ஒரு 21 கிராம் போராளி

புகையும் மெல்லொளியும் மிதந்த அந்த மதுபான விடுதியில் ஒரு மூலைமேசையில் நான் குந்தியிருந்தேன். வெளியே பனி பறந்தலைந்து கொட்டிக் கொண்டிருந்தது. பாட்டுக்காரனின் கித்தார் வன்மையாய் என்னுள்ளே பாய்ந்து அடிக்கடி பெருமூச்சைக் கிளப்பியது. சிப்பந்தியொருவன் வந்து "இதை உன்னிடம் கொடுக்கும்படி அந்த ஆள் சொன்னான்" என்று ஒரு மடித்த கடுதாசியை நீட்டினான். எந்த ஆளென்று பார்க்கத் திரும்பினேன். புகையில் யாரோ விரைந்து மறைவது போலிருந்தது. யாருமில்லை. கடிதத்தைப் பிரித்துப் படித்தேன்:


என் இனிய நண்பனுக்கு,

உனக்குக் கடிதமெழுதும்போது என்னுள்ளே மலரும் பூக்கள் இப்போதும் மலர்கின்றன. இதோ இந்த ஒளியும் காற்றும் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. ரொம்பவும் லேசாயிருக்கிறது. இவானா அங்குமிங்கும் நடந்தபடியிருக்கிறாள். அவள் விமானப் பணிப்பெண்ணாயிருந்தவளாம். தாகமில்லையென்றாலுங்கூட பழக்கத்தின் காரணமாக எதையோ கொண்டுவந்து தந்து சிரித்துவிட்டுப் போகிறாள்.

எனக்குப் பக்கத்தில் ஜான் கெர்த் கண்களை மூடிக் கிடக்கிறதுபோல் கிடக்கிறான். பேசி ஓய்ந்தவன். மொழியில்லாமல் பேசிக்கொள்வது ஒரு வித்தியாசமான அனுபவம். அமெரிக்கக் கேப்டனாம். இராக்கிய சண்டைக்குப் போனானாம். நேற்றெல்லாம் இவன் நாட்டில் இவனைப் பற்றித்தான் ஒரே பேச்சாம். நாட்டுப்பற்றே இவனது மூச்சு என்று அவன் அம்மா தளுதளுத்துச் சொன்னதை வானொலியெல்லாம் முழங்கினவாம். இவன் நாட்டு அதிபர் நீயில்லையென்றால் நாங்களில்லையென்றாராம். என் அம்மாவுக்கு நான் இங்கு வருவது பற்றித் தெரியாது, தெரிந்தால் அழுவாள். என் நெற்றியில் ஏதோ உறுத்தியது, தடவியபோது அவன் நாடு குத்திய முத்திரை இன்னும் சன்னமாய்ப் பதிந்திருந்தது. ஒரே அரசாங்கத்தால் ஒரு வீரனை நாட்டுப்பற்றாளனாகவும் இன்னொரு வீரனைத் தடை செய்யப்பட்ட போராளியாகவும் எப்படிப் பார்க்க முடிகிறது என்று நாம் முன்பு பேசிக்கொண்டிருந்ததும், அப்போது, அரசாங்கத்து அச்சுக் கூடங்கள்தான் உன் உணர்வுகளுக்கு என்ன நிறச்சாயம் பூசலாமென்று தீர்மானிக்கின்றன என்று நீ சொன்னதும் என்னுள் அதிர்ந்து படர்கின்றன. வானொலிகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் பேசாத, நேர்மையிலாப் பத்திரிகைகள் திரித்தெழுதிய நம் போராட்டத்தில் நானிழந்த உடலைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அந்தச் சாய விஷயம் என் பிள்ளைக்கு எப்படிச் சொல்லப்படும் என்பது குறித்த விசனம் எனக்கிருக்கிறது. அதனால்தான் வைதேகியிடம் எல்லாவற்றையும் கோடு போட்ட நோட்டில் நேராய் எழுதி வைக்கச் சொல்லியிருக்கிறேன்.

இதோ இவானா வந்து சொல்லிவிட்டுப் போகிறாள், இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் காலக் கோட்டினைத் தாண்டி விடுவோமாம். ஏற்கெனவே மொழியில்லாமலிருப்பதைக் கண்டு கலக்கமடைந்திருக்கும் எங்களில் பலர் காலம், உருவம், உறவுகள் இல்லாத நிலை குறித்தும் கலங்கிப் போயிருக்கிறார்கள். இதை நீ படிக்கும்போது அரசியற் சூதுகளும், சமாதானக் குழப்பங்களுமில்லாதவொரு வெளியில் நானும் என் நினைப்புக் கூட்டங்களும் கலைந்து போயிருக்கும். ஆற்று மணற்பரப்புகளில் உன்னோடு பேசிச் சிரித்திருந்த நாட்களுக்கு நான் இன்னுமொரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

உனதன்பு
நிமலன்

...மீதமிருந்த வோத்காவை ஒரே மூச்சில் விழுங்கிவிட்டு வெளியே வந்த எனக்குப் பனியைத் தவிர வேறெதுவும் வெள்ளையாய்த் தெரியவில்லை.

-------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: நான் நிறைய சினிமா பார்க்கும் ரகமில்லை. 21 கிராம் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டது மட்டுந்தான். சங்கதிக்குக் கொஞ்சம் பொருத்தமாயிருக்கிறாற்போலத் தெரிந்ததால் இந்தத் தலைப்பு.

0 comments: