கொலம்பியாவின் விருந்தோம்பல்

2005ல சீன அதிபர் ஹு ஜிண்ட்டாவோ, யேல் (Yale) பல்கலைக்கு வந்தார். சீனாவோட மனிதவுரிமை வரலாறு, திபெத்தைப் பிடித்து வைத்திருப்பது, வியாபாரத் தந்திரங்கள் எல்லாமே அமெரிக்காவில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகித்தான் இருக்கிறது, இருந்தது. பலூன் காங் அமைப்பின் ஆட்கள் கூட்டங்கூட்டமாக அதிபருக்கெதிராகக் கொடிபிடித்தும், குரலெழுப்பியும் அலைந்தார்கள். ஒரு கம்யூனிச நாட்டின் அதிபரைப் பேசக் கூப்பிட்டிருப்பதற்காகக் கண்டனங்களும் எழத்தான் செய்தன. அத்தனை எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும் நடந்தது என்ன? ஹூ ஜிண்டாவோ எதிர்ப்பு, வரவேற்புக் கொடிகளுக்கு மத்தியிலேயே வந்தார். அவரைப் பல்கலைக்கழகத் தலைவர் மரியாதையாக வரவேற்றார், நாலு நல்ல வார்த்தைகளைப் பேசினார், எவ்வளவோ எதிர்மறைச் செய்திகள் இருந்தபோதும் சீனாவுக்கும் யேலுக்குமிடையே கல்வி ரீதியிலான தொடர்புகளைப் பேசி அறிமுகப்படுத்தி உரையாற்ற அழைத்தார். ஒரு கல்விக் கூடத்தின் மரியாதையான நடைமுறைகளுக்கு ஏற்றதுமாதிரி அந்த நிகழ்ச்சி இருந்தது.

ஆனால் நேற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? அமெரிக்காவுக்கும், யூதர்களுக்கும் 'எதிரான' ஆளாகச் சித்தரிக்கப்படும் ஈரானிய அதிபரை வரவழைத்து, ஒரு விருந்தினரான அவரை மேடையில் வைத்து அவமதிக்கும் விதத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் அதிபர் பேசியதும், நடத்தியதும் ரசிக்கத் தக்கதாயில்லை. அதற்காக ஈரானிய அதிபரின் சொல்லும் செயலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென்றும், சரியானதென்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் யூதர்களை, அமெரிக்கர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பெரும் அரங்குகளில் சிறுமைப் படுத்தப்படும் நிலை இருக்கிறது என்பதுதான் இங்கு நோக்கப்படவேண்டியது. வந்திருப்பவர் யாராயினும் (அவர் தானே வரவில்லை, கொலம்பியாவால் வரவேற்கப்பட்டவர்) அவை நாகரீகம், விருந்தோம்பல் என்பவற்றைச் சரிவரக் கடைபிடிக்காதது ஒரு பல்கலைக்கழகத்துக்கும் அதன் அதிபருக்கும் அழகன்று.

சரி, அப்படியே அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் எல்லா மனிதவுரிமையழிப்பு அரசாங்கங்களின் அதிபர்களையும் அழைத்து வைத்து மன்றில் நிறுத்திக் கேள்வி கேட்குமா என்று பார்த்தால் அதுவும் அப்படியில்லை. உதாரணமாக மோசமான இனப் படுகொலைகளைப் புரிந்து, கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஒரு இனவொழிப்பைமேற்கொண்டிருக்கும் இலங்கையரசின் அதிபர்கள் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களாலும், மற்ற அமைப்புக்களாலும் மரியாதையுடன் வரவேற்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது. ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்கு வரவேற்கப்பட்டதையும், சந்திரிகா குமாரதுங்க ஆசியா மையம் போன்ற அமைப்புகளுக்கு வரவேற்கப்பட்டதையும் (சந்திரிகா பல்கலைக் கழகங்களுக்கும் அழைக்கப்பட்டிருப்பதாகவே நினைவு) நினைவு கூறலாம். ஆக, அமெரிக்க அரசுக்கு இணக்கமாகவோ அல்லது, அரசியல் ரீதியாக எதிரியாக நினைக்கப் படாததாகவோ, அல்லது வளரும் வல்லரசு என்ற கோதாவிலோ இருக்கும் ஒரு அரசின் தலைவர்களும், அலுவலர்களும் மரியாதையாகவே நடத்தப்படுவர். மாற்றாக, அமெரிக்காவுக்கோ, அதன் அரசியலில் உள்ளோடிய யூதர்களுக்கோ எதிரான குரல்களை எழுப்பும் தலைவர்கள் இப்படித்தான் அவமதிக்கப்படுவார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

0 comments: