கையிற் தெறிக்கும் வார்த்தைகளை அப்படியே உதறி எழுந்து குடந்தைக்கு ஓடுவோம். கரிக் குவியல்களையும் அவற்றைக் கிண்டித் தன் பிள்ளை அல்லது அவளின் அடையாளம் ஏதோவொன்றைத் தேடும் மக்களையும் பார்ப்போம். தீய்ந்த இடமெல்லாம் சுற்றிச் சுற்றி வருவோம், உற்றுப் பார்ப்போம். கதவு சிறிது, திறக்காத் தாழ்ப்பாள், பூட்டியா வைத்திருந்தார், ஓலைக் கூரையா, யாருடைய பள்ளி, எந்த மதத்துக்காரர், எந்தக் கட்சி, அங்கீகாரம் கிடைத்ததெப்படி, தீ வாளி இல்லையா, தண்ணீரில்லையா, மணலில்லையா, கண்டனக் கடிதங்கள் அனுப்புவோம், மூலைக்கு மூலை அமைப்பைத் திட்டுவோம், உலக நடுவிருந்து அமைச்சர்களைத் திட்டுவோம், மதங்களைத் திட்டுவோம், திட்டும்போது கிளையாய்ப் பிரிந்து சண்டைகளிட்டுக் கொள்வோம், உடையும் மூக்கில் குடந்தை மறந்து மீண்டு வரும் பழசையெல்லாம் வாரி எதிராளி மேல் வீசுவோம், தத்தம் வார்த்தைகளை விசைப் பலகையில் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து நம்மைச் சுற்றி நாலு பேர், உங்கள் பக்கமோ, என் பக்கமோ அல்லது அவரின் பக்கமேயோ. அங்கே உயிர் பிழைத்தோரும், பள்ளியும் அதிர்ந்து, கிடந்து, திரிந்து, புகையாய்க் கரியாய்க் கனவு கண்டு, பின்னொரு நாள் ஆனது ஆயிப்போச்சு என்ன செய்றது விதி என்று அடுத்த பள்ளிக்கோ அடுத்த நாளுக்கோ ஆயத்தமாவார்கள். நகராட்சி வண்டிகள் கரியைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்கின்றன. மக்கள் இன்றோ நாளையோ கிடைத்ததைப் புதைக்கக் கிளம்புவார்கள். மணிக்கட்டு வலிக்கக் கண் சுருக்கித் திரைக்குள் விரிந்து நாமெல்லாம் எழுதிக் கொண்டு மட்டுந்தான் இருப்போமா?
செய்தி:கும்பகோணம் பள்ளியில் தீ, 70 குழந்தைகளுக்கும் மேல் மரணம்.
நாமெல்லாம்...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment