பஞ்சாயத்துக்குப் போன பரதேசி. துண்டு-1

அருண் வலைப்பூவுல சுமித்ரா ராம்ஜீயைப் பத்தி எழுதியிருந்தாரா, நான் வேறு ஆர்வக் கோளாறிலே, மறுமொழியில் "அடுத்த நாடகம் எங்கே?"ன்னு கேட்கப் போக, பி.கே.சிவகுமார் இதோ பிடி, நியூயார்க் தமிழ்ச் சங்கப் புத்தாண்டு விழாவிலே நீ கேட்ட பஞ்சாயத்துப் பஞ்சவர்ணம் நாடகம் என்று விபரந்தட்ட, சரி என்னதானென்று பார்த்துவிடுவோமே என்று மறுநாள் கூத்துக்குச் சட்டென ஒரு திட்டம் போட்டோம். நியூயார்க் வழியே சில முறைகள் சென்றதுண்டே தவிர அந்த ஊரிலே எதையும் சுற்றிப் பார்த்ததில்லை. ஆகையால் அதையும் பார்த்த மாதிரி இருக்கும் என்று ஒரு எண்ணம். நானிருப்பது பக்கத்து மாநிலம், கனெக்டிகட். காரை ஓட்டிக்கொண்டு போனால் 70 மைல்களாம். கார்ப் பயணத்துக்கு 1.30 மணி நேரமாகலாமாம், வரைபடம் சொன்னது. வரைபடத்தில் சங்க விழா நடக்குமிடத்தைக் காணவில்லையென்பதால் உத்தேசமாய் அந்தப் பகுதிக்கான வரைபடங்களை எடுத்துக் கொண்டேன். வேலைகளை உத்தேசித்துக் காலை 10 மணிக்குக் கிளம்பவும், நேரே போய் க்வீன்ஸ்இல் அமைந்திருக்கும் நவீனக்கலை அருங்காட்சியகத்தைச் (Museum of Modern Arts) சில மணி நேரங்களில் பார்த்துவிட்டு, 4 மணிக்கு விழாவுக்குச் செல்வதென்றும் திட்டம்.

என் வீட்டுச் சின்னத் துரையைக் கிளப்புவது இருக்கிறதே அது பெரும் பாடு. அவருக்கு ஒரு ஆளென்றால் அவருக்குப் பாலிலிருந்து பனியன் வரைக்கும் எடுத்து வைக்க இன்னொரு ஆள் வேண்டும். ஆனால் என்னை மாதிரி ஒரு அப்பன் இருந்துவிட்டாலோ அம்மா பாடு சில நேரங்களில் படு திண்டாட்டம். சட்டை போட்டுக்கொள்ள மாட்டேனென்று தேசிங்குராஜா குதிரை மாதிரி அவன் கனைத்துத் துள்ளுவதும், அவனை அம்மா ஏதேதோ சொல்லித் தெண்டனிடும்போதும்தான், நான் இப்புடிப் போனா என்ன, இங்கேருந்து அங்க போறது எப்படின்னு கணிணியை நோண்டி வரைபடங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தேன். நடுவில் சங்கத்துக்காரர் ஒருத்தருக்குப் போன் போட்டு ஏங்க இந்த வழியில வந்தா சரியாங்கன்னு கேக்க, அவரு இன்னொரு வழி சொன்னது வேறு கதை. இந்தக் கலவரத்துக்குள் எனக்குத் திடீரென்று ஒரு பத்திரிகையாளத் தோரணை மனசுக்குள் தொற்றிக்கொள்ள, மனதளவில் ஒரு பெரிய கவரேஜுக்குத் தயாராகிப் பேப்பர், பேனா, பேனா மூடி எல்லாம் தேடி எடுத்து வைத்துக் கொண்டேன்.

எப்படியோ ஒரு வழியாய் மூட்டை முடிச்சைத் தூக்கி ஏற்றி வண்டியைக் கிளப்பியாயிற்று. இப்போது என் மனைவியின் கையில் ஒரு ஆறேழு வரைபடங்கள். நான் சாரதி. ஒரு வழியாய் ஒரு மணி நேரம் ஓட்டி நியூயார்க் எல்லை வரை வந்தாயிற்று. அப்புறந்தான் பிரச்சினையே ஆரம்பித்தது. அடுத்து எங்க திரும்பனும் என்பேன், அவர் அந்த 18ல் என்று எதாவது ஒரு எண்ணைச் சொல்வார். நான் சும்மா ஓட்டலாம், வாய் இருந்தால்தானே. ஆமா, அந்த மூனாவது மேப்பு என்ன சொல்லுதுன்னு பாரேன். இப்படியாய் ஓடிய வண்டி நுழைய வேண்டிய சந்தில் நுழையாமல் நேரே போய்விட்டது. பின் அடுத்த வெளியேற்றத்தில் வெளியே வந்து ஒருத்தரிடம் வழி கேட்டு, அது வேறெங்கோ இழுத்துப் போக, ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் ஒரு கார் அந்த நியூயார்க் கடலில் கொஞ்ச நேரம் மிதந்தோடியது. திடீரென்று ப்ராங்க்ஸ் உயிரியல் பூங்காவுக்குப் போற ஆளெல்லாம் அடுத்த சந்துல ஓடுன்னு ஒரு பலகை (Bronx Zoo). சரி அருங்காட்சியகமா இருந்தாலென்ன, இதாயிருந்தாலென்ன. பிள்ளைக்கு நாலு பேரைப் பார்த்தமாதிரி இருக்கட்டுமே என்று உள்ளே விட்டோம். அப்போது மணி 1.

நாளைக்குத் தொடர்வோம் சரியா? இப்ப கொஞ்சம் வேலை இருக்கு!

0 comments: