டெஹோர்

நீங்க 1980களில் கரம்பக்குடியில ஏதாவது ஒரு தெருவுலயாச்சும் நடந்திருந்தீங்கன்னா இந்த வார்த்தையை யாராச்சும் ஒரு ஆளாவது சொல்லக் கேட்டிருப்பீங்க. டெஹோர். அந்த வார்த்தையின் சிருஷ்டி கர்த்தா ஒரு பெயிண்டர். ஒரு வேளை வான்கோ மாதிரி இவரும் ஆகியிருந்திருக்கலாம், ஆனா என்னமோ வெறும் தரு.மு. பூச்சிமருந்துக்கடை மாதிரிப் பெயர்ப் பலகை, அப்புறம் சில சைக்கிள்கள் இவற்றோடு மட்டும் நிறுத்திக்கிட்டார். சில்வர், பச்சை, சிவப்பு என்று அடிக்கடி இவர் சைக்கிளின் நிறம் மாறும். உடை மட்டும் வெள்ளை & வெள்ளை. கதர். சைக்கிளில் போய்க்கொண்டே டெஹோர் அப்படின்னு ஒரு இராணுவக் கட்டளை மாதிரிக் குரலெழுப்புவார். அந்தப் பக்கம் கிட்டிப்புள் விளையாடுற பயலுகளோ அல்லது டீக்கடையில கிளாஸ் கழுவுற ஒரு பயலோ எசப்பாட்டுக் குதூகலத்துடன் டெஹோர் அப்புடின்னு கத்துவாங்ய. சில நேரம் கொஞ்சம் பெரிய ஆட்களும் டெஹோர் போடுவதுண்டு. இதுக்கு அர்த்தம் என்னன்னு யாருக்கும் தெரியாது. அந்தப் பெயிண்டருக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா இது பறவைகள் மாத்தி மாத்திக் கத்திக்கும் தெரியுமா அந்த ரகத்தைச் சேர்ந்த ஒரு பரிமாற்றம் மாதிரி இருக்கும். நாளடைவில் இது ஒரு சாதாரண பயன்பாட்டுச் சொல்லாயிருச்சு. உதாரணத்துக்கு, நல்லாயிருந்த ஒரு கபாடி ஆட்டத்தை, "நேத்து அம்புக்கோயிலாங்ய டெஹோர் பறிச்சுட்டாங்ய" அப்படின்னு சொல்ற அளவுக்கு. இவர் சில நேரங்களில் பாட்டுக்களையும் திரிப்பதுண்டு. ஒரு மத்தியான வேளையில் எங்கள் வீட்டுக்குப் பின்புறமிருக்கும் சின்ன ஒலுங்கையில் இவரது வண்ணங்கொண்ட சைக்கிளில் "மானே தேனே கச்சப்பொடி"ன்னு பாடிக்கிட்டு போனது இன்னும் நினைவிருக்கு (உதயகீதம் - மானே தேனே கட்டிப்புடி பாட்டின் திரிபு; கச்சப்பொடின்னா கருவாடு). இவர் சைக்கிள் போற பக்கமெல்லாம் ஒரு சிரிப்பலை கூடவே மிதந்து போற மாதிரி ஒரு பிரமை. இப்போது இவர் எப்படியிருக்கிறார் என்றோ, டெஹோர் சத்தம் தேய்ந்தேனும் எங்காவது ஒலிக்கிறதா என்றோ எனக்குத் தெரியாது. எந்த மலிந்த விலையையும் கேட்காமல் இப்படி உற்சாகத்தைத் தெருவில் விதைத்துக் கொண்டு போகிறவர்களால்தான் தெருக்களில் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது!

0 comments: