வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America, FETNA) 17வது ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். நிகழும்போதே வலைப்பதியும் ஆவலினால் என் மடிக்கணினியைக் கொண்டு சென்றிருந்தேன். கம்பியில்லா இணைய வசதி கட்டுமானத்தில் இல்லையென்பது அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது. "நம் டிவி"காரர் சொன்னதன் பேரில் அதற்கொரு அட்டையையும் வாங்கிச் செருகிப் பார்த்தேன். அது வேலை செய்தது, ஆனால் என்னவோ தெரியவில்லை என் வலை இணைப்புப் படுத்துக் கொண்டது. இரண்டு நாட்களும் இடையிடையே என் கணிணியுடன் போராடித் தோற்று, இப்போது ஊருக்கு மீண்டு வந்து அங்கு நடந்தவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தப் பதிவு முதல் நாளின் இறுதியில் எழுதியது.
பால்டிமோரில் (Baltimore) இருக்கிறேன். இது மேரிலாண்ட் (Maryland) மாநிலத்தின் தலைநகர். நான் வசிக்கும் ஊரிலிருந்து சுமார் 260 மைல்கள். இங்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 17வது ஆண்டு விழா நடக்கிறது. இங்கிருக்கும் எல்லா மாநிலத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டம். கடல் கடந்து வந்த கலைஞர்களின் கூட்டம். கனேடியக் கூட்டம். அமெரிக்காவில் நான் இதுவரை கண்டிராத பெரும் தமிழ் மக்களின் சங்கம். பேரலையடிக்கும் நெஞ்சுடன் உள்ளே நுழைந்தேன். இந்த நெஞ்சத்தின் அசைவுகளை, அதிர்வுகளை உங்களோடு முடிந்த வரை பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாய்த் தெரியும், என்னால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. முயல்கிறேன்.
அரங்கத்துக்குள் நுழையும்போது வாசற்கோலமும் வாழைமரங்களும். உள்ளே தவிலும் நாதஸ்வரமும். கல்யாண வீடு போலிருந்தது. ஆரவாரமாய் அலைந்த முகங்கள். இவரைத் தெரியுமா என்று ஒவ்வொருவரும் மற்றவர் முகத்தை உன்னிப்பாய்ப் பார்ப்பது போன்றதொரு பிரமை. பதிவெல்லாம் முடித்து உள்ளே சென்ற போது சரியாய் நீராருங்கடலுடுத்த ஆரம்பித்தது. அமெரிக்கர்களைப் போலவே நம்மவர்களும் இங்கே எழுந்து நிற்பதும், அசையாமல் ஆங்காங்கே அமைதியாய் நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ததைக் காண முடிந்தது.
முதலில் வந்தவர் சிவகாமி, இ.ஆ.ப. தலித்தியப் பெண்ணியத்தில் ஒரு முக்கிய எழுத்தாளர். எண்பதுகளில் ஆரம்பித்த தலித் இலக்கிய வீச்சில் முதல் வாளைத் தூக்கியவர்களில் இவரும் ஒருவர். இதுவரை நான்கு புதினங்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகளில் தலித் பெண்களை, அவர்களது பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதியுள்ளார். புதிய கோடாங்கி என்ற மாத இதழின் ஆசிரியர். இதனை ஒரு இயக்கமாகவும் நடத்துகிறார். இவர் இன்று பேசியது பெண்களின் உரிமைகளைப் பற்றி. ஒரு வரலாற்றுக் குறிப்பைக் கொடுத்தார். அதாவது சங்க இலக்கியமான குறுந்தொகையில் எப்படிப் பெண் பாடப்பட்டாள்: வினையே ஆடவர்க்கு உயிரே; பெண்டிர்க்கு? அந்த ஆண்கள்தாம் உயிராம். காந்தள் மெல்விரல் தயிரைப் பிசைந்ததும் புகை மண்டிய அடுப்பை ஊதியதும் "இனிது" என்ற அவனின் பாராட்டுக்காகவாம். பின்னர் சங்கத்திலிருந்து புறப்பட்டு சங்கம் மறுவிய காலத்தில் ஆதிக்கமுற்றிருந்த சமண, பெளத்தங்களின் நூல்களாகிய மணிமேகலை, சிலப்பதிகாரம் பெண்களை மையப்படுத்தின. அதன் பின் ஓங்கிய சைவ, வைணவ மதங்களிலும் பின்னால் வளர்ந்த இந்து மதத்திலும் பெண்ணடிமைக் கருத்துக்களும் பெண்களை வீழ்ச்சிக்குள்ளாக்கும் நூல்களும் சமூகப் பழக்கங்களுமே இருந்தன. நாயக்கர் காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில்லை. ஆங்கில ஆட்சியில் சதி ஒழிப்பு, பால்ய விவாகம் ஒழிப்பு போன்றவற்றின் மூலம் பெண்கள் இழந்திருந்த/மறந்திருந்த உரிமைகளை ஓரளவு பெற்றார்கள் என்றே சொல்ல வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு பெண்களின் நிலை என்ன? இன்னும் 50%க்கும் மேற்பட்ட பெண்கள் கல்வியறிவு பெறவில்லை, இவர்களில் 60%க்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள். கல்வி, பொருளாதார மேம்பாடு பெண்விடுதலையைக் கொண்டு வரும். போராடும் பெண்களிலேயே பிரிவினைகள், ஒரு புறம் மார்க்சிய, லெனினியத் தலித்துகள். மறுபுறம் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் பெண்கள். இது சிதைந்து ஒலிக்கிறது. போதாமல் ஒலிக்கிறது. சாதீயப் பேச்சுக்கள், உரையாடல்கள், கருத்து வெளிப்பாடுகள் தயக்கமின்றி நடைபெற வேண்டும். அம்பேத்காரின் பெயர்க்காரணம் முதற்கொண்டு தவறாய்ப் புகட்டப் படும் கல்வியைச் சீர்திருத்த வேண்டும். தலித்துகளின் சமூகப் பங்களிப்புகளை அயோத்தி தாச பண்டிதருடையது புதைக்கப் பட்டது போல் புதைக்கப் படக்கூடாது. மனு தர்மம் பெண்களுக்கு இடும் எட்டு வயதில் கல்யாணம், ஆடவனோடு தனித்திருக்காதே போன்ற கட்டளைகளும், கீதையில் சொல்லப்படும் "போரிடாவிட்டால் கீழ்க்குலத்துக்காரர்கள் உங்கள் மனைவிகளைத் திருமணம் செய்வர்" போன்ற கருத்துக்களைத் தோலுரிக்க வேண்டும். மலைவாழ் பெண்களின் பிரச்சினைகள் இன்னும் சிக்கலானவை. இவையெல்லாம் பற்றிய விவாதம் நாளை நடைபெற இருப்பதாகக் கூறி முடித்தார்.
அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும், கனடாவிலிருந்தும் கலைக்குழுக்கள் வந்து மேடையில் ஜொலித்தார்கள். நிறைய சதிராட்டம் (இன்னொரு மாதிரி சொன்னால் பரதம்). சில நேரங்களில் கண்களில் நீர் திரள நெகிழ்ந்து போனேன். முக்கியமாய்ப் பிஞ்சுக் குழந்தைகள் அழகாய் ஆடிய போது. இவர்கள் நன்றாகவே தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள். காலையிலும் மதியத்திலும் இந்த ஆட்டங்கள் நிகழ்ச்சி முழுவதிலும் ஆங்காங்கே விரவிக் கிடந்தன. இது கொஞ்சம் அதிகப்படியானதாகத் தெரிந்தாலும் மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சி. அதிலும் சிறார்களை மையப்படுத்துவது நம்பிக்கையைத் தருகிறது. இதில் எனக்கிருந்த ஒரு பெரும் குறைபாடு, அபரிமிதமான மத முத்திரை, கடவுள் துதி. அநேகமாய் எல்லாருடைய ஆட்டத்திலும் கண்ணன் வந்து வெண்ணெயைத் திருடினார், மார்கழியில் கோயிலுக்குப் போனார்கள், புதிதாய் ஐயப்பனும் களமிறங்கியிருக்கிறார், சில நேரம் குறத்தியோடு முருகன் வந்தார், உமையொருபாகன் காலைத் தூக்கியாடினார், ஆடுவோர் அருள் வேண்டினர். சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்திய குருதிப் பூ என்ற நாட்டிய நாடகம் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் இது மாதிரிதான். மதத்துக்கும் கலைக்கும் இருக்கும் இந்த முடிச்சை அவிழ்த்தெறிந்துவிட்டு, கலைகளை இழுத்து மக்களோடு பிணைக்க வேண்டும் என என் சிந்தை அரற்றிக் கொண்டிருந்தது. இதே ரீதியில் ஒரு செவுளறையைப் பிரபஞ்சன் கொடுத்தார், அதைப் பின்னர் சொல்கிறேன். அவ்வப்போது சில சினிமாப்பாட்டுக்களும் வரத்தான் செய்தன. மிஞ்சிப் போனால் ஐந்து இருக்கும். இது நான் பார்த்தது, எதிர்பார்த்ததை விட ரொம்பக் குறைவு. இதற்காக FETNAவுக்கொரு சபாஷ், பலே பலே.
பிறகு விழா மலரைப் பிரபஞ்சன் வெளியிட புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக் கொண்டார். அட்டையிலிருந்த உ.வே.சா மற்றும் ஈ.வெ.ரா ஆகியோரைப் பற்றிய சிறு கதைகளைப் பிரபஞ்சன் சொன்னார். அக்கதைகளை நேரப் பற்றாக்குறையால் நான் இப்போது எழுதவில்லை. இன்னொரு நூல் "திராவிட இயக்கங்கள்". இது பேராசிரியர் ஆண்டியினுடையது. நாற்பது ஆண்டுகள் திராவிட கழகங்களின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த/கிடைக்காத உரிமைகளைப் பற்றிப் பேசும் நூல். இதைத் தந்தை ஜாஸ்பர் ராஜ் வெளியிட்டார்.
கடவுளையும், காதலையும் போற்றுவதைத் தவிர வேறு மாதிரியாகவும் கவிதையெழுதலாம் என்றபடி கவிதா நிகழ்விலே சேரன் மூன்று கவிதைகளைப் பாடினார். குரலா அது? ஆறாய் ஓட வேண்டிய இடத்தில் ஓடி, வீழ்ந்து, எழுந்து, இடியாய் இடித்து.
ஊரான ஊரிழந்தோம், ஒற்றைப்
பனைத் தோப்பிழந்தோம்
நாடான நாடிழந்தோம்
என்ற வரிகளைக் கொண்ட ஒரு கவிதை. நெஞ்சைத் தாக்கிய இன்னொரு நாளைப் பற்றிய இன்னொரு கவிதை, அதிலே பள்ளிப் பருவப் பயலொருவனின் இரவு நேரத்தையும், அவன் பலியாகிப் போன ஓரிரவின் இராணுவ அத்துமீறலையும் கேட்டு அரங்கம் உறைந்திருந்தது. அம்மாவிடம் அழாதே என்றொரு கவிதையில் தன் குழந்தையை விட்டுவிட்டு மரித்த ஒரு தந்தையின் குரல். அவனது அம்மாவுக்குச் சொல்கிறது, அழாதே அம்மா, கொடுமைகள் அழியப் போரிடச் சொல் என்று முழங்கியது. அப்புறம் ஒரு கவியரங்கம், காலம் என்ற தலைப்பிலே. நான்கு பேர் வாசித்தார்கள். உடனடிக் கவிதையென நினைக்கிறேன். நகைச்சுவையாகவும், அழகாகவும் இருந்தன. சில இடங்களில் அந்த விடலைப் பிள்ளைகளின் காதல் எட்டிப் பார்த்தது.
மாதங்கள் பன்னிரெண்டையும் பற்றிய ஒரு நாட்டியத்துக்குப் பிறகு பிரபஞ்சன் பேச வந்தார். பிரபஞ்சனின் பேச்சை முதன் முதலாகக் கேட்கிறேன். ஒரு தெளிந்த அமைதியான ஆழமான குரலும் செய்தியும். அந்த 12 மாத நாட்டியத்தில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சாமியைப் பற்றியும் அவரது பிரதாபங்களைப் பற்றியும் போற்றி ஆடினர். பேச வந்த பிரபஞ்சன் "உங்கள் மாதங்கள் ஆட்டம் மிக அருமை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு மார்கழியில்தான் நந்தன் என்ற கீழ்ச்சாதிக்காரன் கொல்லப் பட்டது நினைவுக்கு வந்தது, ஏகலைவனும், சம்போகனும் கொல்லப்பட்ட மாதம் எதுவென்று தெரியாது, காரைக்காலம்மையார் பேயுருக் கொள்ள நேர்ந்தது எந்த மாதம்... நீங்கள் போற்றும் பக்தியை மட்டுமின்றி இது மாதிரி மாதங்களையெல்லாம் உள்ளடக்கியதுதான் நம் வரலாறு" என்று ஆரம்பித்து சுமார் 1500 பேர்களையும் தன் கதைகளால் கட்டிப் போட்டார். இவர் சொன்ன கதைகளையெல்லாம் பின்னொரு நாள் சொல்லுவேன். அவர் சொன்ன முக்கியமான செய்தி, ஒரு ஊர்ல ஒரு நரி அத்தோட சரி என்ற உலகின் சின்னஞ்சிறு கதையை வைத்திருக்கும் நமக்குக் கதை சொல்லும் திறனுண்டு. ஆகவே கதைகளைச் சொல்லுங்கள், உங்கள் சமூகத்தின், வாழ்வின் கதைகளைச் சொல்லுங்கள், அவற்றை உம் சந்ததிகளுக்குச் சொல்லுங்கள், எழுதி வையுங்கள் என்பதுதான்.
பால்டிமோர் மேயரும், கவுன்சிலரும் வந்து பட்டாடை, சந்தன மாலை சார்த்தப்பட்டு, வாய்நிறைய புன்னகையும் வாழ்த்துமாய்ச் சென்றார்கள்.
பிறகு மாலை நிகழ்ச்சியின் இன்னொரு பேச்சாளராய் வந்திருந்தார், சம்பந்தன். திருக்கோணமலையின் பாராளுமன்ற உறுப்பினர். தமிழர் தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர். இலங்கையின் உரிமைப் போரைப் பற்றிய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பைத் தந்தார். கண்டி, தமிழ், சிங்கள மன்னர்களின் துண்டு துண்டாய் ஆளப்பட்ட குறுநிலங்களில் ஆரம்பித்து, 1833ல் ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை, 1947க்குப் பிறகு வல்லினவரசால் தகர்க்கப்பட்ட ஒருமைப்பாடு, குடியுரிமைச் சட்டங்களால் தமிழரின் உரிமை பறிப்பு, தமிழ்ப் பகுதிகளில் முயன்று நிகழ்த்தப்பட்டக் குடியமர்வுகள், பின்னர் தூண்டப்பட்ட இனவன்முறைகள், தொடர் இழப்புகளுக்குப் பின்னரேயே ஆயுதமேந்த வேண்டி வந்த நிர்ப்பந்தம் எல்லாவற்றையும் தன் முழங்கும் குரலால் சொன்னார். இன்று அமைதியான மக்களாட்சி வழியில் தம் உரிமைகளுக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களோடு ஒரு சமாதானத்துக்கு அரசு ஒத்துக் கொண்டதே புலிகளின் ஆயுத பலத்தாலேதான் என்ற போது கரவொலி அரங்கை நிறைத்தது. சமீபத்திய இந்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றம் இருப்பதாகவும், மேலும் ஆதரவு கிடைக்குமென்று நம்புவதாகவும் கரகோஷத்துக்கிடையே சொன்னார்.
இவரது உரை முடிந்து அடுத்து வந்த கச்சேரிக்குச் சில நிமிடங்கள் இருந்ததால், நிகழ்ச்சி அறிவிப்பாளர் வந்து "அப்படியே எல்லோரும் உங்க அருகருகே இருப்பவர்களோடு அறிமுகம் செஞ்சு நாலு வார்த்தை பேசுங்களேன்" என்ற போது என் முன்னால் ஒரு மதுரை அரசரடிக் காரருடனும், பின்னாலேயிருந்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவருடனும் கை குலுக்கிப் பேசினேன். அரங்கமே சளசளத்தது. என் இடப்பக்கம் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு என்னவென்றால், ஒரு பாட்டியார் 80 வயதிருக்கலாம். அவரை அடுத்து இன்னொரு பெண்மணியார். தெற்கு புளோரிடாவிலிருந்து (சுமார் 800 மைல்கள் இருக்கலாமென நினைக்கிறேன்) இந்தப் பேரவைக்காகவே வந்தார்களாம். அந்தப் பெண்மணி என்னிடம் "நீங்க குறிப்பெடுக்கறதைப் பார்த்தா ஏதோ பத்திரிகையில எழுதுறவரு போலருக்கு, எங்களுக்குப் பெருமையா இருக்கு, எழுதுங்க, அப்படியே நாங்கள் எல்லாரும் எங்க ஊருக்குச் சீக்கிரமா போறத்துக்கு எதாச்சும் வழி செய்யச் சொல்லுங்க" அப்படின்னார். அந்த ஈழத்தின் வார்த்தைகளில் என் மனம் நொறுங்கி விழுந்தது. பிறந்த பொன்னாட்டைப் பற்றிய கனவுகளுடன் இங்கு பரிதவிக்கும் இவர்களுக்கு இந்த நிறையரங்கும், தமிழ் முழக்கங்களும் ஏதோவொரு வகையில் நம்பிக்கையைக் கொடுக்கும்.
மக்கள் இசைக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி, குடும்பத்தோடு வந்து தமிழ் என் அன்னை என்று ஆரம்பித்த கச்சேரியைச் சிரிப்பும், பாட்டும், கூத்துமாய்க் கொண்டு போனார். அவர் பாட்டுக்களும் இடையிடையே சிரிக்க வைத்துச் சொல்லிச் சென்ற தமிழிசை பற்றிய உண்மைகளும், இவர் தமிழிசையை மக்களுக்கு மீட்டுத் தருவதில் துடிப்பாயிருப்பதைக் காண முடிந்தது. கரகரப் பிரியாவோ அல்லது குறிஞ்சியோ அவற்றின் மூலத்தைச் சேற்று வயல்களிலிருந்தும், குடியானவர்களின் வாசல்களிலிருந்தும் தோண்டியெடுத்துக் காட்டினார். ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ள வேண்டிய கலைஞர் இவர். தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்காகத் தனது குறுந்தகடு விற்பனையிலிருந்து வரும் தொகையை அளிக்கவிருப்பதாக அறிவித்தார். அதை வாங்கக் கூட்டத்தைப் பார்க்க வேண்டுமே! அய்யா எல்லாரும் வீட்டுக்கு கெளம்பனும்னு சொன்னதுக்கப்புறந்தான் கச்சேரி முடிஞ்சது. அப்போது மணி இரவு 11.30 இருக்கும்.
தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு என்னை அறிமுகப் படுத்திய இவ் விழாவின் மிகுதி அடுத்த பதிவில்!
பொங்கும் பால்டிமோர்-1
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஐயா!
வணக்கம்!
மிக அருமையான வருணனை!
வாழத்துகள் ! பாராட்டுகள்!
பல நூறு மைலகள் தொலைவில் இருந்து வந்து உடனடியாக நிகழ்சிச்சியைப் பதிவு செய்யும் ஆவலும் நிறைவேறாமல் தொல்லைபட்டு அல்லல் உற்று
இறுதியாக நிறைவாகப் பதிவ செய்தமைக்கு
நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
80 வயது அம்மையார் தம் தாய் நாட்டைப் பார்க்கத் தெரிவித்த ஆவலைப் படிதம்ததில் என் கண்கள் பனித்தது உண்மை.
ஆகவே மறுபடி தங்குளுக்கு எளியேனின் பாராட்டுகள்.
ஆனால், ஆனால் ஆனால்...
2004 உக்குப் பிறகு இன்று வரை
பின்னோட்டம் ஒன்றும் ஒருவரும் இடவில்லை என்று அறிகிற போது...
'நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்..."
என்று பாடத் தோன்றுகிறது.
அந்த ஆதங்கத்தின் விளைவாக
எழுகிறது இம்மடல்.
தொடர்ந்து எழுதுங்கள்.
நிகழ்ச்சிகளைச் சொற்களால் படம்பிடித்து
எழுதுங்கள்.
அடியேனும் தங்களைப் பொல் ஒருவன்தான்.
முடிந்தால்
www.thinnai.com
or
பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
பாருங்கள்.
அன்புடன்
நனி நன்றியன்
பெஞ்சமின்
Post a Comment