நண்பர் சுந்தரராஜனுக்கு

அன்பு சுந்தரராஜன்,
ஒரு இந்தியனாய் நான் எழுத முற்பட்டதெல்லாம் எப்படி என் நாட்டு இராணுவம் ஒரு அண்டை நாட்டிலே புகுந்து எம் தமிழ் இன மக்களைச் சீரழித்திருக்கிறது என்பதைத்தான். இதை எழுதியதன் மூலம் நான் புலிகளின் வன்முறைக் கொடியைத் தூக்கிப் பிடிப்பதாக நீங்கள் கருதுவது ஒரு நீட்சியே. என் பதிவிலிருக்கும் ஒரு கீழ்நிலை அவில்தார் ஒரு சீரழிவைச் செய்தாரென்றால் அவருக்குச் சொல்லித் தரப்பட்டது என்ன, சொல்லித் தரப்படாதது என்ன, இதற்கு இராணுவம் தன்னைச் சீர் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கையும், இலங்கையிலே நிகழ்ந்தவை அனைத்துலகப் பொதுமக்களின் பரந்த பார்வைக்கு வர வேண்டும் என்பதையும் அடித்தளமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன்.

அபு க்ரெய்பிலே சிறைச்சாலைக்குள் நடக்கும் கொடுமையைக் கண்டு ஐயகோ என்று கதறும் நாம், வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் இராணுவ 'ஒழுக்கத்தைக்' கண்டும் காணாமல் விடுவதா? இதோ இந்து ராம் சொல்கிறார்,"இந்தியா 80களின் தவற்றை இனிச் செய்யாது", புலிகளும்தான் சொல்கிறார்கள் "அது ஒரு பழைய தவறு". எல்லோரும் தவறிழைக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எது சொல்லப் படுகிறது, எப்படிச் சொல்லப் படுகிறது, அதன் பின் விளைவுகள் என்ன என்பதைத்தான் நான் கேட்கிறேன். ராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றித் தெரிந்த நமக்கு இலங்கையில் நம் படையினரால் நடந்த பாதிப்புகள் தெரியுமா? இதைத்தான் வெளிக் கொணர இருக்கிறார்கள், இதைத்தான் எழுதியிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் அபிமானிகளெல்லாம் புலிகளின் அபிமானிகள் என்று கூறப்படுவதும், தேசப்பற்றின் காரணமாக இந்திய இராணுவம் எது செய்தாலும் சரி என்று நிற்பதும் சரியில்லை. இப்போது மணிப்பூரிலே நடப்பவற்றைப் பார்த்தால் எந்தவொரு சராசரி மனிதனுக்கும் இந்திய இராணுவத்தின் மேல் அவநம்பிக்கை வரும். இந்திய ஒருமைப்பாட்டின் மீது கேள்வி எழும். கி.பி. 33லிருந்து, காக்கப்பட்ட, ஒரு அழகிய வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த மணிப்பூர் இப்போது சுதந்திர இந்தியாவில் பெறுவது என்ன? சீரழிவு. அங்கே இராணுவத்திற்குக் கேள்வி கேட்பாரின்றி எவ்விடத்தையும் சோதனையிடவும், யாரையும் எங்கேயும் கண்டதும் சுடவும் அனுமதி. விளைவு? தொடங்கிய நாளிலிருந்து மனோரமா தேவி வரை வன்முறைகளும், கொன்றொழிப்புகளும், பாலியல் கொடூரங்களும். இது மாதிரி ஏதும் நடக்கவில்லையென்று நேற்றைய கேபினட் கூட்டத்தில் இராணுவத்தால் சொல்ல முடியவில்லை. ஏன்? நடந்திருக்கிறது, நடத்தியிருக்கிறார்கள், அது கீழிருந்து மேல் வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இது எதனால் என்றால் தீவிரவாதிகள் அங்கே ஏகே 47 ஐத் தூக்கிக் கொண்டு மணிப்பூரி நடனமாடுகிறார்கள், போதைப் பொருள் கடத்துகிறார்கள் என்று தேசாபிமானம் சொல்லும். உண்மை அதிலிருந்து மாறுபட்டது என்று உள்மனதுக்கும், இராணுவத்துக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் தெரியும். தேசிய நீரோட்டத்தில் இந்த விடயங்களெல்லாம் அடித்துக் கொண்டு போகப் படுகின்றன.

இதில் பிறழ்ந்து போயிருப்பது என்ன? மனித உரிமையை மதித்தல். இது இல்லாமையினாலேயே இலங்கையில் அந்த அவில்தார் அப்படி நடந்தார், எண்ணற்ற வீரர்களும் ஆண்மையற்ற செயல்களைச் செய்தனர். இதனைத் தனி மனிதப் பாலியல் வாழ்வு சார்ந்த விடயமாக ஒதுக்க முடியாது. ஒரு போர்க்களத்தில், அமைதியை நிலைநாட்ட வந்த இடத்தில் ஒரு இராணுவ வீரன் பாலியல் ஆட்டம் போட எது காரணம், அதற்குப் பின்னணியிலிருந்த தூண்டுகோல்/கண்டுகொள்ளாமை, இராணுவத்தில் கற்பிக்கப்படும் மனித நேயம், தேசிய மாணவர் படை மாணவர்களுக்குச் சொல்லப்படும் கதைகள் ("நாங்கள்லாம் இராணுவத்துல இப்படியெல்லாம் அனுபவிச்சோம், நீங்களும் இராணுவத்துல சேர்ந்தா இதையெல்லாம் அனுபவிக்கலாம்"னு ஒரு முன் மாதிரியா இருந்த திறம்!), இதையெல்லாம் ஆராய வேண்டும். இதற்கெல்லாம் பரிகாரம் கிடைக்குமாவென்று தெரியாது. ஆனாலும் நடந்ததை உலகறிய வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலையை, புலிகளின் வன்முறைகளைப் பேசும் நாம், நம் பக்கத்துத் தவறுகளையும் மறுதட்டில் வைத்தே எடை போட வேண்டும். எல்லை என்பதை நாம் உண்மையின் வாசலுக்கு வெகு முன்னரேயே வைத்து விட்டு எல்லையை மீறக் கூடாது என்று கூவக் கூடாது. உண்மைகள் வரட்டும். தேசாபிமானத்தின் குறுக்கீடின்றி எல்லாப் பக்கத்து உண்மைகளும் வரட்டும். அதுதான் வரலாறு, மொத்த முழுப் பார்வை.
மற்றபடிக்குச் சில சொந்தச் சொல்லாடல்கள் நம் நட்பைக் காயப்படுத்தவில்லையென்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்
சுந்தரவடிவேல்

0 comments: