தீவாளிப் பொறி

இன்றைக்கு தீபாவளி. தீவாளின்னுதான் சொல்லுவோம். அப்பாயி தீவிளின்னு சொல்லும். அப்பவெல்லாம் புதுக்கோட்டை சித்தப்பா எப்படா வரும்னு இருப்போம். வந்தா ஒரு பட்டாசுக் கட்டு வாங்கிட்டு வரும். ஏண்டா காசைக் கரியாக்குறீங்கம்பார் அப்பா. வெடிச்சத்தத்துல அதெல்லாம் காதுல ஏறுமா? ராத்திரி ஆரம்பிச்சு ஒரு பாட்டம். அப்புறம் காலையில. வெடிச்ச குப்பை தீவாளி வாசலுக்குக் களை.

படுவாப்பய அப்புடியே இருந்திருந்திருக்கலாம். இருந்திருந்தா இன்னைக்கு நானும் எண்ணெய் தேச்சுக் குளிப்பேன், எங்கெருந்தாச்சும் மத்தாப்பு வாங்கிட்டு வந்து கொளுத்துவேன், பொண்டாட்டியோட சேர்ந்து பலகாரம் சுட்டுத் தின்னு அஜீரணத்துக்கு சூரணம் தின்னுக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பேன். ம்...என்ன செய்ய? தீவாளி கதைகளைப் படிக்கிறப்ப, அதுக்கு ஆயிரத்தெட்டு நேர்மறைக் காரணங்களைச் சொன்னாலும், என்னால இராவணனைக் கொன்னதுக்காக இந்த விழா, இராவண பொம்மையை எரிக்கிற நாள், மாவீரர், தெய்வத்திருமகர் இராமருடைய வரவைக் கொண்டாடுற நாள் அப்படின்னு சொல்லும்போதுதான் இதைக் கொண்டாடனுமான்னு கேக்குறேன். ஏதோ திங்கறதுக்கும், உடுத்துறதுக்கும், நண்பர்களைப் பாத்து சந்தோஷமா இருக்கதுக்கும் ஒரு நாள் அப்படிங்கற அளவில இதைக் கொண்டாடலாமே தவிர, இதுக்கு வேற எந்த மதக் காரணங்களுக்காகவோ, அல்லது தீமை/நன்மை பாகுபாட்டில் நாமெல்லாரும் திடீரென நல்ல பிள்ளைகளாகித் தீமையைக் கொல்லுவோம், தீமை செஞ்ச அசுரன் செத்தான், இராவணன் செத்தான்னு கங்காஸ்நானம் பண்ணிக்கிட்டு திடீர்த் தேவாம்சம் பெற்றுக்கிற மாதிரி கற்பனையோ அல்லது நினைப்போ இருந்தா இந்த தீவாளியை மாதிரிக் கேலிக் கூத்து ஒன்றும் கிடையாது.

நம் கண் முன்னாலேயே நேத்து திடீர்னு ஒரு அரக்கன் உருவாக்கப் பட்டிருக்கான். வீரப்பன். அவனை ஒரிஸ்ஸாவுல துர்காதேவி வதம் செஞ்சிருக்கா. இதே மாதிரி ஒரு அரசியல்தான் இராவணனையும், நரகாசுரனையும் அசுரர்களாக்கியிருக்கு. கலாச்சார மேலாண்மை, அரசதிகாரம் அதை விழாவாக்கியிருக்கு. குடிகள்/நடுத்தட்டு என்ன செய்யுறோம், அவதி அவதியாய் மேற்தட்டோட சேர்ந்துக்கப் பாக்குறோம். நா ஒன்னும் கொறச்சல் இல்லன்னு சொல்லிக்கிறோம். அப்புடித்தான், இந்தத் துளசிச் செடி பாருங்க, எங்க வீட்டு வேலியில ஓணான் ஓடு பாதையில, வயல்ல நடந்து போற வரப்புல மண்டிக் கெடக்கும். நெனச்சா பறிச்சுத் திம்போம். அதைப் புனிதமாக்கி ஒரு மாடத்துல வச்சு அதுக்குப் பூசை பண்ணித் தடபுடல் நடக்கும் எங்க தெரு அய்யரு வீட்டுல. அதைப் பாத்து எங்க சித்தியும் அது மாதிரி ஒரு மாடம் கட்டி வேலியில கெடந்த துளசிச் செடியக் கொண்டாந்து மாடத்துல வச்சு. துளசி நல்லது, அதுல இருக்க மருத்துவ குணங்களுக்காக அதைக் காப்பாத்தனும், கொண்டாடனும். ஆனா இந்த மாடங்கட்டி காவிப்பட்டை போட்டு சமாச்சாரம் எங்கேயோ இடிக்குது. (அதுவும் துளசிக்கு மட்டுந்தான் இந்த மரியாதை, கீழாநெல்லிக்கோ, பிரம்மிக்கோ, தூதுவளைக்கோ மாடம் கட்டினா யாராச்சும் சிரிக்கக் கூடும்!). இத்தகைய செயற்பாடுகள் ஏதோ ஒரு கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவிக்குது, கட்டிக் காக்குது, பரப்புது. அப்புடித்தான் இந்தத் தீவாளியும். குடியானவனுக்கு இது கொண்டாட்டமில்லை. பொங்கல்தான் அவனுக்கு. ஆனாலும் கொஞ்ச கொஞ்சமா இந்த மேலாதிக்கம் கிராமங்களுக்கும் பரவுது. ஏன்னு கேக்காம, காரணம் தெரியாம அந்தக் குடிகளும் கடன் வாங்கியாச்சும் கொண்டாடுது, இல்லன்னா திண்டாடுது. காம்பவுண்டு சுவத்துக்கு வெளியில நின்னு மத்தாப்புப் பொறியைப் பாத்துட்டுப் பெருமூச்சோட போகுது.

எப்படியோ இருந்துட்டுப் போவட்டும். கொண்டாடுறவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்!

0 comments: