பஞ்சாயத்துக்குப் போன பரதேசி. துண்டு-2

மிருகக் காட்சி சாலைக்குள் நுழைந்தோம். ஏழு ரூவா குடு சார்னான். இது வண்டிக்கு. எனக்கொரு நல்ல பழக்கம். கையில் காசே வைத்துக்கொள்ள மாட்டேன். கடனட்டையைக் கொண்டே வாழ்க்கையை ஓட்டுவதில் பெருநம்பிக்கையுள்ளவன். நான் பக்கத்தில் திரும்பிப் பார்க்க, அவர், அதாங்க என் வழிகாட்டி, பாவி என் சிறுவாட்டில் கையை வைத்துவிட்டாயா என்று என்னைப் பார்த்துக் காசைக் கொடுத்தார். அவர் மண்டைக்குள் ஓடியது எனக்குத்தான் தெரியும் "இதுக்குள்ள ஒரு எடத்துலயும் கடனட்டை வாங்க மாட்டான், இந்த ஆள் இன்றைக்கு என் கையிருப்பைக் கரைக்காமல் விடமாட்டார்". அப்புறம் ஆளுக்கு, சாப்பாட்டுக்கு (சாப்பாடா சார் அது!). நல்ல வேளையா பையனுக்குச் சாப்பாடு கொண்டு வந்திருந்தோம். அது என்னது தோம்? தாம் தூம். சரி கொண்டு வந்திருந்தார்.

நாலு ஒட்டகங்கள். ஒரு 10 மீட்டர் ரவுண்டுக்கு 5 டாலர் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஐ! ஒட்டகம்! போதும். சரி எல்லாத்தையும் பாக்க முடியாதுல்ல, இதோ பக்கத்துல இருக்க ஆசியக் காட்டுக்குள்ள போயிட்டுக் கிளம்புவோம். தொட்டி மீன், பொட்டிப் பாம்பு, குரங்குகள், மரத்தில் தூங்கிய கருஞ்சிறுத்தை ரெண்டு, ஆமை, ஆடிய மயில், காட்டுப் பன்றி, செயற்கை மரங்களில் தொங்கிய விழுதுகள், ஆச்சு மணி. கிளம்பினோம். சரி. எப்படிப் போக? தகவல் மையமிருக்கா? ஒட்டகத்துப் பெண் சொன்னார், இருக்கு, காட்டுக்கு அந்தப் பக்கம் போனா இருக்கு. இல்லன்னா வாசல்ல போலீஸ¤கிட்ட கேளுங்க.

போலீஸ¤ன்னாலே ஒரு இது. மூணு தடவை ராத்திரியில கோழி மாதிரி அமுக்கி ஒரு தடவை மட்டும் 190 டாலருக்கு தண்ட நோட்டீஸ் குடுத்தவர். சொன்னார். நல்லாவே சொன்னார். என் மனைவிக்கு, அய்யா நீர் கூத்துப் பாக்கக் கூட்டிக் கொண்டு போகலைன்னாலும் பரவாயில்லை, என்னையும் என் பிள்ளையையும் உருப்படியாய் வீட்டிலே கொண்டுபோய்ச் சேரும், என்றிருந்திருக்கும். போலீஸ் போட்ட ரூட்டிலே நம்ம சங்கத்துக் காரர் ரூட்டையும் சேர்த்து அந்த விழாப் பள்ளிக் கூடத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். மணி சுமார் மூன்று. ஏற்பாடு செய்பவர்கள் அதையும் இதையும் தூக்கி, இறக்கிக் கொண்டிருந்தனர். பட்டுச்சேலைகளைக் கண்டவுடன் என் குழாய்டவுசர் மனைவிக்கு ஒரு பல்பு பொசுக். போய் நின்றோம். வாங்க வாங்க என்று வரவேற்பு பலமாயிருந்தது. அதுவும் வேற்று மாநிலமென்றவுடன் இன்னும் கொஞ்சம் திணறிப் போனார்கள். சாப்பிட்டீங்களா? ஆச்சுங்க (அய்யோ!). இப்படியாக அந்த அரங்கத்தில் மிருகக் காட்சி சாலையிலிருந்து நேராக வந்த நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.

நாளைக்கு முடிச்சிருவோம், சரியா? :)

0 comments: