பூச்சியப்பாபிள்ளை

ஒரு வசந்த காலத்தில் ஒரு அப்பா இருந்தார் அவருக்கு ஒரு பிள்ளை இருந்தான். பிள்ளைக்கு ஒன்னே முக்கால் வயசும் அப்பாவுக்கு அப்பா வயசும். அப்பாவுக்கு வசந்த காலம் பற்றிய பேருணர்வேதும் பதிந்திருக்கவில்லை. காலங்களில் வசந்தம் என்பதைப் பிரித்துப் பாராதவராகவே அவர் இருந்தார். மழையும், வெயிலும் வேறில்லாப் பொழுதுதான் அவர் பொழுது. இந்தப் பனி, வெப்பச் சுழற்சியில் ஏறியிறங்கும் மனசைக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் விசேடமாய்த் தயாரித்து, முன்பேயிருந்த மனசோடு பொருத்திக் கொண்டார் அப்பா. கொஞ்சம் கனந்தான்.

அந்தப் பிள்ளைக்குப் புல்லின் மேல் நடக்காதேயெல்லாம் தெரியாதல்லவா, பனியில் அழுகி, வெயில் பட்டுத் துளிர்த்துப் படரும் புல்லின் மேல் ஓடினான். புல்லின் விளிம்பிலே போய்த் தடுக்கி விழுந்தால் மூன்றடிக்குக் கீழே ரோட்டுச் சிமெண்டிலே பல்லுமூக்குடையும். அப்பாவும் பின்னாலே ஓடினார். இதனாலெல்லாம் அப்பாவுக்குப் பூமனசென்று நினைக்க வேணாம். அப்பா நினைத்தால் பூக்களின் மீதும் நடப்பார். புல்லுக்குள் பூச்சிகள் வசிக்கும். அப்பாபிள்ளையின் ஆட்டத்தில் சில எழுந்து பறக்கும், பறக்கத் தவறிக் கால்களின் கீழே மாட்டியவை, அழுத்தத்துக்குத் தகுந்த மாதிரி புல்லின் மடலிலோ அல்லது வேருக்கருகிலோ ஒட்டி நசுங்கும். பிழைக்கலாம், சாகலாம், யார் கண்டது. ரோடு, சிமெண்டு, தறிகெட்டோடும்பிள்ளை, பல்லுமூக்கு. மனுசன்.

அன்று மாலை வீட்டுக்குள் அப்பாவும் பிள்ளையும் படித்தார்கள். புத்தகத்துப் பட்டம் மேலே மேலே பறக்குதென்று கையை உயரக் காட்டினார் அப்பா. பட்டத்தைக் காண மேலே பார்த்த பிள்ளை, பறந்த பூச்சியொன்றை அப்பாவுக்குக் காட்டினான். படபடவென்று அந்துப்பூச்சி மாதிரி சின்னோன்டு. கம்பிவலையடித்த சன்னல்கள். எப்படி வந்ததோ. அப்பாவின் மனசுக்குள் வழக்கம் போல் ஒரு கை ஓங்கியது. இந்த ஓங்கும் கை ஒரு அகங்காரமான, அத்துமீறலின் எதிர்ப்பு, என் வீட்டுக்குள் வந்தாயா எனும் பரிணாமநாய்க் கேள்வி. அதே பரிணாமம் அப்பாவின் மனக்கையைத் தாழ்த்தியது. பிள்ளையின் பார்வை பூச்சியோடு பறந்து போனது, ஒட்டி ஒட்டிக் குந்தியது, பின் எழுந்து பறந்தது. வாயானது பூச்சியும், பார்வையும் போகுமிடத்தையெல்லாம் குழறியது, கம்புட்டர், சேக்கள்... ஏற்கெனவே தாழ்ந்திருந்த அப்பாவின் மனக்கை குவிந்தது. குஞ்சூ பூச்சிக்கு வணக்கம் சொல்லுங்க. பிள்ளை இந்த வார்த்தையை விட அதிகமாய் அந்தப் பூச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்திருக்கலாம். வாக்கம் என்றான். சில கணங்களில் அதைக் காணோம். அம்மாப்பாபிள்ளை தின்று தூங்கினார்கள். பூச்சி எங்கே தூங்கியதென்று தெரியாது. விடிந்தெழும்பி வேலைக்குப் போனார் அப்பா. அங்கும் மனசுக்குள் படபடவென்று அது அடித்துக் கொண்டிருந்தது. அம்புட்டுதான் மிஸ்டர் பூச்சியப்பாபிள்ளையின் கதை.

நீதி: ஒரே குழப்பமாயிருக்கிறது. இனிமேல் புல்லில் பிள்ளையின் பின்னால் ஓடாமல் ரோட்டில் நின்றபடி விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பிள்ளை புல்லுக்கு ஓடுமுன் பிடித்து இழுத்து நிறுத்திவிட வேண்டும். ஆனால் இது அவனது ஓட்டச் சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைப்பது. வீட்டுக்குள் வந்த பூச்சியை விரட்டிப் பிடித்துத் தாளில் ஏந்தி அப்பா வெளியில் விட்டிருக்கலாம். பூச்சி, அப்பா, பிள்ளை மூவருக்கும் சாதகமான ஒரு பதிலை நீங்கள் அறிந்திருந்தும் சொல்லவில்லையென்றால் அப்பாவின் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்.

இவ்வாறு சொல்லிய வேதாளம் மீண்டும் இணையத்துக்குள் புகுந்துகொண்டது.

0 comments: