மதியம் சனி, நவம்பர் 27, 2004

தங்கமணியின் கடிதங்கள்-1

தங்கமணி எனக்கு எழுதிய கடிதங்களை/அவற்றின் பகுதிகளை இங்கு இட நினைக்கிறேன். இளவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிவோமென்றாலும், இளங்கலைக் கல்லூரி வாழ்வே எங்களை நண்பர்களாக்கியது. முதுகலைக்கு இருவரும் வேற்றூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை. அப்போது ஆரம்பித்ததுதான் இக்கடிதப் போக்குவரவு. அதன்பின் சென்னையில் ஒன்றாயிருந்த சில வருடங்களில் பெரும்பாலும் எழுதிக் கொள்வதில்லை. பிறகு வேற்றூர், கடிதங்கள். இவற்றை நான் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் எமது மற்ற நண்பர்களுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்ளுதலே இதன் நோக்கம். இவை வரிசைப் படுத்தப்படாதவை. பெரும்பாலும் எந்தக் கடித உறைக்குள்ளும் ஒரே நாளில் எழுதப்பட்டது இருக்காது. பல நாட்களாய் நினைக்கும் போதெல்லாம் எழுதி ஒன்றாய் வைத்து அனுப்புவான். சிலவற்றில் தேதியே இருக்காது, நலம், நலமா போன்ற விசாரிப்புகள் இருக்காது.

இதைப் பதிவதில் அவன் என் நண்பன் எனும் கர்வமும், அவனுக்கு என் நன்றியும் அடங்கியிருக்கின்றன.

மார்ச் 8, 1999
சுதந்திரமாக இருப்பதற்கே பெரும் தைரியம் வேண்டும் என்று ஓஷோ சொல்வதுண்டு. நானும் பலமுறை அதை உணர்ந்துதான் இருக்கிறேன். ஏனெனில் சுதந்திரமாக இருப்பதென்பது தனியாக இருப்பது. எந்த நம்பிக்கையும், பற்றுக்கோடும் இல்லாமலிருப்பது. யுகயுகமாய்ப் பற்றிக் கொண்டிருந்து, நமது இருப்போடு ஒன்றாகிப் போன கற்பிதங்களை உணருவது; ஏனெனில் அவைகள் கற்பிதங்கள் என்பதைத் தாண்டி அவை நம்மோடு பேசவும், உறவு கொள்ளவும், நம்மைத் துளைத்து நம்மைப் பிணைத்து நம்மோடு கலந்து இறுகிப் போன நம்பிக்கைகளை, நம்பிக்கைகள் எனப் புரிந்து கொள்வது. இதற்கு அசாத்தியமான துணிவு வேண்டும். எப்படி சுதந்திரத்தைப் பற்றி ஒருவன் கற்பனை செய்ய முடியாதோ அப்படியே இந்த தைரியத்தைப் பர்றியும் கற்பனை செய்ய முடியாது.

சகு 'பாரிசுக்குப் போ'வைப் படித்தார். முன்னுரையைப் படித்துவிட்டு அவர் புகழ்நத பொழுது முழுதும் படிக்கட்டும் என்றிருந்தேன். முடிக்கப் போகிறார். லலிதா பண்ணியது அவருக்குப் பிடிக்கவில்லை. துரோகம்தானே அது என்றார். அதைப் பற்றி நான் பேசவில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னார். "படிக்கும் போது தலையை வலிக்கிறது; பயமாக இருக்கிறது" என்று. மனம் காலங்காலமாக எழுப்பியிருக்கும் கருஞ்சுவர்களின் மீது ஒளி வீசியபடி சில கடப்பாரையின் தாக்குதல்கள் விழும்போது, மனம் அதிர்கிறது. பெரிய எதிர்ப்புணர்வையும் கசப்பையும் ஏற்படுத்துகிறது. எத்தனையோ யுகங்களாய் இறுகிக் கிடக்கும் அதன் மேற்தளம் சற்றே கீறல் விடத் தொடங்கினாலும், பயங்கரமான வேதனையையும், பாதுகாப்பின்மையையும் உணர்ந்து வீறிட்டலறுகிறது. பன்னெடுங்காலமாய் இறுகிக் கிடக்கும் இமைகளின் மேல் விழும் முதல் ஒளி பயங்கரமான கூச்சத்தையும் வலியையும் தருகின்றது. இமைகள் இன்னும் இறுகிக் கொள்கின்றன. சுகமான கனவுகள் இன்னும் இருக்கின்றன.

ஒருவன் எதையெல்லாம் இழக்க வேண்டும்? சமூகம் அவனுக்குப் பொதுமையான விழுமியங்களைக் கொடுத்து, குழுமனப்பான்மையைக் கற்பித்து, வலிமையான கண்ணிகளில் அவனையும் மற்ற எல்லா தனிமனித, சமூக அமைப்புகளையும் பிணைத்து, அதைத் தாங்கி நிற்பதற்கான சகல ஒழுக்கங்களையும் கடவுளின் பெயராலும், விடுதலையின் பெயராலும் யுகங்களாக ஏற்படுத்தி ஒருவன்மீது முழுமையாகக் கவிழந்திருக்கும்போது ஒருவன் எதற்காக வெளியே வரவேண்டும்?

தன்னந்தனியனாய், கதகதப்பூட்டும் நம்பிக்கைகளைத் துறந்து, திசைகளையே ஆடையாகக் கொண்டு, இந்த முழு உலகின் ஆகர்ஸனத்தையும் புறந்தள்ளி எழ ஒருவனுக்கு எத்தனை வல்லமை வேண்டும்?

அவன் விழித்தெழும்போது எந்த நம்பிக்கையின் குரலைக் கேட்பான், அவன் நடந்து செல்ல சமைக்கப்பட்ட சாலைகள் எதுவுமில்லாத பெருவெளியில் அவன் தனது இலக்கை எங்ஙனம் உணர்வான்? அவன் எந்தப் பாராட்டைப் பெறுவதற்கு அல்லது எந்த உயர்ந்த பீடத்துக்குத் தனது கால்களைச் செலுத்துவான்?

தனது இருப்பொன்றைத் தவிர வேறெதையும் அவன் அங்கு காணமுடியாது.

இப்படியெல்லாம்தான் சுதந்திரத்துக்கான விளைவும், விடையும் இப்பொழுது கூட்டத்திற்கு இடையில் இருந்து பார்க்கும்போது அவனுக்குக் கிடைக்கும். பின் எதற்காக அவன் புறக் கருத்துலகத்தையும், அக உலகையும் கடக்க வேண்டும்?

6 comments:

achimakan said...

இது நல்ல முயற்சி.

தெளிந்த சிந்தனைகள் பலரையும் சென்றடையும்.

தொடருங்கள்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

good, did you reply to them, if so post them also

சுந்தரவடிவேல் said...

நன்றி ஆச்சிமகன்.
ரவி, எனக்குக் குழம்ப/புலம்ப மட்டுந்தான் தெரியும்:))
அதெல்லாம் அவனிடமிருக்கின்றன!

Thangamani said...

குண்டா, உனக்கு நன்றி. உனது வேலைக்கு பழுதில்லாமல் பார்த்துக்கொள்.
உனது கடிதத்தில், அன்பும், புரிந்துணர்வும் இருக்குமே, அது தருவதுதானே எல்லாம்.

ROSAVASANTH said...

தங்கமணியின் மற்ற எழுத்துக்களைவிட கடிதங்கள் இன்னும் சுவாரசியமாய் இருக்கும் போல தெரிகிறது. மற்ற கடிதங்களையும் வெளியிடவும்(தனிப்பட்ட விஷயமாய் நீக்கதோன்றுபவற்றை நீக்கிவிட்டு).

SnackDragon said...

அத்தகைய ஒருவன் எப்படி இருப்பான்?
தான் இது வரை நம்பி வந்தவைகளை குப்பைகள் எனத் தெரிந்ததும், சட்டென தூர வீசி எறிந்துவிட்டு மீண்டு முன்னடப்பான். அவனை எந்த நம்பிக்கைகளும் சிறைபிடிக்காது. எந்த உணர்வுக்கும் அடிமையல்லன் அவன். அவன் செயல்கள் பிறருக்கு புரியாது. இன்னும் அவன் செயல்களை பிறர் அர்த்தமற்றவை என்றே நம்புவர். சதா காலமும் சுய பரிசோதனையில் இருப்பான். அறிவு வரும் திசைநோக்கி அவனது பயணம் வேகப்படும். புதியவைகளை ஏற்று சோதனையில் ஆழ்ந்திருப்பான்.ஏனெனில் அவனுக்கே ஆகிய காரணங்களால் விதைக்கப்பட்டவை அவை!!