சிங்கள தேசியவாதம் அமைதிக்கு முட்டுக்கட்டை

இலங்கையின் சிங்கள தேசியவாதமே இன்றைய சிக்கல்களுக்கு மூல காரணம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். இதுவே தொடர்ந்தும் அமைதி ஏற்படவிடாமல் தடுப்பதற்குமான காரணம் என்று International Crisis Group என்ற அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. தென்னிலங்கை ஆட்சியாளர்கள், தத்தமது கட்சிகளின் அரசியல் லாபங்களுக்காக, மக்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு, இன ரீதியான பாகுபாடுகளைப் பெருக்குகிறார்கள். இலங்கைக்குள் சென்று சமாதானத்தை ஏற்படுத்தப் போகும் நாடுகள் அல்லது அமைப்புகள் இந்த சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது மட்டுமே காரணமில்லை, வேறு காரணிகளும் இச்சிக்கலை முடிவின்றி நீட்டுகின்றன என்று கூறும் இக்கட்டுரையில் இணைத் தலைமை நாடுகள் உள்ளிட்ட பலருக்கும் பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இனச் சிக்கலை அரசியல் ரீதியாகவும், அதிகாரங்களை இரு சாரருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதன் மூலமும், மற்றும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சரியுரிமை கொடுப்பது, வாய்ப்புக்களில் இனப்பாகுபாடு காட்டாமலிருப்பது ஆகியவற்றின் மூலமும் களையலாம் என்றும் இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.

ஏட்டுச் சுரைக்காயைப் போலத் தெரிந்தாலும், தென்னிலங்கை அரசியல் பின்னணியும், அதனோடு இயைந்த தேசிய/இன வாதம் ஒரு நாட்டின் இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாகிறது என்பதை இவ்வறிக்கை முன் வைக்கிறது.

இத்தகைய தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் இலங்கையின் அமைதிக்கு எதிராகவும், இனவெறிக்கு ஆதரவாகவுமே செயற்படுகிறார்கள் என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

0 comments: