லிட்மசும், அந்தி மந்தாரையும்

பழைய நாட்குறிப்பைச் சில வருடங்கள் கழித்துப் படித்துப் பார்ப்பது ஒரு நல்ல(!) அனுபவம். இன்றைப் போலவே அன்றும் ஒவ்வொரு கணத்திலும் துடித்துக் கிடந்திருக்கிறோம். நிகழ்வுகளால் தூண்டப்படும், வீழ்த்தப்படும் ஏதோ ஒன்று நம்மை விட்டு நீங்காமல் கூடவே வருகிறது. இடம், குணம் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் பசி/சாப்பாடு மாதிரி அதுவும் தினசரிக் கூத்துதான். அமிலத்துக்கும் காரத்துக்கும் நிறம் மாறும் லிட்மஸ் (litmus) காகிதம் மாதிரி அது நிகழ்வுக்குத் தகுந்த மாதிரி நிறம் மாறுது. அன்றைய சுகமோ துக்கமோ இன்றைக்கு இல்லை, இன்றைக்கு வெவ்வேறு, ஆனாலும் அதே லிட்மஸ் காகிதம். இதைத்தான் உணர்வென்பதா? உணர்ச்சியென்பதா? வினைபடுதல் எனலாமா?

வேதியியலில் வினைபடுதலை யோசிக்கிறேன். ஒரு வேதிப் பொருள் வேகமாக வினைபுரிந்தால் நிலைக்காது. மாறிக் கொண்டேயிருக்கும். சுற்றியிருக்கும் காற்று, வெப்பம், ஈரப்பதம் இவற்றுக்கேற்ப இன்னொன்றாய், மற்றொன்றாய். எங்கு முடியலாமென்றால், எப்போது அது நிலைத் தன்மையை அடைகிறதோ அப்போது. அப்போது அதன் வினைபடுதலும் குறைகிறது. தங்கம், பிளாட்டினம் போன்றவையெல்லாம் இந்தக் காற்றில் அதிகம் வினைபுரிவதில்லை, மாறுவதுமில்லை. அதான் உயர்வாகக் கருதப் படுகின்றனவோ? (உயர்வு என்பது பொருள் மதிப்பைக் கொண்டா என்றொரு கிளைக்கதை ஆரம்பிக்குது. அதை அப்படியே விட்டுட்டு மேலே போறேன்.) அதனாலதான் பாரதியார் "ஏது நிகழினும் நமக்கென் என்றிரு" அப்படின்னாரோ? ஆனா கொஞ்சம் அசந்தாலும் ஆளை முழுங்குறதுக்குத் தயாரா அலையுறாங்களே அதுக்கு என்ன செய்வியாம்? அதுக்கும் பதில் அவரே வச்சிருக்கார் "யாதும் சக்தி இயல்பெனக் கண்டோம் இணையதுய்ப்பம் இதய மகிழ்ந்தே". வினைபடுதலும், படாதிருத்தலும் ஒரே இயல்புதான். இணையதுன்னா புடிச்சது. இன்றைக்குப் போரிட விரும்பினால் "நையப்புடை"ப்போம், அமைதி கவிந்தால் "மோனம் போற்று"வோம்!

சரி வந்ததுக்குப் பழைய பக்கமொன்றையும் பார்த்துட்டுப் போறீங்களா?
மார்ச் 2, 1998
ஒரு கட்டுரை படித்தேன். உடலினுள் ஒரு புலப்படாக் கடிகாரம். உயிர்ச் செயல்பாட்டைத் தன் கட்டில் வைத்திருக்கும். ஒளியால் இயங்குதாம் அம் மாயக் கடிகாரம். உதாரணமென்று சொன்னார், ஏதோவொரு தாவரம், ஒரு பூச்சி... எனக்குள்ளே அந்தி மந்தாரை பூத்தது. அம்மாச்சி வீட்டிலிருந்தது. மிளகு மாதிரிக் கரும் விதைகள். அம்மாவும் நானும் ஒருதரம் எடுத்து வந்தோம். துவைகல்லினோரம் ஊன்றினேன். ரோசாப்பூவின் வண்ணத்தையெல்லாம் முட்ட முட்டக் குடித்தது மாதிரி அபரிமித வண்ணத்தோடு ஒரு மாலை நேரத்தில் பூத்தது. பக்கத்து வீடு, தெருவெல்லாம் பின்னர் விதை வாங்கிப் போனது. go-go விளையாட்டு மாதிரி ஒரு சிந்தனை இன்னொன்றை, அது இன்னொன்றை, இப்படியே கிளப்பிக் கிளப்பி, ஓடி ஓடித் துரத்தித் துரத்திக் கடைசியில் எதனைப் பிடிக்க இத்தனை ஓட்டம்?

1 comments:

said...

இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிப்புட்டேன். நான் நெனைக்கிறதையெல்லம் நீங்க லிட்மஸ் அது இதுன்னு வேதியியல் கலந்து எழுதி 'எண்ணத் திருட்டு' பண்றீங்க :-)