1. போன பதிவில் இருக்கும் விபரங்களோடு மறுமொழிகளில் இருப்பவற்றை இணைத்து, சில மாற்றங்களைச் செய்து கீழ்க்கண்டது போலொரு கடிதத்தை அதில் குறிப்பிடப் பட்டிருப்பவர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்பப் போகிறேன். இதை pdf கோப்பாக அனுப்ப இருப்பதால் எந்தக் கணினியில் வேண்டுமானாலும் திறக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களில் விரும்புபவர்களுக்கு Word/pdf கோப்புக்களை அனுப்புவேன். இத்தோடு அமெரிக்கப் பள்ளிகளில் கடைபிடிக்கப் படும் தீப் பாதுகாப்பு விதிமுறைகளைத் தமிழ்ப் படுத்தி அனுப்புவதாகச் சொல்லியிருந்தேன். கடந்த இரண்டு நாட்களில் நம் அரசிடம் போதுமான விதிமுறைகள் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். மேலும் இந்த ஊர் விதிமுறைகள் இங்கிருக்கும் பள்ளி, சமூகச் சூழலுக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாகத் தீ மணியை எப்படி அடிப்பது என்பதை மணி இருத்தும் வரை சொல்லி என்ன பயன்? எனவே அதைச் செய்யவில்லை. (மனுநீதிச் சோழனின் காலத்திலாவது ஆராய்ச்சிமணி இருந்திருக்கிறது, அது போல் ஒரு மணி, ஆபத்துக்கு அடிக்கிற மாதிரி ஒரு வெண்கல மணியாவது எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் கூடாதா?).
2. மரத்தடியின் அறக்கட்டளை முயற்சி முன்னெடுத்துச் செல்லப் பட வேண்டியது. தனியே ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி நிர்வகிப்பதைக் காட்டிலும், திரட்டப் படும் நிதியை இன்ன காரணத்துக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு குறிப்புடன் ஏற்கெனவே இயங்கும் நடுநிலைமையான சமூக அமைப்புக்களிடம் தரலாம். இதற்கு என் நிதி ஒத்துழைப்பை அளிப்பேன். நிதியுதவிகள் எந்தக் காரணத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதில் எனக்கிருக்கும் எண்ணங்கள்: முதலில் நானும் கூரை, தீ வாளி, தீயணைப்புக் கருவி என்றுதான் நினைத்தேன். ஆனால் நெடுங்கால நோக்கில் இவை நமத்துப் போகும் என்ற ஐயம் எனக்குண்டு. இதற்கு மாற்றாக இப்படிச் செய்யலாம். மக்களிடம் இருக்கும் பெரிய வசதிக் குறைவு தகவல் இல்லாமை. உதாரணமாக, ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று அரசு சொல்வது மக்களுக்குத் தெரியாது. ஒரு பள்ளி ஆய்வாளரின் பணி என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. இதை அடுக்கிக் கொண்டே எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வேலைகள் வரை கொண்டு செல்லலாம். நமக்கும் நம் பொதுமக்களுக்கும் சட்ட திட்டங்களைப் பற்றிப் பெரிதாய் ஒன்றும் தெரியாது. அரசாங்கத்தைப் பற்றியும், அரசு விதிமுறைகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்வார்கள். தமக்குச் சேர வேண்டியது கிடைக்காத இடங்களில் ஏன் என்று கேள்வி எழுப்புவார்கள். இதற்கு முதலில் தமக்கு இந்த அரசாங்கம் எதைக் கொடுக்கும்படி அரசியலமைப்புச் சட்டங்கள் பணித்திருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். இத்தகைய விதிமுறைகளைத் தமிழில் சுருக்கமாக அச்சிட்டு எல்லா ஊர்களிலும் இருக்கும் நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும், இளைஞர் மன்றம், நடிக/நடிகையர் நற்பணி மன்றம் போன்றவற்றுக்கும் அனுப்பிப் பரப்பலாம். பதவியேற்கும் கட்சிகள் எந்தச் சட்டங்களை நிறைவேற்றப் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தாலே இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம். அரசும் இத்தகைய சட்டங்களை மக்களுக்கு அறியத் தர வேண்டும். நேற்று என் நண்பன் தங்கமணியோடு பேசிக்கொண்டிருந்த பின்னால் முழு உருப்பெற்றது இக்கருத்து.
தமிழகக் கல்வித் துறைத் தொடர்புக்கு நன்றி: ஷக்தியின் மடல்
(சீமாச்சுவின் மரத்தடி மடலின் தலைப்போடு பொருந்துவது தற்செயலாக நடந்தது!)
கடிதம்:
மதிப்பிற்குரிய கல்வித் துறை/தீயணைப்புத் துறை அதிகாரியவர்களுக்கு,
வணக்கம்.
நான் அமெரிக்காவில் ஏல் (Yale) பல்கலைக் கழகத்திலொரு ஆராய்ச்சியாளனாக இருக்கிறேன். தமிழில் இணையத்தின் (internet) மூலம் எழுத்து முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் என்ற முறையில், ஒரு சமூகக் கடமையாகக் கருதி இக்கடிதத்தை எழுதுகிறேன். கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு அரசு எடுத்து வரும் துரித நடவடிக்கைகளுக்கு என் நன்றி. பள்ளிகளில் இத்தகைய விபத்துக்கள் நடப்பதைத் தவிர்க்க நம் அரசும், பொறுப்பான துறைகளும் நீண்ட கால நோக்குடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், எனையொத்த நண்பர்களின் குரலாய்க் கீழ்க்கண்ட கருத்துக்களை முன் வைக்கிறேன். இவற்றை நிறைவேற்றுவதில் உங்கள் துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்:
இவ்விதிமுறைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிற்குமானவை.
1. மக்களிடம் இருக்கும் பெரிய வசதிக் குறைவு தகவல் இல்லாமை. உதாரணமாக, ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று அரசு சொல்வது மக்களுக்குத் தெரியாது. ஒரு பள்ளி ஆய்வாளரின் பணி என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. இத்தகைய அரசு விதிமுறைகளை மக்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்வார்கள். தமக்குச் சேர வேண்டியது கிடைக்காத இடங்களில் ஏன் என்று கேள்வி எழுப்புவார்கள். இதற்கு, முதலாவதாகத் தமக்கு இந்த அரசாங்கம் எதைக் கொடுக்கும்படி அரசியலமைப்புச் சட்டங்கள் பணித்திருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். இத்தகைய விதிமுறைகளைத் தமிழில் சுருக்கமாக அச்சிட்டு எல்லா ஊர்களிலும் இருக்கும் நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும், இளைஞர் மன்றம், நடிக/நடிகையர் நற்பணி மன்றம் போன்றவற்றுக்கும் அனுப்பிப் பரப்ப வேண்டும். பதவியேற்கும் கட்சிகள் எந்தச் சட்டங்களை நிறைவேற்றப் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தாலே இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம். அரசும், தன்னார்வ அமைப்புகளும் இத்தகைய சட்டங்களை/விதிமுறைகளை மக்களுக்கு அறியத் தர வேண்டும்.
2. பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையில் படும்படியான இடங்களில் கட்ட வேண்டும்.
3. ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழை வாயில்கள் இருக்க வேண்டும்.
4. அந்தப் பகுதியின் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு எந்திரங்கள் சென்றடையக் கூடிய பாதை வசதி ஒவ்வொரு வகுப்பறைக்கும் இருக்க வேண்டும்.
5. அந்தப் பகுதித் தீயணைப்புத் துறையினரின் அனுமதியைப் பெற்ற பிறகே ஒரு பள்ளி ஆரம்பிக்கப் பட வேண்டும். புதுக் கட்டிடம் கட்டப் படும் பட்சத்தில் அந்தக் கட்டிடமும் நெறிமுறைகளுக்கு ஒத்து இருக்கிறதா என்பதைத் தீயணைப்புத் துறை சான்றளிக்க வேண்டும்.
6. ஒவ்வொரு வகுப்பறையிலும் போதுமான அளவு வாளிகளும், அவற்றில் மணல், தண்ணீர் போன்றவை எப்போதும் நிரப்பப் பட்டிருக்க வேண்டும்.
7. ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று "மாதிரிச் சோதனை" நடத்த வேண்டும். இத்தகைய சோதனைகளில் எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த வாயிலின் வழியே வெளியேற வேண்டும் என்று கற்பிக்கப் பட வேண்டும்.
8. அந்தந்த வட்டாரத் தீயணைப்புத் துறையினர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்ட வேண்டும், தீயணைப்புக் கருவிகளைப் பற்றிச் சொல்லித் தர வேண்டும், தீ விபத்துக்களைப் பற்றிய சிறிய திரைப் படங்களைத் திரையிட வேண்டும்.
9. மழலைப் பள்ளிகளை அடுக்கு மாடிக் கட்டிடங்களில் அமைக்கக் கூடாது.
10. தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஆசிரியர்களுக்குப் போதிக்கப் பட வேண்டும். அவர்கள் மாணவர்களைப் பாதுகாப்புடன் வெளியேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்த பின்னரே தாம் வெளியேறுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
11. உயர் வகுப்பு மாணவர்கள் மழலை வகுப்பு மற்றும் ஊனமுற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும்படி சொல்ல வேண்டும்.
12. பதின்மூன்று வயதுக்குக் குறைந்த மாணவர்கள் இருக்கும் வகுப்புக்கள் ஆசிரியரின் துணையின்றி இருக்கக் கூடாது.
13. காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்பட வேண்டும்.
14. மதிய உணவு சமையற்கூடங்களை வகுப்பறைகளை ஒட்டி அமைக்கக் கூடாது. இத்தகைய சமையற்கூடங்களிலும் தீயணைப்பு வாளிகளும் அவற்றில் தண்ணீர், மணல் போன்றவையும் நிரப்பபட்டுமிருக்க வேண்டும்.
15. ஓலை, மரம் போன்றவற்றையோ அல்லது எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களையோ பள்ளி வளாகத்தினுள் கிடத்தக் கூடாது.
16. ஒவ்வொரு மாதமும் வருவாய்/பொதுப்பணித்துறை ஆய்வாளர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்கிருக்கும் பாதுகாப்பு முறைகளை ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும்.
17. தீ விபத்து தடுப்பு மட்டுமின்றி ஒட்டு மொத்தமாகக் குழந்தைகளின் நலம் பள்ளிகளில் பேணப்பட வேண்டும். பல பள்ளிகள் கழிப்பறை வசதியின்றி சுகாதாரக் கேடான சூழலில் நடக்கின்றன. சாப்பாட்டுக்குப் பிறகு கை கழுவக் கூடப் பல பள்ளிகளில் குழந்தைகள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டியுள்ளது. சத்துணவுக் கூடங்களில் உணவு தூய்மையாகத் தயாரிக்கப் படுவதில்லை. பல்லிகளும் பூச்சிகளும் விழுந்து குழந்தைகள் மயக்கமடைவது தொடர்கதை. சுற்றுலா செல்வதும் அதில் தவறுகள் ஏற்பட்டுக் குழந்தைகள் பாதிப்படைவதும் அவ்வப்போது நடைபெறும் செய்தி. கண்மூடித் தனமான பணிவை மட்டுமே நம் குழந்தைகளிடம் வளர்க்கிறோமோ என்ற அச்சம் நிலவுகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளித்து அவை மாதம் ஒருமுறை கூடிப் பிரச்சினைகளை தீர்வு காண்பதை கட்டாயமாக்க வேண்டும். இந்த சங்கங்களில் ஊர்ப் பெரிய மனிதர்களும் படித்த பழைய மாணவர்களும் உறுப்பினராக வேண்டும். இந்தக் கூட்டங்களில் கல்வி அதிகாரிகளையும் கட்டாயமாகக் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
18. பள்ளிகள் (குறிப்பாக தனியார்) வியாபார நோக்கில் செயல்படுவதாலும், அதிக கட்டணங்களை வசூலிப்பதனாலும் அவற்றை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவருதல் இயலுமா என்று பரிசீலிக்க வேண்டும்.
19. நடைமுறையில் இருக்கும் பள்ளி மற்றும் பொது இடப் பாதுகாப்புக்கான சட்டங்களை முறைப் படுத்தப் படவும், பின்பற்றப் படவும் வேண்டும். விதிமுறைகளில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களைப் பொதுமக்களுக்கு அறியத் தர வேண்டும்.
கடந்த இரண்டு மூன்று தினங்களில், மேலே தெரிவிக்கப்பட்ட யோசனைகளில் சில தமிழக அரசினால் அறிவிக்கப் பட்டும், செயல்படுத்தப் பட்டும் வருகின்றன. இவற்றைச் செம்மைப்படுத்தி/முறையே செயல்படுத்தி மாணவர்களையும், பொதுமக்களையும் காக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
பா. சுந்தரவடிவேல், PhD
நகல்கள்:
திரு. இந்தியக் குடியரசுத் தலைவர் presidentofindia@rb.nic.in
தமிழகக் கல்வித் துறை
திரு K. ஞானதேசிகன், செயலர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
schsec@tn.gov.in
திரு R. கண்ணன், இயக்குனர், ஆரம்பக் கல்வி dee@tn.nic.in
திரு S. சந்திரசேகரன், மாநிலத் திட்ட இயக்குனர், மாவட்ட ஆரம்பக் கல்வித்
திட்டம் dpep@tn.nic.in
திரு R. பரமசிவம், இயக்குனர், பள்ளிக் கல்வி dse@tn.nic.in
திரு R. நாராயணசாமி, இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் dse@tn.nic.in
திரு P. சௌந்தரராஜன், இயக்குனர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
dtert@tn.nic.in
திரு C. பழனிவேல், இயக்குனர், அரசுத் தேர்வு dge@tn.nic.in
திரு பீர் மொஹிதீன், இயக்குனர், முறைசாரா மற்றும் முதியோர் கல்வி
dnfae@tn.nic.in
திருமதி தங்கம் சங்கர நாராயணன், தலைவர், ஆசிரியர் பணியமர்த்து வாரியம்
trb@tn.nic.in
திரு R.K. கண்ணா, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
tbc@tn.nic.in
திருமதி S. லக்ஷ்மி, இயக்குனர், பொது நூலகம் dpl@tn.nic.in
தமிழகத் தீயணைப்புத் துறை
திரு S.K. டோக்ரா, இயக்குனர், தீ மற்றும் காப்பாற்றும் சேவைகள்
dir_tnfrs@hotmail.com
அலுவலகம் fireserv@tn.nic.in
என்ன செய்யப் போகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நான் இதை வேறமாதிரி பார்க்கிறேன் விசு. மக்களுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி அவர்களது உரிமைகளைப் பற்றிய அறிவை வழங்குவதுதான். அது ஒன்றே ஊழலை குறைக்க, அவர்களுக்குரிமையானதைப் பெற தேவையான அதிகாரத்தை அவைகளிடமே இருத்தும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் 2000 வருடங்களாக நாம் மக்களுக்கு அவர்களது உரிமைகளைப் பற்றிய அறிவை அவர்கள் பெறுவதில் இருந்து அவர்களை தடுத்து வைத்திருக்கிறோம். இதன் மூலமாக அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட ஜாதிகளில் (இப்போது வர்க்கங்களில்) குவிக்கவும், பலரை அடிமைகளாக வைத்திருக்கவும் முடிந்தது. மக்கள் தமது உரிமைகளைப் பற்றிய அறிவில்லாததால் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவே ஊழலின் ஊற்றுக்கண். இது போன்ற பயங்கரங்கள் நிகழும் போதாவது நாம் மக்களுக்கு அவர்களது உரிமைகளைத் தெரிந்துகொள்ளவும், அதைப் பெற அவர்களைத் தூண்டவும் வேண்டும். மாறாக அவர்களது இழப்பின் பேரில் நமது அனுதாபத்தைக் கொட்டி அவர்களைக் கேவலப்படுத்துகிறோம். இன்னும் இன்னும் அவர்களை கையாளாதவர்களாய் ஆக்குகிறோம். விடுதலை என்பதன் பொருளே மக்கள் தம்மைத் தாமே ஆண்டுகொள்வதில் தான் இருக்கிறது. மற்றபடி பணம் சேர்த்து ஏதாவது செய்வதாய் இருந்தால் அதில் 25% நலத்திட்ட உதவிகளுக்கும் (விசு குறிப்பிட்ட, தண்ணீர், கழிவறை வசதி) மீதி 75% அவர்களது உரிமைகளை அவர்கள் அறிந்து கொள்வதற்கான பிரச்சாரத்திற்கும் செய்வதே சரியானது என்பது என் எண்ணம். மக்களை விடுதலையால் கெளரவம் கொள்ள உதவுங்கள்; அவர்களை பிச்சைக்காரர்களாக்காதீர்கள். ஒருசிலர் தானபிரபுக்களாவதற்கு இலட்சக்கணக்கானவர்களை பிச்சைக்காரர்களாக்குவது இந்த நாட்டின் 2000 (குறைந்தது) ஆண்டுகால பயிற்சித் திட்டம். நமது அறிவியலெல்லாம் இதை எதிர்த்துத் தான். தயவுசெய்து மீனைப் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்; அவர்கள் தமது எளிய உணவை கெளரவமாக உண்ணட்டும்.
Post a Comment