வலைப்பின்னல்

மனசுக்குள் எழுத்து ஓடிக் கொண்டிருக்கிறதா அல்லது எழுத்தின் மேல் மனசு ஓடிக் கொண்டிருக்கிறதா? தெரியாது. எப்போதும் ஏதோ யோசனைதான். வேறு வேலைகளைச் செய்தாலும் பின்புலத்தில் இந்த எழுத்து தன் கைகளையும் கால்களையும்காற்றிலே அலைத்துக் குதித்து என்னோடு பேசிக் கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடம் என்று எழுத்திடம் சொல்லிவிட்டுத்தான் கூப்பிட்டீர்களா என்று அழைத்தவருக்கு மறுமொழி சொல்கிறேன்.

நான் இலக்கியம் படிப்பது குறைவென்ற நித்தியக் கவலையை இன்னும் கொஞ்சம்ஏற்றி விட்டது பத்மநாப ஐயரின் பணிகள். எத்தனை நூல்கள் வெளிவரக் காரணமாயிருந்திருக்கிறார் என்று அவரது திண்ணைப் பேட்டியைப் படித்து மலைப்பாக இருந்தது. படிக்க வேண்டும். நிறைய.

நீங்களெல்லாம் எப்படிச் சமாளிக்கிறீர்களோ தெரியாது. ஆனால் எனக்கு வேலையிடத்தில் இந்த வலைப்பூ மேய்ச்சல் தாங்காது. நானும் அஷ்டாவதானியாகி ஆடியும் பாடியும் வேலை செய்யலாமென்றுதான் பொட்டியைக் கட்டிக் கொண்டு போவேன். போனவுடன் பொட்டியைத் திறப்பேன். அட, இந்தக் கடைசி அரை மணி நேரத்துல
யாராச்சும் மறுமொழி எழுதிருக்காங்களான்னு பாப்போமேன்னு நின்னுக்கிட்டே வலையை விரிப்பேன். யாராச்சும் எழுதியிருந்தா முரசு, பொங்குதமிழ், அதுக்கொரு பதில். இல்லன்னா, அட அவன் என்ன எழுதிருக்கான், இவன்? நாற்காலியை இழுத்துப் போட்டு முழங்காலை மட்டும் ஊன்றிக் குனிந்து படிப்பேன். அப்படியே இணைப்பைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே போவேன். வருவேன். உட்காருவேன். வேலை? இரு ஒரு அரை மணி நேரம். சரியா 9க்கு எழுந்துடனும் சரியா? மனசாட்சி எட்டிப் பார்த்து எங்கப்பா காலையில அஞ்சு மணிக்கு எழுப்புற மாதிரி டேய் எந்திரிச்சுப் படிடாங்கும். அந்தத் தொணதொணப்பில் வலையில் பிண்ணி மாட்டிக் கிடக்கும் மனசை இழுத்துக் கொண்டு போவேன். பாதி அறுந்தும், பாதி இழுபட்டும், மீதி சிக்கியும் கிடக்கும் மனசைக் கொண்டு போய் ஒரு குடுவைக்குள் ஊற்றுவேன். குறுக்கே வராதே நூலாம்படை செல்லுக்காகாது. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.

இது இப்படியே கொஞ்ச காலம் நடந்தது. ந்தா அந்தத் திட்டம் எப்படிப் போகுது என்று என் பெரியவர் கேட்டாரானால்போகுது, போகணும், போகத்தானே வேணும் என்று என்னால் முடிந்தளவு ஏதாச்சும் அவருக்குத் தத்துவார்தமாய்ச் சொல்லப் பார்த்து, முழித்துப் பின்னொருநாள் நான் நிறைய நேரத்தை என் தமிழ் வலைப்பதிவுல செலவிடுறேன் என்றேன். சிரித்தார். ம் இருக்கட்டும், அந்த நஞ்சன்பர்க் ஆராய்ச்சிக் கட்டுரையைப் பார்த்தாயா நன்றாய்ச் செய்திருக்கிறான் என்றார். பாவம் வேறென்ன செய்வார்.

எனக்குத் தெரிந்த ஒரு இளைய நண்பன் எதையுமே ஒப்பேற்றுவதில் கெட்டிக்காரன். அதை நான் முன்பு மிக வன்மையாக எதிர்த்திருக்கிறேன். இப்போது எனக்கு, நான் நிறைய ஒப்பேற்றுவதாகத் தோன்றியது. சரிநம்ம பொட்டிக்கும் வேலையிடத்துக்கும் ராசியில்லையென்று இந்த வாரத்திலிருந்து என் கணிப்பிள்ளையை வேலைக்குக் கூட்டிப் போவதில்லை. ஓரளவு வேலை செய்கிறேன். முதலில் சொன்னேனே அந்த மனசு சமாச்சாரம் அது விட்டகுறை, தொட்ட குறையாய் வரத்தான் செய்கிறது. இதற்கு நடுவிலே இன்னொரு திட்டப்பணி. என்னாச்சு என்று பிரெஞ்சுக்காரனொருத்தன் என் பெரியவரை நச்சரிக்க, அந்த மின்னஞ்சலை அவர் எனக்கனுப்பக் கிட்டத்தட்ட ஒரு மாசமாக நான் இழுத்தடித்ததை நேற்று ஆரம்பித்தேன். படபடவென்று உட்கார்ந்து எழுதி, இந்தாரும் என்று கொடுத்து வந்தபோது ஹ¤ம், செய்ய நினைத்தால் எதையும் செய்யலாம் என்றுதான் தோன்றியது. ஆனா மூச்ச்... இன்னும் கொஞ்சம் நான் பக்குவப்படும் வரைக்கும் வேலையிடத்தில் வலைவேலை வேண்டாமென்று வேலைப் பிடிப்பதே வேலையாய் இருக்கப் போகிறேன். வீட்டில் மட்டுமே வலை, சரியா?

2 comments:

said...

இதுக்குத்தான் வீட்டிலேயே இருந்து "வேலை" பாக்கிறேன் பேர்வழியென்று மேலிடமேதும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது. :-)
குறைந்தபட்சம் என்ன செய்கிறாய் என்று கேட்கவாவது ஒரு மேலதிகாரி இருக்கவேண்டும் தம்பியண்ணே. இல்லையென்றால், என்னாக்கும் நிலையென்று தனியே கேளுங்கள்; சொல்கிறேன்.
நான்கூட தங்கச்சியக்கா சொ ல்கிறதை என்வீட்டிலே மாமாங்கமாய்க் கேட்டுத்தான் வருகிறேன். இதெல்லாம் நடைமுறைக்கு ஆகி வருகிற காரியமில்லை.எல்லாம் தம்பியின் "வலைச்சுடலைஞானம்." அவ்வளவுதான். ஆடின காலும் பாடின நாவும் வலைப்பூந்த எலியும் சும்மா இருக்குமா சொல்க.வலைப் பட்டதெல்லாம் போதாது பட்டினத்தாரே:-)

Anonymous said...

இதுக்குத்தான் வீட்டிலேயே இருந்து "வேலை" பாக்கிறேன் பேர்வழியென்று மேலிடமேதும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது. :-)
குறைந்தபட்சம் என்ன செய்கிறாய் என்று கேட்கவாவது ஒரு மேலதிகாரி இருக்கவேண்டும் தம்பியண்ணே. இல்லையென்றால், என்னாக்கும் நிலையென்று தனியே கேளுங்கள்; சொல்கிறேன்.
நான்கூட தங்கச்சியக்கா சொ ல்கிறதை என்வீட்டிலே மாமாங்கமாய்க் கேட்டுத்தான் வருகிறேன். இதெல்லாம் நடைமுறைக்கு ஆகி வருகிற காரியமில்லை.எல்லாம் தம்பியின் "வலைச்சுடலைஞானம்." அவ்வளவுதான். ஆடின காலும் பாடின நாவும் வலைப்பூந்த எலியும் சும்மா இருக்குமா சொல்க.வலைப் பட்டதெல்லாம் போதாது பட்டினத்தாரே:-)