சுப்ரமணிய பாரதியார் இதை எப்போது எழுதினார்?

ஒவ்வொரு எழுத்தாளனும் தன் வயதுக்கு/பாதிப்புகளுக்கு ஏற்ற மாதிரி குறுகிய அல்லது நெடுங்கால அளவில் தன் எழுத்தில் மாற்றத்தை உள்வாங்குகிறான் அல்லது எழுத்து அவனில் அப்படிப் பரிணமிக்கிறது. என்ன இருந்தாலும் அந்த சுயம், அந்த ஆணிவேர் கால மாற்றங்களாலும் மேம்போக்கான பாதிப்புகளாலும் மாறுவதில்லை. (ஜெயகாந்தன் எங்கோ சொன்ன மாதிரி "அந்த பேசிக் மெட்டல் ஒன்னுதான், அது எடுக்கிற உருவங்கள்தான் வெவ்வேறு). இருக்கட்டும். இதுமாதிரிதான் பாரதியாரின் எழுத்திலும் காலம் சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என நான் நினைத்துக் கொள்ள முடியும். இதைப் பற்றி நான் சில முறைகள் யோசித்ததுண்டு ஆனால் பெரிதாய் எதையும் படிக்கவில்லை.

அன்றொருநாள் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு என்ற பாடலைப் படித்தேன். அவ்வளவு தீவிர நாட்டுப் பற்றாளர் எப்போதடா வெள்ளைக்கார இளவரசனை வா வா என்றழைக்கிறார், நீ வந்ததால் எங்களுக்கு நன்மை உண்டானது, நாமிருவரும் ஒருத்தருக்கொருத்தர் இணக்கமாயிருப்போம் என்றெல்லாம் கூறுகிறாரே என்று ஆச்சர்யப் பட்டேன். கொஞ்சம் இதைத் துருவிய போது நான் கண்டவற்றைக் கீழே தருகிறேன். ஆனாலும் இந்தப் பாட்டை அவர் எப்போது எழுதியிருப்பார் என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. மாலனோடு சேர்ந்து பாரதிக்கு மின்மண்டபம் எழுப்புவோருக்குத் தெரிந்திருக்கலாம். பாரதி மட்டும் என்றில்லை, எல்லாக் கவிஞர்களுடைய கவிதைகளுக்கும் இயன்றால் நாளினைக் குறிப்பது ஏதாவதொரு புரிதலை மேம்படுத்தலாமல்லவா?

வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு (-சுப்ரமணிய பாரதியார்)

வருகசெல்வ! வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவப் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும்
என்றனைக் காணுமாறித்தனை காதம்
வந்தனிர்! வாழ்திர்! என் மனம் மகிழ்ந்ததுவே.

செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னொர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?


மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதி பெற் றுய்வராயினர், எனவே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிதர லுற்றனள். பொருள் செயற் குரிய
தொழிற்கணம் பலப் பல தோன்றின; பின்னும்
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம், இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம்என்
பாலரின் மீது படுதலுற் றனவே
ஆயினும் என்னை? ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலந்தன வில்லை.
நல்குர வாதி நவமாம் தொல்லைகள் (நல்குரவு = வறுமை)
ஆயிரம் எனை வந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு
மருத்துவ ராக வந்தனர் என்ப தூஉம்
பொய்யிலை. ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி
ஒருவரை யொருவர் ஒறுத்திட விலாது
செவ்விதின் வாழ்க! அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்கநீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்!
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!


விக்டோரியா அரசியின் மகன் வேல்ஸ் இளவரசர், பின்னாளில் ஆல்பர்ட் எட்வர்ட் VII என அழைக்கப் பட்ட இங்கிலாந்தின் மன்னர். 1875ல் இந்தியாவுக்கு வந்து நான்கு மாதங்கள் தங்கியிருக்கிறார். இதன் பிறகு அவர் இந்தியாவுக்கு வந்ததுபோல் தெரியவில்லை. ஆனால் 1901ல் விக்டோரியா இறந்தவுடன் இங்கிலாந்தின் அரச பதவியை ஏற்று 1910ல் இறந்தார். 1903 ஜனவரியில் இந்தியாவின் மாமன்னர் என்று முடிசூட்டிக்கொண்டார், இங்கிலாந்திலிருந்தபடியே என்று நினைக்கிறேன்.

பாரதி பிறந்தது 1882. கவி பாடி பாரதி என்ற பட்டம் பெற்றது 1893. காசியிலிருந்து எட்டயபுரத்துக்குத் திரும்பி வந்தது 1902. 1905ல் வங்கப் பிரிவினைக்குப் பிறகு தீவிர ஆங்கில எதிர்ப்பில் ஈடுபடுகிறார் பாரதியார். 1905க்குப் பிறகு இவ்வாறு எழுதியிருக்கச் சாத்தியம் குறைவு என நினைக்கிறேன். ஒரு வேளை 1903 ஜனவரியில் எட்வர்ட் டில்லிக்கு வந்து முடிசூட்டிக் கொண்டாரா அப்போது பாரதி இதை எழுதினாரா எனத் தெரியவில்லை. அப்படி இருக்க வாய்ப்புக்கள் குறைவு, ஏனெனில் எட்வர்டின் வாழ்க்கைக் குறிப்பில் 1903 பிப்ரவரியில் அவர் உள்நாட்டு விவகாரங்களில் எடுத்த முடிவுகளைப் பற்றியும் அவரது போர்ச்சுகல் பயணம் குறித்தும் இருக்கிறது.

எப்படியோ, எனக்கு விடை கிடைக்கவில்லை, உங்களுக்குக் கிடைத்தால் சொல்லுங்கள்!

0 comments: