சுனாமியில் சாகாத சாதீயம்

ஒரு தலித்தைப் புதைத்தலின் போது நடந்தவொன்றை வாசன் பதிந்திருந்தார். இப்போது வரும் செய்திகள் உயிருடனிருக்கும் தலித்துகளைப் பற்றியது. முகாம்களிலிருந்து மேல்சாதியினரால் விரட்டியடிக்கப் படுகிறார்கள், உணவு, தண்ணீர், நிவாரணப் பொருட்கள், உதவிப் பணம் ஆகியன மறுக்கப் படுகிறார்கள். நாகப்பட்டிணமாகட்டும், நெல்லையாகட்டும், கதை இப்படித்தான். அரசு இதைக் கண்டும் காணாமலிருக்கிறது. ஏனென்றால் இவர்கள் சிறுபான்மையினர், ஏழைகள். இத்தனை அழிவிற்குப் பிறகாவது அவர்களை மனிதர்களாகப் பார்க்கக் கூடாதா?
செய்திகள்: 1, 2, தேடினால் இன்னும் இருக்கும்!

4 comments:

said...

சாதி இல்லாமல் இந்தியாவே இல்லை; அது சாவிலும் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது? ஏனெனில் அது பிறப்பிலேயே தொடங்குகிறது. சாதியை விலக்கிய மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது உனது புரிதலில் இருக்கும் பிரச்சனை. ஏற்கனவே முன்பொருமுறை குறிப்பிட்ட மாதிரி இங்கு சாதி ரீதியிலான உரிமை, அபிமானம் இவை மட்டுமே நிஜம்.

said...

அப்பதான் அடிபட்ட மனசு, அதனால கொஞ்சம் ஈரமிருக்கும்னு நெனச்சேன். இவ்வளவு சீக்கிரம் கிளம்பும்னு நெனைக்கலை.
மாலன், இனி முழுதாய்ச் சொல்ல முயல்கிறேன்!

said...

சாதிப்பிரச்சனை இந்தியாவின் பல இடங்களிலும் தலைவிரித்து ஆடும் ஒன்று என்பதை அறிவேன். ஆனாலும் ஒரு விடயம் விளங்கியதில்லை.தலித் என அறியப் படுவோர் ஏன் தாங்கள் தலித்கள் என்பதி கேட்பவர்களுக்குச் சொல்கிறார்கள்? பிரச்சனை என்றால் வேறு சாதி சொல்லலாம் தானே?அல்லது எனக்கு சாதி இல்லை என்று சொல்லலாம் தானே?அரசாங்க/தனியார் துறைகளில் பல்வேறு தேவைகளுக்காக நிரப்பப்படும் படிவங்களில் சாதி குறிப்பிடப்பட வேண்டியது கட்டாயமா?இவற்றைப் பற்றிச் சற்று அறியத் தருவீர்களா?

said...

நண்பருக்கு,
பொதுவாகப் பிறக்கும்போதே சாதி அடையாளங்களோடுதான் பிறக்கிறோம். பக்கத்து வீட்டுக்காரருக்கும், பக்கத்துத் தெருக்காரர்களுக்கும் நான் என்ன சாதியென்று தெரிந்தே இருக்கும். ஊருக்குள் போனால் இன்னார் மகன் என்றால் இன்ன சாதி என்பதும் அவர்களுக்குத் தெரியும். இல்லையென்றால் சாதியிலேயே கொஞ்சம் அறியப் பட்டவரைச் சொல்லி அவரது உறவினர் என்று சொல்லிக் கொள்வதும் உண்டு. ஆக கிராமங்களில், அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களால் சாதியற்றுப் போக முடியாது. இந்த முகாம்களில் இருப்பவர்கள் தெரிந்தவர்களாகவே இருப்பதால் அங்கு சாதியை மறைத்துக் கொள்ள முடியாது. நகரங்களில் அடுத்த வீட்டாரின் சாதியை அனுமானிப்பதிலும் பொறுத்திருந்து பார்த்து சுற்றி வளைத்து அறிந்து கொள்வதிலும், ஒரு ஆர்வக் கோளாறு இருக்கும், முக்கியமாய்ப் போன தலைமுறை ஆட்களிடம். நகரத்தில் இத்தகைய முகாமொன்று அமைக்கப் படுமானால் அங்கு இந்தளவு சாதிப் பிரச்சினை இருக்காது என்பது என் எண்ணம். இப்போதைய பிரச்சினை அதிகமாயிருப்பது கிராமங்களிலேயே.
படிவங்கள் தொடர்பாக - எனக்குத் தெரிந்து அரசு கல்வி நிறுவனப் படிவங்களில் சாதிப்பெயர் நிரப்பியிருக்கிறேன். வேலை வாய்ப்புக்கும் இது பொருந்தும். வாய்ப்புகள் என்று வரும்போது 'உயர்' சாதியினரும் தங்களை தலித்துகள் என்று போலியாக சாதியடையாளச் சான்றிதழில் குறித்துக் கொள்வதன் மூலம் தலித்துகளுக்கான இடங்களைத் தட்டிப் பறிக்கிறார்கள். தனியாரின் வேலை வாய்ப்புப் படிவங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. தனியாரில் சாதி சார்ந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டால் அப்போது சாதிப்பெயர் கேட்கப்படும்.