொல்லுவார்கள்), சவுக்கு செத்தை ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி. பைன் செத்தையைப் போட்டுக் கொளுத்தி நெல் அவித்துப் பார்த்ததில்லை.
திரும்பி வரும்போது நடந்துகிட்டு இருந்தோம். திடீர்னு அவரு பாதையோரத்துல இருந்த மக்னோலியா (magnolia, தமிழ்ல செண்பகப்பூன்னு ஒருத்தர் சொன்னார்) பூவப் பாக்க ஓடுனாரு. எத்தோ பெருசு. வெள்ளையா. ஏ ஆயே. மோந்து பாருன்னாரு. மோந்தேன். ஏ ஆயே என்னா வாசம். அதுகிட்ட போயி "இவனுக்குக் கலியாணம்" அப்படின்னாரு. எனக்கு வெக்கமாப் போச்சு. சும்மா இருங்கன்னேன் அவருகிட்ட. பூ பேசாம நின்னுச்சு. மகரந்தத் தூளாக் கொட்டிக் கிடந்துச்சு. அது தியானம் பண்ணுதுன்னாரு. இருக்கும். அப்புறம் 7.34க்கு நாங்கள் நலமுடன் வீடு வந்து சேர்ந்தோம்.
இந்தப் படத்தை எடுத்தவரின் மற்ற படங்களை இங்கு பார்க்கலாம்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
நான் பிராமணத் துவேஷியா?
எழுத வந்துவிட்டால் விவாதங்களிலே சக்தி விரயமாவதைத் தடுக்க முடியாதோ என்னவோ. ஒன்றும் சொல்லாமல் போய்விடலாம். அது எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளப்படும். சொல்லலாம். அதுவும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளப்படும். ஆக, பேசினாலும் பேசாவிட்டாலும் ஒவ்வொருவரும் தத்தம் மனோநிலைக்குத் தகுந்த மாதிரி எடுத்துக் கொள்வார்கள்.
அச்சுதன் கவிதையும் அதையொட்டிய வெளிப்படையான நேர்மையான விமர்சனங்களும் முடிந்துவிட்டன என்று நினைத்தேன். அது இன்னொரு பக்கம் இன்னொன்றைக் கிளப்பியிருக்கிறது. அருண் என்னையும் சேர்த்துத்தான் சொன்னார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். என் மேல் ஒரு முத்திரையைக் குத்துவதன் மூலம் என்னுடைய எல்லா விதமான உணர்வு வெளிப்பாடுகளுக்கும் பிராமண எதிர்ப்பாளச் சாயம் பூசப்பட்டுவிடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நான் எதிர்த்தது சில கொள்கைகளை, நம்பிக்கைகளை, நடைமுறைகளை. நான் எந்தச் சமூகத்தினரையும் ஒட்டு மொத்தமாக நிறுத்தி நீங்கள் எல்லாரும் பொய்யர்கள் என்று சொல்லவில்லை. அதே போல எல்லா பிராமணரல்லாதவர்களையும் அணைத்துக் கொண்டு ஆஹா நீ சொல்வதே உண்மை என்றும் சொல்லவில்லை. அருணின் பக்தியை விமர்சித்த அதே நேரத்தில் அவருடைய சமூகப் பிரக்ஞை குறித்த எனது மதிப்பையும் நான் என் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். டுபுக்கின் நகைச்சுவையையும் நான் ரசித்தே இருக்கிறேன். இவர்களது விரோதி நான் என்று சொல்லிக் கொள்வதிலே எனக்கோ அவர்களுக்கோ எந்த லாபமில்லை. (வலைப்பூக்களிலே கலகலப்பும், புரிந்துணர்வும் மாண்டுபோகும் நட்டமுண்டு). ஆனால் என் மீது இன எதிர்ப்பாளன் என்ற அவப்பெயர் குத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் எனக்கு எல்லா மதத்துக்கார நண்பர்களும் இருக்கிறார்கள். நான் மனிதர்களோடு அவர்களது தன்மைகளுக்காகவே இணக்கம் கொள்கிறேன். மதத்துக்காகவும் சாதிக்காகவும் அல்ல.
ஒருவன் கறுப்பின மக்களின் துயரங்களைப் பற்றியும், அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளைப் பற்றியும் எழுதுகிறானென்றால், அவனை வெள்ளையன் விரோதி என்று முத்திரை குத்துவது சரியில்லை. அவனுக்கும் வெள்ளைக்கார நண்பர்கள் இருப்பார்கள். அவனுக்கும் வெள்ளைக்காரனின் பல பழக்க வழக்கங்கள் பிடிக்கும். அவன் மதிக்கும் வெள்ளைக்காரப் பெரியவர்கள் இருப்பார்கள். கருத்துக்களை விட்டுவிட்டு அல்லது அவற்றுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் சாதீய அடிப்படையில் "டேய் நம்மாளு ஒருத்தனை அவன் கிண்டல் பண்ணிட்டாண்டா, மொத்துங்கடா அவனை" என்று குழுவாகச் சேர்ந்து கொண்டு விமர்சனங்களைக் கிளப்புவதுதான் சாதீயம் என்பது. அதுதான் கண்டிக்கப் பட வேண்டியது. இது எந்தச் சாதியானாலும் சரி. இங்கிருப்பவர்கள் யாருக்கும் உலகம் கெட்டழிய வேண்டும் என்ற ஆசையோ அல்லது தமிழனோ இந்தியாவோ தாழ வேண்டுமென்ற நோக்கோ இல்லை. என்னைப் பாதித்த விஷயங்களை உண்மையாக நான் எடுத்து வைக்கிறேன். உங்களுக்கு உண்மையென்று படுவதை நீங்களும் சொல்லுங்கள். உண்மை உங்களிடமிருந்தாலும், என்னிடமிருந்தாலும் அது நின்று கொள்ளும். எனவே முத்திரை குத்துவதைத் தவிர்க்கவும். அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாடுகளின் குறைபாட்டைப் பற்றி ஒருவர் எழுதுகிறாரென்றால் அவரை அமெரிக்க எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்துவது நியாயமில்லை. சமூக அக்கறையே அவரை அவ்வாறு எழுத வைக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
டுபுக்கு சொல்வது போல இந்த மாதிரியான விவாதங்களை விடுத்துப் பேசாமல் ஜோதிகாக்குக் கல்யாணம், சிம்ரனுக்குச் சீமந்தம் என்று எழுதிக்கொண்டிருக்கலாம். நண்பர்கள் கூடுவார்கள். ஒருத்தரோடும் பிரச்சினை வராது. என் நண்பர்கள் மீதும் என்னால் buy one get one free ரக முத்திரைகள் குத்தப்படாது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் என்னால் அது முடியாது. நான் உண்மையென்று நினைப்பவற்றை, அநீதியென்று எதிர்ப்பவற்றை எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இதனால் யாருடைய அதிருப்தியை நான் சம்பாதித்துக் கொள்ள நேர்ந்தாலும், அருணின் முகப்புப் பக்கத்திலே இடப்பக்கம் இருக்கிறதே ஒரு கொள்கைப் பாட்டு, அது போல் என்ன செய்தாலும்; நீங்கள் எந்த சாதிக் காரராயிருந்தாலும் உங்களது உண்மைக்காகவும் சமூக அக்கறைக்காகவும் உங்களை மதித்துக் கொண்டே.
நான் மனித வதையில், வன்முறையில் கடவுள் நம்பிக்கைத் தகர்வதைக் குறித்துக் கவிதை எழுதினால் அது பிராமண எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இதில் எனக்கு ஆச்சர்யமே. எனக்கு வைணவர்களை, ஐயங்கார்களைத் தெரிவதற்கு முன்பேயே பெருமாள் கோயில் கட்டி, வருடாவருடம் கம்பசேவை நடத்தும் தாத்தாக்களையும், மாமாக்களையும்தான் தெரியும். நான் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று சொன்னது அவர்களையும் மனதில் வைத்துக்கொண்டுதான். திருவரங்கமும், சிலையும் மட்டுமில்லை, தங்கமணியின் இரண்டு தாத்தாக்களும் தலா சைவத்துக்கொன்றும் வைணவத்துக்கொன்றுமாய்க் கட்டிய இரண்டு ஊர்க்கோயில் சாமிகளும்தான் கடவுள் எதிர்ப்பில் உதிர்கின்றன. கடவுள் மறுப்பினால் நான் எவ்வாறு பிராமணத் துவேஷியாகிறேன்?
தமிழிசைக்கு ஆதரவுக்குரலால் நான் பிராமணத் துவேஷியா? அப்படியென்றால் என் கர்நாடக சங்கீத எதிர்ப்பானது தண்டபாணி தேசிகர் திருவையாற்றிலே தமிழில் பாடியதற்காக மேடையை அலம்பிவிட்ட சாதி வெறிக்கு, மொழி ஆணவத்துக்கு எதிராகப் பிறந்தது. தமிழ்வழிக் கல்வி வேண்டுமென்று ஆசைப்படுவதால் பிராமணத் துவேஷியா? தாய் மொழியிலே கற்க வேண்டுமென்று பாரதியிலிருந்து, ஐநா அமைப்புகள் வரை கூப்பாடு போட்டதிலிருந்து தெளிந்து அவ்வழி செல்ல விழைகிறேன். இதிலே எங்கே வரும் பிராமணத் துவேஷம்? ஐயா, ஈழ மக்களின் பிரச்சினைக்கு, அவர்களது கண்ணீருக்கு எனக்கு இருக்கும் ஆதங்கத்தால் நான் பார்ப்பன துவேஷியாகப் பார்க்கப் படுகிறேனா என்றால் அதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
உன்னைச் சொல்லவில்லை, ஆனால் இணையத்திலே பிராமணத் துவேஷம் கொப்பளிக்கிறது என்று சொன்னால் அதை என் சொற்ப கால இணைய அனுபவத்தைக் கொண்டு ஆமாமய்யா, கொப்பளிக்கிறது என்றுதான் சொல்வேன். இணையத்திலே இது தொடங்கவில்லை. வேதகாலத்திலே சார்வாகர்கள் தொடங்கி, சமணத்தில் வளர்ந்து, புத்தனில் உச்சத்தை அடைந்தது அந்த எதிர்ப்புக் குரல். வள்ளுவனை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எழுத வைத்தது. சட்டநாத பட்டரின் முகத்தில் கோபக்கேள்வியை வீசும் சித்தனை வளர்த்தது. அதே கோபந்தான் பாரதியை "தமிழ்நாட்டுப் பார்ப்பார்" என்று கொதிக்க வைத்தது, ஈரோட்டிலே தழலைப் பரப்பியது. இத்தனை எதிர்ப்புகளுக்கும் நடுவில்தான் பாரி வள்ளல்-கபிலன், பாரதி-பாரதிதாசன், பெரியார்-ராஜாஜி, நானும்-என் பக்கத்து வீட்டுப் பிராமணப் பிள்ளைகளும் (என் வீடு அக்ரஹாரம்) நட்பையும் அன்பையும் நெஞ்சுக்குள் வைத்திருந்தது. இந்த வரலாறு கண்ட பிராமண எதிர்ப்புக் குரலை எங்கள் தெரு அனுமார்க் கோயில் ஐயருக்கு எதிரானதாக நான் பார்க்கவில்லை. எங்கப்பாவின் உயிர்த்தோழரான என் நல்லதொரு வழிகாட்டியான பத்மநாபன் வாத்தியாருக்கு எதிரானதாக நான் பார்க்கவில்லை. நானும் பார்க்கவில்லை, பெரியாரை உண்மையாய்ப் பின்பற்றிய எவரும் பார்க்கவில்லை. ஆனால் இந்த எதிர்ப்பு இந்துப் பத்திரிகைக்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும், நால்வர்ண சாதிய முறைக்கும் எதிரானது என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமுமில்லை. இந்த விதமான சமூக விழிப்பு சார்ந்த இயக்கங்களோ எதிர்ப்புகளோ இந்த இணையத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, தமிழில் பேசுபவர்களால் மட்டுமில்லை, ஒடுக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சிவதர்மா என்றொரு புதிய மதம் தோற்றுவிக்கப் படுவதாகப் படிக்கிறேன். இவர்கள் இந்து மதத்தின் அடக்குமுறையைத் தகர்த்தெறியத் தயாராகிறார்கள் என்றும் படிக்கிறேன்.
எனக்குக் கபிலன் பிராமணனில்லை, பாரதி பிராமணனில்லை, வாஞ்சிநாதனில்லை, சின்னக்குத்தூசியில்லை, தி.ஜானகிராமனில்லை, இணையத்திலும் வெளியுலகிலும் இருக்கும் எத்தனையோ பூணூல் போட்ட நண்பர்கள் பிராமணர்களில்லை, அவர்கள் என்னின் ஒரு கூறு. சமுதாயப் பிரக்ஞையும், இதயமும் உள்ள மனிதர்கள். எனவே என்னைப் பிராமணத் துவேஷி என்று முத்திரை குத்திவிட்டுப் போகாதீர்கள்.
ஒரு கவிதையை எழுதிவிட்டு அதற்குப் பிறகு இப்படியொரு கட்டுரையையும் எழுத வேண்டி வந்த நிலையை எண்ணிச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
நம்பிக்கைச் சாடலும், அழகியலும்
இது சண்டையில்லை. நேற்றைய கவிதை மீதான திரு. பத்ரியின் விமர்சனத்துக்குப் பதில் எழுதும் பொருட்டு யோசித்தபடி இருந்தேன். எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறேன். இதிலே பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். அல்லது இந்த மாதிரி யோசிக்கலாமே என்று வாசனைப் போல் வழிப்படுத்துங்கள். இன்னுமொன்றும் சொல்லிவிடுகிறேன், பத்ரியின் பல விஷயங்கள் குறித்த பார்வைகளை நான் மதிக்கிறவன். சரி. அவர் அந்தக் கவிதையிலே இரண்டு விஷயங்களைக் குறைபாடென்று சொன்னார். ஒன்று நம்பிக்கைச் சாடல். இன்னொன்று அழகற்ற கலைவடிவம். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நம்பிக்கை: மனிதனுக்கு நிறைய நம்பிக்கைகள் இருக்கின்றன. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் மற்றும் இடைப்பட்ட வாழ்வு குறித்தும் நிறைய நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்நம்பிக்கையில் எதிர்பார்ப்பும் மிகவே கலந்திருக்கிறது. தான் மற்றவரால் சமூகத்தில் கண்ணியத்துடன் காணப்பட வேண்டும் என்பது மனிதன் சமூகத்தின் மேல் வைக்கும் நம்பிக்கை. தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி மன்றத்துக்குச் செல்வது நீதி மேல் இருக்கும் ஒரு நம்பிக்கை. எதிர்பார்ப்பு. இதே மாதிரிதான் வேலை கிடைப்பதிலிருந்து தண்ணீர் கிடைப்பது வரை நம்பிக்கைகள். இவை நடைமுறை வாழ்வு சார்ந்த நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகள் நம் நாட்டிலே பொய்த்துப் போவது கண்கூடு. இந்த வாழ்வுசார் நம்பிக்கை மறுப்புகள் மனிதர்களை எந்த அளவுக்குப் பாதிக்கிறது?
இப்போது மத நம்பிக்கைகளை எடுத்துக் கொள்வோம். இகத்தில், பரத்தில், அல்லது இரண்டிலும் நல்வாழ்வு வாழ மதங்கள் போதிக்கின்றன. நல்வாழ்வு மேல், நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளவர்கள், மதங்களின் வாயிலாக இவை கிடைக்குமா என்பதைத்தான் தேடுகிறார்கள்.
இந்த இரு நம்பிக்கைகளிலே எந்த நம்பிக்கை பெரியது, எது சிறியது? நசுக்கப்பட்ட வாழ்வு வாழ்ந்தபடி சாதாரணத் தேவைகள்கூடக் கிட்டாத மனிதனின் நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுக் கிடக்கிறது. இந்த அவமதிப்பு, இந்த நம்பிக்கைச் சாடல் அல்லது நம்பிக்கை முறிப்பு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா? இதுதான் வாழ்க்கை என்ற நிலையில் தன்மீது கவிந்து கிடக்கும் இருளை அவன் உணரவோ அல்லது அதை நீக்கவோ தலைப்படுகிறானா? இப்போது மத நம்பிக்கைச் சாடலை நினைப்போம். மதநம்பிக்கைச் சாடல் ஏன் இவ்வளவு கடுமையாகக் கண்டிக்கப் படுகிறது? அந்த மனிதனுடையதும் நம்பிக்கை. இந்த மனிதனுடையதும் நம்பிக்கை. அந்த மனிதனின் வாழ்வுகுறித்த நம்பிக்கைகள் கலைக்கப் படுவது கண்டு கொள்ளப் படவில்லை. ஆனால் இந்த மனிதனின் மதநம்பிக்கைகள் விமர்சிக்கப்படும் போது மனம் அதிக அளவில் புண்படுகிறது. இந்த வித்தியாசம் ஏன் என்று யோசிக்கிறேன். மனிதனுக்கு வாழ்வை விட மதம் பெரியதா? இப்போதைய தேர்தல் முடிவை மதமா, வாழ்வா என்ற நோக்கில் பார்த்தால் மதத்தை விட, தனிமனித வாழ்வு மேம்பாட்டுக்காகவே மக்கள் ஏங்குவது புரிகிறது. இல்லையா? கடந்த கால மத மாற்றங்களில் இந்த ஏக்கங்களின் பங்கு அதிகம் என்றே நினைக்கிறேன். அதே நேரத்தில் மாற்றுமதத்துக்காரன் கையில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக நெருப்பில் பாய்ந்த ராஜபுதனப் பெண்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இவர்களுக்கு வாழ்வை விட மதமே பெரிதாயிருந்ததா, அல்லது மாற்றான் கையில் தம் வாழ்வு சீரழியும் என்பதை உணர்ந்து, நல்வாழ்வு அல்லது சாவு என்ற முடிவுக்கு வந்தனரா? எது எப்படியோ, நம்பிக்கை நசுக்கல் தவறு. அதிலே வாழ்வு சார்ந்தது அமைதியாய் அடியில், அதிக எதிர்வினைகளின்றி நடந்து கொண்டிருப்பதாகவும், மத நம்பிக்கைச் சாடல் மேம்போக்கில் தெரியும்படி ஆரவாரமாக நடப்பதுவும், அதற்கு எதிர்வினைகள் உடனுக்குடன் கிடைக்கும் என்பதுதான் நானறிந்த உண்மை.
கலை வடிவம்: அந்தக் கவிதை அசிங்கமாக இருக்கிறதென்றார். ஒத்துக் கொள்கிறேன். எனக்கே அதைப் படிக்கும்போது தொண்டையில் ஏதோ செய்தது. அதிர்வலையை மெல்லவும் ஏற்படுத்தலாம். கடுமையாகவும் ஏற்படுத்தலாம். பண்டைய கிரேக்கக் கலை வடிவங்களில் இந்த இரண்டும் உண்டு. அபலோனியம் (appollo), டயோனிசம் (dianoisia). நியெட்சேயின் கூற்றுக்களின்படி அபலோனியக் கலையம்சம் அமைதியானது, அமரிக்கையானது. டயோனிசக் கலைகள் ஆர்ப்பாட்டமும், ஆவேசமும். அபலோனியம் தெய்வீகம் என்று கொண்டாடப் பட்ட போது டயோனிசக் களியாட்டங்கள் குரூரமாகவும், அநாகரீகமாகவும் காட்சியளித்தன. இந்த டயோனிசமே கிரேக்கத் துன்பியல் நாடகங்களுக்கு அடித்தளம். இந்நாடகங்களில் வரும் பாத்திரங்கள் தெய்வங்களின் நிரந்தர அன்பையும் ஆசியையும் வேண்டி நிற்பதில்லை. தம்முடைய ஆற்றல்களில் நம்பிக்கை கொண்டு கடவுளர்களைப் புறக்கணிக்கவும், அவர்களை மீறிச் செல்லவும் அவர்கள் தயங்குவதில்லை. நியெட்சே இவர்களில் ஒருவனான ப்ராமிதியஸ் என்பவனைப் பற்றிச் சொல்லும்போது, "தனக்கு அப்பாற்பட்ட சக்திகளைத் தொழுது வணங்கித் தன்னை வாழ்விக்குமாறு இறைஞ்சுவதை விட்டுவிட்டுத் தன் ஆற்றலில் முழு நம்பிக்கை வைத்துத் தன்னுடையை வாழ்க்கையை நடத்தும் பொறுப்பைத் தானே துணிவுடன் ஏற்றுக்கொள்ள மனிதன் முன்வந்து விட்டான்" என்கிறார். இவ்வகையான டயோனிசக் கலைகளிலே மென்மையையும் அழகையும் தேட முடியாது. எங்கள் ஊர்க் கொம்புக்காரனுக்குக் கொம்புகள் இருக்கும், பெருங்கடா மீசை, கையிலே கத்தி பார்க்கப் பயம். பக்கத்து முருகன் கோயிலிலே முருகன் அழகாய் நிற்பார். இது ஒரு வடிவம் அது ஒரு வடிவம். ஒரு கவிதையில், அம்மாவின் யாசிப்பில் எப்போதாவது கிடைக்கும் பழஞ்சட்டையைப் போட்டுக் கொண்டவனை, சேற்றிலும் துர்நாற்றத்திலும் ஊறிப்போன அம்மா நெட்டி முறித்து அழகு பார்ப்பாளாம். இவரிடம் அம்மா வழக்கம் போல் மஞ்சளும் குங்குமமும் மணக்க வருகிறதுதான் அழகு என்று சொல்ல முடியாது. இரண்டு வகையான வெளிப்பாடுகள். முடிவாக, நான் இந்த வடிவில்தான் இந்த வார்த்தைகளைப் போட்டுத்தான் இதை எழுத வேண்டும் என்று முன்யோசனையுடனெல்லாம் எழுதவில்லை. நான்கு நாட்களாய் ஊறிக்கிடந்ததை எழுத உட்கார்ந்தேன். அப்படித்தான் வந்தது. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
அச்சுத வாய் ரோகம்
என் வயதோ எண்ணில, நான்
அகிலம் படைத்த காலங் கணக்கில
ஈறு வெடித்துப் புதுப்பல்லா முளைக்கிறது?
