மதியம் ஞாயிறு, டிசம்பர் 12, 2004

பொன் குஞ்சு


அவனுக்கு இப்ப ரெண்டு வயசும் 5 மாசமும் ஆவுது. பாய்ச்சல்தான். அதன் நிதானம் அதுக்கு. எங்கே எப்ப முட்டுமோன்னு பின்னாடியே மனசோடும். அதுக்கெல்லாம் நிக்குமா அந்தப் பந்து. விசையுறு பந்து. எத்தனையோ ஆட்டங்கள். எல்லாப் பிள்ளைகளையும் போல. அது என்ன தம்பி? தேயிலை. என்ன செய்யப் போறீங்க? கீழே கொட்டப் போறேன். தெளிவா வருது பதில். கடைக்காரர் விளையாட்டாடும். அதுதான் கடைக்கார். ஏலக்காய் கொடுக்கும். எல்லாச் சாமானையும் கீழள்ளிப் பரப்பும். வெற்றுக்கைக் காசைச் சிரித்து வாங்கிக் கொள்ளும். காலைத் தூக்கித் தூக்கியாடி மேளமடித்து வீட்டுக்குள் ஊர்வலம் போகும். தன்பாட்டுக்குத் தனியே உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கும். பேசுறது புரியலன்னா, தமிழ்ல பேசுங்கன்னு சொல்லும். வீட்டுக்கு வர்ற தொலைபேசிக்கெல்லாம் பதில் சொல்லும். பெருசுகளைப் பேர் சொல்லிக் கூப்பிடும். டேய் என்றால் சிரித்துவிட்டு மறுபடியும் அப்படியே. சில நேரங்களில் பேசென்றால் பேசாது. பல நேரங்களில் அப்பாம்மா தங்களது புத்தகத்தை எடுத்தால் வச்சிடுங்க அப்படிங்கும். ஆடும்போது பிடித்து அமுக்கினால் அவன விட்றுங்க என்று திமிறும். அது கன்றுக்குட்டி, மீன், குருவி, தூங்கும் தேவதைக் குழந்தை. ஆமாம், பொன்குஞ்சு.

10 comments:

Mookku Sundar said...

ஹப்பா..கண்ணா அது..??
ஊரெல்லையில் இருக்கற வீரன் சிலைக் கண்ணு மாதிரி...

பொன்குஞ்சு இல்லை...அக்கினிக்குஞ்சு..

ஆமாம், உங்களை தங்கமணி குண்டா குண்டா ன்னு கூப்பிடராறே..ஒரு ஃபோட்டோ போட்டா பாக்கலாமில்லே..

உம்ம போட்டோவையும் போடுறது.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

enjoy.hope he knows to operate TV or VCR remote also.havent he tried his hands on the computer
yet

ரவி ஸ்ரீநிவாஸ் said...

why not a family photo !

சுந்தரவடிவேல் said...

நன்றி உஷா.
மூக்கரை மாதிரி அசத்தலா இருந்திருந்தா எப்பவோ போட்ருப்பனே:) இருங்க என்னைக்காச்சும் இந்த...மூஞ்சி வெளில வரத்தான் போவுது.
ரவி அதையெல்லாம் தொடாமலா! கீபோர்டுக்கு ஜூஸ் கொடுக்கும் வைபவம் ஒரு நாள் நடந்தது!

-/பெயரிலி. said...

ஆஹா சின்ன பொஸ்! வணக்கம் அண்ணை; டபிள்ஸ் எல்லாம் ஏத்தியிட்டு எப்ப மௌனகீதங்கள் பாக்கியராஜ் மாதிரி, "மூக்குத்திப்பூமேலே" போகப்போறீங்க?

மூக்கரே, பெரிய பொஸ் போட்டோவைப் போட்டுடைச்சிடட்டுமா?

சுந்தரவடிவேல் said...

//போட்டுடைச்சிடட்டுமா?//
ப்ளாகர் மீட் போட்டதால வந்த வெனை! அண்ணே செத்த சும்மா இருங்க :)

Mookku Sundar said...

அட.. இதென்ன கேள்வி. உடனே போடுங்க ரமணி.

உங்க ஃபோட்டோ blog லேயே போட்டு விடுங்க...பாப்போம்..

ஈழநாதன்(Eelanathan) said...

ம்ம் பொன்குஞ்சு உண்மையிலேயே பொன்குஞ்சுதான். ஓ வண்டிக்காரா பாட்டெல்லாம் பாடுவாராமே.

Thangamani said...

அன்புள்ள மூக்கன்: அவனும் குண்டாக இருப்பதில்லை; நானும் அப்படியே. ஆனாலும் இருவருமே அப்படி விளித்துக்கொள்வது வழக்கம்.

ஒரு குழந்தை நாம் இழந்தவற்றையும், வைத்திருப்பதையும் நினைபடுத்தும் வாழ்வின் கடிதம்; மீட்கமுடியும் என்ற என்ற நம்பிக்கையின் குரல்.

மாசிலனுக்கு என் அன்பு.

சுந்தரவடிவேல் said...

பெயரிலி எத்தனை போட்டோஷாப்புக்குள்ள போட்டு K1 K100ன்னு நம்பர் குடுத்தாலும் தேறாதுங்கோ:)
ஈழநாதன், ஓ வண்டிக்காரா மட்டுந்தான் ராகமா வரும், ஓட்டு வண்டிய ஓட்டு ஒரே ஓட்டமா ஓடும்.
ஏடா தம்பி நீ பிஸின்னு கேள்விப்பட்டனே இங்க என்ன செய்யிற?:)