விந்தும் அண்டமும் சேர்ந்து கரு உண்டாவதை அறிவோம். இதில் முக்கியமான நிகழ்வு விந்து அண்டத்தின் மேலிருக்கும் செல்சவ்வின் மேல் ஒட்டுதல். ஒரு செல்லும் இன்னொரு செல்லும் ஒட்டிக் கொள்வதற்கு அந்தந்தச் செல்களின் மேலிருக்கும் புரதங்களின் தொடர்பு/இணக்கம் முக்கியமானது. ரெண்டு பேர் கை குடுக்குற மாதிரி, இல்லன்னா கட்டிப் புடிச்சுக்கற மாதிரித்தான் மூலக்கூறுகளும் ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கும்.
விந்தையும் அண்டத்தையும் ஒட்டுவிக்கும் புரதங்கள் என்னென்னவாக இருக்கும் என்பது முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படுகிறது. அண்மையில் அண்டத்தின் மேலிருக்கும் CD9 என்ற புரத மூலக்கூறு இந்த ஒட்டுதலில் முக்கியமானதாகக் கண்டறியப்பட்டது. விந்தணுவின் மேல் என்ன புரதமிருக்கும் என்பது காணப்படாமலிருந்தது. ஜப்பானில் இருக்கும் ஒரு ஆராய்ச்சிக் குழு விந்தணுவின் மேலிருக்கும் அந்தப் புரதத்தைக் கண்டறிந்திருக்கிறது. அதற்கு இசூமோ (izumo) என்று ஜப்பானின் கல்யாணக் கோயிலின் பெயரை வைத்திருக்கிறது.
இந்த இசூமோ எனும் புரதம் விந்தணுவின் தலைப்பகுதியில் இருக்கிறது. இதை மரபணுச் சோதனை மூலம் கழற்றி விட்டால் விந்தணு அண்டத்துடன் ஒட்ட முடியாமற் போகிறது. அதனால் கரு உண்டாவதில்லை. இந்தச் சோதனைகளைச் சுண்டெலியில் செய்திருந்தாலும், மனித விந்தணுவிலும் இந்த இசூமோ இருக்கிறது, அதை எதிர்ப் புரதத்தின் (antibody) மூலம் செயலிழக்க வைத்தால் மனித விந்துவுக்கும் கருவுண்டாக்கும் ஆற்றல் இல்லாமற் போகிறது.
நம்மூர் மக்கள் தொகைக்கு ஜப்பான் கோயில் எதாச்சும் வழி வைத்திருக்குமா என்பது எதிர்காலக் கேள்வி!
செய்தி
படம்
மதியம் வெள்ளி, மார்ச் 11, 2005
கல்யாணக் கோயிலும் விந்துப் புரதமும்
Posted by சுந்தரவடிவேல் at 3/11/2005 02:47:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்ல தகவல். இதை இந்த விக்கிபீடியா மாதிரி இதிலெல்லாம் கோர்த்துவிட முடியாதா?
நல்ல யோசனை, முயற்சிக்கிறேன் தங்கமணி.
தங்கமணியை வழி மொழிகிறேன்.
நான் விக்கியில் முயன்று பார்த்தேன். ஒரு இடத்தில் ஒட்டியிருக்கிறேன். மீண்டும் பார்த்துவிட்டு ஒழுங்காயில்லையென்றால் நவனிடம் கேட்க வேண்டும். உங்கள் ஊக்கத்துக்கு நன்றி!
மேலும், கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குமுன்பு பிறப்பிக்கப்பட்ட முதல் parthenogenetic mammalஆன ஒரு எலிக்குக்கூட, Kaguya என்ற புராணீக தேவதையின் பெயரை வைத்திருந்தது டோக்யோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு ஒன்று. Brahma என்ற பெயரில்கூட ஒரு transcription factor உள்ளது: பழ ஈயில் என்று நினைக்கிறேன்....
மாண்ட்ரீசர்:
கஞ்சாவில் உள்ள ஒரு cannabinoid மூலக்கூறுக்கு ஆனந்தமைட் (Anandamide, blissful என்ற அர்த்தத்தில்) என்று பெயர் வைத்திருக்கிறார் எங்கள் பல்கலைக்கழகத்து இந்திய விஞ்ஞானி ஒருவர். இதே மூலக்கூறு பெண்களின் கருப்பையில் சுரப்பதாக கண்டுபிடித்திருக்கும் இவர் இப்போது embryo implantation ல் அதன் பங்கைப் பற்றி ஆராய்கிறார்.
மாண்ட்ரீசர், சுந்தரமூர்த்தி: இந்தப் பழ ஈப் பெயர்கள் வாயில் நுழைந்து தொலையாது:) ஆனந்தமைடைப் பற்றிப் படித்திருந்தாலும் உங்கள் செய்தி புதியது. தகவல்களுக்கு நன்றி.
Post a Comment