வெள்ளி மலருக்குக் கொண்டாட்டம்!


ஆனியா ஹாட்ச். பிறந்தது க்யூபாவில். "புகழ்" பெற்ற குவாண்டானமோவில். குட்டிப் பெண்ணாக இருந்த போதே கரண வித்தையில் கெட்டி. வாங்கிக் குவித்த பரிசுகள் ஏராளம். வித்தை சொல்லிக் கொடுத்த ஆலனுக்கும் இவருக்கும் காதல். எந்த பல்டியும் அடிக்காமல் கல்யாணம். 1997ல் அமெரிக்காவுக்குப் பெயர்ந்தார். 2001ல் அமெரிக்கக் குடியுரிமை. சின்னப் பிள்ளைகளுக்குக் கரணவித்தைப் பள்ளிக்கூடம் நடத்துகிறது தம்பதி.

ஒரு நாள் பக்கத்திலிருக்கும் நூலகத்துக்கு மாணவர்குழாம் சகிதம் வந்தாராம். ஒலிம்பிக்குக்குப் போவதற்கு முன்னால். நூலகம் கரடி பொம்மை கொடுத்து வாழ்த்துச் சொன்னதாம். பார்த்து வந்து என் மனைவி சொன்னார். அது அப்படியே மறந்து போனது. ஒரு நாள் செய்தித்தாள்ல "நம்ம ஊரு வெள்ளி மலர்"னு ஏதென்ஸிலிருந்து சேதி.
நேத்து அவருக்கு ஒரு வரவேற்பு. நகர் மன்றத்துல தொடங்கி ஊர்வலம்.



ஒரு கார்ல ஆலனோட. பின்னாடி பாண்டு வாத்தியம், கரணம் போட்டப் பள்ளிக்கூடப் பிள்ளைகள், ஊர்ப் பெரியோர், தீ வண்டி, இருபுறமும் நின்று தம்பதிக்குக் கையசைத்த மக்கள், ஆங்காங்கே கேமரா, மைக்கும் கையுமாய் அலைந்த தொலைக்காட்சிச் செய்தியாளர்கள். ஒரு சின்னப் பிள்ளையை மடக்கி நீயும் ஆனியா மாதிரி வர விருப்பமான்னு கேக்க அது தலையாட்டிக்கிட்டு நின்னது.

கலவையான உணர்வுகள்: எட்டுத்திக்கும் போறான், கலையெல்லாம் கொண்டு வந்து சேக்குறான்; சந்தடி சாக்குல "ஐயோ பாவம் இவங்க சொந்தக் காரங்க ஒலிம்பிக்குல இவரு தெறமையப் பாக்க முடியுமோ என்னமோ, ஏன்னா க்யூபாவுலயெல்லாம் கரண்ட் ஒழுங்கா வராது"ன்னு சொல்ற அமெரிக்கப் பத்திரிகை; அடிமையாக் கிடந்த கறுப்பரின மக்களால் இப்போது வெள்ளைக் காரர்கள் பெருமை கொள்வது; நம்ம ஊருக்கு ஏன் ஒரு பதக்கந்தான் கெடச்சது? இன்னும் பல. கடற்கரையில கூட்டமெல்லாம் ஏற்பாடாம், போகலை. காலாற நடந்து வீட்டுக்கு வந்தோம்.

காரணம்

நெற்களத்தடி வைக்கோல்
தேங்காய்நார்ப் பஞ்சு
கூட்டியெறியும் தலைமயிர்,
அள்ளிச் சொருகிச் சுற்றித்
திரிக்குங் கயிறு

பிசைந்து அறுத்துச்
சூளையிட்டுச் சுட்டுச்
சிவக்குஞ் செங்கல்

இப்படியே என்
நாள்மலரரும்பும் நீளும்
நிகழ்விட்டு நிரப்பும்

இன்றைக்கு இவ்வரிகளையும்
சேர்த்துக் கொள்கிறேன்

ஏன்னு கேட்டா என்ன சொல்ல?
அம்மா சொல்லும்,
கொண்ட வய்யி எதுக்காச்சும் ஆவும்.

இனங்களும், வாரக்கடைசியும்

அன்றைக்கு என் மகனுக்கு உயிர்மெய்யெழுத்துக்களை எழுதிக் காட்டிக் கொண்டிருந்தேன்.
கஙசஞடணதநபமயரலவழளறன
அப்புறமா
கசடதபற வல்லினம்,
ஙஞணநமன மெல்லினம்,
யரலவழள இடையினம் அப்படின்னு சொன்னேன். இதுல என்ன அதிசயம்னு கேக்குறீங்களா?

இந்த வல்லின எழுத்துக்கள் ஒன்று விட்டு ஒன்று வருவதைக் கவனித்தீர்களா? மட்டும் கடைசிக்குப் போயிடுச்சு. அதே மாதிரி மெல்லின எழுத்துக்களும் வல்லினத்துக்கு அடுத்து ஒன்று விட்டு ஒன்று. மட்டும் கடைசிக்கு, அதிலும் ற வுக்குப் பக்கத்தில். இந்த இடையினம் இருக்கு பாருங்க அது மட்டும் அப்படியே கூட்டா ஒரே இடத்துல யரலவழள அப்படின்னு சேர்ந்து இருக்கு. எழுத்துக்களின் இந்த இட அமைப்புக்கு எதாச்சும் அர்த்தம் இருக்குமா?! ஓசை நயத்துக்காகவும், ஒலிகளைத் தெளிவாப் பிரிச்சு சொல்றதுக்காகவும் இருக்கலாம். வேற எதாச்சும் உங்களுக்குத் தோணுதா?

வாரக்கடைசியில நல்ல பிள்ளையா இருந்தேன். சனிக்கிழமை சாம்பார் வைத்து, பாகற்காய் வறுத்தேன். அன்று நல்ல மழை! 'அண்டத்திடிபல தாளம் போட' அப்படின்னு கொட்டியது. வெளியில போகாதீங்கன்னு தொலைக்காட்சியில அறிவிப்பு வேற. நேத்து வெயில், வெளியில போனோம். பக்கத்துல மிடில்டௌன் அப்படின்னு ஒரு ஊருக்கு. அங்கே சின்னப் பிள்ளைகளுக்கான அருங்காட்சியகமொன்று. ஒரு பெரிய வீட்டுக்குள். ஒரு புறத்தில் கடலடிப் பவளப் பாறைகளைப் போல் கட்டியிருந்தார்கள். குழந்தைகள் அதனுள் புகுந்து ஊர்ந்து திரிந்தனர். அப்புறம் சமையற்கட்டு, கார், கடை, தோட்டம், துணிக்கோழி, ப்ளாஸ்டிக் முட்டை, எல்லாம் விளையாட்டுக்குத்தான். எல்லாம் அறைகளுக்குள். செயற்கைத்தனம் சற்றே உறுத்தினாலும் குழந்தைகளுக்கு அவை ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் தருவதைக் காண முடிந்தது. வீறு கொண்டு நடக்க ஒரு வாரக்கம்பளம் விரிக்கப் படுகிறது. கிளம்புகிறேன்!

தலித் இதழியல் செய்தி

கேரள அரசு கடந்த ஆண்டில் ஒன்பது தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவர்களுக்கு நிதியுதவியளித்து பத்திரிகைத் துறையில் தேர்ச்சியடையச் செய்துள்ளது. அரசின் நிதியுதவி புதிய மாணவர்களுக்கு இவ்வாண்டும் தொடர்கிறது. தாழ்த்தப்பட்டோர் பத்திரிகைத் துறைகளில் பெருக வேண்டும். 300 பேர் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்தில் ஒரு தலித் கூட இல்லை என்ற இழிநிலை இருக்கக் கூடாது. ஒடுக்கப் பட்ட மக்களைப் பத்திரிகைத் துறையில் இணையச் செய்யும் இத்தகைய திட்டங்களைத் தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

செய்திக்கு ஆதாரம்

கட்டுமானம்

பேருந்துக்காக உட்கார்ந்திருந்தேன். கையில் புத்தகமேதுமில்லை. சும்மா உட்கார்ந்திருக்கலாம். முடியுமா என்ன? பேருந்து எப்போது போயிருக்கும்? ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒன்று வரும். இப்போது 15 நிமிடங்களுக்குள் எத்தனையாவது நிமிடத்திலிருக்கிறேன், மனக்கடிகாரம் பின்னணியில் ஓடிக் கொண்டிருந்தது. மனத்துக்குப் பின்னால் ஓடுவது பிடிக்கும். அதாவது பின்னோக்கிய காலத்துக்கு, இதோ கடந்து போகும் யாரோ நங்கையொருத்தியின் பின்னால். பழக்க வியாதி. பழக்கத்தினால் இப்படிப் பின்னாலும், பின்னுக்கும் பின்னிச் சுழன்று கொண்டிருந்தது.

இப்போதுதான் எதிரே நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஓரளவு பெருஞ்சத்தத்துடன் ஒரு கட்டுமான ஊர்தி. அதன் முதுகிலே சுழலும் பெரும் சால்/தாழி. இரும்பு. பச்சை வெள்ளை நிறப் பட்டையடித்திருந்தது. உற்றுப் பார்த்தால் தெரியும் வண்டியோட்டி. அந்தச் சால் சுழன்று சுழன்று கலவையைச் (சிமெண்டுக் கலவை) செய்து கொட்டியது. வெளியே நின்றவொரு ஐந்தாறு பேர். நான் முதலில் இந்த மனிதர்களைப் பார்த்தேனா அல்லது அந்தக் கலவை ஊர்தியைப் பார்த்தேனா என்பது தெளிவாயில்லை. இவ்விடத்திலே பிரிந்து போய் "நாகரீக காலத்து" மனிதனுக்கு முதலில் கண்ணில் படுவது மனிதனா எந்திரமா என்றொரு தனிக்கதை ஆரம்பிக்கலாம். மத்தாப்பிலிருந்து சிதறும் ஒவ்வொரு பொறியும் ஒரு பெருந்தீயாகலாமில்லையா? இருக்கட்டும்.

அந்த எந்திரம் கலவையைக் கொட்டியபடியிருந்தது. அங்கே நடைபாதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாலைந்து அடி நீள அகலத்தில் துண்டு துண்டாய்க் கட்டிக் கொண்டு போகிறார்கள். கொட்டும் கலவையைப் பரப்பிவிடும் இருவர். தட்டித் தட்டிச் சமப்படுத்துமிருவர். அவர்களில் மூவராவது மெக்ஸிகர்/ஸ்பானியர்களாயிருக்க வேண்டும். உருவம் அப்படித்தானிருந்தது. கட்டிட, சாலை வேலைகளில், மதியவுணவுக்கு மெக்டொனால்ட்ஸ்களில், இவர்களை நிறையக் கண்டிருக்கிறேன். இவர்களுடைய சமூக நிலை நன்றாகத் தெரிந்தால் இவர்களில் எத்தனை பேர் "அனுமதி"யற்ற குடியேறிகள், கலிபோர்னியப் பெருந்தோட்டங்களில் பூச்சி மருந்துகளோடு உறவாடும் இவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா, புஷ் அரசாங்கம் இவர்களது குடியுரிமைக்குச் செய்திருப்பது என்ன, முதலாளிகள் ஏன் இவர்களைப் பயன்படுத்துகிறார்கள், என்பன போன்ற இன்னொரு கிளைக்கதையைத் தொடங்கலாம். தள்ளி நின்று இருவர், கொஞ்சம் நல்ல உடை, செழுமை, சிமெண்டுக் கறை படியாத மஞ்சள் தொப்பிகளோடு, எஞ்சினியர்களாக/மேற்பார்வையாளராக இருக்கலாம், பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த வேலையைப் பற்றி, அந்தக் கலவையூர்தியைப் பற்றி அந்த இருவரிடமும் பேசலாமா? ஆனால் பேச ஆரம்பிக்கும்போது என் பேருந்து வந்துவிட்டால்? அதிசயமாய்ச் சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்புமின்று இன்னொரு 15 நிமிடத்தைச் செலவிடுவதா? இப்படிச் சில நிமிடங்கள் அலைக்கழிந்தன. அதோ என் பேருந்து. அடைத்த கதவு, சுற்றுக் குளிர்க் கண்ணாடி, காட்சியும் சத்தமும் தேய்ந்து போயின. கலவையைக் கொட்டியபடியே அதுவும், நிரவியபடியே அவர்களும் காணாமல் போனார்கள். பின்னோக்கியோடிய மனம், நழுவி விழுந்த சும்மாட்டினால் சாந்து சட்டிக்கும் தலைக்குமிடையே சிக்குண்ட ஆற்று மணலில் நறநறத்தது.

தென்னிந்தியாவில் எயிட்ஸைத் தடுக்க Yale & Gates

2003ம் ஆண்டின் புள்ளி விபரப்படி இந்தியாவில் இருக்கும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 5.1 மில்லியன்கள். 2015 வாக்கில் நாம் ஆப்பிரிக்காவின் மொத்த நோயாளிக் கணக்கை மிஞ்சுவோம். ஏனெனில் நாளொன்றுக்கு மும்பையில் மட்டுமே 1000 புதிய நோயாளிகள் உருவாக்கப் படுகிறார்கள். நம் நாட்டில் நோயாளிகளில் பெரும்பாலானோர் வறுமையிலும், போதுமான சுகாதார வசதி, கல்விக் குறைவு போன்ற நிலைகளில் வாழ்பவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

பில் கேட்ஸின் அறக்கட்டளையான பில்&மெலிண்டா கேட்ஸின் நிதியுதவியோடு ($2.1 மில்லியன்கள்) ஏல் பல்கலைக் கழகம் தற்போது ஒரு ஆராய்ச்சியைத் துவக்கியுள்ளது. இவ்வாராய்ச்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற எயிட்ஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாராய்ச்சியாளர்கள் கேர் எனப்படும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். இவ்வாராய்ச்சியின் நோக்கமானது அமைப்புத் தலையீட்டின் (structural intervention) மூலம் நோய்ப் பரவலைத் தடுப்பது. பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கும் ஒவ்வொருவரும் (பாலியல் தொழில் புரிவோர், அவர்களது வாடிக்கையாளர்கள், ஊசி மூலம் போதைப் பொருட்களை உட்கொள்வோர்) ஒரு வகையில் அந்த அமைப்பில்/சுழற்சியிலிருந்து விடுபட இயல்வதில்லை, அவ்வமைப்பிலிருந்தபடி பாதுகாப்பான முறைகளைக் கடைபிடிக்க முடிவதில்லை. இதனால் தன்னையும் தன்னோடு உறவு கொள்வோரையும் பாதிப்புக்கு உட்படுத்துகிறார்கள். அமைப்புத் தலையீட்டு முறையானது இவ்வகைக் கட்டமைப்பில் குறுக்கிட்டுப் பாதுகாப்பான முறைகளைக் கற்பிக்கிறது, அவற்றைப் பயன்படுத்துவதற்கு ஊக்கத்தையும் அளிக்கிறது. (தாய்லாந்து விபச்சார விடுதிகளில் ஆணுறைகள் கட்டாயமாக்கப் பட்டதும், அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் மருத்துவரின் ஒப்பமின்றிக் கடையிலிருந்து ஊசிகளை வாங்கிக் கொள்ளும் விதிகளைத் தளர்த்தியதும் எயிட்ஸ் பரவலைக் குறைத்ததாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.)

அமைப்புத் தலையீட்டு முறையின் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்: (1)ஆணுறைப் பயன்பாட்டை அதிகரித்தல்; (2)பாலுறவுத் தொற்று நோய்களின் பரவலைக் குறைத்தல்; (3)பாலியல் தொழிலாளர்களின் சுயமரியாதையையும், அதிகாரங்களையும் மேம்படுத்தல்; மற்றும், (4) "முதலாளிகள்", இடைத்தரகர்கள், காவல்துறையினர் போன்றவர்களிடையே பாலுறவுத் தொழிலாளர்களைக் குறித்த போக்கு, நடைமுறை, திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல்.

ஏல் பல்கலையிலிருக்கும் இத்திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் கிம் ப்ளாங்கன்ஷிப்புடன் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களறிந்து எழுத விருப்பம். இது குறித்து அவரை இரண்டு வாரங்களுக்கு முன் தொடர்பு கொண்டேன். வெளிநாட்டுப் பயணத்திலிருப்பதாகச் செய்தி. வந்ததும் முயல்கிறேன்.

இதைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு:
1. ஏல் கையேடு
2. 2001ம் ஆண்டின் புள்ளி விபரங்கள் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மணிப்பூர் ஆகியவை அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்கவும்).
3. கவலைக்கிடமான நம் சுகாதார நிலையில், தனது குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் காங்கிரஸ் அரசு முதன் முறையாக எயிட்ஸ் நோய்த் தடுப்பு வழிமுறைகளுக்குத் தலைமையேற்கும் எனத் தெரிவித்திருப்பது ஒரு ஆறுதல்.

விடுதலை நாள் வாழ்த்துக்கள்!



இது அமெரிக்கக் கிராமக் கண்காட்சியொன்றில் வாங்கியது. அந்தக் குச்சியை மேலே தள்ளினால் பொம்மை வெளியே வரும். ஆட்டலாம், சுற்றலாம் துணிப்பொம்மை ஆடும். குச்சியைக் கீழே இழுத்தால் துணி கூம்புக்குள் சுருண்டு கொண்டுவிடும். பொம்மையின் இருப்பும் ஆட்டமும் நம் கையையும் மெய்யையும் பொறுத்து. பார்வைகளும், கருத்துக்களும், நம் விடுதலை நாளும் இப்படித்தான். இருக்கிறதென்றால் இருக்கிறது, இல்லையென்றால் இல்லை. எப்படியோ, சீர்மையான நாளையைப் பற்றிய கனவுகளுடன் நம் நாளைக் கொண்டாடுவோம்!

அறத்தினையொழிக்கும் பாதுகாப்புணர்வு

மக்களிடையே ஒரு கொந்தளிப்பு நடக்கிறதென்றால் அதன் காரணம் என்ன? இறுகக் கட்டி வைக்கப் பட்டிருந்த மக்கள் கட்டுத் தெறித்து எழுகிறார்கள். தம்மைச் சுரண்டுவதற்காகவும், அடிமைகளாய் வைத்திருப்பதற்குமான சட்டங்களை உடைக்கிறார்கள். ஒவ்வொருவரும் தாம் மனிதராய் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். தம் வாழ்வைக் கௌரவமாக நடத்த வேண்டும் என விழைகிறார்கள். பசியிலும் அறியாமையிலும் தாம் இதுவரை நசுங்கிக் கிடந்தது போதும், இனியேனும் எழுந்து கொள்வோம், நம் சந்ததிகளையும் எழுப்பி விடுவோம் என்று கிளம்புகிறார்கள்.

இதனை ஆதிக்க சக்திகள் தங்களின் பெரும் ஆயுதங்களான சட்டங்கள், சமூக மரியாதைகள், உயர் பெருமைகள், உன்னதங்கள் என்பன போன்ற கற்பிதங்களைக் காட்டி அடக்க முயற்சிக்கின்றன. இதையேதான் ஆங்கிலேயரும் செய்தனர், பூபதிகள், தொண்டைமான்கள், ராங்கியர்கள் போன்ற நிலக் கிழார்களும் செய்தார்கள், செய்கிறார்கள். கேவலம் இத்தனை வருடங்களாய் நான் இட்ட பிச்சையிலே வளர்ந்தவன், என் பூமியிலே உழைத்து வயிற்றைக் கழுவிக் கிடந்தவன், என் முன்னால் துண்டைக் கக்கத்திலே இடுக்கிக் கொண்டு கூனி, தன் வாய் மேல் கையை வைத்துப் பேசியவன் இன்று என் முன்னாலேயே காலில் செறுப்புப் போட்டுக் கொண்டு நிற்கிறான், சர்வதேச சமூகம் பற்றிப் பேசுகிறான், நான் அனுபவித்து வரும் அதிகாரத்தை அசைக்கப் பார்க்கிறான் என்று பலவாறாய் அலைக்கழிக்கப் படுகிறது அந்த மேல் தட்டு.

நடை முறை அவலங்களைத் தலைகீழாய்க் கவிழ்ப்போம் என்றும், தனி மனித விடுதலையையே விடுதலையென்று கொள்வோம், இத்தகைய விடுதலை பெற்ற மக்களால் கட்டப் படுவதையே நிஜமான சமூகம் எனக் கொள்வோம் என்று முழங்கும் குரல்களுக்கு, ஆதிக்க வர்க்கம் தனக்குப் பிடித்த பெயர்களைச் சூட்டிப் பார்க்கிறது. இத்தனைக் காலம் தான் இருந்த பாதுகாப்பாலும், தான் பெற்ற கல்வியாலும், தேடித்தேடிக் கற்பித்துச் சேர்த்து வைத்திருக்கும் பொய்ப் பெருமைகளாலும், செல்வத்தினாலும் பெற்ற பாதுகாப்பான வாழ்வு கேள்விக் குறியாகும் போது, இந்த அதிகார வர்க்கம் நடுங்கிப் போகிறது. தான் கட்டிக் காத்து வைத்திருந்த இத்தனையும் முக்கியமா அல்லது தன் அண்டை அயலில் இருக்கும் நசுக்கப் பட்டவரின் விடுதலை முக்கியமா என்று ஒரு கணம் யோசித்துப் பார்க்கிறது (பல நேரங்களில் யோசிப்பதேயில்லையென்பது வேறு.).

அந்த யோசனையில் மனிதம் தோற்கிறது. தற்பாதுகாப்பு வெல்கிறது. இந்த வெற்றியானது ஆளும் நெஞ்சுக்குப் புதிய உரத்தைக் கொடுக்கிறது. இந்த உரம் இன்னும் பெரிய சுவர்களைக் கட்டுகிறது, கடுமையான சட்டங்களை வகுக்கிறது, இந்த அமைப்பைக் காவல் புரிவோருக்கு இன்னும் கணிசமான சலுகைகளைக் கொடுக்கிறது. இதன் மூலம் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறது. சிறிய அளவிலான போராட்டங்கள், கலகங்கள் எல்லாம் உயிரியலில் தடுப்பூசி செய்யும் அதே வேலையைச் செய்கின்றன. ஆளும் வர்க்கம் தம்மை வலிமையுறக் கட்டிக் கொள்வதற்கான வழிமுறைகளை இச்சிறு கலகங்கள் ஏற்படுத்துகின்றன. ஆளும் வர்க்கம் தன் படைக் கருவிகளை மேம்படுத்திக் கொள்வதற்குக் கோடிக் கோடியாய் செலவழித்துக் கொள்ள இக்கலகங்கள் வழி செய்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இவ்வகையான ஆயத்தங்களைக் கண்டு போராட்டங்கள் மடிந்துவிடுவதில்லை.

நடுவில் நானொரு தடவை கலகங்களும், போராட்டங்களும் வன்முறை சார்ந்ததாயிருக்க வேண்டுமென்று சொல்லவில்லையென்பதை சொல்லிக் கொள்கிறேன்.

மீண்டு விசயத்துக்கு வருவோம். ஆக, வரலாற்றுக் காலந்தொட்டே பாதுகாப்பின் மெல்லிளஞ்சூட்டில் இருக்கும் அதிகார வர்க்கத்துக்குப் போராட்டம் என்பதும் கலகம் என்பதும் மனிதனின் தேடல் என்பதும், ஒடுக்கப் பட்டவனின் போராட்டம் என்பதும் கண்டிக்கத்தக்கது. அல்லது அத்தகைய தேடல்கள், விசாரணைகள் முதலியவை தாம் (அதிகாரம்) கண்டுபிடித்த மதம், பக்தி இத்யாதி வாயிலாகத்தான் இருக்க வேண்டுமென விரும்பியது. இதற்கான முன்னுதாரணங்களை எடுத்து வைத்தது. நந்தனைக் காட்டும்போது அவனது பக்தியைக் கொண்டாடியது. நீயும் இவனைப் போல் ஆண்டைக்குச் சேவை செய், அல்லது ஆண்டவனின் காலிலே விழு என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. கீழ்ப்படிதலும், பக்தியுமே உன்னை விடுவிக்கும் என்று சொல்லித் தந்தது. கூடவே ஆத்ம விசாரணைக்கு, விடுதலைக்கு என்று மக்கள் உண்டாக்குகின்ற இலக்கியம், இசை, நுண்கலைகள் இவற்றையும் மேன்மைப் படுத்துவதாய்ச் சொல்லிக் கையகப்படுத்திகொண்டு அவற்றை வீரியமிழக்கச் செய்தது; மேலும் உழைக்கும் மக்களை அவற்றினின்று அன்னியப்படுத்தியது. பக்தியிலும் கீழ்ப்படிதலிலும் ஆண்டைகளின் அடியில் வீழ்ந்திருந்த மனிதன் அப்படியேதான் செத்துப் போனான். அவனது சந்ததிகளும் அப்படியேதான் மரிக்கின்றன.

இதிலிருந்து மீளமுடியாதவாறு இறுக்கமான படிநிலை சாதிக்கட்டுமானங்களைக் கொண்ட நிலவுடைமைச் சமூகம் மக்களைத் தொடர்ந்து சுரண்டுகிறது. இந்தச் சமூக அமைப்பைத் தற்காத்துகொள்ள தர்மம், தயை, புண்ணியம், புனிதம், பாவம், புகழ், கற்பு போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு "பெருங்கதையாடலை" (நன்றி: தங்கமணி) இயற்றிக் கற்பிக்கிறது. அதற்காக, குடும்பம், கோவில், அரசு போன்ற நிறுவனங்களைத் தன் விருப்பப்படிக் கட்டமைத்து எப்பாடுபட்டேனும் அதைக் காப்பாற்றச் செய்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் இவைகளின் ஊடே ஊற்றெடுக்கும் வன்முறையைக் கண்டுகொள்ளலாம். குடும்பத்தைக் காப்பாற்ற விரும்பும், இக்கதையாடலை நம்பி வாழும் ஒருவனே பிறன் மனைவியை, மகளைக் கற்பழிக்கிறான், இன்னொருவன் மகனைக் கொல்கிறான்; கடவுளையும் கோயிலையும் முன்னிருத்தும் அவனே இன்னொரு கோயிலை இடிக்கவும் செய்கிறான்; இவர்களின் அரசுகளே வன்முறையின் நிலைக்களன்களாகின்றன. ஆனால் முரணாக, எல்லாக் குடும்பங்களும், ஒழுக்கத்தையும், பெண்களுக்கு மரியாதையையும் போதிக்கின்றன; எல்லாக் கோயில்களும் அன்பையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் போதிக்கின்றன; எல்லா அரசுகளும் மக்களின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகின்றன.

இதை உணர்ந்து கொள்ள வெகு காலம் பிடிக்கிறது. உணர்ந்து வெளிப்படுத்தினால் மறுபுறத்திலே சீற்றம் கொப்பளிக்கிறது. இச்சீற்றங்களையும் தாண்டி, இவற்றிலிருந்தே சக்தியைப் பெற்றபடி ஒடுக்கப்பட்டவர்கள் மாறுகிறார்கள்; தனிமனித விடுதலையை, தன்மானத்தை, சகலரின் சுதந்திரத்தை முன்வைத்து மாற்றுக் கலாச்சாரங்களையும், மாற்று வாழ்க்கை முறைகளையும் சிந்திக்கும், விவாதிக்கும் குழுக்கள் அரும்பத் துவங்கியிருக்கின்றன. அவைகளுக்கிடையேயான செய்தி/அனுபவப் பரிமாற்றம் முன்னெப்போதையும்விட இப்போது சாத்தியமாகியிருகின்றது.
இதனால், ஒடுக்குமுறையைக் கட்டிவைக்கும் சகல பழங்கதையாடல்களும் ஒன்று மற்றொன்றைப் பாதிக்கிறது, முரண்படுத்துகிறது, நகைப்புக்குரியதாக்குகிறது. இந்நகைப்பினூடே விடுதலையின் வேர் ஆழப்பரவுகிறது. அதற்காக ஒடுக்கு முறை ஓய்ந்துவிட்டது என்ற பொருளல்ல, அது போலித் தேசியம், போலிக் கலை, போலி விளையாட்டு போன்ற வசீகர வலைகளை வீசவே செய்கிறது. அதற்குப் பலியாகும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் சுதந்திர வானில் பறக்கவிரும்புவோருக்கு ஒரு பரந்த வானமும், வெளியேற சிறிய சன்னலும் இப்போது கண்ணுக்குத் தெரிகின்றன. இறகுகளை விரித்துப் பறப்பதோ, அல்லது, கரப்பான் பூச்சியாய் இருண்ட இடுக்குகளுக்குள் ஒண்டிக் கொள்வதோ நம்மிடந்தானிருக்கிறது.

பின் குறிப்பு: இதை உங்களூர்க் குடியானவருக்காகவோ, தலித்துக்காகவோ, பெண்ணுக்காகவோ, ஈழத் தமிழருக்காகவோ, அல்லது வேறு எவ்வகையிலேனும் வரலாற்று ரீதியில் ஒடுக்கப் பட்டவருக்காகவோ எழுதப்பட்டதாய்ப் பாவித்துக் கொள்ளலாம்.

சந்தையிலே

வழிக்குளத்துத்
தண்ணீரை மொண்டு
மூச்சு முட்டமுட்ட வயிறு நிரப்பி
குளிப்பாட்டி முடி வாரி
பெருவயிற்றுச் செழுமைகாட்டி
நரித்தரகு கைப்பிடிக்குள்
விரல்நுனி பேரமெல்லாம்
எங்களூர்வாரச் சந்தை
ஆட்டுக்குமட்டுமென்றிருந்தேன்
தேசியத்துக்கும்மதுதான்,
என் தேசப் பற்றுக்கும்மதுதான்.
சத்தில்லையடா நீர்வீங்கலென்றால்
உண்மை காணார்,
வயிறு தடவிப் பாரார்
ஆட்டுத் துரோகியென்பார்
சோழக்கொடிச் சிலுவையைத்
தோளிலே சாத்துவார்.
ஆட்டுக்குத் தழை பேணார்
சுரப்புமணம்போக நீராட்டார்
மேய்ப்பனுக்குஞ் சொல்லாரவனுக்கு
முழத்துண்டும் நீட்டார்
கண்மூடி மேய்க்கச் சொல்வாரவரும்
தடியெடுத்து மேய்ப்பார்
கையும் மெய்யும் பொத்தி
இயல்பிதுவென்று நீர்முட்டுவயிற்றுக்கு
மக்களைப் பழக்குவார்.

தனித்தனியாய்க் கூட்டாய்
வில்லோடுஞ் சொல்லோடும்
யாரெதையாண்டாலும்
எதைக் கட்டிவைத்தாலும்
இறுக்கினமூட்டையின் இடுக்கிலே
கட்டுத்தானியம் பிதுங்கியுதிரும்.
வேண்டுவதெல்லாம் விழித்துப்பார்
நிஜக் குழந்தையாய் ஒருமுறை
எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்
பரிசீலி, மறுபடி மறுபடி.
அவிழ்த்துக்கட்டு,
தளர்த்திக் கொள்
சாக்குப் பைகளைத் தைத்துக் கொள்
இல்லையேல் மாற்று.
என்பை பொன்பை உன்பையோட்டையென்றால்,
நாட்டு வணக்கப் பாடல்களை
நானும் மனனஞ்செய்தேன்
என்னிடஞ் சொல்லாதே.

தனியனைத் தனியளை
மதிக்குநாடு காக்கும்படைக்குச்
சிக்குமண்டைப் பிரித்து
உள்ளிறுகிப் போன கட்டுமானமுடைத்து
வலியாய்ப்பிரசவித்த வழியேதுமிருந்தால்
கொண்டுவை கேட்டுக் கொள்வேன்
இல்லாதாகின் பொத்திக் கொண்டு போ.

நண்பர் சுந்தரராஜனுக்கு

அன்பு சுந்தரராஜன்,
ஒரு இந்தியனாய் நான் எழுத முற்பட்டதெல்லாம் எப்படி என் நாட்டு இராணுவம் ஒரு அண்டை நாட்டிலே புகுந்து எம் தமிழ் இன மக்களைச் சீரழித்திருக்கிறது என்பதைத்தான். இதை எழுதியதன் மூலம் நான் புலிகளின் வன்முறைக் கொடியைத் தூக்கிப் பிடிப்பதாக நீங்கள் கருதுவது ஒரு நீட்சியே. என் பதிவிலிருக்கும் ஒரு கீழ்நிலை அவில்தார் ஒரு சீரழிவைச் செய்தாரென்றால் அவருக்குச் சொல்லித் தரப்பட்டது என்ன, சொல்லித் தரப்படாதது என்ன, இதற்கு இராணுவம் தன்னைச் சீர் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கையும், இலங்கையிலே நிகழ்ந்தவை அனைத்துலகப் பொதுமக்களின் பரந்த பார்வைக்கு வர வேண்டும் என்பதையும் அடித்தளமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன்.

அபு க்ரெய்பிலே சிறைச்சாலைக்குள் நடக்கும் கொடுமையைக் கண்டு ஐயகோ என்று கதறும் நாம், வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் இராணுவ 'ஒழுக்கத்தைக்' கண்டும் காணாமல் விடுவதா? இதோ இந்து ராம் சொல்கிறார்,"இந்தியா 80களின் தவற்றை இனிச் செய்யாது", புலிகளும்தான் சொல்கிறார்கள் "அது ஒரு பழைய தவறு". எல்லோரும் தவறிழைக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எது சொல்லப் படுகிறது, எப்படிச் சொல்லப் படுகிறது, அதன் பின் விளைவுகள் என்ன என்பதைத்தான் நான் கேட்கிறேன். ராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றித் தெரிந்த நமக்கு இலங்கையில் நம் படையினரால் நடந்த பாதிப்புகள் தெரியுமா? இதைத்தான் வெளிக் கொணர இருக்கிறார்கள், இதைத்தான் எழுதியிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் அபிமானிகளெல்லாம் புலிகளின் அபிமானிகள் என்று கூறப்படுவதும், தேசப்பற்றின் காரணமாக இந்திய இராணுவம் எது செய்தாலும் சரி என்று நிற்பதும் சரியில்லை. இப்போது மணிப்பூரிலே நடப்பவற்றைப் பார்த்தால் எந்தவொரு சராசரி மனிதனுக்கும் இந்திய இராணுவத்தின் மேல் அவநம்பிக்கை வரும். இந்திய ஒருமைப்பாட்டின் மீது கேள்வி எழும். கி.பி. 33லிருந்து, காக்கப்பட்ட, ஒரு அழகிய வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த மணிப்பூர் இப்போது சுதந்திர இந்தியாவில் பெறுவது என்ன? சீரழிவு. அங்கே இராணுவத்திற்குக் கேள்வி கேட்பாரின்றி எவ்விடத்தையும் சோதனையிடவும், யாரையும் எங்கேயும் கண்டதும் சுடவும் அனுமதி. விளைவு? தொடங்கிய நாளிலிருந்து மனோரமா தேவி வரை வன்முறைகளும், கொன்றொழிப்புகளும், பாலியல் கொடூரங்களும். இது மாதிரி ஏதும் நடக்கவில்லையென்று நேற்றைய கேபினட் கூட்டத்தில் இராணுவத்தால் சொல்ல முடியவில்லை. ஏன்? நடந்திருக்கிறது, நடத்தியிருக்கிறார்கள், அது கீழிருந்து மேல் வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இது எதனால் என்றால் தீவிரவாதிகள் அங்கே ஏகே 47 ஐத் தூக்கிக் கொண்டு மணிப்பூரி நடனமாடுகிறார்கள், போதைப் பொருள் கடத்துகிறார்கள் என்று தேசாபிமானம் சொல்லும். உண்மை அதிலிருந்து மாறுபட்டது என்று உள்மனதுக்கும், இராணுவத்துக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் தெரியும். தேசிய நீரோட்டத்தில் இந்த விடயங்களெல்லாம் அடித்துக் கொண்டு போகப் படுகின்றன.

இதில் பிறழ்ந்து போயிருப்பது என்ன? மனித உரிமையை மதித்தல். இது இல்லாமையினாலேயே இலங்கையில் அந்த அவில்தார் அப்படி நடந்தார், எண்ணற்ற வீரர்களும் ஆண்மையற்ற செயல்களைச் செய்தனர். இதனைத் தனி மனிதப் பாலியல் வாழ்வு சார்ந்த விடயமாக ஒதுக்க முடியாது. ஒரு போர்க்களத்தில், அமைதியை நிலைநாட்ட வந்த இடத்தில் ஒரு இராணுவ வீரன் பாலியல் ஆட்டம் போட எது காரணம், அதற்குப் பின்னணியிலிருந்த தூண்டுகோல்/கண்டுகொள்ளாமை, இராணுவத்தில் கற்பிக்கப்படும் மனித நேயம், தேசிய மாணவர் படை மாணவர்களுக்குச் சொல்லப்படும் கதைகள் ("நாங்கள்லாம் இராணுவத்துல இப்படியெல்லாம் அனுபவிச்சோம், நீங்களும் இராணுவத்துல சேர்ந்தா இதையெல்லாம் அனுபவிக்கலாம்"னு ஒரு முன் மாதிரியா இருந்த திறம்!), இதையெல்லாம் ஆராய வேண்டும். இதற்கெல்லாம் பரிகாரம் கிடைக்குமாவென்று தெரியாது. ஆனாலும் நடந்ததை உலகறிய வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலையை, புலிகளின் வன்முறைகளைப் பேசும் நாம், நம் பக்கத்துத் தவறுகளையும் மறுதட்டில் வைத்தே எடை போட வேண்டும். எல்லை என்பதை நாம் உண்மையின் வாசலுக்கு வெகு முன்னரேயே வைத்து விட்டு எல்லையை மீறக் கூடாது என்று கூவக் கூடாது. உண்மைகள் வரட்டும். தேசாபிமானத்தின் குறுக்கீடின்றி எல்லாப் பக்கத்து உண்மைகளும் வரட்டும். அதுதான் வரலாறு, மொத்த முழுப் பார்வை.
மற்றபடிக்குச் சில சொந்தச் சொல்லாடல்கள் நம் நட்பைக் காயப்படுத்தவில்லையென்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்
சுந்தரவடிவேல்

நம்பற்குரியர் அவ்வீரர்?!



அப்போது நான் கல்லூரியில் இளங்கலைப் படிப்பிலிருந்தேன். தேசிய மாணவர் படை முகாமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு இந்திய இராணுவத்திலிருக்கும் வீரர்களால் பல்விதமான மைதானப் பயிற்சிகளோடு வகுப்பறைகளிலும் பாடங்கள் நடத்தப்படும்.

இந்த வகுப்புக்கு ஒரு நாள் ஒரு அவில்தார் வந்தார். கேரளத்துக்காரர். இவர் அன்றைக்குச் சொல்லித்தந்திருக்க வேண்டியது என்னவென்று எனக்கு நினைப்பில்லை. ஆனால் அப்போதுதான் இலங்கையிலிருந்து திரும்பி வந்திருந்தாராம். இந்திய அமைதிப் படையிலே இருந்தாராம். இவர், நம் இராணுவம் எதற்காகப் போனது என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையைச் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ எங்களுக்குச் சொல்லவில்லை. மாறாக அவர் சொன்னதெல்லாம் தான் எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றார் என்பதைக் கதையாகச் சொன்னார்.

இப்போது அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்ததற்காக வெட்கப் படுகிறேன். ஆனால் அன்றைக்கு எனக்கோ என்னையொத்த மாணவர் படையினருக்கோ அது ஒரு அவில்தாரின் வெற்றி பெற்ற காமக் கதை. வன்புணர்ச்சியாக இல்லாத போதும் இது ஒரு கீழ்த்தரமான பாலியல் ஒடுக்குமுறை. இது மிக மிக நாகரீகமான ஒரு உதாரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள். இவை இரண்டும் ஈழத்தில் ஒரே ஒரு இடத்தில், வல்வெட்டித்துறையில், இரண்டு நாட்களில் இந்தியப் படையினரால் நிகழ்த்தப்பட்ட வன் செயல்கள். இது குஜராத் மதவெறிக் குண்டர்களின் கலவரத்திலிருந்தோ அல்லது சிங்களக் காடையரின் இனவெறியிலிருந்தோ சற்றும் குறையாமலிருப்பதை உணர்வீர்கள். இதை ஒரு இராணுவம் நிகழ்த்தியிருப்பது அசிங்கம். அதைவிட அசிங்கம் இது நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பது. ஊரடங்கை அமல்படுத்திவிட்டு 63 பொதுமக்களை வெட்டியும் எரித்தும் படுக்க வைத்து முதுகிலே சுட்டும், பாலியல் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டும், நூலகங்களைக் கொளுத்தியும் ஒரு இராணுவம் "அமைதிகாக்கும் பணி" புரிந்ததாம். இது ஒரே ஒரு உதாரணந்தான். இந்தியப் படையின் நடவடிக்கைகளை ஊர் ஊராக ஒவ்வொருவரும் பதிய ஆரம்பித்தார்களென்றால், வங்காலைக் கிராமத்தில் சன்னல், கதவிடுக்குகள் வழியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது போகிற போக்கில் தெருக்காரக் குடியானவனைக் குத்திக் குடலையுருவிப் போட்டுவிட்டுப் போன வீரக் கதைகளும் இன்னும் எத்தனையோவெல்லாமோ வந்து சேரும்.

இத்தகைய நிகழ்வுகளை, பாதிப்புகளிலிருந்து எழுந்த கதைகளை, கட்டுரைகளை இப்போது சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான தகவலையும் கீழே தந்திருக்கிறேன். இலங்கை இனப் போராட்டம் என்றவுடனேயே மாலை போட்டு ராஜீவ்காந்தி போட்டோவைத் தூக்கிக் கொண்டு வந்து ஊதுபத்தியைக் கொளுத்தி வாழைப்பழத்தின் மேல் குத்தி வைத்து விட்டுப் போராட்டத்தை இழிவு படுத்தும் நம் போக்கு மாற வேண்டும். நமது இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் நிகழ்த்திய அசிங்கங்கள் அம்பலப் படுத்தப் பட வேண்டும்.

1. ஈழநாதனின் பதிவு
2. கரிகாலனின் பதிவு (நான் மேலே இட்டிருக்கும் படத்தை இவரது பதிவிலிருந்தே எடுத்தேன்).
3. கட்டுரைகள் மற்றும் படைப்புகளைக் கேட்டிருக்கும் "ஒல்காரின்" வேண்டுகோள் (சந்திரவதனா வலைப்பூ உரையாடற்பெட்டியில் இட்டிருந்தார்).

இந்திய மருந்துகள் தள்ளாடுகின்றனவா?

எயிட்ஸ் நோய்க்கு நம் நாட்டு சிப்லாவும், ரான்பாக்ஸியும் மருந்து தயாரித்தன. குறைந்த விலையில் தரப் போகிறார்கள் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லா மருந்துகளையும் உலகச் சுகாதார அமைப்பு (WHO) தரக்கட்டுப்பாடு செய்தபின் பரிந்துரைத்து ஒரு பட்டியல் வெளியிடும். அந்தப் பட்டியலில் இருக்கும் மருந்துகளையே வாங்கிச் சுகாதார நிறுவனங்கள் நோயாளிகளுக்கு வழங்கும். இந்தப் பட்டியலில் ஒரு மருந்து இடம் பெறுவதற்கான விதிமுறைகள் கெடுபிடியானவை. மே மாதத்தில் இவ்விதிகள் மேலும் இறுக்கப் பட்டன. இதன் விளைவாக சிப்லாவின் எயிட்ஸ் மருந்து பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது. இப்போது ரான்பாக்ஸியின் மூன்று எயிட்ஸ் மருந்துகள் நீக்கப் பட்டுள்ளன. முறையான ஆய்வக முறைகள், முறையான மருத்துவ முறைகள், வீரியக் குறைவு ஆகிய காரணங்களால் இம்மருந்துகள் நீக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிறுவனங்கள் தங்கள் மருந்துகளின் தரத்தை உயர்த்தி மீண்டும் பட்டியலில் இடம் பெற முயற்சிக்கலாம் என்று நம்பப் படுகிறது. எயிட்ஸ் உலகில் பரபரப்பாய் எழுந்த நம் நிறுவனங்கள் இப்படித் தள்ளாடுவது நம் தரக்கட்டுப்பாட்டு முறைகளை மீளாய்வு செய்ய வலியுறுத்துகிறது.

செய்திக்கு ஆதாரம்

நமனை விரட்ட

"நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்காவிலே"ன்னு ஒரு பாட்டு கேட்டிருக்கீங்களா? நாகூர் அனீபா பாடினது. இப்ப நமனை விரட்ட அல்லது அவரது எருமையை இன்னும் கொஞ்சம் தாமதமா வரச் சொல்ல ஒரு மருந்து வந்திருக்காம். இந்தச் சேதி அரசல் புரசலா ஏற்கெனவே தெரிஞ்சதுதான். ஆனாலும் இப்போ ஒரு சோதனையில இன்னும் உறுதிப் படுத்தியிருக்காங்க. என்னன்னு பாக்கலாமா?

சிவப்பு ஒயின் மற்றும் திராட்சைப் பழங்களில் காணப்படும் ரெஸ்வெரட்ரால் ("ரெஸ் அப்படின்னு ஒரு பொண்ணு நமனை வெரட்டுறாள்" ன்னு நினைச்சுக்கங்க! resveratrol) எனும் ஒரு வேதிப் பொருள்தான் அது. மூப்பியல் துறையில ஈடுபாடு கொண்ட மூனு பேர், Brown, Harvard, Connecticut ஆகிய மூனு பல்கலைக்கழகங்கள்ல இருந்து, இதை மூனு விதமான உயிரினங்கள்ல பரிசோதிச்சுச் சொல்லியிருக்காங்க.

போன ஜூலை மாசம் நம்ம ப்ரௌன் காரர், பேரு மார்க், ஹார்வர்டுக்குப் போனாராம். அங்க இருந்த நண்பர் டேவிட்டோட ஆய்வுக்கூடத்துக்குப் போயிருக்கார். ரெண்டு பேருக்குமே இந்த மூப்பு எப்படிடா வருதுன்னு ஒரே மண்டைக் குடைச்சல். டேவிட் ஈஸ்ட்லயும் (yeast), மார்க் பழ ஈக்கள்லயும் (fruit flies, Drosophila melanogaster) ஆராய்ச்சி செய்றாங்க. டேவிட் கொஞ்சூண்டு திரவத்தைக் குடுத்து இது பாதுகாப்பான சரக்குதான், உன்னோட ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திப் பாருன்னு சொல்லி குடுத்தார்.
மார்க் உற்சாகத்தோட அதை வாங்கிட்டு வந்து சோளத்தோட காய்ச்சி அவரோட பழ ஈக்களைச் சாப்பிடச் சொன்னாராம். அதுகளும் சாப்பிட்டுட்டு 30% அதிக நாட்கள் வாழ்ந்துச்சாம். அதாவது 43 நாட்கள்ல சாகுற பூச்சிகள் 51 நாட்கள் வரைக்கும் பறந்து திரிஞ்சுச்சாம். மார்க் டேவிட்டுக்குக் குடுத்தது ரெஸ்வெரட்ரால்தான்.

இதை இன்னும் நல்லா பரிசோதிக்க ஸ்டீபன்னு கனெக்டிகட் பல்கலைக் கழகத்துக்காரரையும் சேர்த்துக்கிட்டாங்க. இவரு நுண்புழுக்கள்ல (nematodeக்குத் தமிழ்ல என்ன?) ஆராய்ச்சி செய்றவர். மூனு பேருமா சேர்ந்து ரெஸ்வெரட்ரால் கூட அதே மாதிரி இன்னொரு வேதிப்பொருளான பிஸெட்டின் (fisetin) அப்படிங்கறதையும் எடுத்துக்கிட்டாங்க. இதெல்லாம் சிர்ட்டூயின் (sirtuin) அப்படிங்கற பெரிய குடும்பத்துல வருது. இந்த மூலக்கூறுகள் எல்லாமே அந்த மூனு உயிரிகள்லயும் மூப்பைத் தள்ளிப் போட்டனவாம்.

எப்படி? இப்போ இன்னொரு சமாச்சாரம் உள்ளே நுழையப் போகுது. அதாவது உணவுக் கட்டுப்பாடு. உணவுக் கட்டுப்பாட்டுல இருக்கவங்களுக்கு மூப்பு சீக்கிரம் வராதுங்கறது ஏற்கெனவே தெரிஞ்சிருக்கு. இது எப்படி நடக்குதுன்னு தெளிவாத் தெரியலை. ஆனா மார்க் என்ன சொல்றாருன்னா, "உயிர் வாழ்க்கையின் முக்கியமான பணியே இனப்பெருக்கம் செய்றது. உணவுக்கட்டுப்பாடு/பசி போன்ற நிலைமைகள்ல உடம்பு என்ன நினைக்குதுன்னா இப்போ பற்றாக்குறையில இருக்கோம், அதனால இனப்பெருக்கத்துக்கு இன்னும் நாம தயாராகலைன்னு நெனச்சுக்கிட்டு, எதிர்ப்புத்தன்மை/வாழுந்தன்மையை அதிகப்படுத்திக்குது. தகுந்த காலம் கனியும் வரைக்கும் காத்திருக்குது, அதனால ஆயுள் நீளுது. இந்த நேரத்தில சில தாக்குதல்களும் அவசியந்தான், அப்போதான் அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சி அடையும்" அப்படிங்கறார். ஆக உணவுக்கட்டுப்பாட்டினால் மூப்பினைத் தள்ளி வைக்கலாம். இந்த ஒரு விதியின் மேலதான் ரெஸ்வெரட்ரால் வேலை செய்யிறதா இந்த மூனு பேரும் நம்புறாங்க. அதாவது உணவுக் கட்டுப்பாடு எப்படி வேலை செய்யுதோ அதே மாதிரிதான் ரெஸ்வெரட்ராலும் வேலை செஞ்சு ஆயுளை நீட்டிக்குதாம். ஆனா என்ன புதிரா இருக்குன்னா, கட்டுப்பாடான உணவோட இந்த சரக்கைக் குடுத்தா வாழ்க்கை நீளுவதில்லையாம். அதே மாதிரி ரெஸ்வெரட்ரால் சாப்பிட்டா இனப்பெருக்கமும் பாதிப்படையவில்லையாம் (நல்லதுதானே!). மேல் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இந்த இளமைக் குளிகை கடையில் கிடைக்க இன்னும் சில ஆண்டுகளாகலாம். ஏனென்றால் சிர்ட்டூயின்கள் தற்போதைய வேதி வடிவில் ரத்தத்தில் நிலையாய் இருப்பதில்லையாம். இதை நிலைப்படுத்திய பிறகு விற்பார்கள் என நம்பலாம். இத்தகைய மருந்துகள் இதய மற்றும் சர்க்கரை நோய்களுக்கும் பயன்படுத்தப் படலாம் எனத் தெரிகிறது. ஆக, இன்னும் கொஞ்ச நாட்கள்ல நாம எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து பாடலாம்:
காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்!
(சுப்ரமணிய பாரதி)

செய்திக்கு ஆதாரம்

இத்தனை நாட்களாய்

இங்கும் அங்குமாகக் கொஞ்சம் சுற்றினோம். சுற்றும்போது தொலைந்து போனோம். மீண்டோம். கடலும் மலையும் கண்டோம். சோளக் கொல்லை, மாடுகள் கூட அதிசயமாய்ப் போயின. அவ்வப்போது நடப்பிலிருந்து கழன்று அமெரிக்காவுக்கும் ஊருக்குமிடையே பறந்தது ஒரு பறவை. ஒரு பட்டம் விட்டோம், கொஞ்சம் பறப்பதும் தலை குப்புறப் பாய்வதுமாய்ப் போய்விட்டது.

உலகம் ஒரு புறமாகச் சுற்றிக் கொண்டுதானிருந்தது. ஒடுக்குமுறைகள் அதே விகிதத்தில் குறைவின்றி நடந்தபடிதானிருந்தன. செயற்கைக் கருத்தரிப்பைப் போலவே காவிரித்தாயும் செயற்கையாய்ப் பெருக்கெடுத்தாள். மக்கள் ஆனந்தமாக ஆடிப் பெருக்கைக் கொண்டாடினார்கள். நாளை அணை மூடப்பட்டு வற்றப் போகும் காவிரித்தாயிடம் தாலிப் பிச்சை கேட்டார்கள், கன்னிகளும் காளையரும் கல்யாணப் பிச்சை கேட்டார்கள். பள்ளிகொண்ட சீரங்கத்து ரங்கநாதரும் திருப்பள்ளியெழுந்து அமுது செய்து, அம்மா மண்டபத்துக்குப் போய் காவிரித்தாயைப் பார்த்துத் தாலி, பூ, புடவையெல்லாம் கொடுத்து, ஆண்டாளையும் கண்டுவிட்டு வந்தாராம். மதத்துக்குத் திறந்த அணை மதகுகள் வயல்களுக்கென்றபோது மூடிக் கொண்டன. இத்தோடு நெஞ்சை அலைக்கழிக்கும் ஏழ்மை சார் தற்கொலைகள், திருட்டுக்கள், பெங்களூரிலே மந்திரம் ஓதிப் பயத்துடனும் பக்தியுடனும் அவுட் சோர்சிங் கிளை திறந்த ஜெர்மானிய SAP, பெண்ணை "இயற்கை"யென்று உடற்காரணங்களைக் காட்டித் தளையினை இறுக்கும் போப், வ.உ.சி வந்தாலும் இனி கப்பல் விட முடியாது, ஒற்றை வரிச் செய்திகளோடு கொல்லப் பட்ட பீகார் சிறுபான்மையினர், பாஜகவில் இந்துத்வா பூரணத்தை உள்ளே வைத்து வேக வைத்த தேசிய கொளுக்கட்டை, இவற்றோடு உலகம் சுற்றிக் கொண்டேதானிருந்தது. இயல்பு இதுதானென்று அடக்குமுறைகளுக்கு முதுகு காட்டிக் கொண்டிருக்கும் வரை நம் உலகம் இப்படியேதான் சுற்றும்.