தங்கமணியின் கடிதங்கள் - 2காதலைப் பற்றி ஏன் விவாதம் செய்யப் போகிறாய்? என்ன செய்யப் போகிறாய்? தமிழர்களுக்கு ஒரு காதல், ஐரோப்பியர்களுக்கு ஒரு காதல், அமெரிக்க, நீக்ரோ காதல் உண்டா? எனக்குத் தெரியவில்லை. நான் ஏதாவது சொல்லப் பயமாயிருக்கிறது. ஏனெனில் அது மட்டுமாக காதல் இருக்காது. இன்னும் விளிம்பு தாண்டி வழிவது போல இருக்கும். காதலைப் பற்றிய எல்லா விளக்கங்களும் மனதின் கற்பிதங்களை, சமூக ஏற்பாடுகளை, ஆதிக்க விதைகளையே சுமந்து கொண்டிருக்கின்றன.

காதல் என்பது என்ன? இந்தக் கேள்வி எண்ணிலடங்கா முறைகள் கேட்கப்பட்டது. குறைந்தது ஒவ்வொரு உயிரும், ஒரு முறையேனும் நெஞ்சு முழுக்க வலியோடும், துயரோடும், தோள்களை மீறி எழும் மகிழ்வோடும் இந்தக் கேள்வியைக் கேட்காமலிருந்திருக்காது. எத்தனையோ பதில்கள், கவிதையாக, பாடலாக, மூச்சாக, கண்ணீர்த்துளிகளாக, விசும்பல்களாக, நெஞ்சுத் துடிப்புகளாக, ஓவியங்களாக, நெருப்புப் புகைகளாக, சாம்பலாக, சாவுகளாக, சிரிப்பாக உதிர்ந்திருக்கின்றன. நான் இந்தக் கடிதத்தில், என் அளவிலான அனுபவத்தில் இருந்து - காதல் ஹார்மோன்களின் கவிதை, போன்ற மூளையின் அனுமானங்களை அடியோடு நிராகரிக்கிறேன். காதலைப் பற்றிய கேள்விகளின் நோக்கம் என்ன என்பது ரொம்பவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொருவரும், தங்களுக்கான பதில்களைக் கையில் வைத்துக் கொண்டே, கேள்விகளைச் செதுக்குகின்றனர். இது எல்லாக் கேள்விகளுக்கும் பொருந்தும்.

தமிழர்களுடைய காதல் என்று ஒன்றுமில்லை; சமூக வழக்கம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். அதுவும் மாறுதலுக்கு உட்பட்டதே. தமிழர்களுடைய பண்பாடும், எல்லா நிலவுடைமைச் சமூகங்களின் விழுமியங்களைத் (values) தன்னகத்தே கொண்டதே. விவசாய நாகரீகங்கள் (agrarian civilizations) அனைத்தும் ஆணாதிக்க விழுமியங்களைக் கொண்டதே. விவசாய நாகரிகம் தோன்றுவதற்கு முன்பிருந்த சமுதாய அமைப்பு பெண்ணாதிக்க விழுமியங்களைக் கொண்டதாக இருந்தது. சொத்துடைமை என்பது நிலவுடைமைச் சமூக அமைப்பில்தான் வலுப்பெறுகிறது. ஏனெனில் சொத்தின் மதிப்பு அதில் செலுத்தப்படும் உழைப்பின் மதிப்பாகும். நிலமே மனிதனின் மதிப்பு மிக்க சொத்தானது நிலவுடைமைச் சமுதாயத்தில்தான். ஏனெனில் நிலத்தின் மீதே மனிதன் அதிக உழைப்பை, அதைப் பண்படுத்த, பயிர் விளைவிக்க, பாதுகாக்க, செலுத்த வேண்டியிருந்தது. வாழ்வை முற்றிலுமாக அதைச் சார்ந்து முடக்க வேண்டியிருந்தது. எனவே நிலம் உடைமைப் பொருள் ஆனது. உடைமையின் மேல் அவனுக்கு அதிகாரம் வந்தது. அதிகாரத்தின் வரம்பை நீட்டிக்க ஆசை வந்தது. ஒருவன் சொத்தின் மேல்தான் அதிகாரம் செலுத்த முடியும். உயிரின் மீது செலுத்த முடியாது. எனவே அனைத்தையும் சொத்தாக மாற்ற வேண்டியிருந்தது. அதிகாரத்திற்கான ஆசை, சொத்தின் எல்லையை விரித்துக் கொண்டே போனது. சக ஆண், பெண், குழந்தைகள், கன்று காலிகள், வீடு, வாகனங்கள், அசைகின்ற அசையாத பொருட்கள், ஏன் கடவுளும் சொத்தின் எல்லைக்குள் வந்து விட்டார். சொத்தை விரித்து, அதிகாரத்தின் மதுவைக் குடிக்க தந்திரங்களும், உபாயங்களும், வழிமுறைகளும் வேண்டியிருந்தன. நீதி, அறக் கோட்பாடுகள், புராணக் கற்பிதங்கள் இவைகள் அதன் வழிமுறைகளாயின.

தமிழர்களுடைய வாழ்வில் அறம் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டும், கூடியவரை இயல்பாகவும் இருக்குமாறு இந்தச் சமூகத்தின் தொல்லறிவும், ஆன்மீக உணர்வும் அதை நெறிப்படுத்தின. பட்டிணத்தார், கண்ணதாசன், பத்ரகிரியார், தாயுமானவர் இவர்களெல்லோரும் ஆரிய ஆளுமைக்கு ஆட்பட்டவர்களே. அவர்கள் பழந்தமிழரின் பிரதிநிதிகளாக மாட்டார்கள். ஏறக்குறைய 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறையினைப் பற்றிய அறிவு வேண்டும். வரலாறு மட்டும் போதாது. வரலாறு என்பது வலுத்தவற்றின் நிழல். அதனடியில் மறைந்து போன சாமானியனின் அடையாளத்தைக் கண்டுணர வேண்டும். அதற்கு என்ன செய்வது? அந்தச் சாமானியன் எங்கும் போய்விடவில்லை. அவன் உனக்குள்ளும், எனக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கிறான்.

காதல் என்பது சமூகவியல் ஒழுக்கமா, வாழ்வியல் ஒழுக்கமா? சமூகவியல் ஒழுக்கமெனின், அப்போது சமூகத்தின் சட்டகங்களுக்குள் அது வந்துவிடும்போது, தனிமனிதனின் திறமை, அந்தஸ்து, வசதி, தேவை, இவைகளால் உருக்கொடுக்கப்படும். அப்பொழுது, பெண் முற்றாக மாறிப்போன சொத்தாகிவிடுவாள். பிற சொத்தின் மீது உள்ள வரையறைகள், நியாயங்கள் இவைகள் போன்று அவள் மீதும் விழுகின்ற விதியின் கோடுகள் உன்னுடைய தேர்வையும், உரிமையையும் கூட லேசாக பாதிக்கவே செய்யும். எனினும், இது ஆணாதிக்க சமூகமாகையால் ஆண்களுக்குப் பெரிய பாதிப்பெதுவும் இருக்காது.

ஆனால், காதலை ஒரு வாழ்வியல் ஒழுக்கமென்று கருதினால், எல்லாக் கற்பிதங்களையும், சமூக நிலைப்பாடுகளையும் உதற வேண்டி வரும். வாழ்வு தனிமனிதனிடமிருந்து தொடங்குகிறது. தன்னுடைய விரிவடைதலை, எல்லையற்ற பிரக்ஞையின் கடலில் நீர்த்துப் போய்விடுவதற்கான விரிவடைதலை, ஒரு நதியைப் போல, ஒவ்வொரு வாழ்வும் தனக்கேயுரிய வழிகளில் செய்கிறது. பிரவாகமெடுக்கும் இந்த வாழ்வின் போக்கைக் காதல் தீர்மானிக்கிறது.

காதல் என்பது மதித்தல், பரஸ்பரம் உதவிக் கொள்ளுதல், உண்மையாய் இருத்தல் இப்படி எத்தனையோ அடங்கிப் போன ஆயிரமாண்டுப் பெட்டகம் எனலாம். ஆனால் இதையெல்லாம் மட்டும் வைத்துக் கொண்டு அதைத் தீர்மானமாகச் சொல்ல முடியுமா? அதைப்பற்றி எழுதுவது என்பது அதாகாது. நீ சொல்வாயே, நெஞ்சு இருக்கிற இடமே தெரியாத மாதிரியா இருக்கிறது என்று, அதுகூட ஒரு அழகான காதலுக்கான உரைதான்.

பூ உதிர்ந்து விட்டது
நதி கலந்து விட்டது
நட்சத்திரம் கரைந்து விட்டது
என் தலைச் சுமைக்கு
இன்னும் சில வார்த்தைகளைப் பொறுக்கிக் கொள்ளுதல்
என்ன நியாயம்?
____________________________________

பின் குறிப்பு:
இந்தக் கடிதம் மார்ச் 3, 1999 தேதியிட்ட கடித உறைக்குள்ளிருந்து. அந்தப் படம் நான் கிளிக்கிய கிறிஸ்துமஸ் மர உச்சாணிக்கொம்புத் தேவதை. ஸ்பெஷல் எபெக்ட் உபயம் மாசிலன் (அப்பாவை உலுக்கி விட்டார்)!

4 comments:

said...

என்னய்யா இந்த தங்மணி கடிதத்துல இந்த கலக்கு கலக்கறாரு, Bளாகுல அப்பாவி மாறி எழுதறாரு. மத்த கடித்தத்தையும் போடுங்க.

தங்கமணி, காதல் பற்றி பெரியார் எழுதினதை படிச்சிருக்கீங்களா? சும்மா கேட்டேன். மனுஷன் எந்த கற்பிதத்தை விட்டு வச்சிருப்பார்.

ஆனால் காதல் போன்ற அழகான கற்பிதங்கள் உயிர்வாழ ரொம்பவே இன்றியமையாதது என்றே நினைக்கிறேன். இந்த விஷயத்தில் பெரியாரை தள்ளிட்டு போனாத்தான் வாழமுடியும்னு தோணுது.

said...

Nice Photo. Thanks for the photographer and Masilan(for
helping his father).

said...

நெருப்புக் குழம்புக்குள் பெண் முகம் என்பதுபோல் எனக்குப் பட்டது. கிறிஸ்துமஸ் மரம் யாருக்கு வேண்டும். ஒழுங்காய் வந்திருக்கக்கூடிய புகைப்படத்தைவிட இதுவே உசத்தி என்று நினைக்கிறேன்.

said...

இந்தப் பதிவு அருமையானது.கூடவே படமும்.மாசிலனுக்கு ஓவியத்தில் ஆர்வமுண்டா வாழ்த்துக்கள் குட்டித் தம்பிக்கு