கத கேளு, கத கேளேய்!

நானொரு கதைக்காரன்; முதலும் முடிவுமாக நானொரு கதைக்காரன் என்று FETNA திருவிழாவில் பிரபஞ்சன் சொன்ன கதைகளில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். அவர் படிச்சு, சொல்லி, நான் கேட்டு, அதை எழுதும் வரைக்குமான நெடும் பயணத்தில் அந்தக் கதைகள் நிறையவற்றை இழந்திருக்கும். ஆனாலும் பகிர்கிறேன். உண்மைத் தலைப்புகளெல்லாம் தெரியாது.

1. தாத்தா
இது உண்மைச் சம்பவம்.
தமிழ்த்தாத்தா உவேசா சுவடிகளைத் தேடிப் போனார். ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரர் ஒன்றும் படித்தவரில்லை. ஆனால் அவர் வீட்டுப் பரணில் நிறைய பழைய ஓலைச் சுவடிகள் இருந்தன. உவேசா சுவடிகளையெல்லாம் பார்த்து எடுத்துக் கொண்ட பிறகு பரணிலிருந்து கீழே வந்தார். ஒரு படம் மாட்டியிருந்தது, அதில் அந்த வீட்டுக்காரர், படிக்காத அவரேதான், ஆனால் கையில் பெரிய புத்தகம் ஒன்றோடு. அது எப்படி என்று உவேசா வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்டார். நான் படிக்காதது உண்மைதாங்க, ஆனா இந்தப் படத்தைப் பார்த்த பிறகு என் சந்ததிகள், ஆகா நம்ம தாத்தா பெரிய படிப்பாளி போலிருக்கே நாம அவரை விட நிறைய படிக்கணும்னு நல்லா படிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கையில இப்படிப் படம் பிடிச்சு வச்சிருக்கேன்.

2. சிலுவை
இது ஒரு அமெரிக்கக் கதையென்று சொன்னார்.
ஒரு கருப்பன். உறையும் குளிர், இரவு. கண்ணில் பட்டது ஒரு கோயில். கதவைத் தட்டினான். பாதிரி வந்தார். விறைத்துப் போகிறேன் தங்கிக் கொள்ளட்டுமா என்றான். இல்லை, கருப்பர்களுக்கான கோயில் இன்னும் கொஞ்சம் தூரத்திலிருக்கிறது போ. இல்லை, அங்கு போவதற்குள் குளிரில் செத்துப் போய் விடுவேன். இல்லை, முடியாது போய்விடு. கதவை இவன் தள்ள, பாதிரி இவனைத் தள்ள. இவனொரு தூணைப் பற்றுகிறான். பாதிரி தள்ளுகிறார். தள்ளத் தள்ளத் தூண் அசைகிறது. இன்னும் தள்ளியதில் தூண் விழுந்து கோயிலும் விழுகிறது. அவன் நடந்து போனான். கொஞ்ச தூரம் போன பின், பின்னாலே காலடியோசை. திரும்பிப் பார்த்தான். ஒரு ஆள் 35 வயசிருக்கும். அருகில் வந்து என் பெயர் ஏசு கிறிஸ்து, இவ்வளவு காலமாக என்னைச் சிலுவையில் அறைந்து வைத்திருந்தார்கள், விடுவித்தமைக்கு நன்றி என்றார். இருவரும் எங்கே போகலாம் என்று பேசிக் கொண்டே ரயில் நிலையம் நோக்கி நடக்கலானார்கள்.

3. கடல் மீன்கள்
இது உலகின் மிகச் சிறிய கதையாம். (இதை விடச் சிறியது ஒரு ஊர்ல ஒரு நரியாம், அத்தோட சரியாம்!)
ஒரு கடலில் ஒரு சின்ன மீன். ஒரு நாள் அதன் முன் ஒரு பெரிய மீன் வந்து விழுங்குவதற்காக வாயைத் திறந்தது. சின்ன மீன் கேட்டது, இது அநியாயமில்லையா? பெரிய மீனின் பதில்: அநியாயந்தான், வேண்டுமானால் நீ என்னை விழுங்கேன்.

4. தலை
ஒரு அம்மாவுக்குத் தலையேயில்லாத ஆண் பிள்ளையொன்று பிறந்தது. வாலிப வயசு வரை அந்தப் பயலுக்கு இது ஒரு குறையாயில்லை. ஒரு நாள் ராஜாவின் மகளைப் பார்த்து மையலுறுகிறான். அவளருகில் சென்றாலோ, சீச்சீ இவன் யார் இவனை விரட்டுங்கள் என்று சொல்கிறாள். அப்போதுதான் முதன்முறையாய்க் கவலைப்பட்டு அம்மாவிடம் முறையிடுகிறான். அம்மா ஒரு முனிவரிடம் கேட்கிறாள். சரி, இந்த மந்திரத்தைச் சொல்லிவிட்டு அவன் வெளியில் கிளம்பட்டும், முதலில் எதைப் பார்க்கிறானோ அதன் தலை இவனுக்குக் கிடைக்கும். இவன் பன்றியைக் காணப் பன்றித் தலையனாகிறான். இப்போதும் இளவரசி விரட்டியடிக்கிறாள். பின்னர் கழுதைத் தலை. விரட்டல். மறுபடியும் அம்மா, புலம்பல், முனிவர். இப்போது முனிவர் சொன்னார், ஒரு மனுசத் தலை இருக்கிறது, ஆனால் உள்ளே மூளையிருக்காது. பரவாயில்லையென்று பெற்றுக் கொள்கிறார்கள். இப்போது அவனொரு அழகிய முகங்கொண்ட வாலிபன். அரசனொருநாள் இவன் அழகு கண்டு அவன் அம்மாவிடம் இவனை என் மருமகனாக்கிக் கொண்டு அரசனாக்கவா என்கிறான். அம்மா சொன்னாள், இவனுக்கு மூளையில்லையே. ராஜா கேட்டார்: இவனுக்குமா? சரி சரி, இப்படிப் பட்டவனே நாட்டை ஆள வேண்டும்.

5. தும்மல்
ஒரு அரங்கத்தில் க்ரிகோவிச் நாடகம் பார்க்கிறான். தும்மல் வருகிறது. தும்முகிறான். முன்னிருக்கைக் காரர் திரும்பிப் பார்த்துவிட்டு, நாடகம் பார்ப்பதைத் தொடருகிறார். க்ரிகோவிச்சுக்கு அப்போதுதான் தெரிந்தது அவர் அவனுடைய முதலாளி. ஆகா, தப்பு செய்துவிட்டோமோ, வேணும்னு செஞ்சுட்டோம்னு நினைப்பாரோ என்றவாறு குமைந்து, மெல்ல அவரது தோளைத் தட்டி "அய்யா, தும்மல்ங்கறது ஒரு இயற்கையான விசயம், அது எப்ப வேணாலும் வரும்" என்று ஆரம்பிக்கிறான். அவர் "இருக்கட்டுமப்பா நாடகத்தைப் பார்". இவனால் அதன் பின் நாடகத்தைப் பார்க்க முடியவில்லை, அவர் கோபித்துக் கொண்டதால்தான் தன்னைப் பேசவிடவில்லையென நினைத்தபடியே துடித்துச் சற்று நேரம் பொறுத்து அவரது தோளைத் தட்டி "தும்மல்ங்கறது"ன்னு ஆரம்பிச்சான். நீ இப்போ நாடகத்தைப் பார்க்க(விட)ப் போறியா இல்லையா என்றார். இவனால் அதற்கு மேல் நாடகத்தைப் பார்க்க முடியலை. நாடகம் முடிந்து முதலாளி தன் குதிரை வண்டிக்குத் திரும்பியபோது க்ரிகோவிச் அங்கே நின்றான். "அய்யா தும்மல்ங்கறது", "ஏன்யா இப்படிக் கழுத்தறுக்கறே" என்றவாறு அவர் கிளம்பிப் போக, இவன் வீட்டுக்குப் போனான். மனைவியிடம் சொன்னான். மனைவி இவன் வேலை போய்விடப் போவதாகவும், குடும்பம் நடுத்தெருவுக்கு வரப் போவதாகவும் பயந்தாள். இவனால் இரவு உறங்க முடியவில்லை. கடைசியில் கிளம்பி நேரே முதலாளி வீட்டுக்குச் சென்றான். மணியை இழுத்து அழைத்தான். பிரதமருக்கு மட்டுமே இந்த நேரத்திலே தன்னை அழைக்கும் அனுமதி, என்ன அவசரமோ என்று அந்த அதிகாலை மூன்று மணிக்கு ஓடி வந்து கதவைத் திறக்கிறார். "அய்யா தும்மல்ங்கறது..." ஆரம்பிக்கிறான், "இனி இந்தப் பேச்சை எங்கே எடுத்தாலும் என் துப்பாக்கிதான் உனக்குப் பதில் சொல்லும்". போய்விடுகிறார். இவன் வீட்டுக்கு வந்து படுத்து அப்படியே செத்துப் போகிறான்.
இது ரஷ்யப் புரட்சிக்குக் காரணமானதென்று சொல்லப் படும் 12 சிறுகதைகளுள் ஒன்றாம். அன்டண் செக்காவ் எழுதியதாம்.

6. முகம்
முகம்தான் உண்மையான தலைப்பு. இதுவும் ஒரு ரஷ்யக் கதை. அலெக்ஸேய் டால்ஸ்டாய் எழுதியது என்று சொன்னதாக ஞாபகம்.
நர்ஸ் வந்து அவன் முகத்தின் முன்னே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினாள். இராணுவச் சிப்பாய். போரில் பெரும் காயம். உயிர் பிழைத்ததே பெரும்பாடு. முகம் சிதைந்து போயிருந்தது. அவனது அழகிய பழைய முகமாயில்லாமல் கோரமாகியிருந்தது. அவன் சொந்த ஊருக்குப் போய் அவன் வீட்டில் அனைவரிடமும் தான் அவர்கள் மகனின் நண்பன் என்று சொல்கிறான். தான் காதலித்த பெண்ணையும் காண்கிறான். யாரிடமும் தான் யாரென்பதைச் சொல்லாமலேயே கிளம்புகிறான். இராணுவத்துக்கு வந்த பின்பு ஒரு வாரங்கழித்து அவனுக்கொரு கடிதம். அம்மாவிடமிருந்து. போன வாரம் உன் நண்பனென்று ஒருவன் வந்தான், வந்தது நீதானோ என்று எனக்குச் சந்தேகம், ஏனென்றால் அந்தக் காலுறையில் உன் வாசமடித்தது. வந்தது யார்? இப்போது அவன் அம்மாவிடம் உண்மையைச் சொல்கிறான். சில நாட்கள் கழித்து அவனைப் பார்க்க அம்மாவும் காதலியும் வருகிறார்கள். இந்த முகத்தை உனக்குப் பிடித்திருக்கிறதா என்றான், இப்போதுதான் ரொம்பப் பிடிக்கிறது என்றாள் காதலி.

அம்புட்டுதான். மூலக் கதைகளைக் கொத்திக் குதறி மெக்டொனால்ட்ஸ் காகிதத்திலே சுருட்டிக் கொடுத்ததற்குக் கதாசிரியர்களின் ஆன்மா என்னை மன்னிக்கட்டும்!

0 comments: