அன்பு வெங்கட்,
எது குறித்தும் இன்னும் முழுமையடையாத கருத்துப் பொதிகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இந்நிலையிலே உங்கள் மனந்திறந்த விவாதம் மனதுக்கு நன்றாயிருக்கிறது. இதற்காக என் நன்றி. இனி எனக்குத் தோன்றுபவற்றைச் சொல்கிறேன்.
முதலில், நீங்கள் சொல்லியிருக்கும் அறிவுப் பரவலாக்கத்தைச் செய்வதையே அடுத்து ஆக வேண்டிய காரியமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த விவாதத்தைக் கூட நீங்கள் சொல்லும் வெற்றுப் பிரசங்கத்தில் சேர்த்துவிடலாம்.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்து ஆவதென்ன என்ற அசூயை மிகுந்து போகிறது. ஆனாலும் அதன் எச்சத்தை இன்றும் காணும்போது அதே வரலாறு தொடர்கிறதோ என்ற சீற்றம் கிளம்புகிறது. பெரியவர் உள்ளே போனதுக்கப்புறம் சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்குப் பின்னால் நின்று போஸ் கொடுக்கும் டி.என்.சேஷனும், இந்து ராமும் இவ்வரலாற்றை எப்படியாவது முன்னெடுத்துச் சென்றுவிட வேண்டும் என்பதன் சின்னமாய் எனக்குத் தெரிகிறார்கள். என் பார்வையிலே பிழையிருக்கலாம்! ஒரு மடத்தைக் கட்டிக் காப்பதன் மூலம் அரசியலைக் கட்டிக் காக்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள், இல்லையா? அந்த மடத்துக்கு தெய்வாம்சத்தைத் தவிர இவ்வியாபார உலகில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. இல்லையென்றால் அது இத்தனை பேரையும் ஈர்த்து வைக்காது. அது என்ன? அவர்களை யாரென்று சொல்வீர்கள்? வணிகரா அல்லது பிராமணரா? இந்தக் கூட்டுதான் போராட்டங்களைக் கட்டுப் படுத்துகிறது. கலாச்சாரம், அரச நீதி, சமூக நீதியையும் இதுவே கட்டுப் படுத்துகிறது என நினைக்கிறேன். அதே நேரத்தில் எல்லாத்துக்கும் இதுதான் காரணமென்று நான் சொல்லவில்லை.
எல்லாத்துக்கும் பிராமணர்தான் காரணமென்று நான் சொல்வேனாகில் அது முதிர்வற்ற வாதம். நோயெதிர்ப்புத் தன்மையைப் போலவே இது வினை, இன்னொன்னு எதிர்வினை. எதிர்வினைக்கு இன்னொரு எதிர்வினை. திராவிடக் கொள்கைகளும் பார்ப்பனீயமும் இப்படித்தான் சுழல்கின்றதாக எனக்குப் படுகிறது. நடுவில் சந்திலே ஆயிரம் சிந்துகள். மூலம் எங்கேயென்று தேடினால் அதைக் கொண்டு போய் மனுவிடம் சேர்த்துவிட முடியும். துளசியும் தீவாளியும் கிளம்பிய இடத்தையும் அவ்வாறே கொண்டு சேர்த்து விட முடியும். இப்படிச் சேர்ப்பதன் மூலம் எல்லாத்துக்கும் காரணம் பிராமணர் என்பதாகிவிடாது. அது ஒரு முக்கியமான காரணமாயிருந்தது. இப்போது வணிகமும் அத்தோடு சேர்ந்து கொண்டது. இதிலே யாருக்கு எத்தனை சதவீதமென்று தெரியாது. ஆனால் கடைசியில் அலைக்கழிவது தூரத்திலிருக்கும் தனியாள், அவன்தான் உண்மையான கையாலாகாதவன். அவனுக்குச் சொல்லித் தருவதற்கான அறிவுப் பரவலாக்கம் என்பதில் வரலாற்றுப் பாடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவன் புதிதாய்க் கற்கின்ற போது வருகின்ற ஆச்சர்யமும், வலியும் இதிலும் உண்டு. அதனைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். இப்படி எனக்குத் தோன்றுகிறதே எனச் சொல்கிறேன். உடனே என்ன நடக்கிறது, நான் அப்படியான ஆள், பிராமண விரோதி என அவசர அவசரமாக இனங்காட்டப் படுகிறேன். இன்னும் எனக்கே தெரியாது நான் பிராமணனா அல்லது அதன் விரோதியா, ஆளும் வர்க்கத்தவனா அல்லது அடங்கிக் கிடப்பவனா என்று. உடனே ஒரு சண்டை முளைக்கும், இதன்போது சென்றது குறித்து முட்டி மோதி வார்த்தையாடப்படும். உங்களைப் போல் எல்லோராலும் அணுக முடிந்தால் அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம். அல்லது குறைந்தது என்ன நடந்தது அல்லது நடக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாம். இணையத்திலும் புத்தகங்களிலுமிருந்தும் தத்தமக்குச் சார்பாய் ஒவ்வொருவரும் எடுத்துப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் நடக்கின்றவற்றை எது ஆட்டிவைக்கிறது, ஒரு திராவிடக் கட்சி அறிக்கையாகட்டும் அல்லது பிராமணக் கட்சியின் அறிக்கையாகட்டும் அதன் பின்னால் உந்து தண்டாக இருப்பது எது என்பதைத்தான் புரிந்து கொள்ள முயல்கிறேன். தாக்குதலையோ அல்லது வெற்றி தோல்வியையோ நோக்கியதல்ல இவ்விவாதம் என்று நினைக்கும்போது உங்களுக்கு இன்னொருமுறை நன்றி சொல்லத் தோன்றுகிறது.
கலாச்சாரச் சுற்றல்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சுந்தரவடிவேல்,
இப்பொழுதுதான் உங்களின் சில நாளைய பதிவுகளைப் படித்தேன். பின்னர் விகடனைப் பார்த்தால் தனுஷ்-ஐஸ்வர்யா திருமணப் புகைப்படங்கள் மற்றும் செய்தி. தனுஷ் பஞ்சகச்சம் வேட்டிகட்டி, மார்பின் பட்டுத்துணி போர்த்தி இருந்தாராம். திருமணம் பிராமண முறைப்படி நடந்ததாம். ரஜினியின் மனைவி லதா பிராமணராக இருக்கக்கூடும். அவர்கள் திருமணைத்தை எந்தமுறையில் நடத்துவதும் அவர்கள் இஷ்டம். ஆனால் கலாச்சாரம் பாயும் திசையை இது தானா...
//ஒரு மடத்தைக் கட்டிக் காப்பதன் மூலம் அரசியலைக் கட்டிக் காக்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள், இல்லையா?//
ஒரு மார்க்சிஸ்ட்டுக்கு இந்தக் கைதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்ல்லை. செய்வதற்கு எதுவுமில்லை, விசாரணை நேர்மையாக நடைபெறுகிறதா, மடத்தின் சொத்துக்களை அரசுடமையாக்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பதையும், விவாதிப்பதையும்விட. ஆனால் அப்படி நடக்குமா? ஆனால் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஒரு அத்வைதி இராகுகாலத்துக்கு கவலைபடும்போது, ஒரு மார்க்சிஸ்ட் மடத்துக்காக கவலைப்படக்கூடாதா?
உன் எழுத்து மேலும் மேலும் இறுக்கம் பெறுகிறது. நல்லது.
Post a Comment