பள்ளிகொள்ளும் பிள்ளைகள்

என் அப்பா ஒரு பள்ளித் தலைமையாசிரியர். பணி ஓய்விலிருக்கிறார். அவரிடம் சில புகைப்படங்களிருக்கின்றன. கறுப்பு வெள்ளையில். எங்கள் சித்தப்பா எப்போதோ கொடுத்த எக்ஸ்ரே பிலிம் டப்பாவொன்றில் அந்தப் படங்களிருக்கும். அவ்வப்போது எடுப்பார். சுற்றியமர்ந்து பார்ப்போம். அதிலொன்றில் அவரும் சக ஆசிரியர்களும் "குருளையர் பயிற்சிப் பள்ளி"யில். டவுசரும் சட்டையுமாய், கழுத்தில் அழகாய் ஒரு துணி தொங்கும். நான் விபரந்தெரிந்து கேட்டபோது அதெல்லாம் இப்போ இல்லன்னுட்டார். சில குருளையர் புத்தகங்களைப் பார்த்த ஞாபகம் மங்கலாயிருக்கிறது. குருளையர் இயக்கம் மாணவர்களுக்குச் சமூக ஒழுக்கத்தைச் சொல்லித்தரும், அவர்களைப் பொதுப் பணிகளுக்காகப் பயிற்றுவிக்கும்.

நான் 5வது படிக்கும்போது எங்கள் பள்ளி சாரணர் இயக்கத்தில் அப்பா என்னைச் சேர்த்து விட்டார். புதுக்கோட்டைக்குப் போய் கேன்வாஸ் ஷ¥ ஒன்று வாங்கிக் கொடுத்து, காக்கியில் டவுசரும் சட்டையும் தைத்துக் கொடுத்தார். மூன்று விரல்களால் வணக்கம் செலுத்துவதையும், பொய் சொல்லக் கூடாது, உதவி செய்ய வேண்டும் என்ற உறுதி மொழிகளை மனப்பாடம் செய்ததையும் தவிரப் பெரிதாய் ஒன்றும் நினைவில்லை.
நான் 12வது வகுப்பிலிருந்த போதுதான் எங்கள் பள்ளிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme, NSS) வந்தது. ஒவ்வொரு மாணவரும் இரண்டு வருடங்கள் இருக்க வேண்டும் என்பதால் 12வது வகுப்பாருக்கு அனுமதியில்லை. பிறகு கல்லூரியில் சேர்ந்த போது NSSல் சேரலாம் என்று நினைத்தபோதுதான் தங்கமணி இது நல்லாருக்கும்டான்னு சொல்ல தேசிய மாணவர் படையில (National Cadet Corps, NCC) சேர்ந்தேன். அணிவகுத்து, துப்பாக்கி சுட்டு, இளைக்க இளைக்க ஓடி, முகாம்களுக்கும், மிதிவண்டிப் பயணங்களுக்கும் சென்று, மூன்று வருடங்களில் அது ஒரு மிகச் சிறந்த அனுபவம்.

கும்பகோணத்தீச் சதி (இதை விபத்தென்று சொல்லக் கூடாது) நடந்து முடிந்திருந்த நாளன்றில் என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். "எங்கட ஊர்ல (இலங்கையில்) எல்லா வேலையையும் ஊர்க்காரங்களும், பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்தான் செய்வோம். குளம் வெட்டுறதுக்கு ஊரே திரண்டு போவோம், கோயிலுக்குக் கூரை மாத்துறதைப் பள்ளிக் கூடப் பசங்களே செஞ்சிடுவோம்", அப்படின்னார்.
நம் ஊரில் ஊர் திரண்டு குளம் வெட்டுமா என்று தெரியாது. வீட்டுக்கொருவராய்ச் சென்று அணைபோட்ட கதையைத் திருவிளையாடல் என்றொரு படத்தில் பார்த்திருக்கிறேன். இதைத் தவிர எங்களூரில் ஊர் கூடிக் கோயில் திருவிழா நடத்துமே தவிர குளம் வெட்டுவதற்கெல்லாம் பொதுப்பணித்துறைதான்.

நம்மூர்ப் பள்ளி, கல்லூரிகளில் NSS இருக்கிறது. தமிழகத்திலிருக்கும் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சுமார் 2700 இடங்களில் மட்டுமே NSS இருக்கிறது. மற்ற இடங்களிலெல்லாம் மாணவர்கள் என்ன செய்வார்களென்று தெரியாது. டியூஷன் போகலாம், கூடிச் சினிமாக் கதை பேசலாம், கிரிக்கெட்டோ வேறெதோ விளையாடலாம், ஏனென்றால் 6-12 வகுப்பில் நானும் என் தோழர்களும் இதைத்தான் செய்தோம். இந்த மாணவர் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கும் லட்சோப லட்சம் பிள்ளைகள் ஒரு பெரிய படை. இவர்களைக் கொண்டு நிறைய சாதிக்கலாம். தேவையெல்லாம் பள்ளிக்கு ஓரிரு நல்ல ஆசிரியர்கள், கொஞ்சம் கடப்பாறை, மண்வெட்டிகள், சாந்து சட்டிகள், விளக்குமாறுகள், வேண்டுமெனில் அன்றைய வேலை முடியும்போது கொடுக்கக் கொஞ்சம் தீனிப் பண்டங்கள். பள்ளிக்குக் கூரை போடுவது, பெஞ்சும், ஸ்டீல் பீரோவும் வாங்கிக் கொடுப்பதையெல்லாம் விடத் தன்னார்வ இயக்கங்கள் இதைப் பற்றி யோசிப்பது அவசியம். ஊருக்கு ஊரும் உருப்படும், பிள்ளைகளும் உருப்படுவார்கள். இப்படித் தொண்டுள்ளத்தோடு வளரும் பிள்ளைகள் நாளை நாட்டைச் சுரண்ட மாட்டார்கள், பாலம் கட்ட அரசாங்கம் கொடுக்கும் காசைப் பையில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். எனவே பள்ளியிலே பிள்ளைகளை இப்படியான தொண்டுகளில் ஈடுபடுத்துமாறு செய்வதற்கு என்ன செய்வது? நிதி திரட்டி NSSக்குக் கொடுப்பதா, அல்லது ஏற்கெனவே ஏதேனும் அமைப்புகள் இதை, இதை மட்டுமே செய்கின்றனவா? நாம் என்ன செய்வது? எப்படிச் செய்வது? கேள்விகள் எழுகின்றன.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (திருக்குறள் 948).

0 comments: