கட்டுமானம்

பேருந்துக்காக உட்கார்ந்திருந்தேன். கையில் புத்தகமேதுமில்லை. சும்மா உட்கார்ந்திருக்கலாம். முடியுமா என்ன? பேருந்து எப்போது போயிருக்கும்? ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒன்று வரும். இப்போது 15 நிமிடங்களுக்குள் எத்தனையாவது நிமிடத்திலிருக்கிறேன், மனக்கடிகாரம் பின்னணியில் ஓடிக் கொண்டிருந்தது. மனத்துக்குப் பின்னால் ஓடுவது பிடிக்கும். அதாவது பின்னோக்கிய காலத்துக்கு, இதோ கடந்து போகும் யாரோ நங்கையொருத்தியின் பின்னால். பழக்க வியாதி. பழக்கத்தினால் இப்படிப் பின்னாலும், பின்னுக்கும் பின்னிச் சுழன்று கொண்டிருந்தது.

இப்போதுதான் எதிரே நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஓரளவு பெருஞ்சத்தத்துடன் ஒரு கட்டுமான ஊர்தி. அதன் முதுகிலே சுழலும் பெரும் சால்/தாழி. இரும்பு. பச்சை வெள்ளை நிறப் பட்டையடித்திருந்தது. உற்றுப் பார்த்தால் தெரியும் வண்டியோட்டி. அந்தச் சால் சுழன்று சுழன்று கலவையைச் (சிமெண்டுக் கலவை) செய்து கொட்டியது. வெளியே நின்றவொரு ஐந்தாறு பேர். நான் முதலில் இந்த மனிதர்களைப் பார்த்தேனா அல்லது அந்தக் கலவை ஊர்தியைப் பார்த்தேனா என்பது தெளிவாயில்லை. இவ்விடத்திலே பிரிந்து போய் "நாகரீக காலத்து" மனிதனுக்கு முதலில் கண்ணில் படுவது மனிதனா எந்திரமா என்றொரு தனிக்கதை ஆரம்பிக்கலாம். மத்தாப்பிலிருந்து சிதறும் ஒவ்வொரு பொறியும் ஒரு பெருந்தீயாகலாமில்லையா? இருக்கட்டும்.

அந்த எந்திரம் கலவையைக் கொட்டியபடியிருந்தது. அங்கே நடைபாதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாலைந்து அடி நீள அகலத்தில் துண்டு துண்டாய்க் கட்டிக் கொண்டு போகிறார்கள். கொட்டும் கலவையைப் பரப்பிவிடும் இருவர். தட்டித் தட்டிச் சமப்படுத்துமிருவர். அவர்களில் மூவராவது மெக்ஸிகர்/ஸ்பானியர்களாயிருக்க வேண்டும். உருவம் அப்படித்தானிருந்தது. கட்டிட, சாலை வேலைகளில், மதியவுணவுக்கு மெக்டொனால்ட்ஸ்களில், இவர்களை நிறையக் கண்டிருக்கிறேன். இவர்களுடைய சமூக நிலை நன்றாகத் தெரிந்தால் இவர்களில் எத்தனை பேர் "அனுமதி"யற்ற குடியேறிகள், கலிபோர்னியப் பெருந்தோட்டங்களில் பூச்சி மருந்துகளோடு உறவாடும் இவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா, புஷ் அரசாங்கம் இவர்களது குடியுரிமைக்குச் செய்திருப்பது என்ன, முதலாளிகள் ஏன் இவர்களைப் பயன்படுத்துகிறார்கள், என்பன போன்ற இன்னொரு கிளைக்கதையைத் தொடங்கலாம். தள்ளி நின்று இருவர், கொஞ்சம் நல்ல உடை, செழுமை, சிமெண்டுக் கறை படியாத மஞ்சள் தொப்பிகளோடு, எஞ்சினியர்களாக/மேற்பார்வையாளராக இருக்கலாம், பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த வேலையைப் பற்றி, அந்தக் கலவையூர்தியைப் பற்றி அந்த இருவரிடமும் பேசலாமா? ஆனால் பேச ஆரம்பிக்கும்போது என் பேருந்து வந்துவிட்டால்? அதிசயமாய்ச் சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்புமின்று இன்னொரு 15 நிமிடத்தைச் செலவிடுவதா? இப்படிச் சில நிமிடங்கள் அலைக்கழிந்தன. அதோ என் பேருந்து. அடைத்த கதவு, சுற்றுக் குளிர்க் கண்ணாடி, காட்சியும் சத்தமும் தேய்ந்து போயின. கலவையைக் கொட்டியபடியே அதுவும், நிரவியபடியே அவர்களும் காணாமல் போனார்கள். பின்னோக்கியோடிய மனம், நழுவி விழுந்த சும்மாட்டினால் சாந்து சட்டிக்கும் தலைக்குமிடையே சிக்குண்ட ஆற்று மணலில் நறநறத்தது.

0 comments: