ஆள் + அறிவு -> சோறு
ஆள் + மொழி -> சோறு
ஆள் + வினை -> சோறு...
இப்படியாக நம் மனம், வாக்கு, செயல் எல்லாமே சோறா மாறுனாத்தான் நமக்குச் சந்தோசம். இந்த மாதிரியான சமன்பாட்டை, கொள்கையை வச்சுக்கிட்டுத்தான் தமிழ் சோறு போடுமா போடுமான்னு சிலர் கூப்பாடு போடுறதும். அப்படிக் கூப்பாடு போடுறவங்களை சந்தோசப் படுத்துறதுக்காக இந்தப் பதிவு. தமிழ் இப்படிச் சோறு போடுதோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனா ஆங்கிலம் இப்படி ஒரு சோத்தைப் போடுது. அதாவது நேத்து ரேடியோவில ஒரு செய்தியக் கேட்டேன். ஒரு அப்பா, தன்னோட பிள்ளைங்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்குறதுக்காக ஒரு நாள் சமையற்கட்டுல விளையாட ஆரம்பிச்ச விளையாட்டு இப்ப சாப்பாடு இல்லாத பலருக்கு சாப்பாடு குடுக்குது. போயிப் பாக்கணும்னு தோணிச்சு. பாத்தப்ப என்னோட ஆங்கில வாத்தியாரான கே.வி சாரை நெனைக்க வச்சிருச்சு. விளையாடிப் பாத்தேன். நல்லாத்தான் இருக்கு. நீங்களும் www.freerice.com தளத்துக்குப் போயி விளையாடிப் பாருங்க. ஆங்கிலம் சோறு போடும்!
மதியம் செவ்வாய், டிசம்பர் 18, 2007
ஆங்கிலம் சோறு போடுமா?
Posted by சுந்தரவடிவேல் at 12/18/2007 06:13:00 1 comments
மதியம் செவ்வாய், டிசம்பர் 11, 2007
புலிகளுக்குப் பொருளுதவி, வளங்களை அளித்தல் குற்றமில்லை!
அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் குர்திய அமைப்பு ஒன்றின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2004ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்"களின் சில பகுதிகள் மொன்னையாக இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் கோரப்பட்டது. அந்த அமைப்புகளுக்குப் பொருளுதவியும் மற்ற வளங்களும் வழங்கி அமைதியான தீர்வுக்கும், ஐ.நா சபையில் தங்கள் தரப்பினை எடுத்துச் சொல்லவும் உதவ நினைப்பவர்களும் இச்சட்டப்படி குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. நேற்றைய தீர்ப்பின்படி, இத்தகைய பொருளுதவிகளும், வளங்களை வழங்குதலும் ("material support or resources") குற்றம் என்பதான பகுதிகள் இச்சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.
செய்தி:
Posted by சுந்தரவடிவேல் at 12/11/2007 06:10:00 8 comments
மதியம் செவ்வாய், நவம்பர் 27, 2007
தி இந்து பரப்பும் பொய்
தி இந்து பத்திரிகையில் மாவீரர் நாள் உரையைப் பற்றிய செய்தியில் அது பரப்பும் ஒரு தவறான சொற்றொடரைச் சுட்டிக் காட்டவே இந்தக் குறிப்பு:
இந்து சொல்கிறது: "...Prabhakaran said in his annual Heroes' Day speech on his 53rd birthday."
அதாவது மாவீரர் நாள் உரை என்பது பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற குறிப்பினைப் படிப்பவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் இவ்வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரையில் போராடி மடிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான இந்த நிகழ்வு, நானறிந்த வரையில், பிரபாகரனின் நண்பரும் போராளியுமான சார்ல்ஸ் அண்டனியின் மறைவு நாளையொட்டியே நினைவுகூரப்படுகிறது. பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26. ஆனால் இப்படியொரு இரட்டைநாக்கு வாசகத்தை எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் இந்து படிக்கும் பெரும்பாலானவர்களுக்கிடையே "பிரபாகரனின் பிறந்த நாள்தான் மாவீரர் நாள்" என்பதான கருத்தைப் பரப்ப இந்து விழைகிறது. இதன் மூலம் பிரபாகரன் என்பவர் சுய துதியில் திளைக்கும் ஒரு சாதாரண அரசியல்வாதியைப் போன்றவர் என்பதான கருத்தைத் திணிக்கிறது. சாதாரண மக்களுக்கு, அதுவும் கர்வம் கொள்ளக்கூடாது என்ற கருத்தியலில் ஊறித் திளைத்திருக்கும் நம் இந்தியக் குடிகளுக்கு, பிரபாகரனை ஒரு கர்வியாக, ஆணவத்தின் சின்னமாகக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆணவம் பிடித்தவர்கள் அழிவார்கள், அழிய வேண்டும் என்ற வரலாற்று நியதி நம் கதைகளுக்கு உண்டு. ஆணவம் பிடித்தவர்களுக்கு சுதந்திரம், மக்கள் நேயம் போன்ற சிந்தனைகள் இருக்கும் என்று சாதாரணர்கள் நம்புவதில்லை. எனவே ஆணவத்தோடு ஒருவரை அடையாளப்படுத்துவது நெடுங்கால நோக்கில் ஒருவரைப் பற்றிய நல்லபிமானத்தை எழச் செய்யாது.
அந்தச் செய்தியிலேயே "his outfit's cause" என்பதும், இவர் தனியொரு ஆளாக, கும்பல்களை வைத்து அட்டகாசம் செய்யும் ஒரு பேட்டை ரௌடியைப் போன்றதொரு படத்தையும் இந்து வரைய முனைகிறது. இது விடுதலைப் புலிகள் மீது ஈழத்தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கை, அபிமானம், இணக்கம், ஆதரவு ஆகியவற்றை மறுதலித்து, மக்களையும் புலிகளையும் தனித்தனியான அங்கங்களாகக் காட்டும் நரித்தனம். இவர்களால் கேணல் கருணாவை மக்களின் அங்கமாகக் காட்ட முடிந்தது. கருணா இங்கிலாந்தில் பிடிபட்டதற்குப் பிறகு, வெகு தந்திரமாக அவரைக் கழுவிவிட்டிருக்கிறது. இதே இந்து பிள்ளையான் அணி, பொக்கையான் அணி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த அணி தோன்றினாலும் அதனை அரவணைத்துச் செல்லும். ஈழத்தைப் பொறுத்தவரை இவர்களது நோக்கம் புலிகளுக்கெதிரான, அதிலும் பிரபாகரனுக்கெதிரான, ஊடக, அரசியல் குழிபறிப்புதானேயொழிய ஈழச் செய்தி, தமிழர் சுதந்திரம், மக்களாட்சி என்று எந்த மண்ணாங்கட்டியுமில்லை.
இந்துவின் தமிழீழ விரோதப் போக்கைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது எளிதில் விளங்கும். வலைக்கும், ஈழப்போராட்டத்தைப் பற்றிய பதிவுகளுக்கும் புதியவர்களுக்காக இந்தக் குறிப்பு.
Posted by சுந்தரவடிவேல் at 11/27/2007 10:50:00 11 comments
மதியம் திங்கள், நவம்பர் 19, 2007
மதியம் வெள்ளி, நவம்பர் 09, 2007
சிங்கள தேசியவாதம் அமைதிக்கு முட்டுக்கட்டை
இலங்கையின் சிங்கள தேசியவாதமே இன்றைய சிக்கல்களுக்கு மூல காரணம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். இதுவே தொடர்ந்தும் அமைதி ஏற்படவிடாமல் தடுப்பதற்குமான காரணம் என்று International Crisis Group என்ற அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. தென்னிலங்கை ஆட்சியாளர்கள், தத்தமது கட்சிகளின் அரசியல் லாபங்களுக்காக, மக்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு, இன ரீதியான பாகுபாடுகளைப் பெருக்குகிறார்கள். இலங்கைக்குள் சென்று சமாதானத்தை ஏற்படுத்தப் போகும் நாடுகள் அல்லது அமைப்புகள் இந்த சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது மட்டுமே காரணமில்லை, வேறு காரணிகளும் இச்சிக்கலை முடிவின்றி நீட்டுகின்றன என்று கூறும் இக்கட்டுரையில் இணைத் தலைமை நாடுகள் உள்ளிட்ட பலருக்கும் பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இனச் சிக்கலை அரசியல் ரீதியாகவும், அதிகாரங்களை இரு சாரருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதன் மூலமும், மற்றும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சரியுரிமை கொடுப்பது, வாய்ப்புக்களில் இனப்பாகுபாடு காட்டாமலிருப்பது ஆகியவற்றின் மூலமும் களையலாம் என்றும் இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.
ஏட்டுச் சுரைக்காயைப் போலத் தெரிந்தாலும், தென்னிலங்கை அரசியல் பின்னணியும், அதனோடு இயைந்த தேசிய/இன வாதம் ஒரு நாட்டின் இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாகிறது என்பதை இவ்வறிக்கை முன் வைக்கிறது.
இத்தகைய தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் இலங்கையின் அமைதிக்கு எதிராகவும், இனவெறிக்கு ஆதரவாகவுமே செயற்படுகிறார்கள் என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
Posted by சுந்தரவடிவேல் at 11/09/2007 01:42:00 0 comments
மதியம் ஞாயிறு, நவம்பர் 04, 2007
சிலந்தி
என் வீட்டிலிருந்து தெருவுக்கு வரும் நடைபாதையில் செடிகளுக்கும் சுவற்றுக்கும் இடையே ஒரு சிலந்தி, வலை பின்னி அதில் இருக்கிறது. இந்தச் சிலந்தி மஞ்சளும் கருப்பும் பழுப்புமாக இருக்கிறது. இதனைப் போன்ற சிலந்தியொன்றை நான் பார்த்ததில்லை. இந்தக் கூடும் சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது. வழக்கமான சிலந்திக் கூடு போல இருந்தது. ஆனால் வலையின் குறுக்கே இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரை ஏணியைப் போல இன்னொரு பின்னலைப் போட்டிருந்தது. நடுவில் அது காத்திருக்கிறது. கலோவீன் (Haloween) அன்றைக்கு மிட்டாய் வாங்க வந்த பிள்ளைகள் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுப் போனார்கள். அன்றைய நாளில் நிறைய வீடுகளில் சிலந்தி வலைகளும், சாலைகளில் 'சிலந்தி' மனிதர்களும் (spiderman)திரிந்தாலும், இந்தச் சிலந்தியைப் பார்த்தபோது அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள். இரவின் இருளில் என்ன நடந்ததென்று யாருக்குத் தெரியும். அடுத்த காலையில் சிலந்தி வலை ஒரு கோடான இழையாக மட்டும் தொடுத்திக் கொண்டிருந்தது. முற்றாகச் சிதைந்து விடவில்லை. அந்தச் சிலந்தி அப்போதும் இருந்தது. அது மீண்டும் ஒரு வலையைக் கட்டும். தனக்கான வீட்டைக் கட்டிக் கொள்வதற்கு சிலந்திக்கு வேட்கை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு அது புரிந்தாலுமோ (சிலந்திகளின் உலகத்துத் துன்பங்கள் உங்களது தடித்த தோலுக்குள் நுழையவில்லையென்றாலுமோ) அல்லது சிலந்திகளின் வாழ்விலிருந்து உங்களுக்குத் தேவையானதை மட்டுமே பிய்த்து எடுத்துக்கொண்டு அதுதான் சிலந்திகளின் வாழ்வு என்று நம்பிக்கொண்டு இருக்கும் அனுதாபத்துக்குரியவராக இருந்தாலுமோ...சிலந்திகள் தமது வீடுகளைக் கட்டிக் கொண்டே இருக்கும். அது அவற்றின் வாழ்வு.
Posted by சுந்தரவடிவேல் at 11/04/2007 03:53:00 PM 1 comments
மதியம் வெள்ளி, நவம்பர் 02, 2007
இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறதா?
புலிகளின் அரசியல் தலைவராகவும், அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்குத் தலைமையேற்றவருமான சு.ப. தமிழ்ச்செல்வனைக் கொன்றிருப்பது இலங்கையரசுக்கு அரசியல் தீர்வின் மேல் இருக்கும் மரியாதையை இன்னொரு முறை வெளிக்காட்டுகிறது. ஒரு போர்க் குற்றத்துக்குள் இன்னொரு போர்க் குற்றமாக, ஒரு அரசியல் தலைவரைக் கொல்வதற்கு சூட்டழுத்த (thermobaric) ஆயுதத்தினைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது (பிபிசியின் குறிப்பை மேற்கோளிட்ட குருவிகளின் பதிவிலிருந்து http://kundumani.blogspot.com/2007/11/thermobaric.html).
சூட்டழுத்தக் குண்டுகளை இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தயாரிக்கின்றன. இவை ஏதாவது ஒரு நாட்டிலிருந்து இலங்கை இத்தகைய ஆயுதங்களை வாங்கியிருக்கலாம். பதுங்கு குழிகள், நிலவறைகள், கட்டிடங்கள் போன்றவற்றில் இருப்பவர்களை ஒரு அணு ஆயுதத்தைப் போலத் தாக்கி அழிக்கக் கூடியது இந்தச் சூட்டழுத்த ஆயுதங்கள். அணு ஆயுதங்களுக்கும் சூட்டழுத்த ஆயுதங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் கதிர் வீச்சு மட்டும்தான். சூட்டழுத்த ஆயுதங்களில் கதிர் வீச்சு கிடையாது. ஒரு இடத்தில் இந்த ஆயுதம் வெடிக்கும்போது அங்கிருக்கும் ஆக்சிஜனை முழுமையாக எரித்து ஒரு மாபெரும் வெற்றிடத்தினை உருவாக்குகிறது. இதனால் சுற்றியுள்ள இடங்களிலிருந்து அழுத்தம் பாய்ந்து வந்து நிரப்பப் பார்க்கிறது. அங்கேயிருக்கின்ற மக்களும் அதீத அழுத்தத்தால் ஏற்படும் உடற்சிதைவுக்கு (நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் முக்கியமாக பாதிக்கப்படும்) ஆளாகி இறக்க நேரிடுகிறது. இன்றைய குண்டு வீச்சில் இத்தகைய குண்டுகளை இலங்கை பயன்படுத்தியது போலத் தெரிகிறது, விரிவான செய்திகள் வெளிவரலாம். நேற்றைய இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகச் செய்தியொன்று நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது. பங்கர் என்ற சொற்பயன்பாட்டுக்கும் பங்கர்பஸ்டர் (bunker buster) என்ற சூட்டழுத்த ஆயுதப் பயன்பாட்டுக்கும் தொடர்பிருக்குமா என்று தெரியாது. ஆனால் மகிந்தவின் அரசு தன்னுடைய தோல்விகளைச் சரிகட்ட வேண்டிய அரசியல் அழுத்தத்தில் இருப்பதால், எதைச் செய்தாவது புலிகளை ஒடுக்கிவிட முயலும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்விடத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அரசு முயலக் கூடும். அமெரிக்காவானது ஈராக் பலூஜாவிலும், இஸ்ரேலானது பாலஸ்தீனத்திலும், ரஷ்யாவானது செச்னியாவிலும் செய்த அதே வேலையை இப்போது இலங்கை அரசு செய்யத் தீர்மானித்திருப்பது வெகு சாத்தியமே.
தமிழ்க் குடிமக்களைப் பற்றிய பெரும் கவலை இல்லாத இலங்கை அரசு, இத்தகைய ஆயுதங்களைக் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்விடங்களில் வீசி, புலிகளைக் கொன்றுவிட்டதாக வரும் நாட்களில் அறிவித்து, இன்றைப் போலவே குடித்து மகிழும். இன்றைப் போலவே எல்லா நாடுகளும் ஏடுகளும், தமிழ்ச்செல்வன் நல்ல மனுசன், அழகா சிரிப்பாரே என்று முனகுவதோடு நிறுத்திக் கொள்ளும். குடிமக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் (சூட்டழுத்த ஆயுதங்கள் உட்பட) ஏவப்படுவதை ஐ.நாவின் ஆயுத விதிகளுக்கு எதிராக இலங்கையரசு மேற்கொள்ளக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான இராணுவ மற்றும் அரசியல் தற்காப்புக்களைப் புலிகள் எவ்விதம் மேற்கொள்வார்கள் என்பது இப்போதைய கேள்வி.
Posted by சுந்தரவடிவேல் at 11/02/2007 12:27:00 PM 0 comments
மதியம் செவ்வாய், செப்டம்பர் 25, 2007
கொலம்பியாவின் விருந்தோம்பல்
2005ல சீன அதிபர் ஹு ஜிண்ட்டாவோ, யேல் (Yale) பல்கலைக்கு வந்தார். சீனாவோட மனிதவுரிமை வரலாறு, திபெத்தைப் பிடித்து வைத்திருப்பது, வியாபாரத் தந்திரங்கள் எல்லாமே அமெரிக்காவில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகித்தான் இருக்கிறது, இருந்தது. பலூன் காங் அமைப்பின் ஆட்கள் கூட்டங்கூட்டமாக அதிபருக்கெதிராகக் கொடிபிடித்தும், குரலெழுப்பியும் அலைந்தார்கள். ஒரு கம்யூனிச நாட்டின் அதிபரைப் பேசக் கூப்பிட்டிருப்பதற்காகக் கண்டனங்களும் எழத்தான் செய்தன. அத்தனை எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும் நடந்தது என்ன? ஹூ ஜிண்டாவோ எதிர்ப்பு, வரவேற்புக் கொடிகளுக்கு மத்தியிலேயே வந்தார். அவரைப் பல்கலைக்கழகத் தலைவர் மரியாதையாக வரவேற்றார், நாலு நல்ல வார்த்தைகளைப் பேசினார், எவ்வளவோ எதிர்மறைச் செய்திகள் இருந்தபோதும் சீனாவுக்கும் யேலுக்குமிடையே கல்வி ரீதியிலான தொடர்புகளைப் பேசி அறிமுகப்படுத்தி உரையாற்ற அழைத்தார். ஒரு கல்விக் கூடத்தின் மரியாதையான நடைமுறைகளுக்கு ஏற்றதுமாதிரி அந்த நிகழ்ச்சி இருந்தது.
ஆனால் நேற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? அமெரிக்காவுக்கும், யூதர்களுக்கும் 'எதிரான' ஆளாகச் சித்தரிக்கப்படும் ஈரானிய அதிபரை வரவழைத்து, ஒரு விருந்தினரான அவரை மேடையில் வைத்து அவமதிக்கும் விதத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் அதிபர் பேசியதும், நடத்தியதும் ரசிக்கத் தக்கதாயில்லை. அதற்காக ஈரானிய அதிபரின் சொல்லும் செயலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென்றும், சரியானதென்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் யூதர்களை, அமெரிக்கர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பெரும் அரங்குகளில் சிறுமைப் படுத்தப்படும் நிலை இருக்கிறது என்பதுதான் இங்கு நோக்கப்படவேண்டியது. வந்திருப்பவர் யாராயினும் (அவர் தானே வரவில்லை, கொலம்பியாவால் வரவேற்கப்பட்டவர்) அவை நாகரீகம், விருந்தோம்பல் என்பவற்றைச் சரிவரக் கடைபிடிக்காதது ஒரு பல்கலைக்கழகத்துக்கும் அதன் அதிபருக்கும் அழகன்று.
சரி, அப்படியே அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் எல்லா மனிதவுரிமையழிப்பு அரசாங்கங்களின் அதிபர்களையும் அழைத்து வைத்து மன்றில் நிறுத்திக் கேள்வி கேட்குமா என்று பார்த்தால் அதுவும் அப்படியில்லை. உதாரணமாக மோசமான இனப் படுகொலைகளைப் புரிந்து, கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஒரு இனவொழிப்பைமேற்கொண்டிருக்கும் இலங்கையரசின் அதிபர்கள் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களாலும், மற்ற அமைப்புக்களாலும் மரியாதையுடன் வரவேற்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது. ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்கு வரவேற்கப்பட்டதையும், சந்திரிகா குமாரதுங்க ஆசியா மையம் போன்ற அமைப்புகளுக்கு வரவேற்கப்பட்டதையும் (சந்திரிகா பல்கலைக் கழகங்களுக்கும் அழைக்கப்பட்டிருப்பதாகவே நினைவு) நினைவு கூறலாம். ஆக, அமெரிக்க அரசுக்கு இணக்கமாகவோ அல்லது, அரசியல் ரீதியாக எதிரியாக நினைக்கப் படாததாகவோ, அல்லது வளரும் வல்லரசு என்ற கோதாவிலோ இருக்கும் ஒரு அரசின் தலைவர்களும், அலுவலர்களும் மரியாதையாகவே நடத்தப்படுவர். மாற்றாக, அமெரிக்காவுக்கோ, அதன் அரசியலில் உள்ளோடிய யூதர்களுக்கோ எதிரான குரல்களை எழுப்பும் தலைவர்கள் இப்படித்தான் அவமதிக்கப்படுவார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
Posted by சுந்தரவடிவேல் at 9/25/2007 04:41:00 PM 0 comments
மதியம் சனி, செப்டம்பர் 22, 2007
மெய்லீ
கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு அதில் தொங்கும் ஒரு சின்னப் படிகம். ஏதப்பா என்றேன் மெய்லி கொடுத்தது என்றார். தினமும் பள்ளி முடித்து மெய்லியோடு விளையாடிவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புகின்றார். அன்றைக்குப் பள்ளியில் கொண்டுபோய் விடும்போது மெய்லியின் காரைப் பார்த்துவிட்டுச் சிரித்தபடி மெய்லீ என்று கையசைத்து நின்றார். ஒரு நாள் பள்ளி முடிந்து நான் அழைக்கப் போனபோது "மெய்லி, this is my dad" என்றார். அப்பாவை அறிமுகப்படுத்துமளவுக்கு வளர்ந்துவிட்டதை அப்போது அறிந்தேன். நேற்றைக்குப் பள்ளிக்கூடத்தில் வகுப்பறைப் படம் எடுத்தார்களாம். படத்தில் மெய்லியும் இவரும் அருகருகே நின்றிருந்தார்கள். ஏதோ மகிழ்ச்சியாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்தில் மாற்றுப் பால் குழந்தைகளோடு விளையாடுவதும் நட்பாக இருப்பதும் வளர்ந்த பருவத்தில் ஆரோக்கியமான உறவுகளை அமைத்துக்கொள்ள உதவும். மகிழ்வாய் மகனே!
Posted by சுந்தரவடிவேல் at 9/22/2007 05:44:00 PM 5 comments
மதியம் வியாழன், செப்டம்பர் 20, 2007
பொறுக்கிப் போடுதலும் முறுக்கிப் போடுதலும்
செய்திகள், குறிப்பாக ஈழச் செய்திகளுக்கு எத்தனை முகங்கள் என்று பார்த்தால் வியப்பாக இருக்கும். அதிலும் அச்செய்திகள் இந்தியாவுக்குள் வரும்போது நடந்த கதையே மாறிப் போனதுபோலத் தெரியும். உதாரணமாக, இன்றைக்குப் பாருங்கள், ஒரு செய்தி வருகிறது, அதாவது, இலங்கையரசின் குண்டு வீச்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகமும், ஒரு வீடு உள்ளிட்ட பல குடிமக்களின் இடங்களும் சேதமடைந்ததாக தமிழ்நெட் பட ஆதாரங்களோடு கூறுகிறது. இதனையே பிபிசி "தமிழ்ப் புலிகளின் கிடங்கின்மீது வான் தாக்குதல்" என்று சிங்கள இராணுவம் கூறுவதாகக் கூறிவிட்டு உள்ளே தமிழ்நெட் தரப்புச் செய்தியையும் கோடிட்டுக் காட்டுகிறது. 'Tamil Tiger Depot' என்பதை மேற்கோள்களுக்குள் சொல்வதன் மூலம் அது தன் சொல்லாடல் இல்லை எனக் காட்டியபோதும் தலைப்புச் செய்தியில் இராணுவத்தின் செய்தியையே வெளியிடுகிறது. இந்து நாளிதழும் இதே செய்தியை இராணுவத்தின் மொழியிலேயே "கிடங்கின் மீது தாக்குதல்"என்றே வெளியிடுகிறது. உள்ளே தமிழ்நெட்டின் சாரம் இருந்தபோதிலும், தலைப்பை இராணுவச் சார்பு செய்தியினைப் போலக் காட்டுவதன் மூலம் தமிழ்நெட் தரப்பின் செய்தியின் நம்பகத் தன்மையைக் குறைத்துக் காட்டும் உத்தி இது. இதனை இந்து போன்ற நாளிதழ்கள் தொடர்ந்து செய்து வருவதைப் பலரும் அறிவோம்.
இத்தகைய செய்தித் தாள்கள் வெளியிடும் செய்திகளை எடுத்துப் போடுவதிலும், மொழி பெயர்த்துப் போடுவதிலும் சில சிக்கல்கள் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். இத்தகைய சிக்கல்கள் எங்கு நிகழ்கின்றன, ஏன் நிகழ்கின்றன என்று யோசிக்கிறேன். இப்போது, செய்திகள் பரவும் விதத்தைப் பார்த்தால், 1. ஒரு சம்பவம் நடப்பது, 2. அது முதன்முதலாகச் செய்தி வடிவம் பெறுதல் (இங்கே வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் வெவ்வேறு வகையாக உண்மைச் செய்தியை மாற்றி வெளியிடுவது நடக்கும்), 3. செய்தி நிறுவனங்களிடமிருந்து அச் செய்தியை வாங்கிப் பத்திரிகைகள்/மிடையங்கள் தங்களது 'பாணி'யில் வெளியிடுதல் 4. அவற்றைப் படித்து வலைப்பதிவர்கள்/மற்ற பத்திரிகைகள் மேலும் பரப்புதல் மற்றும் மனிதர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்கள். இவ்வாறுதான் பொதுவாகச் செய்திகள் பரவுகின்றன. வெளிவரும் செய்திகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்குப் பிடித்திருக்கலாம் அல்லது மற்றவர்கள் இதனைப் படித்தால் நல்லது என்று அவருக்குத் தோன்றலாம். இத்தகைய எண்ணம் அல்லது தேர்வு ஒருவருடைய அழகுணர்ச்சி, சமூக அக்கறை, வளர்ந்த பின்புலம், அரசியல் நிலைப்பாடு, இதனை இன்னார் இன்னதுக்காகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து அமையும். இப்போது மாலன் புலிகளிடையே பிளவு என்றோ அல்லது பாஸ்டன் பாலா புலிகள் கஞ்சா வளர்க்கிறார்கள் என்று வெட்டி ஒட்டினாலோ அங்கு கவனிக்கப்பட வேண்டியது யார் என்ன விதமான செய்திகளைப் பரப்புதலில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே. பாஸ்டன் பாலாவையாவது விட்டுவிடலாம், அவர் ஈழ விசயத்தில் Jaffna என்றால் யாழ்ப்பாணமா என்று கேட்குமளவுக்கு விபரமறியாத ஓரு பதிவர். ஆனால் ஒரு பத்திரிகையாளரான மாலன், தான் எதை எங்கிருந்து எடுத்துப் போடுகிறோம், அதனை எழுதியது யார், அந்தப் பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாடு என்ன, இதற்கு முன் அது என்னென்ன விதமான பொய்ச்செய்திகளைப் பரப்பியது என்றெல்லாம் தெரிந்துகொண்டு அதற்குப் பிறகு அப்பரப்புரையைச் செய்திருக்கலாம். அல்லது, ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன் மாற்று ஊடகங்கள்/களத்திலிருந்து இயங்கும் வலைப்பதிவர்கள்/களநிலை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் என்று யாரையேனும் அணுகி விபரங்களை அல்லது செய்திகளின் குறைந்தபட்ச நம்பகத் தன்மையையாவது உறுதிப் படுத்திக் கொண்டு வெளியிடலாம். அவற்றை விடுத்து எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஜால்ரா தட்டிக் கூச்சலைக் கிளப்புவதென்பது பொறுப்புடைய செயலாகாது.
உண்மைச் செய்திகளை மறைத்து, திரித்து வெளியிடும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் கைக்கூலிகளாகச் செயல்படும் சில இந்தியப் பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டுச் சுகம் காணும் மனோநிலையானது நாசிகளின் இனவொழிப்பு மனோநிலையை ஒத்தது. அத்தகைய ஒலிபெருக்கித்தனமானது இலங்கையரசின் நாசித்தனமான இனவொழிப்பை, மனிதவுரிமைக் கொலையை ஆதரிப்பது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
Posted by சுந்தரவடிவேல் at 9/20/2007 06:43:00 PM 2 comments