மதியம் செவ்வாய், நவம்பர் 16, 2004

கலாச்சாரம் பாயும் திசை

இது வெங்கட்டின் பின் தொடர்தலுக்குப் பின் தொடர்தல். மற்ற தாவரக் கடவுள்களைப் பற்றிய மேலதிகச் செய்திகளுக்கு அவருக்கு நன்றி. கள்ளி விஷயங்கள் நானறியாதவை. கலாச்சாரங்கள் எப்படிப் பரவுகின்றன என்பது குறித்த எனது பார்வைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நம் சமூகம் படிக்கட்டு நிலைச் சமூகம். இதில் பிராமணர் பெரியவர். அல்லது பணமும் செல்வாக்கும் படைத்த அடுத்த நிலைச் சாதியார். எந்தக் கை அரசதிகாரத்திலிருந்தாலும் அவ்வரசு இத்தகைய மேற்குடிகளின் ஆளுகைக்கு உட்பட்டதே. இது காலகாலமாக ஊறிக்கிடக்கிறது. நேற்று நாலுபேர் சடக்கென்று எழுந்து உதறிச் சமத்துவம் பேசுவது உண்மையேயானாலும் இந்த மனோநிலையை மாற்ற இன்னும் காலம் பலவாகும்.

பழக்க வழக்கங்களாகட்டும், பண்டிகைகளாகட்டும் இவற்றில் மனிதர்கள் யாரால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்? மன்னன் எவ்வகை குடிகள் அவ்வழி. மன்னன் யாரால் நடத்தப் படுகிறான்? குல குருவால். குல குரு யார்? உங்களுக்குத் தெரியும். எங்கள் தெருவில், அல்லது சிற்றூரில் பிறக்கின்ற அனேகம் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது எங்கள் பிள்ளையார் கோயில் அய்யர். சாமி பஞ்சாங்கத்தைப் பாத்துச் சொன்னா நல்ல பேருதான். அந்தக் காலத்தில் வளத்தான், சிங்கன், சடையன் என்று பேர் வைத்தார்கள். எங்கள் ஊருக்கு அய்யர் வந்தார். சிங்கனுக்கு கணேஷ் என்றொரு மகனும், முத்துக்கருப்பனுக்கு சோமசுந்தரமும், சோமசுந்தரத்துக்கு பாலசுப்ரமணியனும் பிறந்தார்கள்.

எந்த நோக்கில் கலாச்சார ஆதிக்கம் பரவுகிறது? மேலிருந்து கீழா அல்லது கீழிருந்து மேலா? முட்டி மோதி நாட்டுப் புறப்பாடல்கள் குறுந்தகடு ஏறுகிற காலம் வந்துவிட்டாலும், சபாக்களில் கொடிகட்டிப் பறப்பது எது? பத்திரிகைகளில் பத்தி பத்தியாகப் புகழப்படுவது எது? சுப்புடுவுக்கு விருது கிடைத்ததை எழுதிய எத்தனை பத்திரிகைகள் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததை எழுதினார்கள். இதிலே இந்த ரெண்டுக் கலைஞர்களும் சாதியால் பிரிக்கப்படுகிறார்களோ என்னவோ தெரியாது. ஆனால் எதை அவர்கள் முன்வைக்கிறார்களோ/பரப்புகிறார்களோ அதன் பொருட்டே அவர்களது தகுதி தீர்மானிக்கப் படுகிறது. எத்தனை நாட்டார் கலைகள் நகரங்களுக்கு வந்திருக்கின்றன? அதே நேரத்தில் எத்தனை நாட்டார் கலைகள் அழிக்கப் பட்டிருக்கின்றன? வழக்கொழிக்கப் பட்டிருக்கின்றன? புதுவரவுகள் என்ன, அவை எங்கிருந்து யாரால் கொண்டுவரப் படுகின்றன? கலாச்சாரம் மேட்டுக் குடியிலிருந்துதான் பரவுகிறது. பணக்காரன் பிட்ஸா கார்னருக்குப் போனால் நடுத்தட்டுக்காரன் போக விழைகிறான். கீழ்த்தட்டு அதற்காக ஏங்குகிறான். சோளக் கூழுக்கு மேற்தட்டு ஏங்குவதில்லை. ஏன் கூழ்கார்னர் வரவில்லை? இது விலை போகாது. பிட்ஸா கார்னரை நம்பித் திறக்கலாம்.

கல்யாணங்கள் அந்தக் குலத்தின் பெரியவரொருத்தரின் ஆசியோடு நடப்பதுதான் வழக்கம். இவ்வழக்கம் சில சாதிகளில் இன்னும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் என்னவானது? பிராமணரொருவர் மந்திரம் ஓத நடக்கிறது. இந்தக் கலாச்சாரம் எப்படி வந்தது? இது மாடர்ன். இதான் இப்போ பேஷன் என்ற நிலை எப்படித் தோன்றியது? பிராமணர்கள் இல்லாத கிராமங்கள் எத்தனையையோ காட்டலாம். இக்கிராமங்களில் பிராமணர்களின் வரவுக்கு முன் திருமணங்கள் எப்படி நடந்தன? அல்லது திருமணங்களே நடக்கவில்லையா? இப்படிப் பரவுவதைத்தான் ஆதிக்கப் பரவல் என்று கருதுகிறேன். இந்தப் பரவலை முன்னெடுத்துச் செல்லும் வர்க்கத்தை ஆதிக்க வர்க்கம் என்று நினைக்கிறேன். கலாச்சாரத்தில் சில விஷயங்கள் மேலானவையாகக் கருத வைக்கப் படுகின்றன. புனிதமானவையென்று புகட்டப் படுகின்றன. அதை மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். கலாச்சார மேலாதிக்கந்தான் இதற்குக் காரணமெனக் கருதுகிறேன். இதனால் என்ன கெடுதலென்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு புதுக் கலாச்சாரம். நதியா வளவி மாதிரி இது ஒரு புது தினுசு வளவி, தோடு. இருந்துட்டுப் போவுதேன்னு கேக்கலாம். ஆனா இத்தகைய கலாச்சாரப் புதுவரவுகள் ஏற்படுத்துற சீரழிவைப் பார்க்கும்போதுதான் அவற்றின் மேல் அவநம்பிக்கையும் அதிருப்தியும் வருது. தெலுங்குப் பாட்டுக்கள் வந்து தமிழ்ப் பாட்டுக்களைக் கீழிறக்குறதைக் கண்கூடாப் பாக்குறோம். முனியன் கோயில் பூசாரிகளை அய்யர்மார்கள் அப்புறப் படுத்துறதைப் பார்க்கிறோம். தமிழ் மந்திரங்களை ஓதலாம்னு சட்டம் சொல்ல வேண்டியிருக்கு. திருவரங்கம் ஸ்ரீரங்கமாகுறதையும், திருமுட்டம் ஸ்ரீமுஷ்ணமாகுறதையும் பாக்குறோம். இதைப் போலத்தான் பொங்கல் மாதிரி கிராமத்தான் பண்டிகையெல்லாம் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. தீவாளியும் நியூஇயருமாகப் பண்டிகைகள் முன்னிருத்தப் படுகின்றன.

நமது சமூகம் படிக்கட்டுநிலைச் சமூகம். ஆமாம். பிறக்கும் குலத்தை வைத்தே உயர்வு தாழ்வு இன்னும் கணிக்கப் படுகிறது. வளர்ந்த பிறகு பொருளாதாரம் செல்வாக்கைப் பொறுத்து இதன் மதிப்பு கூடவோ குறையவோ செய்கிறது. பிறக்கும்போதிருந்தே நம்மோடு இருக்கும் சாதீய மனநிலை எவ்வளவோ வளர்ந்த பிறகும் அடியாழத்தில் இருக்கவே செய்யும். படிப்பிலும் செல்வத்திலும் ஒரு பறையனும் பார்ப்பானும் ஒத்திருந்தாலும் மனசுக்குள் அந்தப் பறைய/பார்ப்பன பிம்பத்தை இல்லாமலாக்க முடியாது. அம்பேத்கார் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரொரு தலித். அப்புறந்தான் சட்டமேதை இத்யாதியெல்லாம். இப்படித்தான் நம் சாதீய மனம் இயங்குகிறது. இங்கும் அமெரிக்காவில் எப்படியாவது துருவித் துருவி வெவ்வேறு வழிகளில் முயன்று சாதியை அறிந்து கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருக்கிறது. கொஞ்சம் நடுத்தரமாயிருந்தால் நீங்கள் பறையரா என்று கேட்பதில்லை. நீங்கள் பிராமிணா? ஏன்னா பறையரா என்று கேட்டால் ஒருவர் பெரும் பாதிப்படையக் கூடும். பிராமணரா என்று கேட்டால் பெருமையாக இருக்கும் பாருங்கள். சிறு வயதில் எங்க அக்காக்களில் ஒருவரை 'என்னம்மா நீ ஐயர் வீட்டுப் பொண்ணா?'ன்னு யாரோ கேட்டதுக்கு என் வீட்டில் யாரும் வருத்தப் பட்டதாக நினைப்பில்லை. அதே நேரத்தில் நீ பறச்சியான்னு யாராவது கேட்டிருந்தா எல்லார் மூஞ்சியும் எப்படிப் போயிருந்திருக்கும் என இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

இத்தகைய ஒரு நிலையில் உயர்சாதிகள் செய்வதெல்லாம் பெரிய விஷயங்கள். பின் தொடரப் பட வேண்டிய செய்கைகள். அவற்றைச் செய்வதன் மூலம் தானும் அவர்களை மாதிரி ஆகிவிடலாம் என்றொரு எதிர்பார்ப்பு. அவர்களது பழக்க வழக்கங்கள் கீழ்த்தட்டு மக்களைப் பாதிப்பது போல், கீழ்த்தட்டு மக்களின் நடைமுறைகள் மேலேயிருப்பவர்களால் சட்டென ஏற்றுக் கொள்ள முடியாது. ஏண்டா பறப்பய மாதிரி உக்காந்து சாப்பிடுறேன்னா அது அசிங்கம். என் வீட்டுக்காரர் பிராமணன் மாதிரி, குளிக்காம சாப்புட மாட்டார் அப்படின்னு சொல்றது பெருமை. இதற்கும் மேலாக எது நம் முன்னால் அதிகம் வைக்கப் படுகிறது, பரப்பப் படுகிறது? ஊடகங்களில் எது சிறந்ததென்று புகட்டப் படுகிறது? விளம்பரங்களில் எவரது வாழ்வு சித்தரிக்கப் படுகிறது? சோப்பு, போர்ன்விடா விளம்பரத்துக்கு ஒரு கிராமத்தானை/ளைக் காட்டுவாங்களா? மிஞ்சிப் போனா உர விளம்பரத்துக்கு கிராமத்தான் முண்டாசும் மீசையுமா வருவான், பக்கத்துல நாட்டுப் புறத்தியும்.

இது எல்லாத்துலயும் எதாச்சும் விதிவிலக்கு இருக்கும். அதைத் தூக்கிட்டு வந்து இங்க பார் அப்படின்னு போட உங்களுக்கு நேரமாகாது. ஆனா பெரும்பாலும் இப்படித்தான் என்று சொல்கிறேன். இந்த ஊடக வலிவு, நிறைய பேரைச் சென்றடையும் திறன் எல்லாம் சேர்ந்து ஒரு ஆதிக்க வர்க்கத்தை முன்னிருத்துகிறது. இது செய்வதெல்லாம் சடங்கு, இது நம்புவதெல்லாம் புனிதம், இது கொண்டாடுவதெல்லாம் பண்டிகை, இதன் வருத்தம் நாட்டுக்கே வருத்தம். என் சித்தியின் அந்தத் துளசிச் செடி இப்படியான கலாச்சாரக் காப்பியடித்தலுக்கு ஒரு உதாரணம். மேலாதிக்கச் சின்னத்தைத் தானும் வைத்திருக்க வேண்டும் என்ற கீழ்த்தட்டு மக்களின் ஆசையின் வெளிப்பாடு. இதைக் காட்டித் தன் வேலைக்காரியிடமிருந்தும், சுற்றத்திடமிருந்தும் தன்னை உயர்த்திப் பிடித்துக் கொள்ளலாம். அவர்களைப் பயமுறுத்தலாம், சிறுமைப்படுத்தலாம். இதுதான் அடியிலியங்கும் மனோநிலையாக நான் பார்க்கிறேன். அந்தப் பிராமணரும் ஒரு உதாரணமே. ('அய்யரு வீட்ல'ன்னு எழுதாம 'எங்க தெருவுல ஒரு வீட்ல'ன்னு எழுதுறது அசிங்கமாப் பட்டுச்சு). பிராமணரல்லாத ஆதிக்கக் காரர்களும், ஆதிக்க வெறியற்ற பிராமணர்களும் நிறையவே இருக்கிறார்கள். இன்னொரு முறை அழுத்திச் சொல்கிறேன், எனக்கு எரிச்சலூட்டுவது ஆதிக்க வெறியேயன்றி தனிப்பட்ட பிராமணர்களில்லை. என்னுள் இயங்கும் ஆதிக்க/அடங்கிய மனோநிலையை நான் கண்காணித்துக் கொண்டிருக்க இத்தகைய அலசல்கள் அவசியமாகின்றன.

5 comments:

SnackDragon said...

சு.வ,
ஆரோக்கியமான அலசல். இந்த பிரமாணீயத்துவம் பரவி நிலைப்பெற முக்கிய காரணமாக நான் கருதுவது, இல்லாத கடவுள் பேரை சொல்லி, இவர்கள் செய்தவை அனைத்தும் உயர்ந்தவை எனக் காட்டப்பட்டதே காரணம். ஒரு பிராமணனுக்கு இருக்கும் பக்தி ஒரு பறையனுக்கோ அல்லது பள்ளனுக்கோ இருக்காது, அல்லது அவனால் கடவுள் கடமைகளை சரிவர செய்யத்தெரியாது என்ற பிம்பம் தான் இந்த அனைத்து பிம்பங்களுக்கும் மூல பிம்பம். எனவேதான் அந்த கடவுளையும் ஒரு சக்கிலியனின் செருப்பால் மிதிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் புரியுமா எனத் தெரியவில்லை. இவ்விவாதம் மீண்டும் ஒரு பிராமண துவேஷம் என திசை திருப்பப்படாமல் இருக்க இயன்றதை செய்வேன். யாரையும் கவனத்தில் கொண்டு சொல்லவில்லை. இணைய விவாத்ங்களின் பொதுவான போக்கினை வைத்து சொல்கிறேன்.

Thangamani said...

கொஞ்சம் அலைகிற மாதிரியான நடையாயினும், இறுதியில் சேரவேண்டிய இடம் சேர்கிறது உனது எழுத்து. இதை சம்ஸ்கிருதமயமாக்கல், மேற்குடியாக்கம் என்றெல்லாம் சொல்லலாம். இதில், அதிகார, வணிக, சுரண்டல் நோக்கங்கள் இருப்பது மிக இயல்பு. இது எல்லா சமூக, கலாச்சார அமைப்பிலும் உண்டு. இது ஆகக்கூடி கடைசியாக தனிமனிதனை அடிமைப்படுத்தி, சுரண்டுவதில் முடிவது. இதில் இருந்து விடுபடும் முயற்சியே கட்டுடைத்தல் ஆகிறது. கட்டுடைத்தல், பன்மைத்தன்மையையும்,தன்மானத்தையும் முன்வைக்கிறது. அதனாலேயே இந்து (த்துவ) கலாச்சாரம் மற்ற எதைனையும் விட மூர்க்கமாக கல்விப்பரவலையும், பன்மைத்தன்மையையும் எதிர்க்கிறது. இந்த மாத (நவம்பர்04) தீராநதியில் அ.கா.பெருமாளின் 'மேலே செல்லும் சனங்களின் சாமிகள் இதுகுறித்து பேசுகிறது.
நன்றி.

ROSAVASANTH said...

உதாரணமாய் முளைப்பாரி வைப்பதும் தாவர விஷயம்தான், துளசியை சுத்திவருவதும் தாவரவிஷயம்தான். முளைப்பாரியை விட்டுவிட்டு துளசியை எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஆதிக்க கலாச்சார பரவலாகபடும். பொதுவாக பலருக்கும் அப்படித்தான் படும். விஞ்ஞானியான அவருக்கு என்ன அர்த்தத்தில் அப்படிபடுகிறது என்று புரியாமல் போகாது. ஆனால் ரெண்டுமே தாவரம்தானே என்று ஆர்க்யூமெண்டை தாராளமாய் அள்ளிவிட்டு இழுத்துகொண்டுபோக முடியும். இதில் விவாதித்து எங்கேயும் போய் சேரமுடியும் என்று தோன்றவில்லை.

ROSAVASANTH said...

நிதனமாய் இப்போதுதான் படித்தேன். தெளிவாக உங்கள் பதிலை தந்துள்ளீர்கள்.

Venkat said...

சுந்தர் - என்னுடைய இன்றைய வலைக்குறிப்பில் எனது பார்வையை முன்வைத்திருக்கிறேன். கல்விப் பரவலாக்கமே இதன் முழுமையான தீர்வு என்று காண்கிறேன். கற்றதை இலக்கின்றி பரப்புதல் என்னுடைய முழுக்கடமையாகத் தோன்றுகிறது.

தங்கமணி - மேற்குடியாக்கம் என்ற கருத்தின் கீழே சுந்தரின் கலாச்சாரப் பாய்ச்சலைப் பார்க்கமுடியுமல்லவா, இதுதானே இன்றைய நிலை. (இதில் பழமையின் தாக்கமும் கொஞ்சம் இருக்கிறது). முழுமையான , இன்றைய கட்டுடைத்தலில் (பிறப்பின் அடிப்படையிலான) பார்ப்பனீயம் என்ன அளவிற்கு இருக்கிறது? பிறப்பு கடந்த பார்ப்பனீயங்களின் பங்கு இருப்பதாக நம்புகிறீர்களா? இந்தப் பங்குகளின் அதிகரிப்பு/குறைவு வீதம் எப்படியிருக்கிறது? - venkat