வேறொரு பனி

Image hosted by Photobucket.com

பனியைப் பற்றி எழுதலாம். யார் வேண்டுமானாலும். இல்லையா? 4 இஞ்சுக்கு மேலே கொட்டிய ஊர்க்காரர்கள் அல்லது -20 டிகிரிக்குக் கீழான ஊர்க்காரர்கள் மட்டுந்தான் எழுத வேண்டுமென்பதெல்லாம் இல்லையல்லவா?!

எல்லோரும் பனியைப் பார்க்கிறார்கள்; துகள் துகளாய்ப் பறக்கும் அந்த வெண்மையைப் பார்க்கிறார்கள்; வெள்ளைப் படுக்கையில் ஒற்றை பூட்ஸின் அச்சைப் பார்க்கிறார்கள்; என்னைப் போல் பேருந்துக்குக் காத்திருக்கிற வேளையிலேனும்!

சுழற்றியடிக்கும் காற்றில் கிளம்பும் பனிப் புழுதியை மூஞ்சியில் வாங்கிக் கொண்டு சிலர் சிரிக்கிறார்கள், சிலர் ஊவென்று கத்திக் கொண்டு போகிறார்கள். காற்றில் கம்பி வளைந்து தாமரையாய் மலரும் குடையைப் பிடித்துக் கொண்டு சிலர். தொப்பி வைக்காதோரும் நிற்கிறார்கள்.

மரக்கிளைகள் வரி வரியாய்ப் பனிப் பட்டைகள் துளிர்த்து நிற்கின்றன. இன்னொரு மழை அல்லது வெயிலொன்றில் கரைந்து போகும் வெண் பட்டைகள்.

தரையில் கொட்டிக் கிடக்கும் பனிப்பூவுக்குக் கீழே கட்டிப் பனி. பூவென்று காலை வைத்தால் வழுக்கியடிக்கும். ஒரு காலை அழுந்த ஊன்றிக் கொண்டு இன்னொரு காலால் வழுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இதோ என் பேருந்து. முதுகுப் பையின் மேல், மேற்சட்டையின் மேல் அரிசி மாதிரிக் கொட்டித் தேங்கியிருந்த பனித் துகள்களையெல்லாம் முடிந்த வரை தட்டிவிட்டுக் கொண்டு ஏறுகின்றேன். தாமதமாய் ஓடுகின்றன வண்டிகள். இன்றைக்குக் காலத்தை இழந்தாற்போலில்லை. சன்னல் வழியே பார்க்கிறேன், என்றைக்கும் போலவே நடைபாதையோரத்துச் சிறு சுவற்றின் மேல்தான் நடப்பேன் என்று ஏறி நாலடி எடுத்து வைத்துக் கீழே குதிக்கிறான் காப்பகத்திலிருந்து அம்மாவின் கையைப் பிடித்துப் போகும் சின்னப் பையனொருவன்.

2 comments:

said...

பனியைப் பற்றி பேசுவதற்கான அனைத்து உரிமைகளையும் நான் கையகப்படுத்தி நாளாகிறது தம்பி! :))
இருந்தாலும் இந்தப் பனி (உன் பதிவு) நன்றாக இருக்கிறது!

said...

அண்ணே, உரிமைகளைக் கையகப் படுத்துறது இருக்கட்டும், கையை உறையகப்படுத்தி வையுங்க மொதல்ல:)