அறத்தினையொழிக்கும் பாதுகாப்புணர்வு

மக்களிடையே ஒரு கொந்தளிப்பு நடக்கிறதென்றால் அதன் காரணம் என்ன? இறுகக் கட்டி வைக்கப் பட்டிருந்த மக்கள் கட்டுத் தெறித்து எழுகிறார்கள். தம்மைச் சுரண்டுவதற்காகவும், அடிமைகளாய் வைத்திருப்பதற்குமான சட்டங்களை உடைக்கிறார்கள். ஒவ்வொருவரும் தாம் மனிதராய் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். தம் வாழ்வைக் கௌரவமாக நடத்த வேண்டும் என விழைகிறார்கள். பசியிலும் அறியாமையிலும் தாம் இதுவரை நசுங்கிக் கிடந்தது போதும், இனியேனும் எழுந்து கொள்வோம், நம் சந்ததிகளையும் எழுப்பி விடுவோம் என்று கிளம்புகிறார்கள்.

இதனை ஆதிக்க சக்திகள் தங்களின் பெரும் ஆயுதங்களான சட்டங்கள், சமூக மரியாதைகள், உயர் பெருமைகள், உன்னதங்கள் என்பன போன்ற கற்பிதங்களைக் காட்டி அடக்க முயற்சிக்கின்றன. இதையேதான் ஆங்கிலேயரும் செய்தனர், பூபதிகள், தொண்டைமான்கள், ராங்கியர்கள் போன்ற நிலக் கிழார்களும் செய்தார்கள், செய்கிறார்கள். கேவலம் இத்தனை வருடங்களாய் நான் இட்ட பிச்சையிலே வளர்ந்தவன், என் பூமியிலே உழைத்து வயிற்றைக் கழுவிக் கிடந்தவன், என் முன்னால் துண்டைக் கக்கத்திலே இடுக்கிக் கொண்டு கூனி, தன் வாய் மேல் கையை வைத்துப் பேசியவன் இன்று என் முன்னாலேயே காலில் செறுப்புப் போட்டுக் கொண்டு நிற்கிறான், சர்வதேச சமூகம் பற்றிப் பேசுகிறான், நான் அனுபவித்து வரும் அதிகாரத்தை அசைக்கப் பார்க்கிறான் என்று பலவாறாய் அலைக்கழிக்கப் படுகிறது அந்த மேல் தட்டு.

நடை முறை அவலங்களைத் தலைகீழாய்க் கவிழ்ப்போம் என்றும், தனி மனித விடுதலையையே விடுதலையென்று கொள்வோம், இத்தகைய விடுதலை பெற்ற மக்களால் கட்டப் படுவதையே நிஜமான சமூகம் எனக் கொள்வோம் என்று முழங்கும் குரல்களுக்கு, ஆதிக்க வர்க்கம் தனக்குப் பிடித்த பெயர்களைச் சூட்டிப் பார்க்கிறது. இத்தனைக் காலம் தான் இருந்த பாதுகாப்பாலும், தான் பெற்ற கல்வியாலும், தேடித்தேடிக் கற்பித்துச் சேர்த்து வைத்திருக்கும் பொய்ப் பெருமைகளாலும், செல்வத்தினாலும் பெற்ற பாதுகாப்பான வாழ்வு கேள்விக் குறியாகும் போது, இந்த அதிகார வர்க்கம் நடுங்கிப் போகிறது. தான் கட்டிக் காத்து வைத்திருந்த இத்தனையும் முக்கியமா அல்லது தன் அண்டை அயலில் இருக்கும் நசுக்கப் பட்டவரின் விடுதலை முக்கியமா என்று ஒரு கணம் யோசித்துப் பார்க்கிறது (பல நேரங்களில் யோசிப்பதேயில்லையென்பது வேறு.).

அந்த யோசனையில் மனிதம் தோற்கிறது. தற்பாதுகாப்பு வெல்கிறது. இந்த வெற்றியானது ஆளும் நெஞ்சுக்குப் புதிய உரத்தைக் கொடுக்கிறது. இந்த உரம் இன்னும் பெரிய சுவர்களைக் கட்டுகிறது, கடுமையான சட்டங்களை வகுக்கிறது, இந்த அமைப்பைக் காவல் புரிவோருக்கு இன்னும் கணிசமான சலுகைகளைக் கொடுக்கிறது. இதன் மூலம் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறது. சிறிய அளவிலான போராட்டங்கள், கலகங்கள் எல்லாம் உயிரியலில் தடுப்பூசி செய்யும் அதே வேலையைச் செய்கின்றன. ஆளும் வர்க்கம் தம்மை வலிமையுறக் கட்டிக் கொள்வதற்கான வழிமுறைகளை இச்சிறு கலகங்கள் ஏற்படுத்துகின்றன. ஆளும் வர்க்கம் தன் படைக் கருவிகளை மேம்படுத்திக் கொள்வதற்குக் கோடிக் கோடியாய் செலவழித்துக் கொள்ள இக்கலகங்கள் வழி செய்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இவ்வகையான ஆயத்தங்களைக் கண்டு போராட்டங்கள் மடிந்துவிடுவதில்லை.

நடுவில் நானொரு தடவை கலகங்களும், போராட்டங்களும் வன்முறை சார்ந்ததாயிருக்க வேண்டுமென்று சொல்லவில்லையென்பதை சொல்லிக் கொள்கிறேன்.

மீண்டு விசயத்துக்கு வருவோம். ஆக, வரலாற்றுக் காலந்தொட்டே பாதுகாப்பின் மெல்லிளஞ்சூட்டில் இருக்கும் அதிகார வர்க்கத்துக்குப் போராட்டம் என்பதும் கலகம் என்பதும் மனிதனின் தேடல் என்பதும், ஒடுக்கப் பட்டவனின் போராட்டம் என்பதும் கண்டிக்கத்தக்கது. அல்லது அத்தகைய தேடல்கள், விசாரணைகள் முதலியவை தாம் (அதிகாரம்) கண்டுபிடித்த மதம், பக்தி இத்யாதி வாயிலாகத்தான் இருக்க வேண்டுமென விரும்பியது. இதற்கான முன்னுதாரணங்களை எடுத்து வைத்தது. நந்தனைக் காட்டும்போது அவனது பக்தியைக் கொண்டாடியது. நீயும் இவனைப் போல் ஆண்டைக்குச் சேவை செய், அல்லது ஆண்டவனின் காலிலே விழு என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. கீழ்ப்படிதலும், பக்தியுமே உன்னை விடுவிக்கும் என்று சொல்லித் தந்தது. கூடவே ஆத்ம விசாரணைக்கு, விடுதலைக்கு என்று மக்கள் உண்டாக்குகின்ற இலக்கியம், இசை, நுண்கலைகள் இவற்றையும் மேன்மைப் படுத்துவதாய்ச் சொல்லிக் கையகப்படுத்திகொண்டு அவற்றை வீரியமிழக்கச் செய்தது; மேலும் உழைக்கும் மக்களை அவற்றினின்று அன்னியப்படுத்தியது. பக்தியிலும் கீழ்ப்படிதலிலும் ஆண்டைகளின் அடியில் வீழ்ந்திருந்த மனிதன் அப்படியேதான் செத்துப் போனான். அவனது சந்ததிகளும் அப்படியேதான் மரிக்கின்றன.

