கூகுள் படிப்பாளி

புதுசு புதுசா எதையாச்சும் சொல்லி அசத்தும் கூகுளின் (பரிக்கு 'குள்'ளு, காசிக்கு 'கிள்'ளு!) இன்னொரு அசத்தல் கூகுள் ஸ்காலர் (படிப்பாளி?!).

ஆராய்ச்சியில் விடை எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது கேள்வியும், விடைக்கான வழியைத் தேடுதலும். ஒரு பரிசோதனையை யாராச்சும் முன்னாடியே செஞ்சிருக்காங்களா, எப்படிச் செஞ்சாங்க, அந்த விடையை எப்படி விளக்கினாங்க அப்படின்னெல்லாம் தெரிஞ்சுக்கறது முக்கியம். இல்லன்னா சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிக்கிற மாதிரி (re-inventing the wheel) விரயந்தான். நான் உயிரியல் துறையிலிருப்பதால் இதில் நானறிந்த வகையில் தேடல் எப்படி இருந்திருக்கிறது, இப்போது எப்படிப் பரிணமிக்கிறது என்று சின்னதாய் ஒரு அலசல்.

ஒரு 10-15 வருடங்களுக்கு முன்னர் ஒரு சராசரி சென்னை ஆராய்ச்சி மாணவனுக்குக் கிடைத்ததெல்லாம் Chemical Abstracts, Biological Abstracts போன்ற தலையணை மாதிரிப் புத்தகங்கள். இவற்றில் நமக்குத் தேவையான கலைச் சொற்களைத் தேட வேண்டும். பிறகு அது குறித்த சுருக்கங்களைத் தேடியெடுத்து எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கான முழுக் கட்டுரை வேண்டுமெனில் அந்த நூலகத்திலிருந்தால் எடுத்துப் பிரதியெடுக்கலாம், இல்லையென்றால் அக்கம்பக்கத்து நூலகங்கள், இல்லையென்றால் அந்தக் கட்டுரையெழுதியவருக்கு ஒரு கால்கடுதாசி. இந்த முறையில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானதிலிருந்து அதைச் சென்னையில் முழுமையாகப் படிப்பதற்கு ஆகும் காலம் சுமார் 2 மாதங்கள்.

பிறகு 1995 வாக்கில் நிலைமை சற்றே மேம்பாடடைந்தது. Current contents on disk போன்ற குறுந்தகடுகளால் அந்தத் தலையணைப் புத்தகங்கள் மாற்றப்பட்டன. அதாவது அதே ஆராய்ச்சிச் சுருக்கங்களைக் குறுந்தகடுகளிலிருந்து பிரதியெடுத்துக் கொள்ளலாம். முழுக்கட்டுரை வேண்டுமெனில் மேலே கூறப்பட்ட விதங்களில்தான் முயல வேண்டும். கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் முன்னேறிய ஆய்வகங்களில் இணையம் மூலமாகத் தேடுதல் தொடங்கியிருந்தது. பின்னர் இணையப் பரவலாக்கத்தால் பெரும்பாலானோர் இவ்வகைத் தேடுதல் முறையையே கையாள்கின்றனர். தற்போது பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு தளம் National Library of Medicineன் PubMed. இத்தளம் தரமான முறையில் வெளியிடப்படும் 20,000க்கும் மேற்பட்ட அறிவியல் பத்திரிகைகளிலிருந்து ஆராய்ச்சிச் சுருக்கங்களை வெளியிடுகிறது. இதில் ஒரு சில நொடிகளில் உங்கள் கலைச் சொற்களுக்கான சுருக்கங்கள் வந்து நிற்கும். இலவசமாகக் கிடைக்கும் முழுக் கட்டுரைகளுமுண்டு. அல்லது அந்தந்த நூலகங்களின் மூலமாக வெளியீட்டாளரின் இடத்துக்குச் சென்று முழுக்கட்டுரைக்கான pdf கோப்பையும் எடுத்துக் கொண்டுவிடலாம். இத்தனையும் ஐந்து நிமிடங்களில். அதே போல இந்தக் கலைச்சொல் சம்பந்தமாக இன்றைக்கு என்ன ஆராய்ச்சிக் கட்டுரை வெளி வந்திருக்கிறது என்பதையும் Cubby என்ற வசதியின் மூலம் அறிந்து கொள்ளலாம். PubMedல் நாம் ஒரு வார்த்தையைக் கொண்டு தேடுதல் நடத்தினால் தேதி வாரியாக எல்லாவற்றையும் கொண்டு வந்து போடும். வேண்டுமென்பதை நாம்தான் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கூகுள் ஸ்காலர் சோதனை முறையில் வெளிவந்திருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், இதுவும் கிட்டத்தட்ட ஒரு கலைச்சொல்லுக்கு அத்தனை விடைகளையும் தரும். ஆனால் எது முக்கியமாகக் கருதப் படுகிறதோ, அதிகம் பேரால் மேற்கோளிடப்பட்டதோ அதுவே முதலில் வரும், மற்ற கூகுள் தேடுபொறிகளைப் போலவே. இது ஒரு ஆராய்ச்சியாளருக்கு மிகவும் பயனுள்ளது, முக்கியமாய் ஆரம்பநிலையில் இருப்பவருக்கு. ஏனெனில் எவையெல்லாம் அந்தத் துறையில் முக்கியமான கட்டுரைகள் என்பதை அவர் கண்டு கொள்கிறார். கூகுள் செய்திகளில் இருக்கும் Sort by Date போன்ற வசதி எதிர்காலத்தில் வருமானால் நாளாந்த வெளியீடுகளைச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். முழுக்கட்டுரைக்கான காப்புரிமை போன்ற விஷயங்களால் எல்லாக் கட்டுரைகளும் முழுவதாகக் கிடைத்து விடுவதில்லை. இந்தக் காப்புரிமை விஷயத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் (அதாவது, மக்கள் ஏற்கெனவே இந்த ஆராய்ச்சிக்கான பங்கை வரிகளின் மூலம் அளித்துவிட்டார்கள், எனவே அரசு நிதியுதவியில் நடக்கும் ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிந்துகொள்ள மக்கள் ஏன் பணம் கொடுத்து ஒரு கட்டுரையை/பத்திரிகையை வாங்க வேண்டும்?) கூகுள் ஸ்காலரை ஆராய்ச்சியாளர்கள் அதிகமாகப் பயன்படுத்த வைக்கும் என நினைக்கிறேன். மேலும் கூகுள் National Center for Biological Information, European Molecular Biology Laboratory போன்றவற்றின் ஏனைய புள்ளி விபரங்களையும் (மரபகராதி, புரத மூலக்கூறு வடிவங்கள் போன்றவை) பயன்படுத்திக் கொண்டு அவற்றைத் தன் பாணியில் வெளியிடலாம் என நம்புகிறேன். நன்றி கூகுள்!

0 comments: