தங்கமணி எனக்கு எழுதிய கடிதங்களை/அவற்றின் பகுதிகளை இங்கு இட நினைக்கிறேன். இளவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிவோமென்றாலும், இளங்கலைக் கல்லூரி வாழ்வே எங்களை நண்பர்களாக்கியது. முதுகலைக்கு இருவரும் வேற்றூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை. அப்போது ஆரம்பித்ததுதான் இக்கடிதப் போக்குவரவு. அதன்பின் சென்னையில் ஒன்றாயிருந்த சில வருடங்களில் பெரும்பாலும் எழுதிக் கொள்வதில்லை. பிறகு வேற்றூர், கடிதங்கள். இவற்றை நான் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் எமது மற்ற நண்பர்களுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்ளுதலே இதன் நோக்கம். இவை வரிசைப் படுத்தப்படாதவை. பெரும்பாலும் எந்தக் கடித உறைக்குள்ளும் ஒரே நாளில் எழுதப்பட்டது இருக்காது. பல நாட்களாய் நினைக்கும் போதெல்லாம் எழுதி ஒன்றாய் வைத்து அனுப்புவான். சிலவற்றில் தேதியே இருக்காது, நலம், நலமா போன்ற விசாரிப்புகள் இருக்காது.
இதைப் பதிவதில் அவன் என் நண்பன் எனும் கர்வமும், அவனுக்கு என் நன்றியும் அடங்கியிருக்கின்றன.
மார்ச் 8, 1999
சுதந்திரமாக இருப்பதற்கே பெரும் தைரியம் வேண்டும் என்று ஓஷோ சொல்வதுண்டு. நானும் பலமுறை அதை உணர்ந்துதான் இருக்கிறேன். ஏனெனில் சுதந்திரமாக இருப்பதென்பது தனியாக இருப்பது. எந்த நம்பிக்கையும், பற்றுக்கோடும் இல்லாமலிருப்பது. யுகயுகமாய்ப் பற்றிக் கொண்டிருந்து, நமது இருப்போடு ஒன்றாகிப் போன கற்பிதங்களை உணருவது; ஏனெனில் அவைகள் கற்பிதங்கள் என்பதைத் தாண்டி அவை நம்மோடு பேசவும், உறவு கொள்ளவும், நம்மைத் துளைத்து நம்மைப் பிணைத்து நம்மோடு கலந்து இறுகிப் போன நம்பிக்கைகளை, நம்பிக்கைகள் எனப் புரிந்து கொள்வது. இதற்கு அசாத்தியமான துணிவு வேண்டும். எப்படி சுதந்திரத்தைப் பற்றி ஒருவன் கற்பனை செய்ய முடியாதோ அப்படியே இந்த தைரியத்தைப் பர்றியும் கற்பனை செய்ய முடியாது.
சகு 'பாரிசுக்குப் போ'வைப் படித்தார். முன்னுரையைப் படித்துவிட்டு அவர் புகழ்நத பொழுது முழுதும் படிக்கட்டும் என்றிருந்தேன். முடிக்கப் போகிறார். லலிதா பண்ணியது அவருக்குப் பிடிக்கவில்லை. துரோகம்தானே அது என்றார். அதைப் பற்றி நான் பேசவில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னார். "படிக்கும் போது தலையை வலிக்கிறது; பயமாக இருக்கிறது" என்று. மனம் காலங்காலமாக எழுப்பியிருக்கும் கருஞ்சுவர்களின் மீது ஒளி வீசியபடி சில கடப்பாரையின் தாக்குதல்கள் விழும்போது, மனம் அதிர்கிறது. பெரிய எதிர்ப்புணர்வையும் கசப்பையும் ஏற்படுத்துகிறது. எத்தனையோ யுகங்களாய் இறுகிக் கிடக்கும் அதன் மேற்தளம் சற்றே கீறல் விடத் தொடங்கினாலும், பயங்கரமான வேதனையையும், பாதுகாப்பின்மையையும் உணர்ந்து வீறிட்டலறுகிறது. பன்னெடுங்காலமாய் இறுகிக் கிடக்கும் இமைகளின் மேல் விழும் முதல் ஒளி பயங்கரமான கூச்சத்தையும் வலியையும் தருகின்றது. இமைகள் இன்னும் இறுகிக் கொள்கின்றன. சுகமான கனவுகள் இன்னும் இருக்கின்றன.
ஒருவன் எதையெல்லாம் இழக்க வேண்டும்? சமூகம் அவனுக்குப் பொதுமையான விழுமியங்களைக் கொடுத்து, குழுமனப்பான்மையைக் கற்பித்து, வலிமையான கண்ணிகளில் அவனையும் மற்ற எல்லா தனிமனித, சமூக அமைப்புகளையும் பிணைத்து, அதைத் தாங்கி நிற்பதற்கான சகல ஒழுக்கங்களையும் கடவுளின் பெயராலும், விடுதலையின் பெயராலும் யுகங்களாக ஏற்படுத்தி ஒருவன்மீது முழுமையாகக் கவிழந்திருக்கும்போது ஒருவன் எதற்காக வெளியே வரவேண்டும்?
தன்னந்தனியனாய், கதகதப்பூட்டும் நம்பிக்கைகளைத் துறந்து, திசைகளையே ஆடையாகக் கொண்டு, இந்த முழு உலகின் ஆகர்ஸனத்தையும் புறந்தள்ளி எழ ஒருவனுக்கு எத்தனை வல்லமை வேண்டும்?
அவன் விழித்தெழும்போது எந்த நம்பிக்கையின் குரலைக் கேட்பான், அவன் நடந்து செல்ல சமைக்கப்பட்ட சாலைகள் எதுவுமில்லாத பெருவெளியில் அவன் தனது இலக்கை எங்ஙனம் உணர்வான்? அவன் எந்தப் பாராட்டைப் பெறுவதற்கு அல்லது எந்த உயர்ந்த பீடத்துக்குத் தனது கால்களைச் செலுத்துவான்?
தனது இருப்பொன்றைத் தவிர வேறெதையும் அவன் அங்கு காணமுடியாது.
இப்படியெல்லாம்தான் சுதந்திரத்துக்கான விளைவும், விடையும் இப்பொழுது கூட்டத்திற்கு இடையில் இருந்து பார்க்கும்போது அவனுக்குக் கிடைக்கும். பின் எதற்காக அவன் புறக் கருத்துலகத்தையும், அக உலகையும் கடக்க வேண்டும்?
தங்கமணியின் கடிதங்கள்-1
Posted by சுந்தரவடிவேல் at 6 comments
ஒரு அழைப்பு!
எனக்குக் கிடைத்த ஒரு அழைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்வமிருக்கும் அன்பர்கள் கலந்து கொள்ளலாம். உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization) நியூ ஜெர்ஸியில் ஒரு கருத்தரங்கை நடத்த இருக்கிறது. இதன் விபரம் கீழே:
மையக் கருத்து: துணைக்கண்டம் - நேற்று, இன்று, நாளை
இடம்: V.F.W
11 Henderson Road
Kendall Park
New Jersey - 08824
Tel: 732-297-9823
காலம்: டிசம்பர் 11, சனிக்கிழமை, காலை 10.30 முதல் மாலை 6.00 வரை
இந்துமாக்கடலா, அதன் பாதுகாப்புச் சிக்கலா, உலகமயமாக்கும் தோற்றத்திலே தமிழ்நாடா, ஈழப் போர் அழிவுகளா, ஈழப் பயணச் செய்திகளா, மாநிலங்கள்-நீர்வள நதிநீர் இணைப்பு ஒரு கேள்விக்குறியா, தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் அளவிளாச் செய்தித் தொகுப்புகளா, நம் புதுமைப் பெண்களின் தடம் அடைக்கப்படுகிறதா அல்லது வழிவிடுக்கப்படுகிறதா? என்பன குறித்த கருத்துரைகள் இடம் பெறுவதாக அழைக்கிறார்கள்.
கருத்துரை வழங்குவோரின் பகுதிப் பட்டியல்
1. அருட் கலாநிதி S.J. இம்மானுவேல் (Former Vicar General of the Diocese of Jaffna)
2. திரு. ராசா, செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, புது டெல்லி
3. பேராசிரியர் நாகநாதன், பொருளியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்
4. திரு. சிவராமன் (தராக்கி), இதழாசிரியர், ஈழம்
5. திருவாட்டி. கீதா குமரன், மேரி லாண்ட்
6. திரு. இரகுராசா, மேரி லாண்ட்
7. திரு. சங்கர பாண்டியன், மேரி லாண்ட்
மேலும், கலந்துரையாடல், கலை நிகழ்ச்சிகளுடன் நண்பகல், இரவுணவும் உண்டு. இக்கருத்தரங்கிற்கான பதிவுக் கட்டணம் $50.00 (துணைவருக்கு இலவச அனுமதி!). செல்வதாக உத்தேசம்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
கலாச்சாரச் சுற்றல்
அன்பு வெங்கட்,
எது குறித்தும் இன்னும் முழுமையடையாத கருத்துப் பொதிகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இந்நிலையிலே உங்கள் மனந்திறந்த விவாதம் மனதுக்கு நன்றாயிருக்கிறது. இதற்காக என் நன்றி. இனி எனக்குத் தோன்றுபவற்றைச் சொல்கிறேன்.
முதலில், நீங்கள் சொல்லியிருக்கும் அறிவுப் பரவலாக்கத்தைச் செய்வதையே அடுத்து ஆக வேண்டிய காரியமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த விவாதத்தைக் கூட நீங்கள் சொல்லும் வெற்றுப் பிரசங்கத்தில் சேர்த்துவிடலாம்.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்து ஆவதென்ன என்ற அசூயை மிகுந்து போகிறது. ஆனாலும் அதன் எச்சத்தை இன்றும் காணும்போது அதே வரலாறு தொடர்கிறதோ என்ற சீற்றம் கிளம்புகிறது. பெரியவர் உள்ளே போனதுக்கப்புறம் சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்குப் பின்னால் நின்று போஸ் கொடுக்கும் டி.என்.சேஷனும், இந்து ராமும் இவ்வரலாற்றை எப்படியாவது முன்னெடுத்துச் சென்றுவிட வேண்டும் என்பதன் சின்னமாய் எனக்குத் தெரிகிறார்கள். என் பார்வையிலே பிழையிருக்கலாம்! ஒரு மடத்தைக் கட்டிக் காப்பதன் மூலம் அரசியலைக் கட்டிக் காக்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள், இல்லையா? அந்த மடத்துக்கு தெய்வாம்சத்தைத் தவிர இவ்வியாபார உலகில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. இல்லையென்றால் அது இத்தனை பேரையும் ஈர்த்து வைக்காது. அது என்ன? அவர்களை யாரென்று சொல்வீர்கள்? வணிகரா அல்லது பிராமணரா? இந்தக் கூட்டுதான் போராட்டங்களைக் கட்டுப் படுத்துகிறது. கலாச்சாரம், அரச நீதி, சமூக நீதியையும் இதுவே கட்டுப் படுத்துகிறது என நினைக்கிறேன். அதே நேரத்தில் எல்லாத்துக்கும் இதுதான் காரணமென்று நான் சொல்லவில்லை.
எல்லாத்துக்கும் பிராமணர்தான் காரணமென்று நான் சொல்வேனாகில் அது முதிர்வற்ற வாதம். நோயெதிர்ப்புத் தன்மையைப் போலவே இது வினை, இன்னொன்னு எதிர்வினை. எதிர்வினைக்கு இன்னொரு எதிர்வினை. திராவிடக் கொள்கைகளும் பார்ப்பனீயமும் இப்படித்தான் சுழல்கின்றதாக எனக்குப் படுகிறது. நடுவில் சந்திலே ஆயிரம் சிந்துகள். மூலம் எங்கேயென்று தேடினால் அதைக் கொண்டு போய் மனுவிடம் சேர்த்துவிட முடியும். துளசியும் தீவாளியும் கிளம்பிய இடத்தையும் அவ்வாறே கொண்டு சேர்த்து விட முடியும். இப்படிச் சேர்ப்பதன் மூலம் எல்லாத்துக்கும் காரணம் பிராமணர் என்பதாகிவிடாது. அது ஒரு முக்கியமான காரணமாயிருந்தது. இப்போது வணிகமும் அத்தோடு சேர்ந்து கொண்டது. இதிலே யாருக்கு எத்தனை சதவீதமென்று தெரியாது. ஆனால் கடைசியில் அலைக்கழிவது தூரத்திலிருக்கும் தனியாள், அவன்தான் உண்மையான கையாலாகாதவன். அவனுக்குச் சொல்லித் தருவதற்கான அறிவுப் பரவலாக்கம் என்பதில் வரலாற்றுப் பாடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவன் புதிதாய்க் கற்கின்ற போது வருகின்ற ஆச்சர்யமும், வலியும் இதிலும் உண்டு. அதனைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். இப்படி எனக்குத் தோன்றுகிறதே எனச் சொல்கிறேன். உடனே என்ன நடக்கிறது, நான் அப்படியான ஆள், பிராமண விரோதி என அவசர அவசரமாக இனங்காட்டப் படுகிறேன். இன்னும் எனக்கே தெரியாது நான் பிராமணனா அல்லது அதன் விரோதியா, ஆளும் வர்க்கத்தவனா அல்லது அடங்கிக் கிடப்பவனா என்று. உடனே ஒரு சண்டை முளைக்கும், இதன்போது சென்றது குறித்து முட்டி மோதி வார்த்தையாடப்படும். உங்களைப் போல் எல்லோராலும் அணுக முடிந்தால் அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம். அல்லது குறைந்தது என்ன நடந்தது அல்லது நடக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாம். இணையத்திலும் புத்தகங்களிலுமிருந்தும் தத்தமக்குச் சார்பாய் ஒவ்வொருவரும் எடுத்துப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் நடக்கின்றவற்றை எது ஆட்டிவைக்கிறது, ஒரு திராவிடக் கட்சி அறிக்கையாகட்டும் அல்லது பிராமணக் கட்சியின் அறிக்கையாகட்டும் அதன் பின்னால் உந்து தண்டாக இருப்பது எது என்பதைத்தான் புரிந்து கொள்ள முயல்கிறேன். தாக்குதலையோ அல்லது வெற்றி தோல்வியையோ நோக்கியதல்ல இவ்விவாதம் என்று நினைக்கும்போது உங்களுக்கு இன்னொருமுறை நன்றி சொல்லத் தோன்றுகிறது.
Posted by சுந்தரவடிவேல் at 2 comments
கலாச்சாரம் பாயும் திசை
இது வெங்கட்டின் பின் தொடர்தலுக்குப் பின் தொடர்தல். மற்ற தாவரக் கடவுள்களைப் பற்றிய மேலதிகச் செய்திகளுக்கு அவருக்கு நன்றி. கள்ளி விஷயங்கள் நானறியாதவை. கலாச்சாரங்கள் எப்படிப் பரவுகின்றன என்பது குறித்த எனது பார்வைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நம் சமூகம் படிக்கட்டு நிலைச் சமூகம். இதில் பிராமணர் பெரியவர். அல்லது பணமும் செல்வாக்கும் படைத்த அடுத்த நிலைச் சாதியார். எந்தக் கை அரசதிகாரத்திலிருந்தாலும் அவ்வரசு இத்தகைய மேற்குடிகளின் ஆளுகைக்கு உட்பட்டதே. இது காலகாலமாக ஊறிக்கிடக்கிறது. நேற்று நாலுபேர் சடக்கென்று எழுந்து உதறிச் சமத்துவம் பேசுவது உண்மையேயானாலும் இந்த மனோநிலையை மாற்ற இன்னும் காலம் பலவாகும்.
பழக்க வழக்கங்களாகட்டும், பண்டிகைகளாகட்டும் இவற்றில் மனிதர்கள் யாரால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்? மன்னன் எவ்வகை குடிகள் அவ்வழி. மன்னன் யாரால் நடத்தப் படுகிறான்? குல குருவால். குல குரு யார்? உங்களுக்குத் தெரியும். எங்கள் தெருவில், அல்லது சிற்றூரில் பிறக்கின்ற அனேகம் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது எங்கள் பிள்ளையார் கோயில் அய்யர். சாமி பஞ்சாங்கத்தைப் பாத்துச் சொன்னா நல்ல பேருதான். அந்தக் காலத்தில் வளத்தான், சிங்கன், சடையன் என்று பேர் வைத்தார்கள். எங்கள் ஊருக்கு அய்யர் வந்தார். சிங்கனுக்கு கணேஷ் என்றொரு மகனும், முத்துக்கருப்பனுக்கு சோமசுந்தரமும், சோமசுந்தரத்துக்கு பாலசுப்ரமணியனும் பிறந்தார்கள்.
எந்த நோக்கில் கலாச்சார ஆதிக்கம் பரவுகிறது? மேலிருந்து கீழா அல்லது கீழிருந்து மேலா? முட்டி மோதி நாட்டுப் புறப்பாடல்கள் குறுந்தகடு ஏறுகிற காலம் வந்துவிட்டாலும், சபாக்களில் கொடிகட்டிப் பறப்பது எது? பத்திரிகைகளில் பத்தி பத்தியாகப் புகழப்படுவது எது? சுப்புடுவுக்கு விருது கிடைத்ததை எழுதிய எத்தனை பத்திரிகைகள் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததை எழுதினார்கள். இதிலே இந்த ரெண்டுக் கலைஞர்களும் சாதியால் பிரிக்கப்படுகிறார்களோ என்னவோ தெரியாது. ஆனால் எதை அவர்கள் முன்வைக்கிறார்களோ/பரப்புகிறார்களோ அதன் பொருட்டே அவர்களது தகுதி தீர்மானிக்கப் படுகிறது. எத்தனை நாட்டார் கலைகள் நகரங்களுக்கு வந்திருக்கின்றன? அதே நேரத்தில் எத்தனை நாட்டார் கலைகள் அழிக்கப் பட்டிருக்கின்றன? வழக்கொழிக்கப் பட்டிருக்கின்றன? புதுவரவுகள் என்ன, அவை எங்கிருந்து யாரால் கொண்டுவரப் படுகின்றன? கலாச்சாரம் மேட்டுக் குடியிலிருந்துதான் பரவுகிறது. பணக்காரன் பிட்ஸா கார்னருக்குப் போனால் நடுத்தட்டுக்காரன் போக விழைகிறான். கீழ்த்தட்டு அதற்காக ஏங்குகிறான். சோளக் கூழுக்கு மேற்தட்டு ஏங்குவதில்லை. ஏன் கூழ்கார்னர் வரவில்லை? இது விலை போகாது. பிட்ஸா கார்னரை நம்பித் திறக்கலாம்.
கல்யாணங்கள் அந்தக் குலத்தின் பெரியவரொருத்தரின் ஆசியோடு நடப்பதுதான் வழக்கம். இவ்வழக்கம் சில சாதிகளில் இன்னும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் என்னவானது? பிராமணரொருவர் மந்திரம் ஓத நடக்கிறது. இந்தக் கலாச்சாரம் எப்படி வந்தது? இது மாடர்ன். இதான் இப்போ பேஷன் என்ற நிலை எப்படித் தோன்றியது? பிராமணர்கள் இல்லாத கிராமங்கள் எத்தனையையோ காட்டலாம். இக்கிராமங்களில் பிராமணர்களின் வரவுக்கு முன் திருமணங்கள் எப்படி நடந்தன? அல்லது திருமணங்களே நடக்கவில்லையா? இப்படிப் பரவுவதைத்தான் ஆதிக்கப் பரவல் என்று கருதுகிறேன். இந்தப் பரவலை முன்னெடுத்துச் செல்லும் வர்க்கத்தை ஆதிக்க வர்க்கம் என்று நினைக்கிறேன். கலாச்சாரத்தில் சில விஷயங்கள் மேலானவையாகக் கருத வைக்கப் படுகின்றன. புனிதமானவையென்று புகட்டப் படுகின்றன. அதை மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். கலாச்சார மேலாதிக்கந்தான் இதற்குக் காரணமெனக் கருதுகிறேன். இதனால் என்ன கெடுதலென்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு புதுக் கலாச்சாரம். நதியா வளவி மாதிரி இது ஒரு புது தினுசு வளவி, தோடு. இருந்துட்டுப் போவுதேன்னு கேக்கலாம். ஆனா இத்தகைய கலாச்சாரப் புதுவரவுகள் ஏற்படுத்துற சீரழிவைப் பார்க்கும்போதுதான் அவற்றின் மேல் அவநம்பிக்கையும் அதிருப்தியும் வருது. தெலுங்குப் பாட்டுக்கள் வந்து தமிழ்ப் பாட்டுக்களைக் கீழிறக்குறதைக் கண்கூடாப் பாக்குறோம். முனியன் கோயில் பூசாரிகளை அய்யர்மார்கள் அப்புறப் படுத்துறதைப் பார்க்கிறோம். தமிழ் மந்திரங்களை ஓதலாம்னு சட்டம் சொல்ல வேண்டியிருக்கு. திருவரங்கம் ஸ்ரீரங்கமாகுறதையும், திருமுட்டம் ஸ்ரீமுஷ்ணமாகுறதையும் பாக்குறோம். இதைப் போலத்தான் பொங்கல் மாதிரி கிராமத்தான் பண்டிகையெல்லாம் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. தீவாளியும் நியூஇயருமாகப் பண்டிகைகள் முன்னிருத்தப் படுகின்றன.
நமது சமூகம் படிக்கட்டுநிலைச் சமூகம். ஆமாம். பிறக்கும் குலத்தை வைத்தே உயர்வு தாழ்வு இன்னும் கணிக்கப் படுகிறது. வளர்ந்த பிறகு பொருளாதாரம் செல்வாக்கைப் பொறுத்து இதன் மதிப்பு கூடவோ குறையவோ செய்கிறது. பிறக்கும்போதிருந்தே நம்மோடு இருக்கும் சாதீய மனநிலை எவ்வளவோ வளர்ந்த பிறகும் அடியாழத்தில் இருக்கவே செய்யும். படிப்பிலும் செல்வத்திலும் ஒரு பறையனும் பார்ப்பானும் ஒத்திருந்தாலும் மனசுக்குள் அந்தப் பறைய/பார்ப்பன பிம்பத்தை இல்லாமலாக்க முடியாது. அம்பேத்கார் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரொரு தலித். அப்புறந்தான் சட்டமேதை இத்யாதியெல்லாம். இப்படித்தான் நம் சாதீய மனம் இயங்குகிறது. இங்கும் அமெரிக்காவில் எப்படியாவது துருவித் துருவி வெவ்வேறு வழிகளில் முயன்று சாதியை அறிந்து கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருக்கிறது. கொஞ்சம் நடுத்தரமாயிருந்தால் நீங்கள் பறையரா என்று கேட்பதில்லை. நீங்கள் பிராமிணா? ஏன்னா பறையரா என்று கேட்டால் ஒருவர் பெரும் பாதிப்படையக் கூடும். பிராமணரா என்று கேட்டால் பெருமையாக இருக்கும் பாருங்கள். சிறு வயதில் எங்க அக்காக்களில் ஒருவரை 'என்னம்மா நீ ஐயர் வீட்டுப் பொண்ணா?'ன்னு யாரோ கேட்டதுக்கு என் வீட்டில் யாரும் வருத்தப் பட்டதாக நினைப்பில்லை. அதே நேரத்தில் நீ பறச்சியான்னு யாராவது கேட்டிருந்தா எல்லார் மூஞ்சியும் எப்படிப் போயிருந்திருக்கும் என இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
இத்தகைய ஒரு நிலையில் உயர்சாதிகள் செய்வதெல்லாம் பெரிய விஷயங்கள். பின் தொடரப் பட வேண்டிய செய்கைகள். அவற்றைச் செய்வதன் மூலம் தானும் அவர்களை மாதிரி ஆகிவிடலாம் என்றொரு எதிர்பார்ப்பு. அவர்களது பழக்க வழக்கங்கள் கீழ்த்தட்டு மக்களைப் பாதிப்பது போல், கீழ்த்தட்டு மக்களின் நடைமுறைகள் மேலேயிருப்பவர்களால் சட்டென ஏற்றுக் கொள்ள முடியாது. ஏண்டா பறப்பய மாதிரி உக்காந்து சாப்பிடுறேன்னா அது அசிங்கம். என் வீட்டுக்காரர் பிராமணன் மாதிரி, குளிக்காம சாப்புட மாட்டார் அப்படின்னு சொல்றது பெருமை. இதற்கும் மேலாக எது நம் முன்னால் அதிகம் வைக்கப் படுகிறது, பரப்பப் படுகிறது? ஊடகங்களில் எது சிறந்ததென்று புகட்டப் படுகிறது? விளம்பரங்களில் எவரது வாழ்வு சித்தரிக்கப் படுகிறது? சோப்பு, போர்ன்விடா விளம்பரத்துக்கு ஒரு கிராமத்தானை/ளைக் காட்டுவாங்களா? மிஞ்சிப் போனா உர விளம்பரத்துக்கு கிராமத்தான் முண்டாசும் மீசையுமா வருவான், பக்கத்துல நாட்டுப் புறத்தியும்.
இது எல்லாத்துலயும் எதாச்சும் விதிவிலக்கு இருக்கும். அதைத் தூக்கிட்டு வந்து இங்க பார் அப்படின்னு போட உங்களுக்கு நேரமாகாது. ஆனா பெரும்பாலும் இப்படித்தான் என்று சொல்கிறேன். இந்த ஊடக வலிவு, நிறைய பேரைச் சென்றடையும் திறன் எல்லாம் சேர்ந்து ஒரு ஆதிக்க வர்க்கத்தை முன்னிருத்துகிறது. இது செய்வதெல்லாம் சடங்கு, இது நம்புவதெல்லாம் புனிதம், இது கொண்டாடுவதெல்லாம் பண்டிகை, இதன் வருத்தம் நாட்டுக்கே வருத்தம். என் சித்தியின் அந்தத் துளசிச் செடி இப்படியான கலாச்சாரக் காப்பியடித்தலுக்கு ஒரு உதாரணம். மேலாதிக்கச் சின்னத்தைத் தானும் வைத்திருக்க வேண்டும் என்ற கீழ்த்தட்டு மக்களின் ஆசையின் வெளிப்பாடு. இதைக் காட்டித் தன் வேலைக்காரியிடமிருந்தும், சுற்றத்திடமிருந்தும் தன்னை உயர்த்திப் பிடித்துக் கொள்ளலாம். அவர்களைப் பயமுறுத்தலாம், சிறுமைப்படுத்தலாம். இதுதான் அடியிலியங்கும் மனோநிலையாக நான் பார்க்கிறேன். அந்தப் பிராமணரும் ஒரு உதாரணமே. ('அய்யரு வீட்ல'ன்னு எழுதாம 'எங்க தெருவுல ஒரு வீட்ல'ன்னு எழுதுறது அசிங்கமாப் பட்டுச்சு). பிராமணரல்லாத ஆதிக்கக் காரர்களும், ஆதிக்க வெறியற்ற பிராமணர்களும் நிறையவே இருக்கிறார்கள். இன்னொரு முறை அழுத்திச் சொல்கிறேன், எனக்கு எரிச்சலூட்டுவது ஆதிக்க வெறியேயன்றி தனிப்பட்ட பிராமணர்களில்லை. என்னுள் இயங்கும் ஆதிக்க/அடங்கிய மனோநிலையை நான் கண்காணித்துக் கொண்டிருக்க இத்தகைய அலசல்கள் அவசியமாகின்றன.
Posted by சுந்தரவடிவேல் at 5 comments
ஜகத் சக்கரம்
அமெரிக்கா அப்புறம் மேற்கத்திய கிறிஸ்தவச் சாமிமாரெல்லாம் காமக் குற்றத்துக்காக உள்ளே போறது சகஜம். நியாயம். பொதுமக்கள் யாரும் அவரை விட்டுருங்கன்னு சொல்றது இல்ல. கிறிஸ்தவ மதம் 2000 வருடங்கள் பழமையானது, பல பெரியவங்க இதுல இருந்தாங்க, இருக்காங்க, இதுக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு, அரசியல் செல்வாக்கெல்லாம் இருக்குன்னு யாரும் சொல்லுறதில்லை. மதவாதிகள் சேர்ந்து கைதைக் கண்டித்துப் போராட்டத்தைத் தூண்டுறதில்லை, சிறையில சிறப்பாக் கவனிங்கன்னு கேக்குறதுமில்லை; இன்னொரு பக்கம் சாமியார்க் கொடும்பாவியைக் கொளுத்துறதுமில்லை. தப்பு பண்ணுனாரா, இல்லையா, விசாரிக்கட்டுமே. அதற்கு இடையூறாய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?
எனக்கென்னவோ பிரேமானந்தரைப் போலவே ஜகத்குருவையும் அரசியல்வாதிகள் கைகழுவி விட்டதாகவே தோன்றுகிறது. இவரும் உள்ளே போனாலும், மதத்துக்கான தேவையும், தேடலுக்கான ஆவலும் மனிதனுக்கு இருக்கும் வரை போலிச் சாமியார்கள் மக்களைப் பல வழிகளிலும் கொல்வது நடந்து கொண்டேதானிருக்கும். இன்று நீ நாளை நான் என்று ஜகத் சக்கரமும் சுற்றிக் கொண்டேதானிருக்கும்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
தீவாளிப் பொறி
இன்றைக்கு தீபாவளி. தீவாளின்னுதான் சொல்லுவோம். அப்பாயி தீவிளின்னு சொல்லும். அப்பவெல்லாம் புதுக்கோட்டை சித்தப்பா எப்படா வரும்னு இருப்போம். வந்தா ஒரு பட்டாசுக் கட்டு வாங்கிட்டு வரும். ஏண்டா காசைக் கரியாக்குறீங்கம்பார் அப்பா. வெடிச்சத்தத்துல அதெல்லாம் காதுல ஏறுமா? ராத்திரி ஆரம்பிச்சு ஒரு பாட்டம். அப்புறம் காலையில. வெடிச்ச குப்பை தீவாளி வாசலுக்குக் களை.
படுவாப்பய அப்புடியே இருந்திருந்திருக்கலாம். இருந்திருந்தா இன்னைக்கு நானும் எண்ணெய் தேச்சுக் குளிப்பேன், எங்கெருந்தாச்சும் மத்தாப்பு வாங்கிட்டு வந்து கொளுத்துவேன், பொண்டாட்டியோட சேர்ந்து பலகாரம் சுட்டுத் தின்னு அஜீரணத்துக்கு சூரணம் தின்னுக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பேன். ம்...என்ன செய்ய? தீவாளி கதைகளைப் படிக்கிறப்ப, அதுக்கு ஆயிரத்தெட்டு நேர்மறைக் காரணங்களைச் சொன்னாலும், என்னால இராவணனைக் கொன்னதுக்காக இந்த விழா, இராவண பொம்மையை எரிக்கிற நாள், மாவீரர், தெய்வத்திருமகர் இராமருடைய வரவைக் கொண்டாடுற நாள் அப்படின்னு சொல்லும்போதுதான் இதைக் கொண்டாடனுமான்னு கேக்குறேன். ஏதோ திங்கறதுக்கும், உடுத்துறதுக்கும், நண்பர்களைப் பாத்து சந்தோஷமா இருக்கதுக்கும் ஒரு நாள் அப்படிங்கற அளவில இதைக் கொண்டாடலாமே தவிர, இதுக்கு வேற எந்த மதக் காரணங்களுக்காகவோ, அல்லது தீமை/நன்மை பாகுபாட்டில் நாமெல்லாரும் திடீரென நல்ல பிள்ளைகளாகித் தீமையைக் கொல்லுவோம், தீமை செஞ்ச அசுரன் செத்தான், இராவணன் செத்தான்னு கங்காஸ்நானம் பண்ணிக்கிட்டு திடீர்த் தேவாம்சம் பெற்றுக்கிற மாதிரி கற்பனையோ அல்லது நினைப்போ இருந்தா இந்த தீவாளியை மாதிரிக் கேலிக் கூத்து ஒன்றும் கிடையாது.
நம் கண் முன்னாலேயே நேத்து திடீர்னு ஒரு அரக்கன் உருவாக்கப் பட்டிருக்கான். வீரப்பன். அவனை ஒரிஸ்ஸாவுல துர்காதேவி வதம் செஞ்சிருக்கா. இதே மாதிரி ஒரு அரசியல்தான் இராவணனையும், நரகாசுரனையும் அசுரர்களாக்கியிருக்கு. கலாச்சார மேலாண்மை, அரசதிகாரம் அதை விழாவாக்கியிருக்கு. குடிகள்/நடுத்தட்டு என்ன செய்யுறோம், அவதி அவதியாய் மேற்தட்டோட சேர்ந்துக்கப் பாக்குறோம். நா ஒன்னும் கொறச்சல் இல்லன்னு சொல்லிக்கிறோம். அப்புடித்தான், இந்தத் துளசிச் செடி பாருங்க, எங்க வீட்டு வேலியில ஓணான் ஓடு பாதையில, வயல்ல நடந்து போற வரப்புல மண்டிக் கெடக்கும். நெனச்சா பறிச்சுத் திம்போம். அதைப் புனிதமாக்கி ஒரு மாடத்துல வச்சு அதுக்குப் பூசை பண்ணித் தடபுடல் நடக்கும் எங்க தெரு அய்யரு வீட்டுல. அதைப் பாத்து எங்க சித்தியும் அது மாதிரி ஒரு மாடம் கட்டி வேலியில கெடந்த துளசிச் செடியக் கொண்டாந்து மாடத்துல வச்சு. துளசி நல்லது, அதுல இருக்க மருத்துவ குணங்களுக்காக அதைக் காப்பாத்தனும், கொண்டாடனும். ஆனா இந்த மாடங்கட்டி காவிப்பட்டை போட்டு சமாச்சாரம் எங்கேயோ இடிக்குது. (அதுவும் துளசிக்கு மட்டுந்தான் இந்த மரியாதை, கீழாநெல்லிக்கோ, பிரம்மிக்கோ, தூதுவளைக்கோ மாடம் கட்டினா யாராச்சும் சிரிக்கக் கூடும்!). இத்தகைய செயற்பாடுகள் ஏதோ ஒரு கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவிக்குது, கட்டிக் காக்குது, பரப்புது. அப்புடித்தான் இந்தத் தீவாளியும். குடியானவனுக்கு இது கொண்டாட்டமில்லை. பொங்கல்தான் அவனுக்கு. ஆனாலும் கொஞ்ச கொஞ்சமா இந்த மேலாதிக்கம் கிராமங்களுக்கும் பரவுது. ஏன்னு கேக்காம, காரணம் தெரியாம அந்தக் குடிகளும் கடன் வாங்கியாச்சும் கொண்டாடுது, இல்லன்னா திண்டாடுது. காம்பவுண்டு சுவத்துக்கு வெளியில நின்னு மத்தாப்புப் பொறியைப் பாத்துட்டுப் பெருமூச்சோட போகுது.
எப்படியோ இருந்துட்டுப் போவட்டும். கொண்டாடுறவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
பறந்த நொடி
கண்ணாடி சன்னலின் அருகே இருந்தும் வெளியே பார்க்கவில்லை. பார்க்காமலிருந்ததாலேயே வெளியே எதுவும் நடக்காமலுமில்லை. கடைக்கண்ணில் விர்ரென்று பறந்த குருவிக்கூட்டம் பார்வையை இழுத்தது. பார்த்தேன். குருவிகளில்லை. இலைச் சருகுகள். காற்று பறக்கடித்தது. ஒரு நொடித் தோற்றந்தான். அதைச் சொல்ல இவ்வளவு நேரமாகிவிட்டது!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
உருப்படியாய்
நேற்று பிட்ஸா வாங்கி வந்த அட்டைப் பெட்டியை எடுத்தேன். ஒரு கிண்ணத்தை அதன் மேல் கவிழ்த்து இரு வட்டங்களை வரைந்தேன். அந்த இரண்டு வட்டங்களையும் வெட்டியெடுத்துக் கொண்டேன். அவற்றில் தலா மூன்று துளைகளிட்டேன். துளைகளில் நூலைக் கட்டினேன். அவற்றை ஒரு உடைதொங்கியின் (hanger?) இரு புறங்களிலும் தொங்கவிட்டேன். இப்போது என்னிடம் ஒரு தராசு இருக்கிறது. இதனைக் கொண்டு இனி நான் எல்லாவற்றையும் எடை போடவும், சீர்தூக்கிப் பார்க்கவும் முடியும். நீதிமானாய் இருக்க இந்தத் தராசு மிகவும் உதவியாய் இருக்கும். என் முன்னறைக் கதவின் உட்புறம் தொங்க விட்டிருப்பதால் அதைப் பார்க்கும் விருந்தினர்களும் தங்களை நியாயவாதிகளாக வைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடும். நியாய பரிபாலனம் செய்தது போக மீந்த நேரத்தில் என் மகனும் நானும் கடை வைத்து விளையாடலாம். அண்மைக் காலத்தில் நான் செய்த ஒரு உருப்படியான வேலை என்றால் அது இதுதான்!
Posted by சுந்தரவடிவேல் at 6 comments