இதிலிருந்து மீளமுடியாதவாறு இறுக்கமான படிநிலை சாதிக்கட்டுமானங்களைக் கொண்ட நிலவுடைமைச் சமூகம் மக்களைத் தொடர்ந்து சுரண்டுகிறது. இந்தச் சமூக அமைப்பைத் தற்காத்துகொள்ள தர்மம், தயை, புண்ணியம், புனிதம், பாவம், புகழ், கற்பு போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு "பெருங்கதையாடலை" (நன்றி: தங்கமணி) இயற்றிக் கற்பிக்கிறது. அதற்காக, குடும்பம், கோவில், அரசு போன்ற நிறுவனங்களைத் தன் விருப்பப்படிக் கட்டமைத்து எப்பாடுபட்டேனும் அதைக் காப்பாற்றச் செய்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் இவைகளின் ஊடே ஊற்றெடுக்கும் வன்முறையைக் கண்டுகொள்ளலாம். குடும்பத்தைக் காப்பாற்ற விரும்பும், இக்கதையாடலை நம்பி வாழும் ஒருவனே பிறன் மனைவியை, மகளைக் கற்பழிக்கிறான், இன்னொருவன் மகனைக் கொல்கிறான்; கடவுளையும் கோயிலையும் முன்னிருத்தும் அவனே இன்னொரு கோயிலை இடிக்கவும் செய்கிறான்; இவர்களின் அரசுகளே வன்முறையின் நிலைக்களன்களாகின்றன. ஆனால் முரணாக, எல்லாக் குடும்பங்களும், ஒழுக்கத்தையும், பெண்களுக்கு மரியாதையையும் போதிக்கின்றன; எல்லாக் கோயில்களும் அன்பையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் போதிக்கின்றன; எல்லா அரசுகளும் மக்களின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகின்றன.

இதை உணர்ந்து கொள்ள வெகு காலம் பிடிக்கிறது. உணர்ந்து வெளிப்படுத்தினால் மறுபுறத்திலே சீற்றம் கொப்பளிக்கிறது. இச்சீற்றங்களையும் தாண்டி, இவற்றிலிருந்தே சக்தியைப் பெற்றபடி ஒடுக்கப்பட்டவர்கள் மாறுகிறார்கள்; தனிமனித விடுதலையை, தன்மானத்தை, சகலரின் சுதந்திரத்தை முன்வைத்து மாற்றுக் கலாச்சாரங்களையும், மாற்று வாழ்க்கை முறைகளையும் சிந்திக்கும், விவாதிக்கும் குழுக்கள் அரும்பத் துவங்கியிருக்கின்றன. அவைகளுக்கிடையேயான செய்தி/அனுபவப் பரிமாற்றம் முன்னெப்போதையும்விட இப்போது சாத்தியமாகியிருகின்றது.
இதனால், ஒடுக்குமுறையைக் கட்டிவைக்கும் சகல பழங்கதையாடல்களும் ஒன்று மற்றொன்றைப் பாதிக்கிறது, முரண்படுத்துகிறது, நகைப்புக்குரியதாக்குகிறது. இந்நகைப்பினூடே விடுதலையின் வேர் ஆழப்பரவுகிறது. அதற்காக ஒடுக்கு முறை ஓய்ந்துவிட்டது என்ற பொருளல்ல, அது போலித் தேசியம், போலிக் கலை, போலி விளையாட்டு போன்ற வசீகர வலைகளை வீசவே செய்கிறது. அதற்குப் பலியாகும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் சுதந்திர வானில் பறக்கவிரும்புவோருக்கு ஒரு பரந்த வானமும், வெளியேற சிறிய சன்னலும் இப்போது கண்ணுக்குத் தெரிகின்றன. இறகுகளை விரித்துப் பறப்பதோ, அல்லது, கரப்பான் பூச்சியாய் இருண்ட இடுக்குகளுக்குள் ஒண்டிக் கொள்வதோ நம்மிடந்தானிருக்கிறது.

பின் குறிப்பு: இதை உங்களூர்க் குடியானவருக்காகவோ, தலித்துக்காகவோ, பெண்ணுக்காகவோ, ஈழத் தமிழருக்காகவோ, அல்லது வேறு எவ்வகையிலேனும் வரலாற்று ரீதியில் ஒடுக்கப் பட்டவருக்காகவோ எழுதப்பட்டதாய்ப் பாவித்துக் கொள்ளலாம்.

0 comments: