ஒளிர்தலும் குமட்டலும்

ஒரு வெளி. பரந்த வெளி. இருட்டு. ஒளிப்பொட்டுக்கள். என்னமோ ராத்திரி வானம்போல. தொலைவாயில்லை, இதோ கிட்டத்துல, ஒரு முப்பரிமாண விண்வெளிப் படம் மாதிரி. அதிலொரு நீள்வட்டம். நிற்கிறது. அது எப்படி நிற்கும், இல்லன்னா படுக்கும்? இருக்கு. நானாயிருக்கலாம். அதிலிருந்து ஒரு சின்னக் கோள் கிளம்பி வருகிறது. சுற்றுகிறது. ஆடுகிறது. திரும்பி வந்து நீள்வட்டத்துக்குள் அடங்குகிறது. இன்னொன்று, தொப்பி வைத்த கோள். வேறு நிறம். இது மேலும் கீழுமாய்த் துள்ளுகிறது. இன்னொன்று, இன்னுமொன்று. இப்படியே நிறைய கோள்கள். அல்லது பொட்டுக்கள். அல்லது என்னமோ. சிலதுக்கு ஒளி இருப்பதில்லை. சிலவற்றின் பொருண்மை அந்த நீள் ஒளியின் மையத்தையே ஆட்டி இழுக்கும். சாய்க்கும். அது நீள் வட்ட ஒளியாய் இருக்கிறது. அது ஒரு நாள் சொக்கப்பனைப் போல வெடித்தது, அது என்ன ஒரு நாள்? அங்கு நாளில்லை. இந்த சொக்கப்பனைப் போல மெதுவாய் எரியவில்லை. படாரென வெடித்தது. அதனுள்ளிருந்த சிறு கோள்களெல்லாம் வெடித்தன. இல்லை. காணவில்லை. எதையும் காணவில்லை.

அங்கு எத்தனை முறை போய் வந்திருப்பேன். நிறைய. அது ஒரு நாள் மேடையாய் இருக்கும். அந்தக் கோளெல்லாம் பாத்திரங்களாயிருக்கும். இன்னொரு நாள் அது வெண்மையாயிருக்கும், சிதறிய ஒளியெல்லாம் ஏதாவதொரு வண்ணமாயிருக்கும். அகத்தைப் பிரித்துப் பிரித்துப் பார்க்கிற விளையாட்டு. விளையாட்டின் முடிவில் ஒன்றுமில்லை. உள்ளே யாரும் இருப்பதில்லை. சாமியார்கள், மணியாட்டிகள், கிடாவெட்டுப் பூசாரி, டிரைவிங் லைசென்சு. இல்ல. திரும்பி வந்தப்புறம் வித்தியாசமாயிருக்கும். நிறைய காணாமப் போயிருக்கும்.

வீட்டுக்குள்ள திரும்பி வந்து குப்பையை ஒழிக்கத் தோணும். முந்தி எங்க ஊரு பஞ்சாயத்து யூனியன் ஆபீசுல அடிபைப்பு போட்டாங்க. அதுக்கு போர்வெல் போட்டாங்க. துளை போட்டதுக்குப் பிறகு நீள இரும்பு பைப்புகளை ஒன்னொன்னாத் திருகித் திருகி எறக்குவாங்க. அப்போ ஏற்கெனவே எறங்குனது ஆழத்துக்குள்ள விழுந்துடாம இருக்கதுக்காக நல்லா நெட்டு எல்லாம் போட்டுத் திருகி நிக்க வச்சிருப்பாங்க. அந்த மாதிரி உள்ளிறங்கவிடாமல் என்னமொ, என்னென்னமோ இழுத்துப் பிடிக்குது. மேலேயே சுத்துறேன். கருப்பர் கோயில் கொடராட்னத்துல சுத்துற மாதிரி. மூச்சு முட்ட மனுசரடைச்ச டவுன்பஸ்ஸுல போறாப்பல. உவ்வாக். வாந்தி. மூச்சு வாங்குது. உவ்வ்வ். வந்தும் வராம. ஒக்காரு. குனி. நெத்தியில கைய வச்சு அமுக்குது அம்மா. உவ்வாக். பொலிட்டிகல்லி கரெக்ட் ரைட்டிங்க் செரிக்காம கிடந்திருக்கு. கண்டதைத் திங்காதேன்னு சொல்றதா, இல்ல தின்னு, கண்ணாடி, விரியன் பாம்பு, இரும்பு எல்லாத்தையும் தின்னு. தின்னுப்புட்டு ஹடயோகி மாதிரி நில்லுங்கறதா? அது அப்புறம். இப்பக்கி இது போதும், வயிறு நல்லாருக்கு. வாய் கொப்புளிச்சுட்டு அடுத்த வேலயப் பாப்பம்.

0 comments: