பொங்கும் பால்டிமோர்-2

இரண்டாவது நாளான ஞாயிறு. அமெரிக்காவின் சுதந்திர தினம். அன்று பல அமர்வுகள். ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல இடங்களில் வைத்திருந்தார்கள். ஒரு புறம் முதன்மை அரங்கில் அருண் சிதம்பரத்தின் "தமிழ், தமிழர் முன்னேற்றம்" உரை நிகழ்ந்த போது மறுபுறம் சிவகாமி பெண்ணுரிமையைப் பற்றிய கருத்தாடலில் இருந்தார், இன்னொரு பெரும் அறையில் வித்தைக்காரரொருவர் சின்னப் பிள்ளைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். பெரும் அறிவியல் மாநாடுகளில் இத்தகைய இணை அரங்குகள் நிகழ்வதை அறிந்திருப்பீர்கள். இது ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான இடத்தில் சென்று கண்டு மகிழ நல்லதொரு ஏற்பாடு.

இன்றைய முதல் நிகழ்வாக நான் சென்றது, "Internationally recognized short-films" என்ற குறும்படத் திரையீடு. சில வாரங்களுக்கு முன்னர் அருண் வைத்தியநாதன், பி.கே. சிவகுமார் ஆகியோர் நியூஜெர்சி சிந்தனை வட்டம் நடத்திய குறும்பட விழாவைப் பற்றி எழுதியிருந்தார்கள் அல்லவா? அதே இடத்திலிருந்துதான் பெட்டி வந்திருக்கிறது. மூன்று படங்களை மட்டுமே திரையிடப் போவதாகச் சொன்னார்கள். நியூஜெர்சிக்குச் செல்ல இயலவில்லையே என்ற ஆதங்கம் ஓரளவுக்குத் தணிந்ததாக நினைத்தேன்.

இதில் முதற்படம் ஆர்.புவனா அவர்களின் "தேடல்". நகரத்தில் வாழும் வேலைக்குச் செல்லும் தம்பதியினரும் அவர்களது இரண்டு புதல்வர்களையும் மையப் படுத்திய கதை. வேலை வேலை என்று ஒரே பரபரப்பாய் அலைவதில் குழந்தைகளின் குரல்களை, கேள்விகளைக் கண்டு கொள்ளாத எரிந்து விழும் பெற்றோர், ஒன்றுக்குப் பத்தாகக் கோள் மூட்டும் வேலைக்காரப் பெண், பள்ளியில் மதிப்பெண் ரீதியாகச் சந்திக்கும் சரிவுகள், இத்தனைக்கும் நடுவில் பரிணமித்திருக்கும் அண்ண்ன், தம்பி பாசம். அப்பாம்மாவின் எரிந்து விழல் சராசரிக்கும் சற்றே மிகையாகச் சித்தரிக்கப் பட்டாலும் இது போன்ற குடும்பங்கள் இருப்பது சாத்தியமே என்று தோன்றியது. ஒரு நாள் அழுத்தம் தாங்காமல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வராமல் ஓடிப் போகும் பிள்ளைகள். இந்த இடத்தில் அவர்கள் பார்க்கும் கழைக்கூத்தாடிகளின் வித்தைகள் நெஞ்சைத் தொட்டன. கயிற்றின் மேல் நடக்கும் ஒரு பெண். ஒருவனின் மோவாயில் தாங்கிய நீண்ட மூங்கில் தடியின் உச்சியில் அந்தக் கழியைக் கெட்டியாய்ப் பிடித்தபடியிருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தை. பாரமான காட்சி. அப்புறம் பயல்களைக் கண்டு விசாரித்து அழைத்துச் சென்று அவர்களைப் பத்திரமாய் அன்றிரவு காத்து, அம்மாப்பாவுக்குச் சொல்லி அவர்களுக்கும் அறிவுரை சொல்லி அனுப்பும் ஒரு அனாதை ஆசிரமத்துக் காரர். வாழ்க்கையில் பரபரப்பாய்த் தேடித் தேடி ஒரு நாள் திரும்பிப் பார்த்தோம் என்றால் எல்லாம் இருக்கும், நிம்மதி ஒன்றைத் தவிர என்ற முத்திரையுடன் இருந்தது படம்.

அடுத்து வந்தது "The Untouchable Country". சாதீயம் - இந்தியாவின் ஊரறிந்த ரகசியம்; அனுதினமும் தாழ்த்தப் பட்டோரில் இருவர் கொல்லப் படுகிறார்கள், மூன்று பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள், நால்வர் தாக்கப் படுகிறார்கள், இரண்டு வீடுகள் எரிகின்றன, என்ற அதிகாரபூர்வமான செய்திக் கட்டியத்துடன் ஆரம்பிக்கிறது படம். கீழ்ச்சாதிக் காரன் தொட்டால் நகராத கண்டதேவிக் கோயில் ரதம், ஆங்கிலேய அரசால் கொடுக்கப்பட்ட 11 ஏக்கர் பஞ்சமி நிலத்தைத் திருப்பிக் கேட்டதால் போலீஸின் துப்பாக்கிக் குடித்த உயிரிரண்டு, தாமிரபரணி ஆற்றினுள் விரட்டியடிக்கப் பட்டுத் தடியாலும், கற்களாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும், போலீஸ் கொன்று குவித்த பதினேழு தாழ்த்தப் பட்டோர், "நீ படித்திருந்தால் என்னடா, உன் அம்மா ஒரு பீ வாரும் தொழிலாளிதானே நீயும் அதையே செய்" எனும் ஊராட்சி அலுவலகங்கள். ஒவ்வொரு ஊரிடமும் ஆவுரித்துத் தின்னும் புலையனைப் பற்றிய கதையொன்றிருந்தது; அந்தக் கதைகளுக்குக் காரணமான மதத்தின் ஆழமான அடித்தளமும், தாங்குவதற்கு அதனோடு ஒன்றிணைந்த அதிகாரத் தூண்களும் இருந்தன. அடித்தளம் நெற்றியிலிருந்து பிறந்த மனுதர்மமாக இருந்தாலும் நெஞ்சிலிருந்து வந்தவனும் தொடையைப் பிளந்து வந்தவனும் காலிலிருந்து வந்தவனைத் துவைப்பதில் சற்றும் குறை வைப்பதில்லை. "எங்களுக்குன்னு என்ன இருக்கு இங்கே, நாங்கள்லாம் என்னத்துக்கு இந்த நாட்டில் இருக்கணும்?" - நெஞ்சுகளில் பொருத்தப் பட்டிருந்த காலர் மைக் அவர்களது குமுறும் இதயத்தை தெளிவாய்ப் பதிந்திருக்கின்றன. மதம் மாறுவதனால் தங்கள் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர்களையும் பார்த்தேன். கூட்டமாய் நின்று "நாங்கள் இந்துக்கள் இல்லை" என்று முழங்கும் போது அவர்களோடு நானும் நின்றேன். கண்ணீரை வரவழைப்பதோடு மட்டுமில்லாமல் சாதீய ஒடுக்கு முறைகளைச் சர்வதேச சமூகத்துக்குச் சொல்லும் பொறுப்பை உணர்த்தும் ஒரு படமாக உணர்ந்தேன்.

அடுத்த படம் என்னவென்றேன், "சென்னைப் பட்டணம்" என்ற சிரிப்புப் படம் என்றார்கள். இல்லை, நான் இந்த மனப்பாரத்துடனேயே வெளிச் செல்ல விரும்புவேன் என்று நினைத்துக் கிளம்பி விட்டேன். நேரே சிவகாமி இ.ஆ.ப அவர்களின் கலந்துரையாடலுக்குச் சென்றேன். பெண்ணுரிமைதான் தலைப்பு என்றாலும் வந்திருந்த கூட்டம் அவரைத் தலித்தியத்துக்கே இழுத்துச் சென்றது. இது வந்திருந்தோரின் சாதீய உடைப்பின் மேலிருந்த அக்கறையைக் காட்டுவதாயிருந்தது. கேள்விகளைக் கேட்டு எழுதிக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தார். இட ஒதுக்கீட்டினால் பயனடைந்தார்களா, சாதிகளை ஒழித்தால் இட ஒதுக்கீடும் ஒழிந்து விடுமா, தலித்திய அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள், அரசாங்கம் ஆதி திராவிடக் கல்விக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது, உங்கள் வீட்டில் உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதா என்பன போன்ற கேள்விகள். அவரது பதில்களின் சாரம்: இட ஒதுக்கீட்டில் 18% தாழ்த்தப் பட்டோருக்கும் 1% பழங்குடியினருக்கும். இது அரசுத்துறையில் மட்டும். இது வரை C என்ற அடித்தளத்திலும் (அதாவது அலுவலகத் துப்புரவாளர் போன்ற பணிகள்), B என்ற சற்றே உயர்ந்த தளத்திலுமே பதவிகள் நிரப்பப் பட்டுள்ளன. A பிரிவு உயர் பதவிகள் பெரும்பாலும் நிரப்பப் படாமலேயே இருக்கின்றன. ஆதி திராவிட நலத்துறை கல்விக்காக ஆண்டுக்கு 1600 கோடி பெற வேண்டும். இதில் 200 கோடிக்கூடக் கிடைப்பதில்லை. எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. உயரதிகாரிகளாக, ஊர்த்தலைவராக இருந்தாலும் சாதியின் அடிப்படையில் சிறுமைப் படுத்தப் படும் போக்கு. தனியார் நிறுவனங்கள் சாதீய நிறுவனங்களாக மாறிய அவலம் (உதாரணமாக தி இந்து பத்திரிகையிலோ, அல்லது தினத்தந்தி போன்ற பத்திரிகை அலுவலகங்களிலோ பெரும்பாலான பதவிகள் அந்தந்த சாதிக் காரர்களுக்கே!). இட ஒதுக்கீடு என்பது சலுகை இல்லை, உரிமை. அவர்களுக்கு இத்தனைக் காலம் இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கான ஈடு. ஒரே நிலையிலிருந்து நாம் மேலும் பயணிக்க ஒரு ஏற்பாடு. இதைத் தவிர சாதிச் சான்றிதழுக்கு எந்தப் பயன்பாடும் இருக்கலாகாது. தலித்தியத் தலைவர்கள் முக்கியமான பிரச்சினைகளை விடுத்துத் தனித் தமிழ்நாடு போன்ற முழக்கங்களை முன் வைத்துப் போராட்டத்தை திசை திருப்புவது வேதனைக்குரியது. தேவையெனில் தாழ்த்தப் பட்டோர் தாம் தமிழர் என்ற அடையாளத்தைக் கூட இழக்கத் தயாராகி விடுவர். கல்விக்கு முன்னுரிமையும், கற்றுக் கொடுக்கப் படும் பாடங்களில் உண்மையும் இருக்க வேண்டும். பாடத்திட்டங்களில் மறு சீரமைப்பு வேண்டும். இவ்வாறு பலவற்றையும் நெஞ்சிலே சுமத்தி விட்டார்.

பிரபஞ்சனை வழியில் கண்டு, புகைப்படமெடுத்து, பேசி, அவருடனே நடந்து அவருடைய கலந்துரையாடலுக்குச் சென்றேன். என்னைப் பற்றியும், வலைப்பூக்களைப் பற்றியும் சொன்னேன். அவரது அருகாமையில் ஏதோ ஒரு தெளிவு இருந்தாற் போலிருந்தது, பிரமையாகக் கூட இருக்கலாம்! தன்னைச் சுருக்கமாக அறிமுகப் படுத்திக் கொண்ட பின்னர் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்திக் கொள்ளச் சொன்னார். அப்போது 20 பேர் இருந்திருப்பார்கள். பின்னாலும் ஒரு 20 பேர் வந்து கலந்தனர். கதைகளைப் பற்றித்தான் இவர் நிறைய பேசினார். கதையை எழுதுவதையும், படிப்பதையும் விடச் சொல்வதும் கேட்பதுமே நன்று என்றார். அப்படித்தானே கதைகள் தோன்றின என்றார். கதைக்கு வர்ணனை தேவையா, கதையிலே என் சொந்தக் கதையை எப்படி எழுதுவது, ஒரு நல்ல சிறுகதை என்றால் என்ன? கேள்வியும், பதிலும், பதிலில் ஒரு கதையுமாக இருந்தது அந்தக் கலந்துரையாடல். வர்ணிக்கலாம், சாண்டில்யனைப் போலிருக்கக் கூடாது. அந்த அறையில் ஒரு துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று எழுதினால், கதை முடியுமுன் அது வெடிக்க வேண்டும் என்று யாரோ சொன்னதைச் சொன்னார். 1000 சிறுகதைகளைப் படித்தால் 1001வது உன்னுடையதாக இருக்கும். அந்தளவுக்கு வாசிக்கணுமாம். ஒரு நல்ல சிறுகதையைப் படித்து முடிக்கும்போது நீ ஒரு இஞ்ச் உயர்ந்திருப்பாய். உங்கள் அந்தரங்கத்தையோ உங்களின் நண்பர்களின் அந்தரங்கத்தையோ தவிருங்கள். அல்லது அப்படியே எழுதினால் அந்தக் கதையில் நீங்களோ உங்கள் நண்பர்களோ இருக்கக் கூடாது. உங்களுக்கும் உங்கள் எழுத்துக்கும் இடையில் இடைவெளி இல்லாமலிருப்பது எழுத்திற்கு நிலைத் தன்மையைக் கொடுக்கும். வந்திருந்தோரை வைத்து ஆளுக்கொரு வரியாய்ச் சொல்லி ஒரு கதையை எழுத ஆரம்பித்தார். நேரம் போதவில்லை, நாளை எழுதி வந்து தாருங்கள் என்றார்.

பின்னர் நான் முதன்மை அரங்கில் நுழைந்த போது நர்த்தகி நடராஜன் ஆடிக் கொண்டிருந்தார். அது முடிந்து ஒரு பட்டி மன்றம். முனைவர் சுந்தர ஆவுடையப்பன் நடுமையில். "தமிழ்ப் பண்பாடு அதிகம் தழைப்பது தாயகத்திலா, அயலகத்திலா?". அணிக்குத் தலா மூவர், அமெரிக்கவாசிகள். விருந்தோம்பும் பண்பு இங்கில்லை, பொது இடங்களிலெல்லாம் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள், கலாச்சாரம் சீரழிந்து கிடக்கிறது, ஊரிலே போய்ப் பாருங்கள் விருந்தோம்பலை, குணத்தை, பண்பாட்டை. ஆகவே தமிழ்ப் பண்பாடு அங்குதான் வாழ்கிறது என்றது தாயகத்திலே அணி. அட போங்கப்பா, நம்ம ஊரு சினிமாவிலே இல்லாத சீரழிவா, பெண்மையை இந்த ஊரிலாவது சற்றேனும் மதிக்கிறார்கள், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச வசதிகளையும் கொண்டு இத்தனைப் பண்பாட்டுச் சின்னங்களையும் காப்பாற்றி வருகிறோமே, இந்த அயலகத்திலேதானய்யா தமிழ்ப் பண்பாடு தழைக்கிறது என்றது அயலகத்திலே அணி. சிரிக்கச் சிரிக்கப் பேசிய ஆவுடையப்பனும் கடைசியில் அயலகத்துக்கே வெற்றியளித்தார்.

பெரும் ஆரவாரத்துக்கிடையே தோன்றி, இந்த ஊர் அமைப்பாளர்களைப் போலப் பேசிக் கடைசியில் தன்னுடைய படங்களிலிருந்து துண்டு துண்டாய் வெட்டியெடுத்து வந்து போட்டு, நடு நடுவில் மேடையில் தோன்றிச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி ரசிக்க வைத்தார் விவேக். how come you are so funny? என்றது ஒரு பொடிசு. I have to ask my papa and mama என்றார் விவேக். ஏன் ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுகிறீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு மழுப்பலாக, நானாவது இரட்டைதான், சில பேர் பல அர்த்தங்களோடு பேசுகிறார்கள், மேலும் அவன் பல கோடிகள் கொட்டிப் படமெடுக்கிறான், சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது என்றுவிட்டுப் போனார். தமிழ் என் உயிர், ஆறு கோடித் தமிழர்களும் என் நெஞ்சில் என்று வசனித்தார். இது முடியும் வரை பலராலும் என்னாலும் இருக்க முடியவில்லை. சாப்பிட்டுக் காரைக் கிளப்பிக் கொண்டு திரும்பனுமே, கிளம்பினோம்.

இதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறையென்பதால் சில நிகழ்ச்சிகள் இருந்தனவென்றாலும், அதற்கோ அல்லது தொடக்க நாளான வெள்ளிக்கிழமையன்று நடந்த சில நிகழ்ச்சிகளுக்கோ என்னால் செல்ல இயலவில்லை. அதே போல் இணை அரங்குகளை நான் சரியாக ஒத்திசைத்துக் கொள்ளாததால் தவற விட்டதில் முக்கியமான ஒன்று சம்பந்தனின் கலந்துரையாடல். ச்சை! திரும்ப வேண்டி இருந்ததால் கேட்க முடியாமல் போனது ஜாஸ்பர் ராஜின் உரை.

கிட்டத்தட்ட 1500-2000 பேர் வந்திருக்கலாம். பெரும்பாலானோர் 20-40 வயதினர். ஈழம், தமிழகம் இரண்டிலுமிருந்து வந்திருந்தது கூட்டம். பல மதத்தினரும் இருந்தார்கள் ஏனெனில் நான் சில முஸ்லிம், கிறிஸ்தவர்களையும் கண்டேன். மொழியை முன்னிருத்தி ஒரு விழா எடுக்கும் போது மத சம்பந்தமான (அது பெரும்பான்மையானவருடையதாக இருந்தாலும் சரி) கலைகளை ஊக்குவிப்பது ஆரோக்கியமற்றது என்று தோன்றியது. இளையர்களும், பதின்ம வயதினரும் கணிசமானோர். சென்ற ஆண்டிலிருந்து ஒற்றையர் சந்திப்பும் மாநாட்டின் ஒரு அங்கம். இது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர. விழா Morgan State Universityயில் நடைபெற்றது. அரங்கம், வாகன நிறுத்தம், கழிப்பறைகள், உணவருந்துமிடம் போன்ற அடிப்படை வசதிகள் நன்றாக இருந்தன. பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் கண்காட்சி நடத்தினர். புத்தகம், நகை, புடவை, பாத்திரம் விற்பனை அமோகமாக நடந்தது. நம் வலைப்பூவர்கள் யாரையும் நான் சந்திக்கவில்லையென்றுதான் நினைக்கிறேன்! வேறு யாரும் இது பற்றிப் பதிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்.

பல நாள் பட்டினிக்காரன் பட்சணக் கடைக்குள் புகுந்தது மாதிரி இரண்டு நாட்களும் தேமதுரத் தமிழோசையைப் பருகிவிட்டுப் பல எண்ண அலைகளுடனும், பாரதியின் படம் போட்டு "மனதில் உறுதி வேண்டும்" வாசகம் பொறித்தவொரு சட்டையுடனும், சில புத்தகங்கள், குறுந்தகடுகளுடனும் பால்டிமோரை விட்டுக் கிளம்பினேன். உனக்கொரு நன்றி FETNA, அடுத்த வருடம் உன்னைச் சந்திக்கிறேன்!
(இத்துடன் பொங்கும் பால்டிமோர் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது, நன்றி, வணக்கம்!!)

18 comments:

said...

The reports that I receive from many people who attended the FetNA 2004 say that the first day crowd would be at the maximum 900 to 1000 and the second day crowd would be at the maximum 1200. Last Year in NJ the second day crowd surpassed 1600 and these people feel that it did not meet last year attendance. Thanks, PK Sivakumar

said...

Sivakumar, Thank you for your valuable input. The auditorium has the capacity for more than 2000 people. See this website: http://www.murphyfineartscenter.org/gilliam_hall.htm
During Sambandham's speech and Vivek's program the auditorium was full. There were always about 100-200 people hanging around outside. My judgement relies on my visual estimation. I believe the people who gave you the information also relied on the same. A better way to know the exact number of participants is to ask someone in FETNA! (www.fetna.org). Anyone is welcome to enquire this and let us all know!!

said...

I dont know if FetNA has the habit of putting his records open before the general public (that includes attendance,fund collection, how funds were spent, how much was paid on expenses etc.) If FetNA does that (or atleast send its income/expense statement to all attendees, that would answer all our perceptions and questions :-) For example, last year, I attended FetNA and also was a donor, but I never received any statement containing the above. That made me write this. Anyway, FYI, even 4 days before FeTNA there were emails sent to my friends here asking for their help in enrolling more people as registrations were very less. However, if FetNA announces officially how many people attended, how much collected on registration etc, it will be good. Also, please ask them how much they paid for Untouchable Country that you liked most and how much they paid for commercial movie artists :-) Thanks, PK Sivakumar

said...

Dear Sundar,
Greetings. Read the full coverage on FETNA,Good write up!.Iam glad that they have recognised short films in that function. You missed Chennai pattanam, which was a good one. It is humerous but at the same time, it was thought provoking too! I have different views regarding some of the things (which i dont want to discuss and end up in a fight :-) )..anyway one small issue, why everytime somebody cancels their participation at the last moment. For example, The previous time when it was conducted in NJ, they announced actor Madhavan will be attending the function and he cancelled at the last minute for unknown reasons. This time they announced actress abirami will be attending the function but I heard that Abirami backed out by not participating in the function. Why ..such a big function with lot of planning on various things were not able to bring the celebrities as advertised? Some people might say, after all 'why should we care about some movie celebrities who doesn't show up?'. If we think that way, why should they even advertise that actors and actresses will be attending that function?

said...

Arun, the way it works while inviting cine artists is that - through a middleman in chennai they approach the artists and get their approval. I think, there is a contract that is signed once the artist agrees to participate. I dont know the details and points in the contract, but I am sure it is prepared by someone who knows the law and is enforcable. So, if the cine artist is not attending even after agreeing in writing then one of the following could be the reasons. 1.) The organizers advertise artists whose participation is not confirmed to attract crowd participation. If the artist is aware of it, they could take legal action. However, most may not. 2.) The artist agrees to attend but fails to attend. In such case, the organizers can claim for damages with the artist and mostly they may not. However, because of these loose handling of such things, the crowd which comes with the hope that they will be seeing their favorite artist is disappointed and nobody really cares to provide any explanation for that. I dont know if FetNA audience were informed about why Abirami did not attend this year, but for last year none of the organizers gave any answers for why Madhavan could not attend. That makes this whole thing fishy and as a layman one may suspect that organizers do some tricks to attract more crowds. Thanks, PK Sivakumar

said...

Why dont you both ask these questions to FETNA and deal with them?!!!!

said...

Sundar, I thought a person who sings glorious tunes to fetna will be happy to know and face these questions. Actually, these are not infact questions to you. I feel you have given one sided story about fetna. So, I thought its my duty to bring out other questions too. I thought you will appreciate me for this Periyar way of questioning. Guess, you will appreciate only if Periyar or periyarists question :-) I can understand it. Dont worry, I dont need answers for the quetions. I will not be surprised if these comments were deleted later on due to some accident too :-) Thanks for letting me say my views, PK Sivakumar

said...

Sundar, I thought a person who sings glorious tunes to fetna will be happy to know and face these questions. Actually, these are not infact questions to you. I feel you have given one sided story about fetna. So, I thought its my duty to bring out other questions too. I thought you will appreciate me for this Periyar way of questioning. Guess, you will appreciate only if Periyar or periyarists question :-) I can understand it. Dont worry, I dont need answers for the quetions. I will not be surprised if these comments were deleted later on due to some accident too :-) Thanks for letting me say my views, PK Sivakumar

said...

Dear Sundar,
Since you appreciated lot of things about FETNA, i just wanted to question some of their contradictions and some complaints i heard about the same function. When i write something good about X or Y, people will definitely ask questions about X or Y. Can I ask them to deal with X or Y directly instead of posting comments about them. Anyway, I dont want to ignite a never ending argument here.

said...

சென்றமுறை மாதவன் இந்த கூட்டத்துக்கு வருகிறார் என்ற உடனேயே அவர் புலிகளின் ஆதரவு கூட்டத்திற்குப் போவதாக டைம்ஸ் ஆப் இண்டியாவும் சில பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன. அதற்குப்பின்னும் அவர் வருவதற்கு என்ன பைத்தியமா? பிறகு அதே புலிகள் ஆதரவு கூட்டத்தில்தான் இந்திய குடியரசுத் தலைவர் உரையாற்றினார் (டெலி கான்பரன்சிங்கில்). நேர்மை, அன்பு இவையெல்லாம் வெறும் கொள்கைகளோ கருத்துக்களோ, நம்பிக்கைகளோ இல்லை நண்பா, அது ஒருவரது இயல்பாக இருக்கவேண்டும். நன்றி சுந்தர், இந்தப் பதிவுக்காகவும் மேலும் எனது சில ஊகங்களை உறுதிப்படுத்தியமைக்காகவும்....

said...

அன்பின் சுந்தர்:
அருமையான பதிவு.
" உன் அம்மா ஒரு பீ வாரும் தொழிலாளிதானே " இது தொடர்பான மற்றோர் படத்தை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அதை பற்றி அப்புறம் விவரமாக எழுதுகின்றேன்.
இத்தகைய விசயங்கள் பேசப்பட வேண்டும். FETNA-வில் திரையிடப் பட்டது குறித்து மகிழ்ச்சி.
பிரபஞ்சன் அவர்களுடன் உரையாடிய தகவல்களை தனிப்பதிவாக எழுத இயலுமா?.
நீங்கள் பார்வையாளராக மட்டுமே பங்கு பெற்ற இவ்விழாவை குறித்து தகவல் தந்தமைக்கு நன்றிகள்.
அன்புடன்
பாலாஜி-பாரி

said...

Thangamani, Last year when President of India Honorable Abdul Kalam spoke through video conference in FeTNA 2003, we could figure out from his speech that he thought all audience were Indian Tamils. This is FYI. - Thanks, PK Sivakumar

said...

Good!
Arun and Sivakumar, based on my earlier experiences I dont feel like arguing to prove/disprove anything because I know it is waste of my time. Let people know who is who. So I stop it here.
Sayyid Abu, thank you for your inputs, I will read them and improve my knowledge.
தங்கமணி: //நேர்மை, அன்பு இவையெல்லாம் வெறும் கொள்கைகளோ கருத்துக்களோ, நம்பிக்கைகளோ இல்லை நண்பா, அது ஒருவரது இயல்பாக இருக்கவேண்டும்// நன்றி :)
பாலாஜி: //இத்தகைய விசயங்கள் பேசப்பட வேண்டும்.// செய்வேன். பிரபஞ்சனின் உரையைப் பற்றி இன்னும் எழுத விருப்பந்தான். முயல்கிறேன்.
வாசன்: நன்றி, என் வேலையை ஒழுங்காகச் செய்த நிறைவு ஏற்படுகிறது.

said...

//அடித்தளம் நெற்றியிலிருந்து பிறந்த மனுதர்மமாக இருந்தாலும் நெஞ்சிலிருந்து வந்தவனும் தொடையைப் பிளந்து வந்தவனும் காலிலிருந்து வந்தவனைத் துவைப்பதில் சற்றும் குறை வைப்பதில்லை.// அருமையான தமிழின் நெளிவு.

//"நாங்கள் இந்துக்கள் இல்லை" என்று முழங்கும் போது அவர்களோடு நானும் நின்றேன். // உணர்ந்துகொள்ள முடிகிறது.

சிறப்பான பதிவுக்கும், ரிப்போர்ட்டர் வேலைக்கும் வாழ்த்துக்கள்

said...

நன்றி கார்த்திக்!

said...

Dear Sundar,
Even when i started to post my comments in this 'FETNA' article, I stated 'I dont want to ignite a never ending argument here'. I just wanted to question the other side of it. If you dont want to discuss about it or even if you dont like it, its very much fine with me. Regarding 'Let people know who is who'...yes, i totally agree. We report, let people decide. Have a good day!

said...

இட ஒதுக்கீடு குறித்தான எதார்த்த நிலை அச்சுறுத்துகிறது: 1.தலித் மக்களை மட்டுமே கருத்தில் கொண்டால் கூட அவர்களுள் வசதி படைத்தவர்கள், முன்னேறியவர்கள் தான் இட ஒதுக்கீட்டால் பயனடைகிறார்கள். உண்மையிலேயே இட ஒதுக்கீடு தேவைப்படும் ஏழைகளுக்கு அது மறுக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் இதற்காகத்தான் பொருளாதார வரையறை கொண்டு வந்தார். ஒரு தேர்தல் அவரை அச்சுறுத்தி அந்த நல்ல கொள்கையிலிருந்து பின்வாங்கச் செய்துவிட்டது. 2. பொய்யான சாதிச் சான்றிதழ் வாங்கி இட ஒதுக்கீட்டால் பயனடையும் திருடர்களைக் கண்டறியும் வழி முறைகள் ஏதுமில்லை.

said...

ஆச்சிமகன், ஆமாம், அது அச்சுறுத்தத்தான் செய்யும். ஏனென்றால் பணம், பதவி, ஊடகம், ஆட்கள் போன்ற எந்தப் "பெரும் பலமும்" இல்லாத வறியவர்களுக்கு அரசாங்கப் பணத்தை/திட்டத்தை ஒழுங்காகக் கொண்டு செல்வதென்றால் கஷ்டந்தான். ஆத்துப் பாலத்திலிருந்து சுடுகாட்டுக் கொட்டகை வரை மாதிரி இதிலும் வழிப்பறிகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் கஷ்டத்தைப் பார்த்துச் செய்யாமலேயே விட்டுவிட்டால் விளைவுகள் இன்னும் மோசமாகவே செய்யும். ஏனென்றால் இப்போது அவர்கள் விழித்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள் என்று அந்தப் படமும், கலந்துரையாடலும் முகத்திலடித்துச் சொன்னது. உங்கள் பகிர்தலுக்கு நன்றி!