பந்து மித்ர!

வெயில் அடிக்குது. வெயில், மூஞ்சில சுள்ளுன்னு அடிச்சா ஒரு சொகம். வெயிலைப் போல் அழகிய பதார்த்தம் வேறில்லை-பாரதி. புல்லு கிளம்புற மாதிரி மனசுக்குள்ள அடைஞ்சு கிடந்த விளையாட்டார்வமும் கிளம்பிரும். மூனு வாரமா காற்பந்து விளையாடுறோம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விளையாட்டுன்னா இதைத்தான் சொல்லுவேன். இதைத்தான் கனவாய்க் காணுவேன். என் கல்லூரி இயற்பியல் வகுப்புக்குள்ள உக்காந்திருக்கும்போது மெல்ல நழுவி என் மனசு போற இடங்கள்ல இதுவும் ஒன்னு. ரொம்பப் பெரிய வீரனில்ல. பள்ளி, கல்லூரிய விட்டுத் தாண்டினதில்ல. ஆனாலும் எதிராளிகள் கவனிச்சுக்குற மாதிரி விளையாடுவேன்னா பாத்துக்கங்க.

எங்க ஊர்ல, அதான் கரம்பக்குடியில, நானிருந்த காலம் வரைக்கும், காற்பந்துதான் ஊர் விளையாட்டு மாதிரி. வைரவமூர்த்தி ஒரு உடற்கல்வியாசிரியர். சக்கரபாணி ஒரு ஊர்ப் பெரியவர். காற்பந்துக்காகப் பாடுபட்டவர்கள். இறந்து போனவர்கள். எனக்குத் தெரியாது. அவர்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும் கரம்பக்குடி வைரவமூர்த்தி சக்கரபாணி நினைவு காற்பந்துப் போட்டி நடக்கும். நிறைய அணிகள் வரும். கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் நடக்கும். எங்க ஊர் அணியில அப்போ இருந்த அண்ணன்கள் எங்களுக்கு முன்மாதிரிகள். எனக்குள்ள தமிழ்ச்செல்வன் மாமா மாதிரி விளையாட ஆசையிருந்தது. என்ன வேகம்! சாப்பிடப் போகாமல் பார்த்துக் கொண்டிருப்போம், அப்பா வந்து கூட்டிப் போவார். அப்பா என்னை விளையாட ஊக்கப்படுத்தியே வந்தார். அவர் நீண்ட நாட்களுக்கு எங்களை விட்டு ஊர்ப்பயணங்கள் போவது குறைவு. அப்படிப் போகும்போதெல்லாம் நான் கடிதம் எழுத நேர்ந்தால், அப்பா எனக்கு வரும்போது பேனாவும் பந்தும் வாங்கி வரவும்னு தான் எழுதுவேன். அப்படிப் பிடிக்கும். வீட்டு ஓட்டில், சுவற்றில் எறிந்து உதைத்துத் திரிவேன்.

எங்கப் பள்ளிக்கூடத் திடலில் ஒரு நாள் சாயங்காலம் விளையாடிக்கொண்டிருக்கும்போது, ஒருத்தன் சொன்னான், டோய் அவங்கதான் விடுதலைப் புலிகளாண்டா. நம்மை மாதிரித்தான் இருந்தார்கள். பேச்சு மட்டும் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. அப்போதெல்லாம் ஊரைச் சுற்றித் தோப்பு/காடுகளில் முகாமிட்டிருந்தார்கள். நன்றாய் விளையாடுவார்கள்.

அப்புறம் இளநிலைக் கல்லூரியில் காற்பந்துக்கும், பாட்மிண்டனுக்குமாகத் தாவிக்கொண்டிருந்ததில் இரண்டிலும் ஒழுங்காயில்லை. ஆனால் அந்தக் காலத்தின் அழகிலும் துடிப்பிலும் அது ஒரு குறையாய்த் தெரியவில்லை. சென்னையிலிருந்த ஏழு வருடங்கள் என் காற்பந்துக்குக் களப்பிரர் காலம் மாதிரி. என் விளையாட்டுக்கள் அந்தக் கடற்கரையில் அப்பப்ப ஓடியாடித்திரிவதோடு சரி. பந்தடிக்கலை. மறுபடியும் டில்லியில அந்தக் கருப்பு வெள்ளைப் பந்தைப் பெரிய மைதானத்தில் துரத்திக் கொண்டு ஓடியது ஆனந்தம். நிஜமாகவே. டில்லியில் என்னைச் சில நண்பர்கள் கரம்பக்குடி என்றே கூப்பிடுவது வழக்கம். பந்தை எடுத்துக் கொண்டு ஐயா ஓடினாரென்றாலோ, அல்லது கோல் ஒன்று போட்டாலோ, ஹே கரம்பக்குடின்னு சத்தம் கிளம்பும். திமிர் வியர்வையோடு பெருகி ஒழுகும்.

அமெரிக்காவுல முந்தி இருந்த சார்லஸ்டன்லயும் ஒரு நல்ல காற்பந்துக் கூட்டம் இருந்துச்சு. சனிக்கிழமை சாயங்காலப் பந்தடிக்காக எல்லாரும் காத்துக் கொண்டிருப்போம். அங்கதான் அம்மணியப் பாத்தேன். சந்தித்த முதல் சனிக்கிழமை, கடலோரத்தில் அந்திப் படகொன்றில் செல்லப் பதிவு செய்திருந்தேன். அவரோ, இல்லையில்லை, நீ காற்பந்து விளையாடப் போ, நானும் வந்து பார்க்கிறேன் என்று கூடவே கிளம்பிவிட்டார். அன்றைக்கு ஆடிய ஆட்டத்தில் விழுந்தவர்தான் (என்று நானாக நினைத்துக் கொள்கிறேன்!). இப்பவும் இந்தப் புது ஊர்ல பனிக்குளிர் முடிஞ்சு வெயிலடிச்சதும் வெளிக்கிளம்பின பந்தாட்டத்தை நினைச்சா நல்லாருக்கு. நான் போற இடமெல்லாம் இந்தப் பந்து உருண்டு வர்றது சந்தோஷத்தைக் கொடுக்குது.

நடுவில இதுக்கொரு இலக்கிய அந்தஸ்து வேற சேர்ந்துடுச்சு. அதான், அந்த ஜேஜே சில குறிப்புகள்ல வருவானே ஒரு நாயகன், அவம்பேரென்ன, அவனுக்குக் கூட காற்பந்துன்னா பிடிக்குமாம். அவனும் அதைத்தான் கனவு காணுவானாம். வசந்த சவுந்தரிகூடப் பந்தடித்தாளாம். எந்த வசந்த சவுந்தரின்னு கேக்குறீங்களா? எங்க பத்தாவது தமிழ்ப் புத்தகத்துல இருந்தா. சுப்பையா அய்யா ராகம் போட்டுப் பாடி மனசுல ஏத்திவிட்டார்.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட
குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட
இனி இங்கிது கண்டுலகென்படுமென்படு மென்றிடை திண்டாட
மலர்ப் பங்கய மங்கை வசந்தசவுந்தரி பந்து பயின்றாளே

அப்போது இந்த, காணாக் குளுகுளு மாய, வசந்த சவுந்தரி கிறக்குவாள்.

(நம்ம மதி சொல்ற மாதிரி: உண்மை சொல்லும் நேரம். மேல இருந்த பாட்டுல ரெண்டாவது வரியில, ரெண்டு வார்த்தைகளைத் தப்பா எழுதிட்டு, எங்கயாச்சும் இருக்கான்னு தேடி அலைஞ்சப்ப, நம்ம சென்னைநெட்வொர்க், நண்பா இதோ உன் குளு குளு மாய வசந்த சவுந்தரி குற்றாலத்தில் பந்தடிக்கிறதைப் பார் என்று குற்றாலக் குறவஞ்சியைக் காட்டியது. திருத்தி எழுதிவிட்டேன். நன்றி சென்னைநெட்வொர்க்!)

லேசாருக்கு. எனக்கு எந்த நாடு எந்தெந்த ஆட்டத்துல ஜெயிச்சுச்சு, யாரு எத்தனை கோல் போட்டா, அடுத்த உலகக் கோப்பை எங்க...இந்தப் புள்ளி விபரமெல்லாந் தெரியாது. பந்தைக் கண்டால் அடிக்கத் தெரியும். களைக்கும் வரை ஓடத் தெரியும். அஹம் ப்ரம்மாஸ்மி, அஹம் பந்தாஸ்மி! அஹம் பந்தா ஆத்மி! பயப்பட வேண்டாம், ஜோக்குத்தான். நான் பிரம்மமாக இருக்கிறேன், நான் பந்தாக (சிலேடையாய் உறவு) இருக்கிறேன், நான் பந்தாப் (?) பேர்வழியாயிருக்கிறேன். இதிலே பிரம்மம் மட்டும் உண்மை. மீதியெல்லாம் நான் திரித்தது. விட்டா எழுதிக்கிட்டே போவேன், பந்தும் உருளும், எங்க போயி விழும்னு தெரியாது, அதனால உங்களை இத்தோட விடறேன்! நன்றி வணக்கம்!

0 comments: