நேற்று சிங்கப்பூரில் MILK (Mainly I Love Kids) என்ற குழந்தைகளுக்கான சேவை அமைப்பு ஒரு கேளிக்கைக்கூடத்தில் ஏலத்தின் மூலம் 65,000 சிங்கப்பூர் டாலர்களைச் சம்பாதித்து ஆசிய சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தது.
இந்தப் பெயர்ப்பால் ஒரு புறமிருக்க, சுனாமிக் குழந்தைகளுக்காக செஞ்சிலுவைச் சங்கம் ஆங்காங்கே பால்மாவு கையேந்தி வந்து நமக்குத் தருவதும், அமுல் நிறுவனம் மனமுவந்து பால்மாவு வழங்கியதும் மறுபுறமிருக்க, இங்கே நேற்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டுத் தஞ்சை பெரிய கோயிலில் பால் குடம் குடமாக ஒரு காளைச் சிலையைக் குளிப்பாட்டப் பயன்பட்டது!
படம்: தினமலரிலிருந்து
அப்பாலும் இப்பாலும்!
Posted by சுந்தரவடிவேல் at 10 comments
நாடகமேவுலகம்
என்னென்னமோ நடக்குது. ஒக்காந்து எழுதினா எல்லாத்தையும் எழுதலாம். ஒவ்வொன்னா எடுத்துப் படிச்சு உடனே கெளம்புற ஒணர்ச்சிகளை எழுதி வக்யலாம். வச்சு? ஆனா இதான் நடக்குது. இதோ இச்சாமத்துக்கு என்னாலானது.
அண்மைய இரு நாடகங்கள்:
1. இலங்கைக்குப் போன கோபி அன்னாரை வடக்கே செல்லக் கூடாதெனத் தடுத்தது இலங்கை அரசு. அன்னாரும் அகில உலக நிவாரணக் கொட்டிடம் காலேயைக் கண்டு பின் திரிகோணமலையில் சென்று ஆறுதல் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டார். அவர் வடக்கே வராததால் தமிழர்கள் தாம் புண்பட்டுவிட்டதாகவும் இதனால் அமைதிக்குக் கிடைத்திருக்கக் கூடிய ஒரு ஆதரவு கிடைக்காமற் போய்விட்டதாகவும் வருந்திக் கடிதம் கொடுக்க, கடிதத்தைப் படித்த கோபி அன்னான் இப்போது மறுபடியும் வருவேன், எல்லாத்தையும் சுத்தி சுத்திப் பாப்பேன்னு சொல்லிருக்கார். சந்திரிகாம்மா இதை எப்படித் தடுப்பாருங்கறது அவருக்கே வெளிச்சம்.
2. வடக்குப் பகுதிக்கு ஒரு விலையுயர்ந்த சவப்பெட்டி "கடத்த"ப் பட்டதாம். உடனே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அது பிரபாகரனுக்கு என்றொரு புரளியைக் கிளப்பியது. புலிகள் "வெத்துப்புரளிக்கு இதாடா நேரம்"னு ஒரு உறுமு உறும, இலங்கை வானொலி ஒலியாய்ப் போன அந்தச் சேதியைத் திரும்பி உறிஞ்சி இழுத்து கிளம்புன வாயிலேயே போட்டு முழுங்கிருச்சாம்.
கூத்துக்கள் தொடரும்.
இப்ப பாருங்க ஒரு கொழப்பம். இது ரெண்டுக்கும் சுட்டி குடுக்கலாம்னு நெனச்சேன். ஒடனே மாலன் சொன்னது ஞாபகம் வந்துச்சு, செய்திச் சுட்டியெல்லாம் வேலைக்காவாது தம்பீ. அதெல்லாம் கொஞ்ச நேரம் இருக்கும், அப்புறம் காணாமப் போயிரும். இது ஒரு லைட்டைப் போட்டுருச்சு. ஒரு பெரிய கொளத்துல நீர்க்குமிழியாக் கொப்புளிச்சுக்கிட்டே இருக்கு. அந்த மாதிரிதானிருக்கு செய்திகளின் ராச்சியம். கொப்பளிக்கிறது குளம் மட்டுமில்ல, ரத்தமுந்தான். இப்படியே நான் ரத்தம், கார்த்திக்ராமாஸ் டமாஸ், டமாஸ் கடலை விக்கும் எங்கவூரு சினிமாக் கொட்டாய், சினிமாவுக்குத் தேவையான இனிமா, எஸ்ராவின் சினிமாப் பொஸ்தகம், பொஸ்தகக் கண்காட்சி, ராம்கி தின்ன சமோசான்னு நீட்டிக்கிட்டே போலாம். வுடுறேன். உங்கள விட்டுர்றேன். சரி, குமிழிச்சுட்டி குடுக்குறேன், வந்தா ஒங்களுக்கு வரலன்னா குமிழி ஒடஞ்சிருச்சுன்னு விட்ருங்க.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
சுனாமியில் சாகாத சாதீயம்
ஒரு தலித்தைப் புதைத்தலின் போது நடந்தவொன்றை வாசன் பதிந்திருந்தார். இப்போது வரும் செய்திகள் உயிருடனிருக்கும் தலித்துகளைப் பற்றியது. முகாம்களிலிருந்து மேல்சாதியினரால் விரட்டியடிக்கப் படுகிறார்கள், உணவு, தண்ணீர், நிவாரணப் பொருட்கள், உதவிப் பணம் ஆகியன மறுக்கப் படுகிறார்கள். நாகப்பட்டிணமாகட்டும், நெல்லையாகட்டும், கதை இப்படித்தான். அரசு இதைக் கண்டும் காணாமலிருக்கிறது. ஏனென்றால் இவர்கள் சிறுபான்மையினர், ஏழைகள். இத்தனை அழிவிற்குப் பிறகாவது அவர்களை மனிதர்களாகப் பார்க்கக் கூடாதா?
செய்திகள்: 1, 2, தேடினால் இன்னும் இருக்கும்!
Posted by சுந்தரவடிவேல் at 4 comments
தண்ணியடிக்கும் காலிகள்!
தினத்தந்தியில ஒரு செய்தி பாத்தேன். ஈரோடு மாவட்டம் தாராபுரம், குண்டடம் பகுதிகள்ல டாஸ்மாக் பிராந்திக்குப் படு கிராக்கியாம். ஏன்னா அங்கேயிருக்க காலிபிளவர் தோட்டக்காரர்களெல்லாம் அந்தப் பயிர்ல பூச்சியோட தாக்கத்தைக் குறைக்க மருந்தோட பிராந்தியக் கலந்து அடிக்கிறாங்களாம் (கவனிக்க: பயிருக்கு!).
அல்கஹாலுக்கு நுண்ணியிரிகளைக் கொல்ற திறனிருக்கதால அதை ஆய்வகங்கள்ல பயன்படுத்துவோம். செடிக்கு அடிக்கலாமான்னு தெரியல. கொஞ்சம் அலசிப் பாத்தேன். கலிபோர்னியாவுல பலவிதமான செடிகளுக்கும் ஐசோபுரோபைல் அல்கஹாலைப் (isopropyl alcohol, IPA) பயன்படுத்துறாங்களாம். வீட்டுத் தோட்டங்கள்லயும் இதைப் பயன்படுத்துறாங்க (அதிகமாயில்லை, ஒரு லிட்டருக்கு 30 மிலி). மதுபானங்கள்ல ஐசோபுரோபைல் அல்கஹால் இருக்காது. ஆனா அதுகள்ல இருக்க எத்தில் அல்கஹாலும் இந்த நுண்ணியிர்க் கொல்லி வேலையைச் செய்ய முடியும். நம்ம ஊர் விவசாயிகளுக்கு ஐசோபுரோபைல் அல்கஹால் பிராந்தியை விட மலிவாக் கிடைச்சா அதையே வாங்கிப் பயிர்களுக்கு அடிக்கலாம்; பிராந்தியை வேற எதுக்காச்சும் பயன்படுத்தலாம். என்னமோ செடிகள்லாம் சந்தோஷமா இருந்தாச் சரிதான்!
தினத்தந்தி செய்தி
Posted by சுந்தரவடிவேல் at 9 comments
டிசம்பர் 29ல் நாகையின் ஒரு பகுதி
மேலும் சென்னை, தரங்கம்பாடி, காரைக்கால் பகுதிகளின் படங்கள் Space Imaging என்ற நிறுவனத்தின் இணைய தளத்திலே. இப்படங்கள் ஒரு மீட்டர் வரை தெளிவுள்ளவையாம். நன்றி இளங்கோ பாபு.
Posted by சுந்தரவடிவேல் at 1 comments
மனசுக்குப் பட்டது
உறைந்தும் மேய்ந்தும் திரிகிறேன்.
சுனாமியில் வலைப்பதிவர்களின் பங்கு. தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசவில்லையாயினும் வலைப்பதிவர்களைப் பற்றிப் பேசியிருக்கிறது.
கபில் சிபல் தனக்குக் கிடைத்த சேதியை ஏன் தூங்கும் சோனியாவுக்குச் சொல்லக் காத்திருந்தார்? இவரை விசாரித்துத் தண்டிக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தைக் காட்டும்போதே கேளிக்கைக் கூத்துக்களாய்க் காட்டியதால் வந்த வினை. படித்த நாமும் வெத்துக் கவியும் வேண்டாப் பேச்சுமாய்க் கழித்ததால் வந்தது. பொழுது போக்குக்களைப் பொழுது முழுக்கச் செய்து கொண்டிருந்திருக்கிறோம். மக்களை அறியாமையில் வைத்திருந்ததில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பங்கில்லை. கோழைகளாய் அடிமைப் படுத்தி வைத்திருப்பதில் மதவாதிகளுக்கு மட்டும் பங்கில்லை. நமக்கும் பங்கிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும். இந்த லட்சோப லட்சத்துக்கும் முன்னால் எத்தனையோ அழிந்தும் நாம் இதைக் கற்றுக் கொள்ளவில்லை. வேற்று நாட்டினர் துக்கம் அனுட்டிக்கும்போது கூட நம் தொலைக்காட்சித் தொழில்நுட்பம் பாட்டும் கூத்துமாய் அமர்க்களப்படும் அவலத்தைத் தடுக்க முடியவில்லை. வாயே திறக்காத போலித் தலைவர்கள், செய்கையறியாப் போலியமைச்சர்கள், கடமையறியாக் கற்றவர்கள் இவர்களால் கூட்டமாய்ப் புதையுண்டு போனது இவர்களையே நம்பியிருந்த மக்கள். இவர்களுக்காய்க் கொடி பிடித்து, இவர்கள் காட்டும் சாமியைக் கும்பிட்டுக் கடலில் கரைத்து, இவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பம் வீட்டுக்குள் படங்காட்டுவதற்குக் களிப்படைந்து இவர்களையே நம்பியிருந்தவர்கள். இவர்களை நாம் கொன்று விட்டோம். இப்போதும் கூடப் போலியாறுதல்கள், போலிக் கவிதைகளை நம் தலைவர்களாலும் கவிஞர்களாலும் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. இவர்களை மிதித்துத் தாண்டி, இருப்போரையாவது அறிவுடன் இருக்கச் செய்தல் நம் கடமை. சுரணையோடு இருக்கும் அந்த ஏழைக்குடிகளின் தன்மானத்தை அழிக்காமல் காக்க வேண்டும். நாலு வீடு கட்டிக் கொடுத்துப் பிச்சைக்காரராய் அவர்களைச் சாகடிப்பதை விட நீண்ட காலத் திட்டமாய் அவர்களுக்கு அறிவைத் தர ஏதாவது செய்ய வேண்டும். இங்கு நான் வெங்கட்டுடன் அறிவு பரவலாக்கத்தில் மறுபடியும் ஒத்துப் போகிறேன். அனாதையின் மயிறு பரவலாக்கம் என்ற கோவமும் நியாயமானதென்றாலும் உடனடிக் களையெடுப்புப் புரட்சிக்கு நாம் தயாராயில்லை. அதற்கு நமக்குப் பரவலான சுரணை இன்னும் வரவில்லை. இப்போதைக்குக் கொஞ்ச கொஞ்சமாயேனும் படித்தவர்கள் பொழுது போக்கு/இலக்கியங்களை விட்டு விட்டுக் குடிமக்களிடம் போயாக வேண்டும். இல்லையென்றால் காலம் நம்மை மன்னிக்காது.
Posted by சுந்தரவடிவேல் at 5 comments