பஞ்சாயத்துக்குப் போன பரதேசி. துண்டு-3

இந்தக் கடைசித் துண்டு கொஞ்சம் பெரிதாகப் போய்விட்டது. சமாளிக்க முடியாதவர்கள் துண்டு துண்டாய்க் கிழித்துப் படிக்கவும் அல்லது படித்துக் கிழிக்கவும்!

சார்லஸ்டன் (South Carolina) மாநகரிலே இருந்த சுமார் 75 தமிழர்கள் கூடிச் சங்கமமைக்கும் பெரும்பணியில் ஒரு சிறு ஆளாயிருந்து, தைப்பொங்கலுக்குப் பத்துப் பேரோடு வேட்டி கட்டி, கோடைவிழாவிலே அரைக்காற்சட்டை போட்டுக் கொண்டாடிய கூத்தாடியான நான், கனெக்டிகட்டுக்கு வந்த போது 500 பேரைக் கொண்ட தமிழர் கூட்டமொன்றைப் பார்த்துப் பாரடா எனது மானிடப் பிறப்பை, பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம் என்று மனம் தித்திக்கத் தீபாவளி விழா 2003இலே போய் உட்கார்ந்த போதுதான் ஒருத்தர் வந்து welcome address பண்ணி, எத்தனையோ டாலர் நன்கொடை கொடுத்த என்னமோவொரு பணமாளும் நிறுவனக்காரரைப் programஇலே நுழைத்து முதல் முக்கால் மணி நேரத்தை அவருக்குத் தாரை வார்த்தார். அந்த வெள்ளைக்காரர் வந்து படம் போட்டு, காசு சேர்ப்பது எப்படியென்று Aயிலிருந்து Zவரை விளக்கி, எல்லாருக்கும் கேள்வித்தாள் கொடுத்து, பதில் வாங்கி... நான் என் விடைத்தாளில் "இதற்கு இது இடமில்லை, இனியொருமுறை இதை இங்கே நடத்தாதேயும்" என்று எழுதி, என் நண்பனையும் எழுதச் சொல்லிக் கொடுத்தேன். அதன் பின் பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து ரெண்டு மணி நேரம் சினிமாப்பாட்டாய்ப் பாடி, அதற்கு ஒரு ஆறேழு பேர் மாறி மாறி மேடையிலே ஆடித் தமிழை வள வள என்று வளர்த்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய், போனதற்கு ஒழுங்காய்ச் சாப்பிட்டுவிட்டு இனித் தமிழை எதிர்பார்த்து இங்கு வருவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அப்படியாபட்ட அனுபவஸ்தனான எனக்கு நியூயார்க் தமிழ்ச் சங்கம் எப்படியிருக்குமென்று காண ஒரு ஆவல்.

நிகழ்ச்சிக்கு முன் சில சங்கப் பெரியவர்களோடு கொஞ்சம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அனைவரிடமும் உறைந்து கிடந்த கவலை, மக்களின் ஈடுபாடற்ற தன்மை, கூட்டங்களுக்குக் கிடைக்கும் சொற்ப ஆதரவு. நாலு மணி நிகழ்ச்சிக்கு நாலரைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஏழெட்டுப் பிள்ளைகளும் ஆசிரியையும் மேடையிலமர்ந்திருக்க நாலேமுக்கால் வரை உள்ளே வாங்க, வந்து உக்காருங்கன்னு தலைவர் ஒலிபெருக்கியில் அழைத்துக் கொண்டேயிருந்தார். நீராரும் கடலுடுத்தவும், பின் பரா பரா பரமேஸ்வராவும் அழகாய்ப் பாடிய குழந்தைகளைக் காணுகையிலும், பின்பு வந்த ஏழெட்டு மழலைகள் எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் பாட்டுக்கு ஆடுகையிலும் கண்கள் பனித்தது உண்மை. தேர்த்திருவிழா எனும் நாட்டியக் கோர்வையில் புள்ளையாரும், பின்னாலே குடை பிடித்து மூன்று பெண்களும் வர, புள்ளையாருக்கு முன்னாலே சதிரும், கும்மியும், காவடியாட்டமும். பிள்ளைகள் அழகாய் ஆடினார்கள். ஆனாலும் இவர்கள் உடம்பிலே இயங்குதன்மை குறைவுதான். தேவராட்டம், ஆப்பிரிக்க மேள நடனம், தப்பாட்டம், வேகமான பரதம் இவைகளிலே இருக்கும் இயக்கத்தை, உயிரை, வேகத்தைப் பிள்ளைகளுக்குக் காட்டிக் கொஞ்சம் தேற்றினால் அசத்தி விடுவார்கள்.

Ground Zeroவிலே கிருஷ்ண பரமாத்மா என்றொரு சிறு காட்சி. கிருஷ்ண வேடமணிந்தவொருவர் திரையிலே தோன்றிய இடியாத, பின்பு இடிந்த நியூயார்க் இரட்டைக் கோபுரங்களை நோக்கி மனம் வருந்தி, தீவிரவாதிகளைத் திட்டிப்பாடிவிட்டு, கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்து, மறுபடியும் இன்னொரு அவதாரம் எடுத்துத் தீவிரவாதிகளை ஒழித்துவிடுவதாகச் சொல்லிவிட்டுப் போனார்.

நடுவிலே மேடைக்கு வந்து பேசியவொருவர் நியூயார்க்கிலே பத்தாயிரம் தமிழர்களிருந்தும் நானூறு பேரைக் கூடக் கூட்ட முடியவில்லையே என்றார். அவர் அழுத்திச் சொன்ன ஒரு விஷயம், இது தமிழை வளர்ப்பதற்கான சங்கமில்லை, தமிழர்கள் கூடுவதற்கான ஒரு இடம், அவ்வளவுதான். பர்மாவிலே, ஈழத்திலே, சிங்கப்பூரிலே தமிழர்களுக்கு நடந்ததையெல்லாம் பார்த்தோம்தானே, அது மாதிரி நாளைக்கு ஒன்று நமக்கு நடந்தால் ஒன்றாய்க் குரலெழுப்ப வேண்டும். அதற்கு ஒருவரை ஒருவர் தெரிந்திருக்க வேண்டும். அதற்குத்தான் இந்தக் கூட்டமெல்லாம் என்றார்.

அடுத்து வந்தது சுமித்ரா ராம்ஜியின் நாடகம். என் பயல் நடத்திய கூத்திலே பாதி நேரம் அவன் மேல் கண்ணிருந்தாலும் மீதி நேரத்திலே பார்த்த பஞ்சாயத்துப் பஞ்சவர்ணம் என்ற இந்த நாடகத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில், தமிழில் இது இன்னொரு சராசரி நாடகம். தமிழ்நாட்டு இட்லிப்பொன்னியை அமெரிக்காவிலே கொண்டு வந்து அரைத்ததுதான் புதுமை. வலைப்பூவின் மூலம் நானறிந்த சுமித்ரா ராம்ஜியின் தமிழார்வமும், சமூக நற்பண்புகளும் அவரது நாடகத்தின்மீதான என் பார்வைக்குக் குறுக்கே நிற்கக் கூடாது என்பதிலும் அதே நேரத்தில் நான் எழுதுவது (ஒரு பொருட்டாய் அவர் படித்தால்) அவருடைய படைப்புத்திறனைக் குதறுவதாக இருந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாகவே இருக்கிறேன். பாடுபட்டு ஒரு காரியத்தை அவர் செய்திருக்கிறார் என்று அவரது உழைப்பை வணங்கும் அதே வேளையில், ஒரு பார்வையாளனாக என் கருத்தைச் சொல்வதை அவசியமென்றே கருதுகிறேன். உன்னால் முடியுமா போன்ற கேள்விகளுக்கு என்னிடம் ஏதும் பதிலில்லை.

இந்நாடகத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும், அவர்களின் குறைநிறைகளையும் நான் அலசுவதிலோ, அல்லது இரு காட்சிகளுக்கிடையே விட்ட இடைவெளியிலே ஒரு இசைக் கச்சேரி நடத்தியிருக்கலாம் என்று பரிகாசம் செய்வதிலோ எந்தப் பிரயோசனமும் இருக்கப் போவதில்லை. இது அமைப்புக் கோளாறு. கதைக் கருவின் கோளாறு. ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்ற நினைப்பினால் விளைந்த கோளாறு. தமிழ் நாடகமென்றாலே கிரேசிமோகன் அல்லது எஸ்வி சேகர் மாதிரியானதாகத்தானிருக்க வேண்டுமா? என்னைவிட சுமித்ரா அவர்களுக்குத் தெரியும், எவ்வளவோ கதைகள் இருக்கின்றன, அழகானவை, சமூக நோக்குக் கொண்டவை, குடும்பப் பாங்கானவை, புரட்சிகரமானவை. அந்தக் கதைகளை முன்மாதிரியாக எடுத்து நாடகமாக்கலாமே. இன்குலாபின் ஒளவையை, எக்ஸ¤பெரியின் குட்டி இளவரசனை, அலெக்ஸேய் அர்புஸவ்வின் தான்யாவை, இன்னும் பல அருமையான நாடகங்களையெல்லாம் மாணவர்கள் கல்லூரிதோறும், ஆண்டு விழாக்கள்தோறும் அரங்கேற்றும்போது, நாடகக் கலையிலே ஊறிக் கொண்டிருக்கும் ஒருவர் வெறும் நாட்டாமைக் கதையை மசாலாத் தூவி நடத்துகிறாரென்றால் கஷ்டமாகத்தானிருக்கிறது.

ஹபீப் தன்வீர் என்பவரின் சரண்தாஸ் ச்சோர் நாடகத்தை நிறையப் பேர் கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் டில்லிக்குச் சென்ற புதிதில் ஹிந்திப் பரிச்சயம் இல்லாத ஆரம்பநாட்களில் இந்த நாடகத்தைக் காண நேரிட்டது. மொழி நாடகத்துக்குப் பெரிய அவசியமில்லையோ என்று தோன்ற வைத்த நாடகமது. ஒலிவாங்கியில்லை. அலங்கார விளக்குகளில்லை. அங்கங்கள் பேசின, அசைவுகள் கதையைச் சொல்லின, பின்பாட்டிசை உணர்வையள்ளித் தெளித்தது. இன்னொரு மெக்ஸிக நாடகத்துக்குப் போயிருந்தபோதும் இதே உணர்வு. நம்மவர்கள் நடிப்பதில்லை. அங்கங்களை அசைப்பதில்லை. நின்று பேசுகிறார்கள். அந்தம்மா பஞ்சவர்ணமும் இன்னும் சிலருமாவது பேச்சிலே ஏற்றியிறக்குகிறார்கள். மற்றோருக்கெல்லாம் சவிலிருந்து சா வரைக்கும் ஒரே கோடுதான்.

நம் மக்கள் சிரிப்பார்கள்தான். கவுண்டமணியின் கோமுட்டித் தலையிலிருந்து, எஸ்வி சேகரின் அடுத்தவரைக் கேவலமாக மட்டந்தட்டுவது வரைக்கும் எல்லாத்துக்கும் சிரிப்பார்கள்தான். அந்தச் சிரிப்புக்காக ஒரு வெற்றிகரமான நாடகத்தை எழுதுவது அவசியமா என்று கேட்கத் தோன்றுகிறது. எல்லா ஊர்களிலும் அரங்கேற்றம், அரங்கமே சிரிக்கிறது என்பதெல்லாம் வெற்றியின் அறிகுறிகளல்ல. இன்னும் சொல்லப் போனால், அமெரிக்காவில் தேர்ந்தெடுத்துப் பார்க்கவெல்லாம் வழியில்லை, நீங்கள் போடுவதைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும் என்ற நிலை. நல்லது போட்டாலும் பார்த்துத்தான் ஆகணும், இது மாதிரி பஞ்சாயத்தானாலும் சாப்பாடு போடும் வரை பார்த்துத்தானாகணும். எனவே நல்ல நாடகங்களாகப் போட்டால் சின்னப் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் நல்லது. இந்தப் பஞ்சாயத்தை இத்தோடு நிறுத்திவிட்டு, Immatured என்ற அடைமொழியைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதுமையான நாடக முயற்சிகளை சுமித்ரா ராம்ஜி போன்ற துணிவும், நாடகத் துறையனுபவமும், கலையார்வமும், சமூக அக்கறையும் உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டும். தன் நாடகத் திறனை வீணாக்கிவிடாமல் ஒரு வளர்ந்த படைப்பாளியாக அவர் உயர வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோளும் வாழ்த்தும்.

அப்புறம் சாப்பிட்டுவிட்டு, ஒரு சங்கத்துக்காரர் சொன்ன வழியிலேயே நூல் பிடித்த மாதிரி ஓட்டி பால்டிமோரில் நடக்க இருக்கும் பேரவையின் (FETNA) ஆண்டு விழாவுக்குச் செல்ல விருப்பத்துடன் ஊர் வந்து சேர்ந்தோம்.

0 comments: