ஒரு ஊர்ல ஒரு சேரா சேத்தி

மூனு மாசத்துக்கு ஒரு தரம், வாங்குற காசுக்கு என்ன செஞ்சோம்னு ஒரு அறிக்கை குடுக்கனும். அந்தக் கருமாந்திரத்துக்காக ஒரு வாரத்துக்கும் மேல வேலை செய்ய வேண்டியதாப் போச்சு! அன்றன்றைய வேலையை அன்றன்றைக்கே ஒழுங்கு செய்து வைத்திருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால் அப்படி இருந்துவிட்டால் நானும் சுந்தரவடிவேலாக இருக்க முடியாதல்லவா?!

வீட்டுல நிறைய சுவர்கள். அதுல ஒரு சுவர்ல ஒரு சிலேட்டு தொங்குது. அதுல வரி, விசா, அதுக்கு இதுக்குன்னு செய்ய வேண்டிய வேலையெல்லாம் எழுதி இருக்கு. இல்ல தொங்குது. விடு கழுதையை. கடைசி நேரத்துல செய்ற மாதிரி ஒரு சொகம் உண்டுமா? எட்டு மணிக்கு பஸ்சுன்னா, டிரைவர் ஏறி, கண்டக்டர் ஏறி, எங்கய்யா ரிசர்வு பண்ணுன ஒரு ஆளக் காணோம்னு அவரு வேற யாரயாச்சும் ஏத்திக்கலாமான்னு யோசிக்கிறப்பதான் ரெண்டு கைலயும் பொட்டியும், தோள்ல ஒரு பையுமாப் போயி முக்கி முக்கி ஏறனும். அப்ப கண்டக்டர் மூஞ்சியையும், ரொம்ப முன் ஜாக்கிரதையா ஆறரையிலேருந்து பஸ்டாண்டுல ஒக்காந்திருந்த பக்கத்து சீட்டுக் காரர் மூஞ்சியையும் யோசிச்சுப் பாக்குறேன்.

நம்ம உடம்புல இருக்க செல்களுக்கு ஒரு திசையுணர்வு இருக்கு. Directionality அப்படிங்கறதை திசையுணர்வுங்கறேன். பாக்டீரியா இருக்க பக்கமாத்தான் வெள்ளையணு நகரும். அது மாதிரியே வளர்ச்சிக்கு உரம் இருக்க பக்கமாத்தான் பசிக்கிற செல் நகர்ந்து போவும். அதோட ஓட்ட சக்தியெல்லாம் போற பக்கமாத்தான் குவியும். மனசுக்கும் ஒரு திசையுணர்வு இருக்குங்கறேன். எதை நாம செய்யணும்னு நெனக்கிறோமோ அந்தப் பக்கமாத்தான் நம்ம சக்தியெல்லாம் குவியுது. ஒரு பக்கம் குவிஞ்சு இருக்கப்ப இன்னொன்னைப் பாக்க முடியறதில்ல. வேலையப் பாக்கறப்போ வலைப்பதியவோ, படிக்கவோ முடியறதில்லை. அதே மாதிரி வலைப்பூவுல இருக்கப்போ வேலையைப் பத்தி நெனக்க முடியல. இதையும் அதையும் பாத்துக்கறதுக்கு ஒரு நெதானமும், அலையா மனசும் ரொம்ப முக்கியம். நமக்குத்தான் அது கெடயாதே! வச்சா குடுமி, சிரைச்சா மொட்டை. "உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கனும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்" அப்புடின்னு பாரதி சொன்ன மாதிரி, வுடுங்க எங்க போவுதுன்னு பாக்கலாம்னு இருக்கது. இது ஒரு வகை. "சென்ற இடத்தாற் செலவிடாதீ தொரீஇ ஒன்றின்பால் உய்ப்பது அறிவு" அப்படின்னு வள்ளுவர் சொல்ற மாதிரி இருக்கது. இது இன்னொரு வகை. ரெண்டுக்கும் நடுவில ஊசலாடி காடாறு மாசம் நாடாறு மாசமா இருக்கது இன்னொரு வகை. சேரா சேத்தி அப்படின்னு எங்கம்மா சொல்றது. என்னைத்தான். சேரா சேத்தின்னா சின்னப்புள்ளை/பெரியபுள்ளை, நல்லவன்/கெட்டவன் இது மாதிரி எதுலயும் வகைப்படுத்த/சேர்க்க முடியாது! ஆளு மாதிரிதானே எழுத்தும், அதனால என்னோட எழுத்தையும் சேரா சேத்தின்னே வச்சுக்கலாம்!

ஒரு 21 கிராம் போராளி

புகையும் மெல்லொளியும் மிதந்த அந்த மதுபான விடுதியில் ஒரு மூலைமேசையில் நான் குந்தியிருந்தேன். வெளியே பனி பறந்தலைந்து கொட்டிக் கொண்டிருந்தது. பாட்டுக்காரனின் கித்தார் வன்மையாய் என்னுள்ளே பாய்ந்து அடிக்கடி பெருமூச்சைக் கிளப்பியது. சிப்பந்தியொருவன் வந்து "இதை உன்னிடம் கொடுக்கும்படி அந்த ஆள் சொன்னான்" என்று ஒரு மடித்த கடுதாசியை நீட்டினான். எந்த ஆளென்று பார்க்கத் திரும்பினேன். புகையில் யாரோ விரைந்து மறைவது போலிருந்தது. யாருமில்லை. கடிதத்தைப் பிரித்துப் படித்தேன்:


என் இனிய நண்பனுக்கு,

உனக்குக் கடிதமெழுதும்போது என்னுள்ளே மலரும் பூக்கள் இப்போதும் மலர்கின்றன. இதோ இந்த ஒளியும் காற்றும் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. ரொம்பவும் லேசாயிருக்கிறது. இவானா அங்குமிங்கும் நடந்தபடியிருக்கிறாள். அவள் விமானப் பணிப்பெண்ணாயிருந்தவளாம். தாகமில்லையென்றாலுங்கூட பழக்கத்தின் காரணமாக எதையோ கொண்டுவந்து தந்து சிரித்துவிட்டுப் போகிறாள்.

எனக்குப் பக்கத்தில் ஜான் கெர்த் கண்களை மூடிக் கிடக்கிறதுபோல் கிடக்கிறான். பேசி ஓய்ந்தவன். மொழியில்லாமல் பேசிக்கொள்வது ஒரு வித்தியாசமான அனுபவம். அமெரிக்கக் கேப்டனாம். இராக்கிய சண்டைக்குப் போனானாம். நேற்றெல்லாம் இவன் நாட்டில் இவனைப் பற்றித்தான் ஒரே பேச்சாம். நாட்டுப்பற்றே இவனது மூச்சு என்று அவன் அம்மா தளுதளுத்துச் சொன்னதை வானொலியெல்லாம் முழங்கினவாம். இவன் நாட்டு அதிபர் நீயில்லையென்றால் நாங்களில்லையென்றாராம். என் அம்மாவுக்கு நான் இங்கு வருவது பற்றித் தெரியாது, தெரிந்தால் அழுவாள். என் நெற்றியில் ஏதோ உறுத்தியது, தடவியபோது அவன் நாடு குத்திய முத்திரை இன்னும் சன்னமாய்ப் பதிந்திருந்தது. ஒரே அரசாங்கத்தால் ஒரு வீரனை நாட்டுப்பற்றாளனாகவும் இன்னொரு வீரனைத் தடை செய்யப்பட்ட போராளியாகவும் எப்படிப் பார்க்க முடிகிறது என்று நாம் முன்பு பேசிக்கொண்டிருந்ததும், அப்போது, அரசாங்கத்து அச்சுக் கூடங்கள்தான் உன் உணர்வுகளுக்கு என்ன நிறச்சாயம் பூசலாமென்று தீர்மானிக்கின்றன என்று நீ சொன்னதும் என்னுள் அதிர்ந்து படர்கின்றன. வானொலிகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் பேசாத, நேர்மையிலாப் பத்திரிகைகள் திரித்தெழுதிய நம் போராட்டத்தில் நானிழந்த உடலைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அந்தச் சாய விஷயம் என் பிள்ளைக்கு எப்படிச் சொல்லப்படும் என்பது குறித்த விசனம் எனக்கிருக்கிறது. அதனால்தான் வைதேகியிடம் எல்லாவற்றையும் கோடு போட்ட நோட்டில் நேராய் எழுதி வைக்கச் சொல்லியிருக்கிறேன்.

இதோ இவானா வந்து சொல்லிவிட்டுப் போகிறாள், இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் காலக் கோட்டினைத் தாண்டி விடுவோமாம். ஏற்கெனவே மொழியில்லாமலிருப்பதைக் கண்டு கலக்கமடைந்திருக்கும் எங்களில் பலர் காலம், உருவம், உறவுகள் இல்லாத நிலை குறித்தும் கலங்கிப் போயிருக்கிறார்கள். இதை நீ படிக்கும்போது அரசியற் சூதுகளும், சமாதானக் குழப்பங்களுமில்லாதவொரு வெளியில் நானும் என் நினைப்புக் கூட்டங்களும் கலைந்து போயிருக்கும். ஆற்று மணற்பரப்புகளில் உன்னோடு பேசிச் சிரித்திருந்த நாட்களுக்கு நான் இன்னுமொரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

உனதன்பு
நிமலன்

...மீதமிருந்த வோத்காவை ஒரே மூச்சில் விழுங்கிவிட்டு வெளியே வந்த எனக்குப் பனியைத் தவிர வேறெதுவும் வெள்ளையாய்த் தெரியவில்லை.

-------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: நான் நிறைய சினிமா பார்க்கும் ரகமில்லை. 21 கிராம் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டது மட்டுந்தான். சங்கதிக்குக் கொஞ்சம் பொருத்தமாயிருக்கிறாற்போலத் தெரிந்ததால் இந்தத் தலைப்பு.

பாரதீ! சாமிமார்க்கெல்லாம் தொப்பை சுருங்கியதா?

வாழ்வில் முரண்கள் இயற்கை. காலையில வெயில், மதியம் மழை. இல்லன்னா ஒரு நேரம் ரெண்டும் கலந்தடிக்கிறது. அழகு. அணுவுக்குள்ள ஒன்னு + இன்னொன்னு -. இது சமச்சீர். ஆனா சில முரண்கள் மனசை வாட்டும். அதுல ஒன்னு பசித்துக் காயும் வயிறும் அதுக்குப் பக்கத்திலேயே வளர்ந்து சாயும் தொந்தியும். ஒரே நாட்டுக்குள். ஒட்டின வயித்துக்காரன் பயிர் செய்றவன். தொந்திக்காரன் பயிர் செய்றவனுக்கு, செத்ததுக்கப்புறம் அல்லது அடுத்த பிறவியில் சந்தோஷமா எப்படி இருக்கது அப்படின்னு, சொல்லிக் குடுக்குற மடக் கூட்டத்துக்காரன்.

நேத்து ஒரு புகைப்படம் பாத்தேன். ஒரு தொந்தி ஒரு புறம் ஏதோ ஒன்னைச் சொல்லுது, மறுபுறம் ஐந்தாறு தொந்திகள் அதைக் கண்டிக்குது. என்னடா சொல்லுது, தண்ணிப் பிரச்சினையா, இல்லன்னா, அஞ்சாவது தடவையா வாடிப் போன காவிரிப் பாசனப் பயிர்க் கவலையா, இல்ல தலையில துண்டு போட்டுக்கிட்டு இருக்க விவசாயிங்ககிட்டயிருந்து கோவணத்தைப் பறிக்க வர்ற கடங்காரனப் பத்தின விவாதமா...இல்லங்க. திருப்பதியில வர்ற லஞ்சத்தை, கறுப்புப் பணத்தை, வைரத்தை எந்தத் திருடன் கொள்ளையடிக்கலாம்னு அடிதடி. இதுகள் சினம் இறக்கக் கற்கவில்லை, சித்தியெல்லாம் பெற்றதில்லை, மனமிறக்கவும் கற்கவில்லை ஆனால் வாய் மட்டும் பெரிதாய், பேசவும், புசிக்கவும் (தாயுமானவர் சொன்னதுக்கு அப்படியே எதிர்மறையாக). சங்கர் சொல்றது மாதிரி இதெல்லாம் ஈனப் பிறவிகள். இதுகளைக் குருவென்று கொள்ளும் பிறவிகளை என்னவென்று சொல்ல?

நேத்து இதுகளைப் பார்த்தவுடன் ஒரு யோசனை தோன்றியது. ஆகா, தமிழனுக்குள் பிளவு வந்தால் கூத்தாடும் இந்தக் கூட்டத்துக்குள்ளேயே பிளவா, இதை அவனை மாதிரியே, பசு நெய்யையும், இளங்கன்றுக்குட்டிகளையும் போட்டுக் கொளுத்தி யாகப் பெருந்தீயாய் வளர்த்தால் என்ன, அவன் அடித்துக் கொண்டு ஒழிவான், குடிமக்கள் நற்கதியடைவார்கள் என்கிற மாதிரியாய் அதே குள்ளநரித்தனத்துடன் யோசித்துப் பார்த்தேன். என் அப்பன், தமிழன், "சீச்சீ இது எழுத்து நேர்மையாடா?" என்று காறியுமிழ்வானென்று விட்டுவிட்டேன்.

முறுக்குப்பிரி பிரித்து

மன்னிக்கனும். புரியக்கூடாதுன்னு நேத்து அப்படி எழுதல! ஏதோ ஆர்வக் கோளாறு காரணமா முறுக்கைக் கொஞ்சம் இறுக்கிச் சுத்திப் பிழிஞ்சுட்டேன். கவிதைக்கு வெளக்கஞ் சொல்றதும், அந்த வெளக்கத்தப் படிக்கிறதும் அவஸ்ததான். ஆனாலும் 3ல் 2 (பங்கு!) வாசகர்கள் கேள்வி எழுப்பயில அதுக்கு பதில் சொல்லுறது ஒரு எழுத்தாளனுக்குக் கடம இல்லயா? அதோட நம்ம செல்வராஜ்சார் வேற நேத்து சொற்சித்து அப்புடி இப்புடின்னு பெரிய வார்த்தையெல்லாம் போட்டு என்னைப் பாத்து நானே சிரிக்க வச்சுட்டார். சித்துன்னு இல்லன்னாலும் சிக்குன்னு கெடக்கப்புடாது பாருங்க. அதுனாலயும் வெளக்க நெனக்கிறேன். ஆனா இதுல பாருங்க ஒரு சிக்கல். நாம்பாட்டுக்கும் ஒரு அர்த்தத்த சொல்ல, ஏற்கெனவே இதப் படிச்சு வேற மாதிரி ஒரு நல்ல அர்த்தத்தப் புரிஞ்சு வச்சிருக்க ஒருத்தர் இப்ப இந்த அர்த்தத்தப் படிச்சா, பூ இதத்தான் சொன்னானா, நாங்கூட என்னமோ ஏதோன்னுல்ல நெனச்சேன் அப்படின்னு நெனைக்கவும் வாய்ப்பு இருக்கு. எப்புடி இருந்தாலும் என்னோட எழுத்து ஞாயத்தச் சொல்லுறதுல தப்பு இல்லன்னே படுது. அதுனால அடிச்ச கோனார் நோட்ஸ் கீழே!

மொத பத்தியில - பல நடப்புகளாலயும் நான் அவஸ்தப் படுறேன். அப்புடி இருந்தும் தெனம் சாப்புடற மாதிரியே சாப்புட்டுட்டு தூங்கற மாதிரியே தூங்குறேன். அதுல பாருங்க நேத்து ஒரு கனவு:

2ம் பத்தி - வயல் வரப்பெல்லாம் பாத்துக்கனும்கற கனவு இருந்தபோதிலும் அதெல்லாம் வுட்டுட்டு, நாடு விட்டு நாடு வந்து டிராபிக் சிக்னல் பாத்துக் காரோட்டி, அப்படியிருந்தும் பெருசா காசுகூட சேக்காம பெருமூச்சு விட்டுக்கிட்டுக் கெடந்தவன் செத்துப் போனான் (நாந்தான். கனவுல).

3ம் பத்தி - சின்னப் புள்ளயில பள்ளிக்கூடத்துப் பக்கத்துல ஒரு முடிவெட்ற கடை. அதுல காலால மிதிச்சு சுத்துற ஒரு சாணைக்கல்லு. அதுல தீட்டுற கத்தி. அப்ப வர்ற தீப்பொறி. அந்தத் தீப்பொறியின் வாழ்க்கை கண நேரந்தான். அது மாதிரி பல விதமான வேகங்கள்/முடிவுகள்/சீற்றங்கள் பொசுக் பொசுக்குன்னு அவிஞ்சு போற மனசுக்குச் சொந்தக் காரனும் செத்தான் (நானேதான்).

4ம் பத்தி - புதுசாப் பொறப்பு எடுக்குறேன். நெஞ்சுல தீ, கையில கத்தி கித்தி வேசமெல்லாங்கட்டி பொரச்சிக் காரன் (கனவுலதான்).

5ம் பத்தி - பொரச்சிக் காரனாச்சா, மெல்லிசையெல்லாம், குயில் கூவல் எல்லாம் துச்சம் எச்சம். தவில், பறைன்னு அடிச்சு நொறுக்குற நம்ம மக்களிசைதான் புடிக்குமாம். (இந்த 'முக்கியெச்சமிட்டது' வார்த்தை ரமணீதரனிடமிருந்து உறிஞ்சியது!)


6ம் பத்தி - கொஞ்ச நாளக்கி முந்தி தமிழ்நாட்டுல போலீஸ் செலக்சனுக்குப் போயி நொந்துபோயி சண்ட போட்டு, செறுப்பு சர்டிபிகேட் எல்லாந் தொலைச்சாங்களே அந்த ஆயிரமாயிரங் காளைகளும், பல்லாயிரம் வீராங்கனைகளும் சேந்து படை ஆரம்பிக்கிறோம். எங்க மனசுக்கு வெற்றிப் பசி. தோளுக்கு எதாச்சும் செய்யனும்கற பசி.

7ம் பத்தி - காண்ட்ராக்ட் ஆளுகளயெல்லாம் போவச்சொல்லிட்டு நாங்களே கொளம் வெட்டி, மரம் நட்டு இப்படி ஊரு செழிக்குதாம், புள்ளைக விளையாடுதாம். இந்தப் படைக்கு ஒரு தலைவன் வேணுமில்ல. அவன் எங்கள ஆட்டப்புடாது. எங்களுக்கு (படைக்கு) அவன் வேலக் காரனா இருக்கனும்.

8ம் பத்தி - கனவு தொடருது. சும்மா எல்லா நேரமும் சீரியஸா இருக்க முடியுமா, அதான் சாயங்காலம், ராவயில பாட்டு, ஆட்டம். ஒரு நா பாருங்க அந்தக் கூத்துக்குப் பெருமாளு வாராரு. எங்களுக்குச் சாமி செலயெல்லாங்கூட பொம்மைகதான். வந்து எப்போதும்போலத் தூங்குறாரு. அவரப் போயி, யோவ் எந்திரிய்யான்னு எங்க ஊரு கங்காணி தட்டி எழுப்புறாரு. இது எல்லாருக்கும் ஒரு சோக்கு, பகடி, முஸ்பாத்தி, குஷாலு...கேகொள்ளேன்னு கூட்டத்துல ஒரே சிரிப்பும் சத்தமும்.

சத்தம் கூடக் கூடக் கேக்குது...(இது கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட எடத்துல, அதான் கனவோட ஒட்டாம ஒரு வரித் தள்ளி நிக்குது)

சடக்குன்னு முழிப்பு வருது. பாத்தா, பக்கத்துல தூங்குன நம்ம பய எந்திரிச்சு ராப்பசியில அழுவுறான்.

அதாங்க நம்ம கத, கவித, கனவு. வெறுங்கனவாப் போவுமாங்கறது நம்ம கேள்வி!

வெறுங்கனவா?

காணுஞ் செய்தி யெலாம்பொய்
யரசியலுஞ் சூழ்ச்சியுமாய் மற்று
நடப்போராயிரத்தாற் சிந்தை சோர்ந்தாலும்
என்றைக்கும்போல் நேற்றிரவு முண்டு
மூடியவிழியின்பின் திறந்த கனவொன்று:

குளங்காணிமரம்பேணச் சிந்தையோடக்
கடல்நிலமலை யேழுந் தாண்டிச்
சந்தி யெரிவிளக்கு வண்ணத்துக்குக்
கவனித்து நின்று செல்லுந்தேருருட்டிக்
காசும்பாராப் பெருமூச்சுக்காரன் செத்தான்.

சிறுபள்ளியருகே மயிர்க்கடை யதிற்
கால்மிதியாற் சுழலுஞ் சாணைக்கல்லிற்
தீட்டுங்கத்திக் கிளப்புந் தீப்பொறி
யவியுமோர் நொடியிலாபோல் நொடிக்கொரு
சீற்றமவியும் நெஞ்சினனு மடிந்தான்.

புதியவப்பிறப்பில் நின்றெரி பெருந்தீ
நேர்மை யுளத்தொடு
வேல்வாட் தரித்து வெம்போர்க்
களஞ்செல்லு நானோர்ப் புரட்சிக்காரன்.

குயிலுக்கு மெல்லிசைக்கு
முக்கியெச்சமிட்டே னெனக்கு
கறுப்புத் தோற்கை
அதிருந்தவில் பறைபிடிக்கும்

அரசின் காவற் துறையிற் சேர
அக்குள்மயிர்ப் புயம் வெயில்வாங்கிக் காத்தபின்
காலணியுஞ் சான்றிதழும் குப்பைக்கிழந்த
ஐந்து பத்து இருபதாயிரங் காளையரிவரொடு
நெஞ்சிற் கனலெரி பல்லாயிரம் பெண்டிர்
எல்லோருங் கிளர்ந்தெழுந்தோ மெம்படைக்கு
வெற்றிக்குப் பசிக்குமதி செயல்நூறு பசிதோள்

தரகுவெட்டிக் குளத்தில் தண்ணீர்
சேற்றுவாசம் மரநூறாயிரம் இடியாப்பாலம்
மறுபடியெங் குழவிகட் தும்பைச்
செடியெடுத்துப் பட்டாம்பூச்சி துரத்த
எம்படை ஊழியத்துக்குத் தலைவரோராள்

மீந்தமாலையிராவிற் பாட்டுஞ்சதிரு மோர்நாள்
தெருக்கூத்துக்கு வந்து பள்ளிகொண்டபெருமாளை
அடித்தெழுப்பிய கங்காணிக்குக் கூட்டங்
கைதட்டிச் சிரிக்கச்

சத்தமோங்க...

விழிப்பு
பாலுக் கழுதான் பிள்ளை.

கருணாவின் பலவீனங்கள்

கருணா இயக்கத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
அவர் அரசியல் ரீதியாக எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
தமிழ் ஊடகங்களோடு எந்தத் தொடர்புமின்றி இருக்கிறார்.
சந்திரிகாவின் தூதரைப் பிரிவுக்கு முன்பே சந்தித்திருக்கிறார். சந்திரிகாவோடு உறவு கொள்ளத் துடிப்பவரைத் தமிழுலகம் விடுதலை வீரர் என நம்பாது.
பிபிசி, இந்து போன்ற பத்திரிகைகளிடம் இயக்கத்தின் ரகசியங்களைத் திறந்து காட்டுவதால் இவர் மீது நம்பிக்கைக் குறைவு ஏற்படும்.
நிதிப் பற்றாக்குறையால் கிழக்கின் முழுப் படையணியையும் காலப் போக்கில் அவரால் பராமரிக்க முடியாமற் போகும்.
கிழக்கின் பொதுமக்களும், தமிழ் ஊடகங்களும் இயக்கமோ மக்களோ பிளவுபடுவதை விரும்பவில்லை. எனவே அவருக்கான ஆதரவு மங்கும்.
(நன்றி: I AI'NT THEMன் மேற்கோள்கள்)

...இது மாதிரியான காரணங்களால் கருணாவின் இந்தப் பிரிவு இயக்கத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை பிறக்கிறது. அதே நேரத்தில் கருணா எழுப்பிய நடைமுறைப் பிறழ்வுகள் குறித்த கேள்விகள் நியாயமானவையாக இருப்பின் அவற்றுக்குப் பதில் சொல்லும் கட்டாயம் இயக்கத்திற்கு இருக்கிறது.

நட்டாற்றில்

அன்றைக்கு என் மகனுக்கு ஒரு கதை படித்தேன். ஒரு ஆறு. குறுக்கே சின்னதாய் ஒரு மரப்பாலம். இரண்டு ஆடுகள் எதிரெதிரே அந்தப் பாலத்தின் மேல் வந்தன. ஒன்றுக்கொன்று விலகவில்லை. இரண்டும் முட்டிக் கொண்டு ஆற்றில் வீழ்ந்தன. மற்றொருநாள் வேறு இரண்டு ஆடுகள். அதே பாலத்தின் மேல் எதிரெதிரே. ஒன்று உட்கார்ந்து கொள்ள மற்றொன்று மெதுவாய் அதைத் தாண்டிக் கடந்தது. இரண்டும் கரை சேர்ந்தன. ஆற்றைக் கடக்க ஒன்றாகப் போய்க் கொண்டிருந்த பல ஆடுகளில் ஒன்று சில ஆடுகளைச் சேர்த்துக்கொண்டு நட்டாற்றுக்குப் போனவுடன் திரும்பி மற்ற ஆடுகளோடு மல்லுக்கு நின்றால் என்னவாகும்? எல்லாம் கூட்டமாக விழ வேண்டியதுதான். இத்தனை தூரம் கடந்ததெல்லாம் வீண்.

கருணாவிடம் நியாயமான கவலைகள் இருப்பதை உண்மையென்றே கொண்டாலும், அதாவது மேல்மட்டப் பொறுப்புகளில் வடக்கைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதாகவும், போர்வீரர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் அவருக்கு முரணாகத் தெரிந்திருப்பதும் அதற்காகக் குரல் கொடுப்பதும், சிறிதும் தடுக்கப்பட வேண்டிய செயல்கள் அல்ல. ஏனென்றால் அடக்குமுறைகளைப் பற்றிச் சாதாரண மக்களுக்குத் தெரிவதை விட விடுதலை உணர்வு கொண்ட போராளிகளுக்கு நன்கே தெரியும். அதனால்தான் தலைமையிடத்தின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கைகள் கருணாவை உறுத்தியிருக்க வேண்டும். ஆனால் கருணாவின் பிரிந்து செல்லும் முடிவு, அதுவும் பயிற்சி பெற்ற வீரர்களையும் வீராங்கனைகளையும் தம்பக்கம் இழுத்துக் கொண்டு போவது எள்ளளவும் ஒத்துக் கொள்ளப் பட முடியாதது. தான் ரத்தம் சிந்தி வளர்த்ததற்கான உரிமையில் அந்த இயக்கத்தைப் பிரித்துக் கொண்டு போவது என்ன நியாயம்? தான் கடினமாக உழைத்ததற்காக ஒரு நிறுவனக் கிளையைத் தனியே எடுத்துக் கொண்டு போய்த் தனி நிறுவனம் ஆரம்பிப்பது தர்மமாகாது. அவருடைய பொறுப்பில் வளர்ந்த கிளை என்பது வெறுமனே அந்தத் தனிமனிதருக்குக் கிடைத்த அங்கீகாரமல்ல, அது ஒரு இயக்கத்திற்கான அங்கீகாரம். இந்த விஷயத்தை அவர் சரியாக மதிக்க வில்லையோ என ஐயுறுகிறேன். அதோடுமட்டுமின்றிக் கட்டுக்கோப்பான இயக்கத்தின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அவரையும் இயக்கத்தையும் மட்டுமன்றித் தமிழினத்தையே பலவீனப் படுத்துகிறது.

கருணா செய்வது தவறு. இந்த இக்கட்டான தருணத்தில் தமிழன் தனக்குள்ளே இப்படிப் பிளவுபட்டுக் கிடப்பது சரியில்லை. எந்த ஒளவையார் இப்போது தூது போவார்? தமிழனுக்கு விடிவு என்பது வெறும் கனவுதானா, சாதிச் சண்டையும், கட்சிச் சண்டையும்தான் தமிழன் தலையில் எழுதி வைக்கப் பட்டதா? நரிகள் ரதங்களில் ஊர்வலம் போய்க் கொண்டிருக்கும் போது புலிகள் இப்படி அடித்துக் கொள்வதைக் காணச் சகியவில்லை எனக்கு.

MooWalls



இந்தத் தேர்தலில் சுவர்களுக்குப் பஞ்சமாம், இந்த மாதிரி கிரிக்கெட் விசிறிகளைப் பிடித்து "சும்மா பூசிக்கபா எல்லாம் பெயிண்டுதான்"னு சொல்லி ஒரு கை/முகம் பார்க்கலாமே இந்தக் கட்சிகள்.
(pic from BBC)

சுப்ரமணிய பாரதியார் இதை எப்போது எழுதினார்?

ஒவ்வொரு எழுத்தாளனும் தன் வயதுக்கு/பாதிப்புகளுக்கு ஏற்ற மாதிரி குறுகிய அல்லது நெடுங்கால அளவில் தன் எழுத்தில் மாற்றத்தை உள்வாங்குகிறான் அல்லது எழுத்து அவனில் அப்படிப் பரிணமிக்கிறது. என்ன இருந்தாலும் அந்த சுயம், அந்த ஆணிவேர் கால மாற்றங்களாலும் மேம்போக்கான பாதிப்புகளாலும் மாறுவதில்லை. (ஜெயகாந்தன் எங்கோ சொன்ன மாதிரி "அந்த பேசிக் மெட்டல் ஒன்னுதான், அது எடுக்கிற உருவங்கள்தான் வெவ்வேறு). இருக்கட்டும். இதுமாதிரிதான் பாரதியாரின் எழுத்திலும் காலம் சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என நான் நினைத்துக் கொள்ள முடியும். இதைப் பற்றி நான் சில முறைகள் யோசித்ததுண்டு ஆனால் பெரிதாய் எதையும் படிக்கவில்லை.

அன்றொருநாள் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு என்ற பாடலைப் படித்தேன். அவ்வளவு தீவிர நாட்டுப் பற்றாளர் எப்போதடா வெள்ளைக்கார இளவரசனை வா வா என்றழைக்கிறார், நீ வந்ததால் எங்களுக்கு நன்மை உண்டானது, நாமிருவரும் ஒருத்தருக்கொருத்தர் இணக்கமாயிருப்போம் என்றெல்லாம் கூறுகிறாரே என்று ஆச்சர்யப் பட்டேன். கொஞ்சம் இதைத் துருவிய போது நான் கண்டவற்றைக் கீழே தருகிறேன். ஆனாலும் இந்தப் பாட்டை அவர் எப்போது எழுதியிருப்பார் என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. மாலனோடு சேர்ந்து பாரதிக்கு மின்மண்டபம் எழுப்புவோருக்குத் தெரிந்திருக்கலாம். பாரதி மட்டும் என்றில்லை, எல்லாக் கவிஞர்களுடைய கவிதைகளுக்கும் இயன்றால் நாளினைக் குறிப்பது ஏதாவதொரு புரிதலை மேம்படுத்தலாமல்லவா?

வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு (-சுப்ரமணிய பாரதியார்)

வருகசெல்வ! வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவப் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும்
என்றனைக் காணுமாறித்தனை காதம்
வந்தனிர்! வாழ்திர்! என் மனம் மகிழ்ந்ததுவே.

செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னொர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?


மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதி பெற் றுய்வராயினர், எனவே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிதர லுற்றனள். பொருள் செயற் குரிய
தொழிற்கணம் பலப் பல தோன்றின; பின்னும்
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம், இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம்என்
பாலரின் மீது படுதலுற் றனவே
ஆயினும் என்னை? ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலந்தன வில்லை.
நல்குர வாதி நவமாம் தொல்லைகள் (நல்குரவு = வறுமை)
ஆயிரம் எனை வந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு
மருத்துவ ராக வந்தனர் என்ப தூஉம்
பொய்யிலை. ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி
ஒருவரை யொருவர் ஒறுத்திட விலாது
செவ்விதின் வாழ்க! அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்கநீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்!
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!


விக்டோரியா அரசியின் மகன் வேல்ஸ் இளவரசர், பின்னாளில் ஆல்பர்ட் எட்வர்ட் VII என அழைக்கப் பட்ட இங்கிலாந்தின் மன்னர். 1875ல் இந்தியாவுக்கு வந்து நான்கு மாதங்கள் தங்கியிருக்கிறார். இதன் பிறகு அவர் இந்தியாவுக்கு வந்ததுபோல் தெரியவில்லை. ஆனால் 1901ல் விக்டோரியா இறந்தவுடன் இங்கிலாந்தின் அரச பதவியை ஏற்று 1910ல் இறந்தார். 1903 ஜனவரியில் இந்தியாவின் மாமன்னர் என்று முடிசூட்டிக்கொண்டார், இங்கிலாந்திலிருந்தபடியே என்று நினைக்கிறேன்.

பாரதி பிறந்தது 1882. கவி பாடி பாரதி என்ற பட்டம் பெற்றது 1893. காசியிலிருந்து எட்டயபுரத்துக்குத் திரும்பி வந்தது 1902. 1905ல் வங்கப் பிரிவினைக்குப் பிறகு தீவிர ஆங்கில எதிர்ப்பில் ஈடுபடுகிறார் பாரதியார். 1905க்குப் பிறகு இவ்வாறு எழுதியிருக்கச் சாத்தியம் குறைவு என நினைக்கிறேன். ஒரு வேளை 1903 ஜனவரியில் எட்வர்ட் டில்லிக்கு வந்து முடிசூட்டிக் கொண்டாரா அப்போது பாரதி இதை எழுதினாரா எனத் தெரியவில்லை. அப்படி இருக்க வாய்ப்புக்கள் குறைவு, ஏனெனில் எட்வர்டின் வாழ்க்கைக் குறிப்பில் 1903 பிப்ரவரியில் அவர் உள்நாட்டு விவகாரங்களில் எடுத்த முடிவுகளைப் பற்றியும் அவரது போர்ச்சுகல் பயணம் குறித்தும் இருக்கிறது.

எப்படியோ, எனக்கு விடை கிடைக்கவில்லை, உங்களுக்குக் கிடைத்தால் சொல்லுங்கள்!

எழுத்தாஸ்பத்திரி

நாலு நாளாய் என் எழுத்துக்குச் சொகமில்ல. படுத்த படுக்க. சும்மாத்தான் வெளையாடுதுன்னு நெனச்சு நான் மொதல்ல கிச்சு கிச்சு பண்ணினேன். வழக்கமா சிரிக்கிறது அன்னிக்கு சிணுங்கிச்சு. கொஞ்சம் கழிச்சு ''ல கைய வச்சுப்பாத்தா கொதிக்குது. த்தன்னா துவன்னா எல்லாம் நடுங்குது. சரின்னு டாக்டருகிட்ட கூட்டிக்கிட்டுப் போனேன். அவரு டிகிரியெல்லாம் வச்சுப் பாத்துட்டு, ஒன்னுமில்லையே, எல்லாம் சரியாத்தானே இருக்குன்னுட்டார். நீங்க கொஞ்சம் வெளியில இருக்கீங்களான்னார் என்னை. மணிரத்தினத்தோட ஈயம் பூசுன பாத்திரங்க மாதிரி என்னையா, நானா, ஏன், ஏன் டாக்டர் அப்படின்னு கேட்டுக்கிட்டே வெளில வந்து சுதந்திரதேவி சிலை, ஆல்ப்ஸ், ஆஸ்திரேலியா எல்லாம் படுத்துப் புரண்டு எழுத்தும் நானும் சேர்ந்து கும்மாளம் போட்ட நாட்களப் பத்திப் பாட்டு பாடிட்டுத் திரும்பி வந்தேன். இந்தாங்கன்னார் டாக்டர். மருந்து சீட்டுன்னு நெனச்சு வாங்கிப் பாத்தா எழுத்து தன் கைப்பட ஒரு லெட்டர் எழுதி டாக்டருக்குக் குடுத்திருக்கு. இப்படி.

சில நாட்களாக ஒரே யோசனை. எனக்கு இந்த அடையாளங்காணும் குழப்பம் வந்துவிட்டது. நான் எதில் சேர்த்தி என்று புரியவில்லை. ரமேஷ் மாகாதேவனின் சில பதிவுகளைப்படித்த பிறகு நாம் ஏன் இவ்வளவு கனமாக இருக்க வேண்டும். துன்பத்தைத் துன்பமாகவே ஏன் காட்ட வேண்டும். அனுபவங்களை சிரிப்பு முலாம் பூசிக் காட்டக் கூடாதா எனத் தோன்றியது. எத்தனையோ சிக்கலான நேரங்களிலும் சிரித்துக் களித்த அந்நாட்களைப் போல் இப்போதும் ஏன் சிரிக்கக் கூடுவதில்லை எனத் தோன்றியது. இந்த மாற்றத்தை என்னில் மட்டுமே புகுத்துவது இயல்பாயிருக்காது. இயல்பு மாற்றம் அதோ அவனுக்குள் நடக்கிறது. அவன் உள்ளின் வெளிப்பாடுதான் நானேயொழிய, நான் உள்ளிற்கான இருப்பு குறித்த கட்டளைகள் அல்லன். எனவே இந்த நகைச்சுவை சமாச்சாரம் என் கழுத்தில் தொங்கி என் கழுத்தெல்லாம் வலி.

அடுத்ததாக எனக்கு வந்த பிரச்சினை, பாடுபொருள் சம்பந்தமானது. எதை எல்லாரும் எழுதுகிறார்கள், நிகழ்வுகளை. வந்தது, போனது, கடையில் கண்ட புதுச் சரக்கு, படிச்ச புத்தகம் இப்படி. மனுசனுக்கு நிகழ்வுகளே இல்லையென்றால் அவன் எதைப் பற்றி எழுதுவான்னு ஒரு கேள்வி வந்தது. இந்தப் பரபரப்பான வாழ்வில் அவன் சந்திக்கும் ஒவ்வொன்றும் ஒரு சங்கதிதான். கதைதான். இது எல்லாருக்கும் பொது. ஒருத்தன் ஒன்றைப் பார்க்கிறான். இன்னொருத்தன் இன்னொன்றை. இதிலே இவன் பார்ப்பதை அவனுக்குச் சொல்லி ஆவது என்ன? இவன் அனுபவப் பழத்தை அவன் தின்னத்தான் வேண்டுமா? இதிலே இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. அதுதான் நிகழ்வு மட்டுமே சார்ந்த எழுத்து. இன்றைக்கு ஏதேனும் நடந்தால்தான் உண்டு. செய்தி ஊடகங்கள் மாதிரி. இன்றைக்கு எதையாவது பார்த்தால்தான் உண்டு. எதுவும் நடக்காத ஒரு நாளில் பெரிய செ(¡)ல் சின்னதைத் தின்னும். இந்த மாதிரி நிகழ்வுகளை மட்டுமே சார்ந்து இவன் இலக்கியம் படைக்கத்தான் வேண்டுமா. இந்த நாட்குறிப்பு இலக்கியம் ரொம்ப அவசியமா? நிகழ்வே இல்லாத உலகம் சாத்தியமில்லாமலிருந்தாலும் (குழந்தைகள் வயோதிகர்கள் ஆகியோரை இங்கு விட்டு விடுகிறேன்), இந்தப் பரபரப்புகளையெல்லாம் சிலேட்டை தண்ணீர்தொட்ட பஞ்சால் அழிப்பது மாதிரி அழித்துவிட்டு அவன் மட்டும் தனியாய் நின்றால் அப்போது அவன் எதை எழுதுவான்? இது மாதிரி வெறும் நாட்குறிப்பு இலக்கியத்துக்காக என்னோடு சம்பந்தம் வைத்திருக்கிறானோ என்ற பொருமலில் எனக்கு இருமல் வந்துவிட்டது.

இன்னொரு சங்கடம். போகுமிடமெல்லாம் இவனோடு ஒரு எழுத்தாளனும் கூடவே வருகிறான். ரோட்டில் போகும்போது மேலே குறுக்காய்ப் போகும் மின்கம்பி மேல் அணில் ஓடினாலும் சரி, அல்லது பாதையின் குறுக்கே ஒரு நொண்டிப் பூனை ஓடினாலும் சரி, ரெடியாக இருக்கும் அந்த எழுத்தாளன், உடனே குறிப்பெடுத்துக் கொண்டு இதுகளைக் கொண்டு ராத்திரி ஏதாவது கவிதை ரசம் வைக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறான். ஒரு கதையில் வருவது போல், தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் ஒரு கூழாங்கல்லை ஒருவன் வைத்திருந்தானாம், அதைப் போல பார்ப்பதையெல்லாம் கவிதையாக்கும் கல்லைத்தூக்கிக்கொண்டு அலைகிறான் அந்த எழுத்தாளன். அந்தக் கூழாங்கல்லைக் கூழாங்கற்கள் நிறைந்த ஒரு ஆற்றங்கரையில் தொலைத்துவிட்டு ஒவ்வொரு கல்லாய் எடுத்துச் சோதித்தவண்ணம் அலைவான் அந்தப் பைத்தியக் காரன். அந்த மாதிரி ஒரு எழுத்தாளப் பைத்தியக்காரனிடம் இவன் மாட்டிக் கொண்டானோ என்று நான் படும் அவஸ்தை இன்னொரு புறம்.

அப்புறம், பலே பலே என்றால் துள்ளியும், குப்பை என்றால் துவண்டும் வீழ்கிறான் இந்தப் பண்படா மனசுக்காரன். புருசன் அடிச்சதுக்கு கொளுந்தன் குண்டியக் கடிச்சாளாம் ஒருத்தி. அந்தக் கதையா எங்கயாச்சும் மொத்து வாங்கினா எங்கிட்ட வந்து சீறுறான். இதுகளையெல்லாம் தாண்டி, வேலை, படிப்பு, புள்ள, பொண்டாட்டி, ரோட்டுல போற புள்ளைக...அப்படின்னு அடிபட்டு நைஞ்சுபோயி எங்கிட்ட சக்கையாட்டம் வந்து பழரசம் வேணுமாங்குறான். இவனுக்கும் எனக்கும் இனி ஒத்து வருமென்று தோணவில்லை. இந்தக் குழப்பங்கள்தான் என்னை இப்படிப் படுத்துகின்றன.

இப்படியாக எழுதியிருந்தது எழுத்து. படிச்சு முடிச்சவுடன் எல்லாரும் விடும் பெருமூச்சை நானும் சம்பிரதாயமாக விட்டுட்டு அதே சம்பிரதாய சோகத்துடன் டாக்டரைப் பாத்தேன். ஒன்னும் பயப்படாதீங்க, ரெண்டு பேருக்கும் வெறும் மனப் பிராந்திதான், கொஞ்சம் பீர் குடிச்சுட்டு எழுதினா எல்லாம் சரியாப் போயிரும்னார். ஆனா இன்னும் கொஞ்ச நாளக்கி எழுத்தத் தனியா மட்டும் வுட்றாதீங்கன்னார்.

(பிற்சேர்க்கை: இதைப் படிப்பவர்கள் தங்கமணியின் வாழ்வெனும் ஆற்றையும் படிக்கவும்! அது ரொம்ப ஆழமான ஆறு, மெதுவாய் இறங்குங்கள்!)