என் கதையும், சுரைக்காயும்

வள்ளுவர் திடல், சின்னதுக்கும் பெருசுக்கும் இடைப்பட்டுக் கிடக்கும் எங்க ஊரில் இருக்கும் ஒரு பன்னோக்குத் திடல். என் பிள்ளைப் பிராயத்தில் நான் காணக்கிடைத்த ஒரே திடல். வள்ளுவர் திடல்ல நிறைய நடக்கும். புதன் கிழமைகள்ல வாரச்சந்தை. சில சாயங்கால வேளைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டம். ஏ ராஜீவ் காந்தியே, இதற்கு பதில் கூற முடியுமா உன்னால் என்று ஒரு தோழர் முழங்கிக் கொண்டிருப்பார். ராஜீவ் காந்தி யார், அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார் என்ற கவலை ஏதுமின்றிப் பக்கத்திலிருக்கும் கடைவீதியிலிருந்து தன்பாட்டுக்குச் சாமான் வாங்கிக்கொண்டு போகும் கூட்டம். அங்குதான் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில் ஒரு சர்க்கஸும் நடந்தது. ஒருத்தி காலால் கிண்ணங்களைத் தூக்கிப் போட்டுத் தலையில் அடுக்கினது நினைப்பிலிருக்கிறது. கோயில் திருவிழாக்களின்போதும் தமிழ்ப் புத்தாண்டின்போதும் அங்குதான் இரவிரவாக நாடகங்கள் புழுதி கிளப்பும். "13ம் தேதி இரவு சரியாக 10 மணியளவில் வள்ளுவர் திடலில் அமைந்திருக்கும் மின்னொளி கலையரங்கில் காரைக்குடி தங்கசாமி வேலன் வேடன் விருத்தனாகத் தோன்றி நடிக்கும் வள்ளித்திருமணம்" என்று போஸ்டர்கள் சொல்லும். அப்பா இரண்டு மணிக்கு எழுப்பிக் கூட்டிக் கொண்டு போய் முருகனை மட்டும் காட்டிவிட்டு பபூன் (நகைச்சுவைக் கலைஞர்களுக்கு நாடக உலகில் இப்படி ஒரு பெயர்) வந்தவுடன் அவர் சொல்லும் ஏ ஜோக்குகளிலிருந்து காப்பாற்ற என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார். பிற்காலங்களில் இதே நாடகங்களை அந்த ஜோக்குகளுக்காகவே பார்த்ததும் வேலன் வந்தவுடன் எந்திரிங்கடா என்று கிளம்பியதும் வேறு கதை.

நான் சொல்ல நினைத்தது வள்ளுவர் திடலைப் பற்றித்தான். ஆனால் நான் சொல்லிக் கொண்டிருப்பது வள்ளுவர் திடலுக்கும் எனக்குமான சம்பந்தத்தை. கவனித்தால் இந்தப் பிறழ்வு தெரியும். இதுதான் அன்றைக்குத் தங்கமணி பாலாஜிக்குச் சொன்ன மனதின் குறுக்கீடா? எழுதும்போது ஒரு விஷயத்தை மட்டுமே ஒரு நேரத்தில் சொல்லவேண்டும். இது சரியா? சரி என்றால் நான் முதலில் வள்ளுவர் திடலைப் பற்றியும் அதன் பின்னர் 'நான்' எப்படி வள்ளுவர் திடலுக்குள் வருகிறது என்பது பற்றியும் எழுதுகிறேன்.

பங்களா குளம், புள்ளையார் கோயில், ஒரு அரச மரம் இவற்றைப் புறத்தே கொண்டும், ஆஸ்பத்திரி, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் இவற்றை கீழ்ப் புறத்திலும் காந்தி பூங்காவை மேற்புறத்திலும் கொண்டிருக்கும் அந்தத் தகரக் கூறை வேய்ந்த, கிட்டத்தட்ட ஆறடி உயர மேடைதான் வள்ளுவர் திடல். இதன் பிறப்பு எப்போதென்று பலருக்கும் தெரியாது. மேடைக்கு முன்னால் இருபதடி தள்ளி ஒரு பத்து கொடிக்கம்பங்கள் இருக்கும். அவற்றில் அந்த நாளைய கட்சிகள் பலவற்றின் கொடிகள், காற்றடிக்கும்போது பறக்கும், அரசமரத்தடிகூடப் புழுங்கும் மதியங்களில் அசையாமல் கிடக்கும். இவற்றில் பல கொடிகள் கிழிந்தும், மங்கியும் கிடந்தாலும் இவையும் காற்றுக்குக் கட்டுப்பட்டே இருந்தன. அந்தத் திடல் பல நிகழ்வுகளின் களமாயிருந்திருக்கிறது. சுற்றியிருக்கும் சிற்றூர்களிலேயே சற்றுப் பெரியது என்பதால் புதன் கிழமை வாரச்சந்தை கூடும். வைக்கோல் வண்டிகள், மாடு ஆடுகள், பானைச் சட்டிகள், மண் அடுப்புகள், பொறி உருண்டை, போண்டா, புதுக்கோட்டை வல்லார சஞ்சீவி லேகியம், விதைகள் இதெல்லாம் மனுசத் தலைகளுக்கு மத்தியில் நின்றுகொண்டு சந்தையைப் பார்க்கும். அவற்றின் பயணத்தில் கரம்பக்குடி வள்ளுவர் திடல் ஒரு புது வாழ்க்கைக்கான துவக்கக் கோடு. சந்தையின் கைமாற்றுப் படலத்தில் வள்ளுவர்திடல் ஒரு சாட்சி. அது காலகாலமாய் நடந்த கொடுக்கல் வாங்கல்களையும் வாய்த் தகராறுகளையும் மெளனமாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கும். வள்ளுவர் திடல் அந்த புதன் கிழமையைத் தவிர பெரும்பாலான பகற்பொழுதுகளில் மெளனமாய்த்தானிருக்கும். விடுபட்ட சில ஆத்மாக்களுக்குப் பகல்நேரப் புகலிடமாய்த் துண்டை விரித்துத் தூங்கவோ அல்லது தாயம் உருட்டவோ ஒரு நிழலாயிருக்கும். இந்த மேடையில் புகழ் பெற்றவர்கள், பெறாதவர்கள், பெறத்துடித்தவர்கள் எனப் பலரும் தோன்றியிருக்கிறார்கள். வள்ளித்திருமணத்திலிருந்து, போன திருவிழாவுக்குத் திரையிட்ட சினிமாப்படம் வரைக்கும் தன்னிடம் எத்தனையோ கதைகளிருந்தும், தன் அஸ்திவாரம் அரிக்கப் படுவதும், செங்கற்பல் தெரிவதைப் பற்றிய உணர்வு ஏதுமின்றியும் அப்படியே நின்று கொண்டிருக்கிறது.

இப்படியும் எழுதலாம். அல்லது நடையைக் கொஞ்சம் மாத்தி இப்படியும் எழுதலாம்.

பொதங் கெளம பொளுது விடிஞ்சாலே சத்தம் தொடங்கிரும். புதுக்கோட்டை வல்லார சஞ்சீவி லேகியக் காரரின் மைக் செட்டு சத்தம். வள்ளுவர் தெடல்ல இருக்க வாதாமடக்கி மரத்துல குழாய் ஸ்பீக்கரக் கட்டிருவாரு. ஒரு கட்டிலப் போட்டு அதுல நாலு டப்பாவும் இன்னம் என்னென்னமோவும் வச்சுக்கிட்டு, ஒரு நாக்காலி போட்டு உக்காந்துகிட்டு மைக்குல பேசுவாரு "சந்தக்கி வந்தீங்களா, சாமான வாங்குனீங்களா அதோட சேத்து வாங்கிட்டுப் போங்கன்னே வல்லார லேகியம். டப்பா ரெண்டுரூவா, பாக்கெட்டு ஒர்ரூவா. கைகால் வலி, மேலுகால் வலிக்கு சாப்புடலாம். மூட்டுக்கு மூட்டு வலி இருக்கா, மூட்டு ஜாயிண்ட்ல வலி இருக்கா, கைகாலெல்லாம் சள்ளக் கடுப்பா கடுக்குதா சாப்புட்டுப் பாருங்கண்ணே வல்லார லேகியம். நாப்பத்தெட்டு மூலிகைகளப் போட்டுத் தயாரிச்சதுங்க. வாய்வுக்கு சாப்புடலாம், வெட்டச் சூடு, வெட்ட வாய்வு, மலச்சிக்கல், நீர்ச்சிக்கலுக்குச் சாப்பிடலாம். புதுக்கோட்டை வல்லார சஞ்சீவி லேகியம்...", நாளு முளுக்கப் பேசுவார். இந்த ஊரு மட்டுமில்ல, எத்தினியோ சந்தக்கிப் போவாரு. அத்தினி சந்தையிலயும் இந்தக் கூப்பாடு...

இப்படியாக எழுதிக்கொண்டே போகலாம். அல்லது 'நான்' வள்ளுவர்திடலில் எப்படிக் கூத்தாடியது என்பது பற்றி எழுதலாம். ஆனாலும் கழிந்ததைப் போற்றி உப்புக்காகுமா, சுரைக்காய்க்காகுமா? இந்த அதிகாலையில் வெளியே வெண்பனியோடு கவிதை கொட்டிக் கிடக்கிறது. வண்டிக்காரன் வந்து குப்பை மாதிரி ஓரத்துக்குத் தள்ளிவிடுமுன் நான் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். நாளைக்கு வாருங்கள் ஏதேனும் கிடந்தால் எடுத்து வைக்கிறேன்.

0 comments: