சிலந்தி

என் வீட்டிலிருந்து தெருவுக்கு வரும் நடைபாதையில் செடிகளுக்கும் சுவற்றுக்கும் இடையே ஒரு சிலந்தி, வலை பின்னி அதில் இருக்கிறது. இந்தச் சிலந்தி மஞ்சளும் கருப்பும் பழுப்புமாக இருக்கிறது. இதனைப் போன்ற சிலந்தியொன்றை நான் பார்த்ததில்லை. இந்தக் கூடும் சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது. வழக்கமான சிலந்திக் கூடு போல இருந்தது. ஆனால் வலையின் குறுக்கே இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரை ஏணியைப் போல இன்னொரு பின்னலைப் போட்டிருந்தது. நடுவில் அது காத்திருக்கிறது. கலோவீன் (Haloween) அன்றைக்கு மிட்டாய் வாங்க வந்த பிள்ளைகள் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுப் போனார்கள். அன்றைய நாளில் நிறைய வீடுகளில் சிலந்தி வலைகளும், சாலைகளில் 'சிலந்தி' மனிதர்களும் (spiderman)திரிந்தாலும், இந்தச் சிலந்தியைப் பார்த்தபோது அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள். இரவின் இருளில் என்ன நடந்ததென்று யாருக்குத் தெரியும். அடுத்த காலையில் சிலந்தி வலை ஒரு கோடான இழையாக மட்டும் தொடுத்திக் கொண்டிருந்தது. முற்றாகச் சிதைந்து விடவில்லை. அந்தச் சிலந்தி அப்போதும் இருந்தது. அது மீண்டும் ஒரு வலையைக் கட்டும். தனக்கான வீட்டைக் கட்டிக் கொள்வதற்கு சிலந்திக்கு வேட்கை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு அது புரிந்தாலுமோ (சிலந்திகளின் உலகத்துத் துன்பங்கள் உங்களது தடித்த தோலுக்குள் நுழையவில்லையென்றாலுமோ) அல்லது சிலந்திகளின் வாழ்விலிருந்து உங்களுக்குத் தேவையானதை மட்டுமே பிய்த்து எடுத்துக்கொண்டு அதுதான் சிலந்திகளின் வாழ்வு என்று நம்பிக்கொண்டு இருக்கும் அனுதாபத்துக்குரியவராக இருந்தாலுமோ...சிலந்திகள் தமது வீடுகளைக் கட்டிக் கொண்டே இருக்கும். அது அவற்றின் வாழ்வு.

1 comments:

said...

//தனக்கான வீட்டைக் கட்டிக் கொள்வதற்கு சிலந்திக்கு வேட்கை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு அது புரிந்தாலுமோ (சிலந்திகளின் உலகத்துத் துன்பங்கள் உங்களது தடித்த தோலுக்குள் நுழையவில்லையென்றாலுமோ) அல்லது சிலந்திகளின் வாழ்விலிருந்து உங்களுக்குத் தேவையானதை மட்டுமே பிய்த்து எடுத்துக்கொண்டு அதுதான் சிலந்திகளின் வாழ்வு என்று நம்பிக்கொண்டு இருக்கும் அனுதாபத்துக்குரியவராக இருந்தாலுமோ...சிலந்திகள் தமது வீடுகளைக் கட்டிக் கொண்டே இருக்கும். அது அவற்றின் வாழ்வு.//


புரிகிறது. புரிந்திருக்கிறது. புரியுமா?..