பொறுக்கிப் போடுதலும் முறுக்கிப் போடுதலும்

செய்திகள், குறிப்பாக ஈழச் செய்திகளுக்கு எத்தனை முகங்கள் என்று பார்த்தால் வியப்பாக இருக்கும். அதிலும் அச்செய்திகள் இந்தியாவுக்குள் வரும்போது நடந்த கதையே மாறிப் போனதுபோலத் தெரியும். உதாரணமாக, இன்றைக்குப் பாருங்கள், ஒரு செய்தி வருகிறது, அதாவது, இலங்கையரசின் குண்டு வீச்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகமும், ஒரு வீடு உள்ளிட்ட பல குடிமக்களின் இடங்களும் சேதமடைந்ததாக தமிழ்நெட் பட ஆதாரங்களோடு கூறுகிறது. இதனையே பிபிசி "தமிழ்ப் புலிகளின் கிடங்கின்மீது வான் தாக்குதல்" என்று சிங்கள இராணுவம் கூறுவதாகக் கூறிவிட்டு உள்ளே தமிழ்நெட் தரப்புச் செய்தியையும் கோடிட்டுக் காட்டுகிறது. 'Tamil Tiger Depot' என்பதை மேற்கோள்களுக்குள் சொல்வதன் மூலம் அது தன் சொல்லாடல் இல்லை எனக் காட்டியபோதும் தலைப்புச் செய்தியில் இராணுவத்தின் செய்தியையே வெளியிடுகிறது. இந்து நாளிதழும் இதே செய்தியை இராணுவத்தின் மொழியிலேயே "கிடங்கின் மீது தாக்குதல்"என்றே வெளியிடுகிறது. உள்ளே தமிழ்நெட்டின் சாரம் இருந்தபோதிலும், தலைப்பை இராணுவச் சார்பு செய்தியினைப் போலக் காட்டுவதன் மூலம் தமிழ்நெட் தரப்பின் செய்தியின் நம்பகத் தன்மையைக் குறைத்துக் காட்டும் உத்தி இது. இதனை இந்து போன்ற நாளிதழ்கள் தொடர்ந்து செய்து வருவதைப் பலரும் அறிவோம்.

இத்தகைய செய்தித் தாள்கள் வெளியிடும் செய்திகளை எடுத்துப் போடுவதிலும், மொழி பெயர்த்துப் போடுவதிலும் சில சிக்கல்கள் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். இத்தகைய சிக்கல்கள் எங்கு நிகழ்கின்றன, ஏன் நிகழ்கின்றன என்று யோசிக்கிறேன். இப்போது, செய்திகள் பரவும் விதத்தைப் பார்த்தால், 1. ஒரு சம்பவம் நடப்பது, 2. அது முதன்முதலாகச் செய்தி வடிவம் பெறுதல் (இங்கே வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் வெவ்வேறு வகையாக உண்மைச் செய்தியை மாற்றி வெளியிடுவது நடக்கும்), 3. செய்தி நிறுவனங்களிடமிருந்து அச் செய்தியை வாங்கிப் பத்திரிகைகள்/மிடையங்கள் தங்களது 'பாணி'யில் வெளியிடுதல் 4. அவற்றைப் படித்து வலைப்பதிவர்கள்/மற்ற பத்திரிகைகள் மேலும் பரப்புதல் மற்றும் மனிதர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்கள். இவ்வாறுதான் பொதுவாகச் செய்திகள் பரவுகின்றன. வெளிவரும் செய்திகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்குப் பிடித்திருக்கலாம் அல்லது மற்றவர்கள் இதனைப் படித்தால் நல்லது என்று அவருக்குத் தோன்றலாம். இத்தகைய எண்ணம் அல்லது தேர்வு ஒருவருடைய அழகுணர்ச்சி, சமூக அக்கறை, வளர்ந்த பின்புலம், அரசியல் நிலைப்பாடு, இதனை இன்னார் இன்னதுக்காகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து அமையும். இப்போது மாலன் புலிகளிடையே பிளவு என்றோ அல்லது பாஸ்டன் பாலா புலிகள் கஞ்சா வளர்க்கிறார்கள் என்று வெட்டி ஒட்டினாலோ அங்கு கவனிக்கப்பட வேண்டியது யார் என்ன விதமான செய்திகளைப் பரப்புதலில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே. பாஸ்டன் பாலாவையாவது விட்டுவிடலாம், அவர் ஈழ விசயத்தில் Jaffna என்றால் யாழ்ப்பாணமா என்று கேட்குமளவுக்கு விபரமறியாத ஓரு பதிவர். ஆனால் ஒரு பத்திரிகையாளரான மாலன், தான் எதை எங்கிருந்து எடுத்துப் போடுகிறோம், அதனை எழுதியது யார், அந்தப் பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாடு என்ன, இதற்கு முன் அது என்னென்ன விதமான பொய்ச்செய்திகளைப் பரப்பியது என்றெல்லாம் தெரிந்துகொண்டு அதற்குப் பிறகு அப்பரப்புரையைச் செய்திருக்கலாம். அல்லது, ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன் மாற்று ஊடகங்கள்/களத்திலிருந்து இயங்கும் வலைப்பதிவர்கள்/களநிலை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் என்று யாரையேனும் அணுகி விபரங்களை அல்லது செய்திகளின் குறைந்தபட்ச நம்பகத் தன்மையையாவது உறுதிப் படுத்திக் கொண்டு வெளியிடலாம். அவற்றை விடுத்து எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஜால்ரா தட்டிக் கூச்சலைக் கிளப்புவதென்பது பொறுப்புடைய செயலாகாது.

உண்மைச் செய்திகளை மறைத்து, திரித்து வெளியிடும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் கைக்கூலிகளாகச் செயல்படும் சில இந்தியப் பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டுச் சுகம் காணும் மனோநிலையானது நாசிகளின் இனவொழிப்பு மனோநிலையை ஒத்தது. அத்தகைய ஒலிபெருக்கித்தனமானது இலங்கையரசின் நாசித்தனமான இனவொழிப்பை, மனிதவுரிமைக் கொலையை ஆதரிப்பது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

2 comments:

Anonymous said...

வாங்க

said...

ஈழ விவகாரம் ஒன்றில் மட்டும் இந்திய,தமிழக ஊடகங்கள் வேறு திசையிலும்..இனைய விவாதங்களில் பங்கு பெறும்(Not limited to Blogs) பெரும்பான்மையான தமிழனும் முற்றிலும் வெவ்வேறு திசையில் பயனிக்கிறார்கள். இந்த நிலை தொடருவது கொஞ்சம் ஆபத்துதான் :)