சேரிச்சாமிகளும் ஒலக அதிசயமும்!

குடியானவனோட சாமியையெல்லாம் அவங்கிட்டேருந்து புடுங்கியாச்சு. முத்துக்கருப்பையாவையும் முனியனையும் புடுங்கி அவங்களுக்கு முன்னாடி ஒரு ஸ்ரீ சேத்து பேரைத் திரிச்சு மஹாகும்பாபிஷேகம் நடத்திப் புனிதப்படுத்தியாச்சு. அதுக்குள்ள பள்ளு பறையெல்லாம் போனா பிரச்சன. நீயெல்லாம் என்னத்துக்கு இந்தப் புனிதக் கோயிலுக்குள்ள வாற, இந்தா ஒனக்குன்னு ஒரு சாமி, ஒரு கோயில், ஒன்னோட சேரிக்குள்ளயே கட்டிக்க. அங்கேயே கெட. தமிழக அரசாங்கம் இதச் செய்யுது. 2005ம் ஆண்டுக்குள்ள 7000 கோயில்களை தலித்துகளுக்காக அவங்க குடியிருப்புப் பகுதிகள்ல 7.5 கோடி ரூவா செலவுல கட்டப் போவுதாம். நம்ப முடியல. இதுதான் அரசோட தீண்டாமைக் கொள்கையோ? புரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

இந்த லெச்சணத்துல மீனாச்சி கோயிலை ஒலக அதிசயமாக்கனுமாம். ஆமா அது அதிசயந்தான், ஒலகத்துல இல்லாத அதிசயந்தான், இந்துக்கள் அல்லாதவர் உள்ளே வரக்கூடாதுன்னு சாமிய மனுசங்கிட்டேருந்து பிரிச்சு வக்கிற அதிசயக் கோயில்தான். நானும், நாம போயி ஓட்டுப் போட்றலாம், நம்ம ஊர்லயும் ஒரு ஒலக அதிசயம் அதனால இன்னும் கொஞ்சம் பிஸினஸ், இன்னம் நாலு வெள்ளக்காரன் வருவான்னு நெனச்சாலும் என்னமோ மனசு ஒப்ப மாட்டேங்குது. இது மட்டும் ஒலக அதிசயமாச்சுன்னா இந்தப் போலிக் கதைமூட்டை இந்துப் புனிதத்துக்கு இன்னும் கொஞ்சம் பவர் கூடிப் போகும்.(இந்து ஞானமரபின் தொண்டரடிப் பொடிகள் உடனே சிலிர்த்தெழுந்து ஞானப்பால், திரட்டு, ஆழ்வார்கள், தாயுமானவனையெல்லாம் தூக்கிக்கொண்டு வரலாம்!). இந்துத்துவாவெல்லாம் ஓட்டுப் போடுங்க போடுங்கன்னு கதறுது. ஏன்னா அம்மாவுக்குப் (மீனாச்சியச் சொல்றேன்) போடுற ஒவ்வொரு ஓட்டும் இந்துத்துவாவுக்குப் போடுற ஓட்டு மாதிரி. இது அதிசயம். இது பெருமை. இதோடு ஐக்கியப்பட்ட நான் இது. இந்து. இப்படியொரு ஈகோ மக்களுக்கு வளர்றது மதவாதிகளுக்கு நல்லதுதானே. மக்களின் அரசியொருத்தியைப் பிடுங்கி அவளைத் தெய்வமாக்கி, இந்துவாக்கி, அதைக் கொண்டு சாதீயத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சாதிவெறியையா உலக அதிசயமாக்கணும்? வேணும்னா தலித்துகளுக்காகக் கட்டப் போற 7000 கோயில்களையும் அப்புடியே ஒட்டு மொத்தமா ஒலக அதிசயமாக்கிரலாம்; இந்தியாவின் சாதீயத்தை ஒலக அதிசயமாக்கலாம்!

16 comments:

said...

வாங்க..வாங்க..
கெனெக்டிகட் சிங்கமே..இதற்கெல்லாம் யோசிக்கலாமா...
இங்கேர்ந்து ஓட்டுப் போடுங்க..:-)

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

சுந்தரவடிவல்,
காலத்திற்கேற்ப எழுதப்பட்ட நல்ல குறிப்பு இது. முக்கியமாய் உங்கடை எழுத்து நடைபிடித்திருந்தது. இந்துமதத்தைக் குற்றஞ்சொன்னால் ஆழ்வார்கள், அடியார்கள் என்று defend பண்ணத்தொடங்கிவிடுவார்கள் என்பது முக்கியமான குறிப்பு.
பாருங்கோ, புலிநகக்கொன்றை எழுதியவர் என்று பி.ஏ.கிருஷ்ணன் மீது கொஞ்சம் நல்லபிப்பிராயம் இருந்தது (புத்தகம் வாசிக்கவில்லை, ஆனால் விமர்சனங்களும் அவரது சில கட்டுரைகளும் வாசித்திருந்தேன்). இப்போ பிரேம்-ரமேஷ் வேதம்பற்றி ஏதோ உயிர்மையில் தப்பாய் சொல்லிவிட்டார்கள் என்று மனுசன் துள்ளிக்குதிப்பதைப் பாருங்கள். என்ன செய்ய மாற்றான் தோட்டத்து மல்லிகை நமக்காயும் மணம் வீசும் என்று நம்புவதும் ஏமாறுவதும் நம்முடைய பிழைப்பாய் போச்சுது!

said...

மூக்கரே நீங்களும் மிருகமாறாட்டம் செய்றீங்களே:)

டிசே, உயிர்மையில் பிரேம்-ரமேஷின் பத்தியைப் படித்தேன். பி.ஏ.கி துள்ளிக் குதித்திருப்பது எங்கேயென்று சுட்டினால் தேவலாம்.

ஜெயஸ்ரீ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கல்லூரிக் காலங்களில் மாதத்துக்கொருமுறையாவது மீனாச்சிக் கோயிலைச் சுத்தி வந்தவன் என்கிற வகையில் சொல்கிறேன். அந்த உள்ளே போகாதே பலகைக்கு முன்னாடி நின்னு விழுந்து கும்பிடுற முக்காடு போட்ட சனங்களைக் கண்டிருக்கிறேன். ஏன் எதுக்குன்னு புரியாம முழிச்சுக்கிட்டு நிக்கிற வெள்ளக்காரச் சனங்களைப் பாத்திருக்கேன். இதுகளுக்கெல்லாம் விசுவாசம் இல்லாமயா இருக்குது? புள்ளயோட சீக்கு குணமாகனும்னா பள்ளி வாசல்ல போயி பாத்தியா ஓதுறதுக்கும், வேளாங்கண்ணியில போயி மெழுகுவர்த்தி ஏத்துறதுக்கும் நாம தயாரா இருக்க மாதிரித்தான் அவங்களும் கருப்பர் கோயிலுக்கும் மீனாச்சி கோயிலுக்கும் வர்றாங்க. வேடிக்கை பாக்கவும், போட்டோ பிடிக்கவும், உண்டியல் பிஸினஸ் பண்ணவும் உள்ளே வரும் எத்தனையோ இந்துக்களை விட அவர்களிடத்தில் விசுவாசக் குறைச்சலிருப்பதாக நான் நினைக்கவில்லை. அதை விடுங்கள், எல்லோரும் ஈஸ்வரனின் பிள்ளைகள் என்று சொல்லும் (செவிவழிச் செய்தி!) இந்து மதம் வேற்று மதத்துக் காரர்களை மட்டும் சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லிவிடும் குறுமனம் கொண்டதா என்ன? பாரீஸை விசுவசிக்கிறவர் எவரோ அவர் மட்டுமே ஈபில் கோபுரத்தில் ஏறலாம்னு ஒரு போர்டு போட்டா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பாக்குறேன். எப்படியோ உலக அதிசயமானால் எல்லோரையும் உள்ளே விட்டாக வேண்டி வரும். அப்புறம் மதத்தைப் பரப்ப வேண்டிய கட்டாயம் இந்து மதத்துக்கு இல்லையென்று சொல்லியிருக்கிறீர்கள். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நினைத்துப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை ஜெயஸ்ரீ. 2000 வருடங்களாய் சங்கர மடம் மதத்தைப் பரப்பாமல் வேறென்ன செய்கிறது? மரியாதையைத் தேடிப் போன கிறிஸ்துவனையெல்லாம் மிரட்டித் திருப்பிக் கூப்புடறதுக்குப் பேரென்ன? ஜெய் சோம்நாத் (எண்டமூரி வீரேந்திரநாத்?) படித்துவிட்டும், ஆர் எஸ் எஸ் கூடாரத்தில் சங்கா தக்ஷா அடித்துக் கொண்டும், அதே மதுரைக் கோயில் மீனாச்சி சுந்தரேசுவரர் கல்யாண மண்டபமதிர பஜனை பாடியும் இந்து முறுக்கேறித் திரிந்த அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த இந்துப் புனிதக் கதைகளையெல்லாம் நம்பியிருப்பேன். இப்போதில்லை! தாஜ்மஹாலை அதிசய லிஸ்டில் சேர்த்தது நம்மவர்களா அல்லது 1947க்கு முன்பா என்று தெரியவில்லை. இருந்தாலும் அது ஒரு பழைய சிவன் கோயில் என்று புனையப்படும் கதையொன்றும் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு முகலாய வடிவத்துக்கு இப்படியொரு மதிப்பா என்ற இந்துத்துவப் பொறாமையாய்க்கூட இருக்கலாம்!
பி.கு: ஜெயஸ்ரீ, நீங்க இங்க டிஸ்க்ளெய்மர் போட்டு நொந்து போக வேண்டியதில்லை:)

said...

வெளி நாட்டில் வேகமாய் கார் போகுது என்றால் வாயைப் பிளக்கும் இந்தியர்கள்/தமிழர்கள் வெளிநாட்டில் இது போன்று தனிப்பட கோவில் அமைக்க முடியுமா என்று யோசித்துப் பார்ப்பார்களா.
இது ஒரு சோஷலிச பயங்கர வாதமாகத்தான் பார்க்கிறேன். இது தீண்டாமை இன்னும் முழு உயிர்ப்புடன் இருக்கிறது என்று காட்டும் ஒரு அடையாளம். வெட்கக் கேடு தூத்தெறி!! ஜெயமோகன் , அரவிந்தன் போண்றவர்கள் இதற்கு என்ன சப்பை கட்டு கட்டுவார்கள் என்று யோசித்தால் சிரிப்பு வருகிறது. மானங்கெட்டவர்கள் வாழும் இடம் தமிழகம்!!

said...

ஜெயஸ்ரீ அவர்களே கோவிலுக்கு உள்ளே போகாமல் எப்படி வேற்று மதத்தவர்கள் இந்து மதத்தை விசுவாசிக்க முடியும்.முதலில் உள்ளே போகவிட்டு மெது மெதுவாக இந்துக் கடவுள் மீதும் இந்துமதம் கூறும் தத்துவங்கள் மீதும் நம்பிக்கையும் ஈர்ப்பும் வரச்செய்வதுதானே முறை.எடுத்த எடுப்பிலேயே இந்துக்கள் அல்லாதவர் உள்நுழையத் தடை என்று விளம்பரப்படுத்தினால் சகிப்புத்தன்மை இல்லாத மதம் என்ற பெயர் தான் கிடைக்கும்.

பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்துமதத்தை விசுவாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதவன் மட்டும் உள்ளே வா என்று பலகையில் எழுதிப்பாருங்கள் எத்தனை இந்துக்கள் உள்ளே போவார்கள்?
காலம் முழுக்க தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டத்தினரை உருவாக்கி வைத்துக்கொண்டு காலத்துக்கொவ்வாத கட்டுப்பாடுகளையும் விதித்துக்கொண்டு வந்தமையால்தான் இந்துமதம் இன்று கள்ளச்சாமிகளின் பிடிக்குப் போய்விட்டது.

said...

//ஒரு முகலாய வடிவத்துக்கு இப்படியொரு மதிப்பா என்ற இந்துத்துவப் பொறாமையாய்க்கூட இருக்கலாம்!//

அப்படியா. வேலூர் மற்றும் இன்னபிற கோவில்களுக்குப்போய் சிலைகளின் சிதைக்கப்பட்ட முலைகளையும் மூக்குகளையும் பார்த்தால் தெரியும்! நாலந்தா பல்கலைக்கழக நூலகத்தின் புத்தகங்களனைத்தையும் துறவிகளையும் சேர்த்து எரித்ததுகூட இந்துக்கள்தான். கொழும்பில் ஷாருக்கான் விழாவில் குண்டு எறிந்ததுகூட இந்துக்கள்தான். ஐரோப்பியச் சிலுவைகளில் சூனியக்காரர்களை எரித்ததும் இந்துக்கள்தான்.

இன்டலக்சுவல்கள் தங்களுக்குத் தேவை எனக்கருதும் அறிவுப்பசி, சாமானியனுக்கு, ஒரு லௌகீகவாதிக்கு அர்த்தமற்றது. அதற்காக உருவாக்கப்படும், நிலைநிறுத்தப்படும், நிராகரிக்கப்படும் வாதங்கள் அனைத்தும் அவனுக்கு அர்த்தமற்றவை என்று நான் கூறுவதை, அறிவழிப்பு அல்லது அறிவுமறுப்பு எனச் சாத்தியமுள்ளது. அதை விளக்க தனிப்பட்ட பல பதிவுகள் தேவைப்படும்.

பதினெட்டாம்படி கருப்பசாமியைக் கிடாவெட்டிக் கும்பிடும் அதே ஆள் அர்த்தநாரீஸ்வரன் கோவிலுக்குப் போவதும் அய்யப்பன் கோவிலுக்குப் போவதும், வெங்கடாசலபதி கோவிலுக்குப் போவதும், தன் மூத்தகுடிப் பெண்தெய்வங்களைக் கும்பிடுவதும், திருச்செந்தூர் போய் மொட்டை போடுவதும், தோன்றினால் நாகூர் தர்கா போவதும் வேளாங்கண்ணி போவதும் ஏதோ அறிவிலித்தனத்தினால் வந்த ஒன்றல்ல, தன் சுயநலத்துக்காக சாமியுடன் பேரம்பேசுவதும் அல்ல. அல்லது, தன் மதச்சார்பின்மையை பறைசாற்றிக்கொள்ளவிரும்புவது என்பதுபோன்ற clicheயும் அல்ல. Trapped by one's own expertise என்று சொல்வார்கள். மதங்களைப்பற்றி யோசிக்கும் அனைவருக்கும் நிகழ்வது அதுவே.
கருப்பசாமி ஸ்ரீகருப்பசாமி ஆவதைப்பற்றி, கும்பிடும் என்னைப்போன்ற மடத் தமிழன்களுக்கு ஆர்வமிருப்பதில்லை. அந்தக் கருப்பசாமி நீங்கள் சொல்லும் கருப்பசாமியா அல்லது பார்ப்பனர்கள் சொல்லும் ஸ்ரீகருப்பசாமியா என்பதில் எனக்கு அக்கறையில்லை. அந்தக் கருப்பசாமியை ஏதாக நான் சித்தரித்துக்கொள்கிறேனென்பதை வேறு யாராலும் ஊகிக்க முடியாதென்பதே நிஜம். அது பிராமணர்களாக ஆகட்டும், அல்லது பிராமணர்களை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்பவர்களாகவும் ஆகட்டும். கருப்பசாமிக்கு சாராயமும் சுருட்டும் வைப்பதற்குப் பதிலாக ஹோஸே க்யெர்வோ டெக்கீலாவும் சிகாரும் வைப்பேனென்று நான் கூறினால் அது இழிவுபடுத்தலல்ல. நான் விரும்பும் வகையில் என் கடவுளைச் சித்தரித்துக்கொள்ள எனக்குள்ள உரிமை.

கருப்பசாமி என்றால் பெரிய கண் கையில் அரிவாள் கடாமீசை மண்குதிரை என்று நாம் உருவகித்துக்கொள்ளும் பிம்பங்களின் மேற்பூச்சுக்களையும், வெங்கடாசலபதி என்றால் பட்டை நாமம், ரெண்டு பொண்டாட்டி, கதாயுதம், சக்கரம், சங்கு, அபயமுத்திரை என்ற மேற்பூச்சுக்களையும், கோவிலுக்கு உள்ளே விடமறுக்கும் குடுமிப் பூசாரிகளையும், சிதம்பரம் கோவிலின் திமிர்பிடித்த அரைமொட்டைகள் போன்றவர்களையும் தாண்டி ஒரு சாமானியனால் கடவுள்களைச் சித்தரித்துக்கொள்ள, வழிபட இயலுமென்பதை நான் நம்புகிறேன். திருச்செந்தூர் கோவிலில் சட்டையைக் கழற்றமுடியாது என்பதால் ஜனாதிபதியே உள்ளே போகமுடியவில்லை என்பார்கள் (disclaimer (ஹிஹி): அந்த ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்). இந்துக் கடவுள்களைக் கும்பிடுவதால் எனது குலதெய்வங்களின் identity காணாமல் போய்விட்டதா! அட, அய்யனாரே ஆகட்டும், ஏழுமலையானே ஆகட்டும் - கடவுளின் அட்ரஸை எழுதுமளவு முன்னேற்றம்பெற்ற ஆன்மீகவாதிகளாக நாம் இருப்பதைவிட, நாத்திகவாதிகளாக இருப்பதே மேல். இந்தச் சாமிகள் அனைவரும் இருக்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம்.

ஆக, மீனாட்சி இந்துக்கடவுள் ஆகிவிட்டாள். அதனால் ஒழித்துக்கட்டுங்கள் அவளை. நமது archetypal மூர்க்கம் வீறுகொண்டு எழட்டும். இந்து வஸ்திரங்களைக் களையும்வரை உரித்து எடுங்கள் மீனாட்சியை. தமிழ் மாக்கான்கள் மீனாட்சியை ஆதி நிலைக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறார்களா...அர்ச்சகர்களே, பிற அக்ரஹாரத்து ஆசாமிகளே, வாருங்கள், வந்து குடுமிச் சவுக்கைச் சுழற்றி இந்த துஷ்ட ஜந்துக்களை விரட்டியடியுங்கள்.

மீனாட்சியின் கிளி இது அனைத்தையும் வேடிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தவாறு, சாய்ந்து அவள் காதில் ஏதோ சொல்கிறது. அது என்னவென்று மட்டும் எனக்குக் கேட்கவில்லை.

said...

Religious correctnessக்காக, திருநாவுக்கரசரைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டதையும், சமணர்களின் ஆசனவாயைக் கூரான கழிகளில் உட்காரவைத்துக் கொடூரமாகக் கழுவேற்றிய பாண்டிய (read இந்து) மன்னர்களையும் (யோசித்துப் பாருங்கள், அந்தக் கூரான கழி ஆசனவாயைத் துளைத்துக்கொண்டு வயிற்றைக் கிழித்துக்கொண்டு தொண்டையைக் கிழித்துக்கொண்டு - என்ன கொடூரம், என்ன கொடூரம்!!), இன்னபிற கொடூரங்களையும் சேர்த்துக்கொள்கிறேன். ஜாதித் துவேஷத்தைக் காட்ட, சந்திரபாபு நாயுடு வந்துபோனபின்பு (நாயுடுவுக்கு leucoderma; அவரது உதட்டைப் பார்க்கவும்) திருப்பதி கோவில் பூசாரிகள் கர்ப்பக்கிரகத்தைத் தண்ணீர்விட்டுக் கழுவி மந்திரம் ஓதிச் சுத்திகரித்ததாக உலாவந்த செய்தி(புரளி)யையும் கூறிவிடுகிறேன். இல்லையென்றால் நான் ஏதோ இந்து மாக்கான் என்று முத்திரை குத்திவிடப்போகிறார்கள் யாராவது!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

சுந்தரவடிவேல், நவம்பர் உயிர்மையில் என்று நினைக்கிறேன்.

said...

Montresor, கொழும்பில் ஷாருகானின் விழாவில் குண்டெறிந்தவ்ர்கள் இந்துக்கள் என்று எங்கு வாசித்தீர்கள்?

said...

டிஜே:)) தவறாகப் புரிந்துகொண்டீர்களென்று நினைக்கிறேன்! அந்தப் பத்தி முழுதும் பகடிக்காக எழுதப்பட்டது - எது நடந்தாலும் யார்மேலாவது கண்மூடித்தனமாகப் பழிபோடுவது பற்றிக் குறிப்பிட! குண்டு போட்டது இந்துக்கள் என்று நான் சொல்ல வரவில்லை. சொல்லவந்ததைத் தெளிவின்றி நான் சொல்லியிருந்தால் மன்னிக்கவும். பிரயோஜனமற்ற சார்புநிலை குறித்த கிண்டல்தான் நான் செய்யமுயன்றது. இந்துமதம் மட்டும் அல்ல, எந்த ஒரு மதமும் வெறுமனே பலியாடு ஆக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. களங்கமற்ற மதம் என்று ஏதாவது உள்ளதா என்ன உலகில்?!

said...

Montresor, மன்னிப்புக்கேட்க எல்லாம் தேவையில்லை. நானும் கொஞ்சம் பதட்ட நிலையில்தான் உங்கள் குறிப்பை வாசித்திருந்தேன். நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கும் அதிகம் உடன்பாடே.

said...

Montresor, மன்னிப்புக்கேட்க எல்லாம் தேவையில்லை. நானும் கொஞ்சம் பதட்ட நிலையில்தான் உங்கள் குறிப்பை வாசித்திருந்தேன். நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கும் அதிகம் உடன்பாடே.

said...

இத்தனைக்கும் நடுவில் இன்னும் ஆச்சரியமாயிருப்பது இவ்வளவு பெரிய செய்தியைப் பற்றி இன்னும் அந்தத் துணுக்கைத் தவிர வேறெதுவும் பத்திரிகைகளில் இல்லை, எனக்குத் தெரிந்து!
மாண்ட்ரெசரின்
//ஆக, மீனாட்சி இந்துக்கடவுள் ஆகிவிட்டாள்.// வரியில் எத்தனையோ செய்திகள்.
கருத்துப் பகிர்தலுக்கு நன்றி.