இதுயென்ன பல்லில் வலி,
பாரேன் சற்றேயென வாய்பிளந்த திருமாலின்
வாயிலே லோகங்கண்ட லெச்சுமி யீதுசொன்னாள்:
கோபுர உயரங்களிற் கிழியுதுன் மேலன்னம்
பல்லிடுக்குத் துருக்கலப்பைக்குச் சீழ்
இவரையவர் அடித்தாரென்று அவரையிவரடித்ததனால்
அவரையிவர் கழுத்தறுத்த ரத்தங்கொஞ்சம்
இவர்மேல் அவர் போட்ட குண்டின் புகை,
இன்னும்...
போதும் நிறுத்து பொன்னாளே.
யோசனையாய் வாயெரிகுண்டுப் புகையிழுத்து
மூக்கின்வழி வெளிவிட்டுப்
புதுசாய் வெடித்துப் பூத்த கோளொன்றை
வெளித் துப்பிச் செருமினான்.
வேண்டாமிந்த அண்டம், இவ்
விண்மீன்களை அவித்துக் கரியகற்றிப்
புதுசாய் வேறுசெய்வேன் என்றுசொல்லி
அள்ளி வாயிலிட்ட நீரில்
அடித்தது மனுசக் கவுச்சி.
விண்மீனேதும் அணையுமுன்னே
அவசரமாய்த் துப்பிச்
சுளித்த முகங்கண்டு தேவி,
நாராயண மன்னிக்க, அது
நிலஞ்செத்துக் கடலிற் சேர்ந்ததுவும்
கடலிலேயே மாண்டுக் கரைந்ததுவும்,
நும் கை அள்ளியது ஈழத்தண்ணீர்!
நாராயண நாராயண.
வாசவி வால் நுனியெடுத்து
உள்நாக்குக் குடைந்து ஓக்காளித்தும்
கமலப்பூமணந் திரும்பவே யில்லை.
பின் இளவளர் கொங்கைபற்றி
முறையேழு புணர்ந்து ஓய்ந்து
ஊனீர்க்கடவாய் அச்சுதன் உறங்கிப்போனான்.
பின்குறிப்பு:
திருமால் விஸ்வரூபத்திலே வாய் திறப்பார். அதற்குள் லோகமெல்லாந் தெரியும். காட்சிகள் தெரியும். இப்போதைய காட்சிகளால் திருமாலுக்கு வேதனை. ஆயினும் அவரால் ஒன்றும் செய்வதற்கில்லையென்பதைக் கவிதை சொல்கிறது. 1985 இதே நாளில் (மே 15) ஈழத்தில் குமுதினிப் படகில் மக்கள் வெட்டப்பட்டதற்கும், மற்ற நாட்களில் மற்ற இடங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கும் காரணமாயிருக்கும் அரசுகளின் பயங்கரவாதத்தை நினைவில் வைப்போம்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
சாதிகள் உண்டென்று சொல்வோம்
வீட்டுக்காரம்மா ஊருக்குப் போயிட்டா நம்ம மேல அனுதாபம் கூடிப் போயிருது. நமக்கும் மத்தவங்களுக்கும். சாப்பிட எங்க வீட்டுக்கு வா அப்படின்னு அப்பப்ப அழைப்பு. நேத்து போனது ஒரு நண்பன் வீட்டுக்கு. பிரெஞ்சுக்காரன். மனைவியோடிருக்கிறான். கொஞ்சம் சோமப்பால். சொல்லமுது. அரட்டை நகர்ந்து முதற்பேர், கடைசிப்பேர், காசியண்ணா எழுதின அக்கப்போருக்குப் போனது. முன்பே சொல்லிருக்கேன். மறுபடியும் சொன்னேன். கடைசிப்பேர்லேர்ந்து இன்னுங்கொஞ்சம் நகர்ந்து சாதிப்பேருக்குள்ள போச்சு பேச்சு. இது தெரியாத ஆளில்லையவன். படிச்சிருக்கான். எல்லாருக்கும் புத்தக வாசத்தை விட அனுபவிச்சவ வாய் வாசகம் வேணும். சொன்னேன்.
நாலு இருக்குடா. அவனவன் வேலையை அவனவந்தான் செய்யணும். அதான் தருமம். குல தருமம். பிறப்பறுத்து உய்ய வழின்னு சொல்லிருக்காங்க. இத யாரு கண்டுபுடிச்சதுன்னு வெறியாய்க் கேட்டது தம்பதி. அடங்குங்க. நாங்க அடங்கலயா. அடக்கலயா. மனுவையும் தாண்டி சுயம்பா வந்ததெல்லாம் வேற கதை. இப்பவுமா அப்படியே இருக்கு? அப்படியே இல்ல. ஆனா வேற மாதிரி இருக்கு. இதோ இந்த வலைப்பூக்கள்ல கூட மினுமினுக்கும் பாருங்க. நாளாகும். மாற ரொம்ப நாளாகும்.
நேத்துத் தின்ன பிரெஞ்சுச் சோறு செரிச்சிருச்சுப் போச்சு. அந்த நினைப்பும் பேச்சும் கழியலை. நம்ம என்ன செய்யனும்னு நான் நினைக்கிறேன்னா, சொல்லுங்க. பாக்குற வேத்து நாட்டுக்காரன்/காரிகிட்ட சொல்லுங்க, எங்க ஊர்ல சாதி இருக்கு, எங்க ஊர்ல வயல் வேலை செய்யுற பறக் கருப்பனை வீட்டுக்குள்ள கூப்பிட்டுச் சாப்பாடு போடமாட்டோம். எங்க ஊர்ல கோயிலுக்கு உள்ள போகச் சாதி வேணும். சாமியத் தொடச் சாதி வேணும். உடம்பை வருத்தி வேலை செய்றவனைத் தொட்டாத் தீட்டு. பாத்தா தோஷம். கேட்டா அதான் மதம். மத தர்மம். குலப் பெருமை. இன்னும் உங்களுக்கு அனுபவமே இல்லாமயா இருக்கும். யோசிச்சுப் பாருங்க. அதையும் சொல்லுங்க. நாட்டுக்குத் தலைக்குனிவுதான். வெக்கந்தான். ஆனாலும் சொல்லுங்க. இதுக்கும் இனவெறிக்கும் பெருசா வேற்றுமை இல்லன்னு ஊரு ஒலகமெல்லாம் தெரிஞ்சுக்கட்டும். இந்திராநகர், இரண்டாம் வீதி, 18ம் நம்பர் வீட்ல பொறந்ததால நீங்க கீழ்ச்சாதின்னு சொல்லுங்க. நாளைக்கு உங்களைப்பாத்தா அவனுக்கு சாதீன்னு நினைப்பு வரணும், அந்த அளவுக்குச் சொல்லுங்க. சொல்லாம இருக்கதுதான் தப்பு. அவமானம்.
இது என்ன ஒலகத்துக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க. நாஞ்சொல்றேன், தெரியாது. முத்துகிட்ட கேட்டுப் பாருங்க, உங்க ஊர்ல குடை இருக்கா, மழை இருக்கான்னு ஜெர்மனில கேக்குறாங்க. பொதுஜனமில்ல, படிச்சவங்க, பெரிய படிப்பு படிக்கிறவங்க. அப்படின்னா படிக்காதவங்களுக்கெல்லாம் என்னன்னு தெரியும்? யாரு சொல்லுவா? புத்தகம் சொல்லாது. இருக்கதை அப்புடியே சொல்லாது. நீங்க சொல்லுங்க. நான் சொல்றேன். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் சொல்றேன். நல்லாயிருக்குன்னு பூசி மழுப்புறதை விட இப்படிச் சொல்றதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அப்பதான் நடக்குறவனாட்டம் இருக்கு. நாமெல்லாம் நடக்கனும். இங்கேயே ரொம்ப காலம் நிக்க முடியாது.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
வலைப்பின்னல்
மனசுக்குள் எழுத்து ஓடிக் கொண்டிருக்கிறதா அல்லது எழுத்தின் மேல் மனசு ஓடிக் கொண்டிருக்கிறதா? தெரியாது. எப்போதும் ஏதோ யோசனைதான். வேறு வேலைகளைச் செய்தாலும் பின்புலத்தில் இந்த எழுத்து தன் கைகளையும் கால்களையும்காற்றிலே அலைத்துக் குதித்து என்னோடு பேசிக் கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடம் என்று எழுத்திடம் சொல்லிவிட்டுத்தான் கூப்பிட்டீர்களா என்று அழைத்தவருக்கு மறுமொழி சொல்கிறேன்.
நான் இலக்கியம் படிப்பது குறைவென்ற நித்தியக் கவலையை இன்னும் கொஞ்சம்ஏற்றி விட்டது பத்மநாப ஐயரின் பணிகள். எத்தனை நூல்கள் வெளிவரக் காரணமாயிருந்திருக்கிறார் என்று அவரது திண்ணைப் பேட்டியைப் படித்து மலைப்பாக இருந்தது. படிக்க வேண்டும். நிறைய.
நீங்களெல்லாம் எப்படிச் சமாளிக்கிறீர்களோ தெரியாது. ஆனால் எனக்கு வேலையிடத்தில் இந்த வலைப்பூ மேய்ச்சல் தாங்காது. நானும் அஷ்டாவதானியாகி ஆடியும் பாடியும் வேலை செய்யலாமென்றுதான் பொட்டியைக் கட்டிக் கொண்டு போவேன். போனவுடன் பொட்டியைத் திறப்பேன். அட, இந்தக் கடைசி அரை மணி நேரத்துல
யாராச்சும் மறுமொழி எழுதிருக்காங்களான்னு பாப்போமேன்னு நின்னுக்கிட்டே வலையை விரிப்பேன். யாராச்சும் எழுதியிருந்தா முரசு, பொங்குதமிழ், அதுக்கொரு பதில். இல்லன்னா, அட அவன் என்ன எழுதிருக்கான், இவன்? நாற்காலியை இழுத்துப் போட்டு முழங்காலை மட்டும் ஊன்றிக் குனிந்து படிப்பேன். அப்படியே இணைப்பைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே போவேன். வருவேன். உட்காருவேன். வேலை? இரு ஒரு அரை மணி நேரம். சரியா 9க்கு எழுந்துடனும் சரியா? மனசாட்சி எட்டிப் பார்த்து எங்கப்பா காலையில அஞ்சு மணிக்கு எழுப்புற மாதிரி டேய் எந்திரிச்சுப் படிடாங்கும். அந்தத் தொணதொணப்பில் வலையில் பிண்ணி மாட்டிக் கிடக்கும் மனசை இழுத்துக் கொண்டு போவேன். பாதி அறுந்தும், பாதி இழுபட்டும், மீதி சிக்கியும் கிடக்கும் மனசைக் கொண்டு போய் ஒரு குடுவைக்குள் ஊற்றுவேன். குறுக்கே வராதே நூலாம்படை செல்லுக்காகாது. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.
இது இப்படியே கொஞ்ச காலம் நடந்தது. ந்தா அந்தத் திட்டம் எப்படிப் போகுது என்று என் பெரியவர் கேட்டாரானால்போகுது, போகணும், போகத்தானே வேணும் என்று என்னால் முடிந்தளவு ஏதாச்சும் அவருக்குத் தத்துவார்தமாய்ச் சொல்லப் பார்த்து, முழித்துப் பின்னொருநாள் நான் நிறைய நேரத்தை என் தமிழ் வலைப்பதிவுல செலவிடுறேன் என்றேன். சிரித்தார். ம் இருக்கட்டும், அந்த நஞ்சன்பர்க் ஆராய்ச்சிக் கட்டுரையைப் பார்த்தாயா நன்றாய்ச் செய்திருக்கிறான் என்றார். பாவம் வேறென்ன செய்வார்.
எனக்குத் தெரிந்த ஒரு இளைய நண்பன் எதையுமே ஒப்பேற்றுவதில் கெட்டிக்காரன். அதை நான் முன்பு மிக வன்மையாக எதிர்த்திருக்கிறேன். இப்போது எனக்கு, நான் நிறைய ஒப்பேற்றுவதாகத் தோன்றியது. சரிநம்ம பொட்டிக்கும் வேலையிடத்துக்கும் ராசியில்லையென்று இந்த வாரத்திலிருந்து என் கணிப்பிள்ளையை வேலைக்குக் கூட்டிப் போவதில்லை. ஓரளவு வேலை செய்கிறேன். முதலில் சொன்னேனே அந்த மனசு சமாச்சாரம் அது விட்டகுறை, தொட்ட குறையாய் வரத்தான் செய்கிறது. இதற்கு நடுவிலே இன்னொரு திட்டப்பணி. என்னாச்சு என்று பிரெஞ்சுக்காரனொருத்தன் என் பெரியவரை நச்சரிக்க, அந்த மின்னஞ்சலை அவர் எனக்கனுப்பக் கிட்டத்தட்ட ஒரு மாசமாக நான் இழுத்தடித்ததை நேற்று ஆரம்பித்தேன். படபடவென்று உட்கார்ந்து எழுதி, இந்தாரும் என்று கொடுத்து வந்தபோது ஹ¤ம், செய்ய நினைத்தால் எதையும் செய்யலாம் என்றுதான் தோன்றியது. ஆனா மூச்ச்... இன்னும் கொஞ்சம் நான் பக்குவப்படும் வரைக்கும் வேலையிடத்தில் வலைவேலை வேண்டாமென்று வேலைப் பிடிப்பதே வேலையாய் இருக்கப் போகிறேன். வீட்டில் மட்டுமே வலை, சரியா?
Posted by சுந்தரவடிவேல் at 2 comments
குமுதினி - ராஜாவின் மறுமொழி
தட்டுவோம், திறக்கும் என்ற சென்ற பதிவுக்கு நண்பர் ராஜா மறுமொழியிட முயன்றிருக்கிறார். என் மறுமொழிப் பெட்டியில் ஏதோ பிழை. அவரால பதிய முடியலை. தனியஞ்சலில் அனுப்பினார். அவருடைய மறுமொழி இதோ:
"இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி நான் கேள்விபட்டதில்லை. இது போல இன்னும் எத்தனையோ வெளியே வராத விசயங்கள் ஈழத்தில் நடந்துள்ளன. ஈழத்தைப் பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ அது தேசத் துரோகம் என்பது போல நம் நாட்டிலேயே எண்ணப்படும் போது நாம் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் ஏன் சலித்து கொள்ள வேண்டும்? ராஜிவ் கொலை என்பது மன்னிக்க முடியாத, தன்னிலை விளக்கத்திற்கும் (துன்பியல் சம்பவ???்) உட்படுத்த முடியாத, நம் உணர்வுகளைக் காயப்படுத்திய, மாறாத ஒரு வடுவை நம் நெஞ்சங்களில் ஏற்ப்படுத்திவிட்ட ஒரு பாதகசெயல் என்ற விதத்தில் எனக்குப் புலிகள் மேல் தீராத ஆற்றாமை உண்டு. ஆனால் இப்போது நம் அமைதிப் படையினர் அங்கே செய்த கொடுமைகளைப் பற்றி அம்மக்கள் சொல்லக் கேட்கும் போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதோ என்று கொஞ்சம் மனதில் படுகிறது. அந்த ஒரு தவறை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நாம் இன்னும் ஈழம் பற்றியும், அம்மக்கள் படும் துயரம் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறையில்லாமல் இருப்பது, ஈழம் பற்றிப் பேசினாலே பொடா பாயும் என்று பயமுறுத்துவதும் நம் தமிழ் இனத்துக்கே நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். ஒரு தமிழனாகிய எனக்கே இந்தக் குமுதினி படுகொலை இதுவரை தெரிய வில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இது வரை இது தெரியவில்லை என்பதும் இது பற்றிய செய்தியை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதும் நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் நமக்கு செய்து வரும் மிகப் பெரிய துரோகம். முதலில் சரிய செய்யப்பட வேண்டியது இது தான்.
வெட்டி வீழ்த்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு முதல் உதவி முதலில் நாம் செய்வோம். உதவிக்கு அடுத்த வீட்டுக்காரன் கதவை தட்டுவது பற்றியெல்லாம் அப்புறம் யோசித்துக் கொள்ளலாம்".
நன்றி ராஜா!
Posted by சுந்தரவடிவேல் at 5 comments
தட்டுவோம், திறக்கும்.
பத்தொன்பது வருடங்களுக்கு முன் இதே மே மாதம், 15ம் தேதி. 1985. ஒரு பயணியர் படகு. பெயர் குமுதினி. நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவன் தோணித்துறைக்குப் போனது. பயணம் செய்தது எத்தனை பேரென்று யாருக்குத் தெரியும்? ஐம்பதிருக்கலாம். ஆறு சிங்களக் கடற்படையினரும் ஏறினார்கள். நடுக்கடலில் ஒவ்வொரு பயணியையாக அழைத்தார்கள். உன் பெயரைச் சத்தம் போட்டுச் சொல் என்றார்கள். நடுங்கிய பயணிகள் சொன்னார்கள். வயசெத்தனை, எந்த ஊரு, எங்க போறே, கத்திச் சொல் என்றார்கள். சொன்னார்கள். பிறகு வெட்டிக் கொன்றார்கள். இரண்டு வயதுக் குழந்தை, பெண்கள் என்று நாற்பத்தெட்டு தமிழர்களை அந்தப் படகில் வைத்துக் கொன்றார்கள். நைனத் தீவுக் கடற்படைக் காரர்கள்தான் இந்தப் படுகொலைகளைச் செய்தது என்று நீதிமன்ற முறையீடு. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்ணால் கண்ட சாட்சிகளை வைத்து அது சிங்களக் கடற்படையினரே என்று வாதிட்டது. லலித் அதுலத் முதலியோ "யார் செய்தது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை"யென்று சொல்லிப் போய்விட்டார். நீதி மன்றத்தில் பத்தொன்பது வருடங்களாகத் தூங்குகிறது குமுதினிப் படகுப் படுகொலைக் கோப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இந்தப் பிறவியில் கிடைக்குமா?
காங்கோ இனப் படுகொலையில் இதே மாதிரி ஒரு படகுக் கொலை நடந்தது உலகத்துக்கே தெரிகிறது. நியூயார்க் படகு விபத்தில் பத்து பேர் செத்துப் போனதற்கு உலகம் முழுக்கப் பதறுகிறது. 1994ல் க்யூபாவிலிருந்து தப்பிக்க 72 பேரோடு கிளம்பியவொரு படகு அந்நாட்டுக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு, அதில் 41 பேர் செத்ததற்கு போப்புசாமி ஆறுதலாவது சொன்னாராம். ஆனால் இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தால், கிடைக்கும் பதிவுகளை ஒரு கையினால் விரல் விட்டு எண்ணி விடலாம். காங்கோ, நியூயார்க் சம்பவங்கள் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தவை. இப்போதிருக்கும் தொலைத் தொடர்பு வசதி 1985இலே இல்லையென்பதால்தான் அதைப் பற்றிய செய்திகள் இணையத்திலே கிடைக்கவில்லை என்பது காரணமா? அல்லது குறை நம்மிடம் இருக்கிறதா? நாம் எதையும் அம்பலப் படுத்துவதில்லை. எண்ணிக் குமைவதை யாரிடமும் சொல்வதில்லை. அதனாலேயே நாம் உலகின் பார்வையிலிருந்து விலகிக் கிடக்கிறோமா? நாம் பட்ட பழைய கஷ்டங்களை யாரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது, எல்லாம் விதி, தலையெழுத்து என்ற மனப்பான்மை நமக்கு இருக்கிறதோ? சின்னதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மிடையே நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பேரொலியுடன் அம்பலப் படுத்துவதன் மூலம்தானே பரபரப்பான இவ்வுலகின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும்? போராட்டமும், குரலெழுப்புதலும்தானே நமக்குத் தீர்வைத் தரும்? எனவே மனித உரிமைகள் மீறப்படும்போது நாம் துளியும் சகித்துக் கொள்ளாமல் (Zero Tolerance) குரலெழுப்ப வேண்டும்.
ஆதாரங்கள்:
http://www.atimes.com/ind-pak/DC23Df05.html
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=8990
http://www.tamilnaatham.com/(மே 10, மாலைச் செய்திகள்)
Posted by சுந்தரவடிவேல் at 1 comments
பந்து மித்ர!
வெயில் அடிக்குது. வெயில், மூஞ்சில சுள்ளுன்னு அடிச்சா ஒரு சொகம். வெயிலைப் போல் அழகிய பதார்த்தம் வேறில்லை-பாரதி. புல்லு கிளம்புற மாதிரி மனசுக்குள்ள அடைஞ்சு கிடந்த விளையாட்டார்வமும் கிளம்பிரும். மூனு வாரமா காற்பந்து விளையாடுறோம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விளையாட்டுன்னா இதைத்தான் சொல்லுவேன். இதைத்தான் கனவாய்க் காணுவேன். என் கல்லூரி இயற்பியல் வகுப்புக்குள்ள உக்காந்திருக்கும்போது மெல்ல நழுவி என் மனசு போற இடங்கள்ல இதுவும் ஒன்னு. ரொம்பப் பெரிய வீரனில்ல. பள்ளி, கல்லூரிய விட்டுத் தாண்டினதில்ல. ஆனாலும் எதிராளிகள் கவனிச்சுக்குற மாதிரி விளையாடுவேன்னா பாத்துக்கங்க.
எங்க ஊர்ல, அதான் கரம்பக்குடியில, நானிருந்த காலம் வரைக்கும், காற்பந்துதான் ஊர் விளையாட்டு மாதிரி. வைரவமூர்த்தி ஒரு உடற்கல்வியாசிரியர். சக்கரபாணி ஒரு ஊர்ப் பெரியவர். காற்பந்துக்காகப் பாடுபட்டவர்கள். இறந்து போனவர்கள். எனக்குத் தெரியாது. அவர்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும் கரம்பக்குடி வைரவமூர்த்தி சக்கரபாணி நினைவு காற்பந்துப் போட்டி நடக்கும். நிறைய அணிகள் வரும். கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் நடக்கும். எங்க ஊர் அணியில அப்போ இருந்த அண்ணன்கள் எங்களுக்கு முன்மாதிரிகள். எனக்குள்ள தமிழ்ச்செல்வன் மாமா மாதிரி விளையாட ஆசையிருந்தது. என்ன வேகம்! சாப்பிடப் போகாமல் பார்த்துக் கொண்டிருப்போம், அப்பா வந்து கூட்டிப் போவார். அப்பா என்னை விளையாட ஊக்கப்படுத்தியே வந்தார். அவர் நீண்ட நாட்களுக்கு எங்களை விட்டு ஊர்ப்பயணங்கள் போவது குறைவு. அப்படிப் போகும்போதெல்லாம் நான் கடிதம் எழுத நேர்ந்தால், அப்பா எனக்கு வரும்போது பேனாவும் பந்தும் வாங்கி வரவும்னு தான் எழுதுவேன். அப்படிப் பிடிக்கும். வீட்டு ஓட்டில், சுவற்றில் எறிந்து உதைத்துத் திரிவேன்.
எங்கப் பள்ளிக்கூடத் திடலில் ஒரு நாள் சாயங்காலம் விளையாடிக்கொண்டிருக்கும்போது, ஒருத்தன் சொன்னான், டோய் அவங்கதான் விடுதலைப் புலிகளாண்டா. நம்மை மாதிரித்தான் இருந்தார்கள். பேச்சு மட்டும் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. அப்போதெல்லாம் ஊரைச் சுற்றித் தோப்பு/காடுகளில் முகாமிட்டிருந்தார்கள். நன்றாய் விளையாடுவார்கள்.
அப்புறம் இளநிலைக் கல்லூரியில் காற்பந்துக்கும், பாட்மிண்டனுக்குமாகத் தாவிக்கொண்டிருந்ததில் இரண்டிலும் ஒழுங்காயில்லை. ஆனால் அந்தக் காலத்தின் அழகிலும் துடிப்பிலும் அது ஒரு குறையாய்த் தெரியவில்லை. சென்னையிலிருந்த ஏழு வருடங்கள் என் காற்பந்துக்குக் களப்பிரர் காலம் மாதிரி. என் விளையாட்டுக்கள் அந்தக் கடற்கரையில் அப்பப்ப ஓடியாடித்திரிவதோடு சரி. பந்தடிக்கலை. மறுபடியும் டில்லியில அந்தக் கருப்பு வெள்ளைப் பந்தைப் பெரிய மைதானத்தில் துரத்திக் கொண்டு ஓடியது ஆனந்தம். நிஜமாகவே. டில்லியில் என்னைச் சில நண்பர்கள் கரம்பக்குடி என்றே கூப்பிடுவது வழக்கம். பந்தை எடுத்துக் கொண்டு ஐயா ஓடினாரென்றாலோ, அல்லது கோல் ஒன்று போட்டாலோ, ஹே கரம்பக்குடின்னு சத்தம் கிளம்பும். திமிர் வியர்வையோடு பெருகி ஒழுகும்.
அமெரிக்காவுல முந்தி இருந்த சார்லஸ்டன்லயும் ஒரு நல்ல காற்பந்துக் கூட்டம் இருந்துச்சு. சனிக்கிழமை சாயங்காலப் பந்தடிக்காக எல்லாரும் காத்துக் கொண்டிருப்போம். அங்கதான் அம்மணியப் பாத்தேன். சந்தித்த முதல் சனிக்கிழமை, கடலோரத்தில் அந்திப் படகொன்றில் செல்லப் பதிவு செய்திருந்தேன். அவரோ, இல்லையில்லை, நீ காற்பந்து விளையாடப் போ, நானும் வந்து பார்க்கிறேன் என்று கூடவே கிளம்பிவிட்டார். அன்றைக்கு ஆடிய ஆட்டத்தில் விழுந்தவர்தான் (என்று நானாக நினைத்துக் கொள்கிறேன்!). இப்பவும் இந்தப் புது ஊர்ல பனிக்குளிர் முடிஞ்சு வெயிலடிச்சதும் வெளிக்கிளம்பின பந்தாட்டத்தை நினைச்சா நல்லாருக்கு. நான் போற இடமெல்லாம் இந்தப் பந்து உருண்டு வர்றது சந்தோஷத்தைக் கொடுக்குது.
நடுவில இதுக்கொரு இலக்கிய அந்தஸ்து வேற சேர்ந்துடுச்சு. அதான், அந்த ஜேஜே சில குறிப்புகள்ல வருவானே ஒரு நாயகன், அவம்பேரென்ன, அவனுக்குக் கூட காற்பந்துன்னா பிடிக்குமாம். அவனும் அதைத்தான் கனவு காணுவானாம். வசந்த சவுந்தரிகூடப் பந்தடித்தாளாம். எந்த வசந்த சவுந்தரின்னு கேக்குறீங்களா? எங்க பத்தாவது தமிழ்ப் புத்தகத்துல இருந்தா. சுப்பையா அய்யா ராகம் போட்டுப் பாடி மனசுல ஏத்திவிட்டார்.
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட
குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட
இனி இங்கிது கண்டுலகென்படுமென்படு மென்றிடை திண்டாட
மலர்ப் பங்கய மங்கை வசந்தசவுந்தரி பந்து பயின்றாளே
அப்போது இந்த, காணாக் குளுகுளு மாய, வசந்த சவுந்தரி கிறக்குவாள்.
(நம்ம மதி சொல்ற மாதிரி: உண்மை சொல்லும் நேரம். மேல இருந்த பாட்டுல ரெண்டாவது வரியில, ரெண்டு வார்த்தைகளைத் தப்பா எழுதிட்டு, எங்கயாச்சும் இருக்கான்னு தேடி அலைஞ்சப்ப, நம்ம சென்னைநெட்வொர்க், நண்பா இதோ உன் குளு குளு மாய வசந்த சவுந்தரி குற்றாலத்தில் பந்தடிக்கிறதைப் பார் என்று குற்றாலக் குறவஞ்சியைக் காட்டியது. திருத்தி எழுதிவிட்டேன். நன்றி சென்னைநெட்வொர்க்!)
லேசாருக்கு. எனக்கு எந்த நாடு எந்தெந்த ஆட்டத்துல ஜெயிச்சுச்சு, யாரு எத்தனை கோல் போட்டா, அடுத்த உலகக் கோப்பை எங்க...இந்தப் புள்ளி விபரமெல்லாந் தெரியாது. பந்தைக் கண்டால் அடிக்கத் தெரியும். களைக்கும் வரை ஓடத் தெரியும். அஹம் ப்ரம்மாஸ்மி, அஹம் பந்தாஸ்மி! அஹம் பந்தா ஆத்மி! பயப்பட வேண்டாம், ஜோக்குத்தான். நான் பிரம்மமாக இருக்கிறேன், நான் பந்தாக (சிலேடையாய் உறவு) இருக்கிறேன், நான் பந்தாப் (?) பேர்வழியாயிருக்கிறேன். இதிலே பிரம்மம் மட்டும் உண்மை. மீதியெல்லாம் நான் திரித்தது. விட்டா எழுதிக்கிட்டே போவேன், பந்தும் உருளும், எங்க போயி விழும்னு தெரியாது, அதனால உங்களை இத்தோட விடறேன்! நன்றி வணக்கம்!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
உங்க மூளைக்குக் காசு!
உங்க அறிவியல்/தொழில்நுட்ப யோசனைகளைப் பயன்படுத்திக் காசு பாக்க ஒரு வழி! அறிவியல் கூட்டுப் பதிவுலயும், சங்கத்துலயும் உள்ளிட்டிருக்கேன்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
அட!
சுந்தர், உங்க வலைப்பதிவை திசைகள்ல சுட்டியிருக்காங்கன்னு பாலாஜி சொன்னார். அடேங்கப்பா. ஆமா. செல் சவ்வு பதிவைப் பற்றி ஒரு தெம்பூட்டும் முன்னுரையோடு. அதே மாதிரி சுரதா.காமில் உள்ளிட்டிருக்கும் காந்தள்: பொய்க்கூப்பாடுகளும், சில உண்மைகளும். நன்றி மாலன், சுரதா. இதெல்லாம் எங்களை மாதிரிப் புது முகங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
தனி மே
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இது ஒரு வரம். இன்னொன்று, நல்லதொரு பிள்ளையைக் கொடுத்தான். சரி. வரமென்றால் மூன்றென்பது வழக்கம். மற்றொன்று? ரெண்டு பேரையும் ஒரு மாசம் ஊருக்கனுப்பினான். நாற்காலிக்குப் பின்னாலிருந்து படித்துப் பார்த்தபின் தோளிலே சுள்ளென்று அடிவாங்கி ஆ வலிக்குதேயென்றால், வலிக்கத்தானே அன்பே அடிப்பது, என்று சொல்ல ஆளில்லாத துணிச்சலில்தான் இப்படி எழுதுகிறேன்! இந்த ஒரு மாதம் இருவருக்குமான ஒரு மாற்றம். சில அந்திகளில் எட்டிப் பார்த்து மனசழுத்திப் போடும் அமெரிக்க வழமைச் சலிப்பை முறிக்க இந்தப் பயணம் இருவருக்கும் தேவை. ஒரு மாசந்தான். அதற்கு மேல் இல்லை. திருப்பிக் கொண்டு கொடுத்து விடு.
விமான நிலையத்தில் பயணிகள் மட்டுமே நுழையும் வாயிலில் கலங்கிய கண்களைக் கண்டு திரும்புகையில், மடையன், இன்னும் கொஞ்சம் நேரம் நின்றுவிட்டாவது வந்திருக்கலாம் என்று தோன்றியது. இதே மாதிரி எத்தனையோ நிகழ் கணங்களைத் தவறவிட்டுவிட்டு அப்புறமாய் யோசிப்பது காதலில் புதுசில்லையே. கையில் எடுத்துக் கொண்டு போன எதுவோ இல்லாதது மாதிரித் திரும்பி வந்தேன். வீடு அமைதியாய் இருந்தது. ஆமையாய் மல்லாந்து கிடந்த கணிணி மவுஸ், சிறுகோப்பையில் மீந்திருந்தவொரு கவளம், சூப்பிப் போத்தலில் பாதி குடித்தபடி ஜூஸ் எல்லாம் அவன் சத்தத்தைக் கேட்காமல் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. நான் யாரோடோ தொலைபேசியில் பேசியதைக் கேட்டிருந்த படவாப் பயல் இரண்டு நாட்களாய் என்னை நம்பா/நண்பா என்று ராகமாய்க் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு மாதங்கழிந்து வரட்டும், சிரிக்கச் சிரிக்கப் பிடித்து நாலு உருட்டு உருட்டினால் சரிப்படுவான். சரி. காப்பதற்கு நிறைய வாக்குக்களையும், கடப்பதற்கு நிறைய காதங்களையும் இந்த ஒரு மாசத்துக்குள் நுழைத்து வைத்திருக்கிறேன்.
ஓய்தல் ஒழி
நாளெல்லாம் வினை செய்!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
இந்து தினசிரி
வீரத்தியாகி விஸ்வநாத தாஸின் வழி வந்த தமிழ் நாடகத் துறையின் பெருந்தூணாக நிற்கும் நாடகப் புயல், நாடக வேந்தன், கலைப் பொக்கிஷம் காத்தாடி ராமமூர்த்தியின் ஐம்பதாவது வருட நாடகப்பணி இன்று சென்னையில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் பட்டது. 1964ல் தொடங்கி இவர் பல நாடகங்களைப் பல சபாக்களிலும், தொல்லைக் காட்சிகளிலும் நிகழ்த்தி இன்று ஒரு மாமேதையாக நம்மிடையே திகழ்கிறார். 13வது நாடக உற்சவத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றிய சோ அவருக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நல்லி குப்புசாமி குத்து விளக்கேற்றினார். நாரத கான சபாவின் செயலர் கிருஷ்ணசாமி, தூர்தர்ஷன் கேந்த்ராவின் முன்னாள் இயக்குனர் நடராஜன், நாடக அகாடமியின் செயலர் ராது எல்லோரும் காத்தாடி அவர்களை வாழ்த்திப் பேசினார்கள்.
இது போன்ற நல்ல நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வழங்கும் இந்துவைப் போய் இலங்கையில் நடந்த போலீஸ் வன்முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எழுதவில்லை என்று தங்கமணி குறைபட்டுக் கொள்ளலாமா?
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
பிள்ளைத் தமிழ்
மாசிலனுக்கு ஒன்னே முக்கா வயசு. தெரியாததில்லை, மழலைச் சொல்லினிது. இந்த வயசுலதான் மொழித்திறன் கிடுகிடுன்னு வளருமாம். பாக்குறோம். நாம சொல்லிக் குடுக்காததையெல்லாம் பேசுறான். கவனிச்சுக்கிட்டே இருக்கான். பெரும்பாலும் தமிழ்லதான் பேசுறோம். தமிழ்ப் புத்தகங்கள் படிக்கிறான். தமிழ் இணையப் பல்கலைக் கழகக் கதைகள், பாட்டுக்கள் அவனுக்குப் பிடிக்கும். இசையில் கொஞ்சம் ஆர்வம். நாம சின்னஞ்சிறு கிளியேன்னா கண்ணம்மாஆஆன்னு இழுப்பார். அறம் செயன்னு சொன்னா விம்பு அப்படிம்பார். முந்தி ஒரு காலத்துல முருகமலைக் காட்டுக்குள்ள தந்திரம்மிகுந்த நரின்னு சொன்னா அவர் வாந்துவந்த அப்படின்னு முடிப்பார். இட்டிலித்தட்டின் ஓரத்திலிருக்கும் மூன்று ஓட்டைகளைக் காட்டி அஃகன்னாவாம். அன்றைக்கு அப்படித்தான் ஆரஞ்சு நிறத்தைப் பார்த்துச் செம்மஞ்சள் அப்படின்னான். எங்களுக்கு ஆச்சரியம். எங்களுக்கே தெரியாத வார்த்தை அது. எப்படி. புரியலை. சில தமிழ்ப் புத்தகங்கள்கூட ஆரஞ்சு என்றே எழுதுகின்றன. அகராதியில் பார்த்தபோதுதான் தெரிந்தது செம்மஞ்சள் என்பதே சரியான மொழியாக்கமென்று. இப்படியாய் இவன் எங்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆட்டம் தனிக்கதை.
கணிணியிலும் அச்சிலும் கல்விப் பொருட்களைக் கிடைக்கச் செய்பவர்களுக்கு நம் நன்றி. இன்னும் நிறைய வேண்டும். நல்ல கடின அட்டையில் அழகான படங்களோடு புத்தகங்கள் வெளிவந்தால் நன்றாக இருக்கும். பாட்டுக்களோடு/இசையோடு புத்தகங்கள் வருதலும் அவசியம். எங்கேனும் கிடைக்கின்றனவா?
Posted by சுந்தரவடிவேல் at 0 comments