எழுத்தாஸ்பத்திரி

நாலு நாளாய் என் எழுத்துக்குச் சொகமில்ல. படுத்த படுக்க. சும்மாத்தான் வெளையாடுதுன்னு நெனச்சு நான் மொதல்ல கிச்சு கிச்சு பண்ணினேன். வழக்கமா சிரிக்கிறது அன்னிக்கு சிணுங்கிச்சு. கொஞ்சம் கழிச்சு ''ல கைய வச்சுப்பாத்தா கொதிக்குது. த்தன்னா துவன்னா எல்லாம் நடுங்குது. சரின்னு டாக்டருகிட்ட கூட்டிக்கிட்டுப் போனேன். அவரு டிகிரியெல்லாம் வச்சுப் பாத்துட்டு, ஒன்னுமில்லையே, எல்லாம் சரியாத்தானே இருக்குன்னுட்டார். நீங்க கொஞ்சம் வெளியில இருக்கீங்களான்னார் என்னை. மணிரத்தினத்தோட ஈயம் பூசுன பாத்திரங்க மாதிரி என்னையா, நானா, ஏன், ஏன் டாக்டர் அப்படின்னு கேட்டுக்கிட்டே வெளில வந்து சுதந்திரதேவி சிலை, ஆல்ப்ஸ், ஆஸ்திரேலியா எல்லாம் படுத்துப் புரண்டு எழுத்தும் நானும் சேர்ந்து கும்மாளம் போட்ட நாட்களப் பத்திப் பாட்டு பாடிட்டுத் திரும்பி வந்தேன். இந்தாங்கன்னார் டாக்டர். மருந்து சீட்டுன்னு நெனச்சு வாங்கிப் பாத்தா எழுத்து தன் கைப்பட ஒரு லெட்டர் எழுதி டாக்டருக்குக் குடுத்திருக்கு. இப்படி.

சில நாட்களாக ஒரே யோசனை. எனக்கு இந்த அடையாளங்காணும் குழப்பம் வந்துவிட்டது. நான் எதில் சேர்த்தி என்று புரியவில்லை. ரமேஷ் மாகாதேவனின் சில பதிவுகளைப்படித்த பிறகு நாம் ஏன் இவ்வளவு கனமாக இருக்க வேண்டும். துன்பத்தைத் துன்பமாகவே ஏன் காட்ட வேண்டும். அனுபவங்களை சிரிப்பு முலாம் பூசிக் காட்டக் கூடாதா எனத் தோன்றியது. எத்தனையோ சிக்கலான நேரங்களிலும் சிரித்துக் களித்த அந்நாட்களைப் போல் இப்போதும் ஏன் சிரிக்கக் கூடுவதில்லை எனத் தோன்றியது. இந்த மாற்றத்தை என்னில் மட்டுமே புகுத்துவது இயல்பாயிருக்காது. இயல்பு மாற்றம் அதோ அவனுக்குள் நடக்கிறது. அவன் உள்ளின் வெளிப்பாடுதான் நானேயொழிய, நான் உள்ளிற்கான இருப்பு குறித்த கட்டளைகள் அல்லன். எனவே இந்த நகைச்சுவை சமாச்சாரம் என் கழுத்தில் தொங்கி என் கழுத்தெல்லாம் வலி.

அடுத்ததாக எனக்கு வந்த பிரச்சினை, பாடுபொருள் சம்பந்தமானது. எதை எல்லாரும் எழுதுகிறார்கள், நிகழ்வுகளை. வந்தது, போனது, கடையில் கண்ட புதுச் சரக்கு, படிச்ச புத்தகம் இப்படி. மனுசனுக்கு நிகழ்வுகளே இல்லையென்றால் அவன் எதைப் பற்றி எழுதுவான்னு ஒரு கேள்வி வந்தது. இந்தப் பரபரப்பான வாழ்வில் அவன் சந்திக்கும் ஒவ்வொன்றும் ஒரு சங்கதிதான். கதைதான். இது எல்லாருக்கும் பொது. ஒருத்தன் ஒன்றைப் பார்க்கிறான். இன்னொருத்தன் இன்னொன்றை. இதிலே இவன் பார்ப்பதை அவனுக்குச் சொல்லி ஆவது என்ன? இவன் அனுபவப் பழத்தை அவன் தின்னத்தான் வேண்டுமா? இதிலே இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. அதுதான் நிகழ்வு மட்டுமே சார்ந்த எழுத்து. இன்றைக்கு ஏதேனும் நடந்தால்தான் உண்டு. செய்தி ஊடகங்கள் மாதிரி. இன்றைக்கு எதையாவது பார்த்தால்தான் உண்டு. எதுவும் நடக்காத ஒரு நாளில் பெரிய செ(¡)ல் சின்னதைத் தின்னும். இந்த மாதிரி நிகழ்வுகளை மட்டுமே சார்ந்து இவன் இலக்கியம் படைக்கத்தான் வேண்டுமா. இந்த நாட்குறிப்பு இலக்கியம் ரொம்ப அவசியமா? நிகழ்வே இல்லாத உலகம் சாத்தியமில்லாமலிருந்தாலும் (குழந்தைகள் வயோதிகர்கள் ஆகியோரை இங்கு விட்டு விடுகிறேன்), இந்தப் பரபரப்புகளையெல்லாம் சிலேட்டை தண்ணீர்தொட்ட பஞ்சால் அழிப்பது மாதிரி அழித்துவிட்டு அவன் மட்டும் தனியாய் நின்றால் அப்போது அவன் எதை எழுதுவான்? இது மாதிரி வெறும் நாட்குறிப்பு இலக்கியத்துக்காக என்னோடு சம்பந்தம் வைத்திருக்கிறானோ என்ற பொருமலில் எனக்கு இருமல் வந்துவிட்டது.

இன்னொரு சங்கடம். போகுமிடமெல்லாம் இவனோடு ஒரு எழுத்தாளனும் கூடவே வருகிறான். ரோட்டில் போகும்போது மேலே குறுக்காய்ப் போகும் மின்கம்பி மேல் அணில் ஓடினாலும் சரி, அல்லது பாதையின் குறுக்கே ஒரு நொண்டிப் பூனை ஓடினாலும் சரி, ரெடியாக இருக்கும் அந்த எழுத்தாளன், உடனே குறிப்பெடுத்துக் கொண்டு இதுகளைக் கொண்டு ராத்திரி ஏதாவது கவிதை ரசம் வைக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறான். ஒரு கதையில் வருவது போல், தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் ஒரு கூழாங்கல்லை ஒருவன் வைத்திருந்தானாம், அதைப் போல பார்ப்பதையெல்லாம் கவிதையாக்கும் கல்லைத்தூக்கிக்கொண்டு அலைகிறான் அந்த எழுத்தாளன். அந்தக் கூழாங்கல்லைக் கூழாங்கற்கள் நிறைந்த ஒரு ஆற்றங்கரையில் தொலைத்துவிட்டு ஒவ்வொரு கல்லாய் எடுத்துச் சோதித்தவண்ணம் அலைவான் அந்தப் பைத்தியக் காரன். அந்த மாதிரி ஒரு எழுத்தாளப் பைத்தியக்காரனிடம் இவன் மாட்டிக் கொண்டானோ என்று நான் படும் அவஸ்தை இன்னொரு புறம்.

அப்புறம், பலே பலே என்றால் துள்ளியும், குப்பை என்றால் துவண்டும் வீழ்கிறான் இந்தப் பண்படா மனசுக்காரன். புருசன் அடிச்சதுக்கு கொளுந்தன் குண்டியக் கடிச்சாளாம் ஒருத்தி. அந்தக் கதையா எங்கயாச்சும் மொத்து வாங்கினா எங்கிட்ட வந்து சீறுறான். இதுகளையெல்லாம் தாண்டி, வேலை, படிப்பு, புள்ள, பொண்டாட்டி, ரோட்டுல போற புள்ளைக...அப்படின்னு அடிபட்டு நைஞ்சுபோயி எங்கிட்ட சக்கையாட்டம் வந்து பழரசம் வேணுமாங்குறான். இவனுக்கும் எனக்கும் இனி ஒத்து வருமென்று தோணவில்லை. இந்தக் குழப்பங்கள்தான் என்னை இப்படிப் படுத்துகின்றன.

இப்படியாக எழுதியிருந்தது எழுத்து. படிச்சு முடிச்சவுடன் எல்லாரும் விடும் பெருமூச்சை நானும் சம்பிரதாயமாக விட்டுட்டு அதே சம்பிரதாய சோகத்துடன் டாக்டரைப் பாத்தேன். ஒன்னும் பயப்படாதீங்க, ரெண்டு பேருக்கும் வெறும் மனப் பிராந்திதான், கொஞ்சம் பீர் குடிச்சுட்டு எழுதினா எல்லாம் சரியாப் போயிரும்னார். ஆனா இன்னும் கொஞ்ச நாளக்கி எழுத்தத் தனியா மட்டும் வுட்றாதீங்கன்னார்.

(பிற்சேர்க்கை: இதைப் படிப்பவர்கள் தங்கமணியின் வாழ்வெனும் ஆற்றையும் படிக்கவும்! அது ரொம்ப ஆழமான ஆறு, மெதுவாய் இறங்குங்கள்!)


0 comments: