பூவினால் பூத்தது

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே மாதிரி மறுமொழிகள் வந்ததுக்கப்புறம் மெதுவா இந்தப் பதிவு வருது!

ஒன்னுமில்ல, போன சனி, ஞாயிறு ஒரு கூத்து. புது அப்பா மெய்யப்பன், கீழக்கரைக்குப் புதுசா வந்த இரமணீதரன், பதிவுப் புயல் (காசா பணமா ஒரு பட்டத்தை நீங்களும் வச்சுக்கங்க பாலா) பாஸ்டன் பாலாஜி, வம்புணி சித்தர் கார்த்திக்ராமாஸ், அப்புறம் அமைதியான நான் எல்லாரும் சந்திச்சோம் (இன்ப அதிர்ச்சியா இன்னொருத்தரும் வந்தார், படிச்சுக்கிட்டே போங்க).

கார்த்திக்ராமாஸ் இருக்கது பால்டிமோர் (Baltimore). அங்கேருந்து எங்க வீடு (New Haven) ஒரு 4 மணி நேரக் கார்ப் பயணம். எங்க வீட்லேருந்து மெய்யப்பன் வீட்டுக்கு (Nashua) 2 மணி நேரம். கார்த்திக் எங்க வீட்ல வந்து வெள்ளி ராவைக் கழிச்சுட்டு, சனிக் கிழமை காலை மெய் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு. மாசிலனுக்கு (என் மகன்) "வெள்ளிக்கிழமை நம்ம வீட்டுக்குக் கார்த்திக் மாமா வருவாங்க"ன்னு சொல்லிக் குடுத்துட்டேன். அவர் "வெள்ளிக்கெமென்னிக்கி" அப்படின்னு ரெண்டு மூனு நாளாப் பாட்டுப் பாடினார். வெள்ளி வந்தது. பொழுதும் போனது. கிளம்பிட்டேனய்யான்னு ஒரு போன் வந்தது. போன் வந்து 3 மணி நேரங்கழித்து இன்னொரு போன். அய்யா நான் பாதை தவறிய ஆட்டுக் குட்டியானேன் என்று. என்னவென்றால், வழிகாட்றவன் சொல்றதைக் கேக்காம கொழுப்பு சொல்றதைக் கேட்டதால வந்த வினையாம். சுத்து. 10 மணிக்கு வர வேண்டிய வண்டி. 1 மணிக்கு ஒரு போன். ஏங்க, நான் எல்ம் தெருவில நிக்கிறேன் அப்படிங்கறார். விழுந்த எடத்துல தூங்கும் பாக்கியவானான நான் விழுந்தடித்து எழுந்து எந்த எல்ம் தெருன்னு கேட்டேன். அட உங்க தெருதாங்க. ஓ! வந்து ஒரு வழியாத் தூங்கி எழுந்து காலைப் பயணத்துக்குத் தயார்.

சொல்லாடலில் 2 மணி நேரப் பயணம் போனது தெரியலை, ஆனால் என் வலக்காது கேக்காதா ஆனது வேறு விஷயம் :). மெய்யப்பன் வீட்டிற்குச் சென்றோம். இளங்கதிரைச் சந்தித்தோம். தூக்கமும் விழிப்புமாய் அவர் உலகத்தில் இருந்தார். மெய்யப்பன் சிம்பாலிக்காகக் கஞ்சி கொடுத்து அசத்தினார். கொஞ்சநேரம் (!) கழித்து ரமணியும், பாஸ்டன் பாலாஜியும் வந்தார்கள். நாஷ்வாக் காரர் சாப்பாட்டு விஷயத்தில் கை தேர்ந்தவர் என்று வலைப்பூவில் மதி சொல்லியிருந்தார். அதை நேரில் பார்க்கும்/சுவைக்கும் வாய்ப்புக் கிட்டியது. குரங்கை விழுங்கிய மலைப்பாம்புகளைப் போல் பக்கத்திலிருந்த மலையை நோக்கி நகர்ந்தோம்.



மலையடிவாரத்துக்குச் சென்றபோதுதான் மெய்யப்பன் 'பெட்ரோல் குறைச்சலா இருக்கு'ங்கற மெய்யைச் சொன்னார். காரை அங்கேயே நிறுத்திவிட்டு நடையால் ஏறத் துவங்கினோம். பாறைகளாலான பாதை. பாறைக்குப் பாறைத் தாவியேறினோம். அரை மைலுக்குள் நடுவில் இரண்டிடங்களில் தங்கல். கார்ல போறப்ப திங்கலாமேன்னு மூனு வாழைப்பழங்களைக் கொண்டு போயிருந்தேன். கார்த்திக் வாணான்னுட்டார், சரின்னு ஒன்றைத் தின்றுவிட்டு மீதி ரெண்டு. ரமணி அதைப் பார்த்துட்டு, அந்த இன்னொரு பழம் எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சவருதான், இன்னும் நிறுத்தலை. கார்ச் சூட்டில் சுட்ட அந்த இரண்டு வாழைப்பழங்களும், சில திராட்சை, ஆரஞ்சுகளையும் விழுங்கியபடி அந்தப் பச்சைமலையில் தமிழ் இலக்கிய உலகின் நடப்புகளை, வலையுலகின் வீச்சுக்களை, முழு அளவில் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்த்துவதற்கான யோசனைகளை, ஒருவர் இன்னொருவரது பழம் பதிவுகளை, உள்ளுரை நகைச்சுவைகளை, புதுக் கதைகளைப் பேசித் தீர்த்தோம். ராப்போசனத்துக்கு நேரமாயிடுங்கறதால ஒரு 6.30 போல இறங்க ஆரம்பிச்சோம்.

பாலாஜி வீடு. அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமேன்னு பாடிக்கிட்டிருந்தாரு பாலாஜி. பக்கத்துல பட்டுப்பாவாடை சட்டையோடு சஞ்சிதான்னு ஒரு குட்டிப் பெண்! அங்கே கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கப்புறம் என் கல்லூரி நண்பன் மாதவனைச் சந்திப்பேன் என நினைக்கவில்லை. அடிதடியாயிருந்த நட்பு! சந்தோஷமாயிருந்தது. பழங்கதைகள், வலையுலகம், பாட்டுக்கள், நல்ல அரட்டை, வயிற்றுக்கும் நன்றாகவே! மூனு கரும் பியருக்கப்புறம் பாலாஜி "இந்தாளுக்கு இதுக்கு மேல தாங்காது"ன்னு நெனச்சாரோ என்னமோ "இந்தாங்க லைட்" அப்படின்னு குடுத்தார். நல்லதுக்குத்தான். காலையில் மெய்யப்பன் வீட்டில் எழுந்தேன். என் தொண்டை கரகரவென்றிருந்தது. கத்திப் பேசிச் சிரித்தால் எனக்கு அப்படித்தானாகும். அந்தத் தொண்டையோடு பாடப் பிடிக்கும். அந்த அதிகாலையில மெய்யப்பனுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னு விட்டுட்டேன். நானும் கார்த்திக்கும் அங்கேயே காலைக் கொட்டு கொட்டிக்கிட்டுக் கிளம்பினோம். வரும் வழியில் கார்த்திக்கின் நண்பரொருவர் வீட்டில், க்வின்ஸி, ஒரு சிறிய நிறுத்தம் நிறுத்திவிட்டு வீடு நோக்கிப் பயணித்த வழியிலொரு கடற்கரை எங்களை வாவென்றது.



சில நிமிடங்கள் அதற்குக் காட்சி கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். வீட்டுக்கு வந்த பின் தன் பயணத்தைக் கார்த்திக் தொடர்ந்தார். அவர் வீட்டுக்குச் சென்று சேர்ந்து விட்டதாகக் கடைசியாகக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

மெய்யப்பனின் புத்தகங்கள், இரமணியின் நகைச்சுவை, பாலாஜியின் அமைதி, மீண்டும் சந்தித்த மாதவன், கார்த்திக்கின்...என்ன சொல்லலாம்...குசும்பு, வம்பு, அதன் பின்னாலிருக்கும் சமூக அக்கறை, எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று சில திட்டங்கள் இப்படியாய் ஒரு இனிய அனுபவத்தைத் தந்தது இந்தச் சந்திப்பு. நன்றி நண்பர்களே!

0 comments: