பழைய வீட்டிலிருந்த பெட்டியிலிருந்து...

[17/12/2003 06:33:13]

விக்கினித் தாத்தா

விக்கினி. இந்தப் பெயரை நான் இதற்கு முன்னும் கேட்டதில்லை. பின்னும் கேட்டதில்லை. இவர் சற்றுக் குள்ளமானவர். கறுத்த மெல்லிய ஆனால் உறுதியான உடம்பு. கறுப்பும் வெள்ளையும் கலந்த முறுக்கிவிட்ட மீசை. இடுப்பிலொரு வேட்டி, மேல ஒரு துண்டு மட்டும்.

வடக்கி ரோட்டுக்கிட்ட இவரோட ஓலை வேய்ஞ்ச வீடு இருக்கு. வீட்டச் சுத்தி பெரிய கொல்லை. கொல்லையில கடல, சோளம், பயறு போடுவார். பக்கத்துத் தோட்டத்துல இவருக்கு ஒரு தம்பி (யோ அல்லது அண்ணணோ), அவர் சிங்கன் தாத்தா. சிங்கன் தாத்தா வீட்லதான் மொத மொத கெளதாரியப் பாத்தேன். விக்கினித் தாத்தா பலமுறைகள் காலைக் காப்பிக்கு எங்க வீட்டுக்கு வந்ததுண்டு.. பெரியவர்கள் எதாச்சும் பேசிக்கொள்வார்கள். நமக்கெங்கே புரியப்போகிறது.

விக்கினித் தாத்தா எங்க ஊர் பக்கம் ரொம்பப் பேர் போனவர். சிலம்பாட்டம் ஆடுவார். கம்பை எடுத்துச் சுத்துனார்னா அப்புடி இருக்கும். காலை மடக்கி, நீட்டி, சுழன்று, சுழற்றி, வீசி, எதிராளியின் சிலம்போடு மோதும் ஒவ்வொரு அடியும் மனசுக்குள்ள என்னமோ செய்யும். ரெண்டு கயிலயும் மான் கொம்பு மாதிரி ஏதோ வச்சுக்கிட்டு சிலம்பாடி கூட சண்டை போடுவார். அத்தோ பெரிய கம்பு வச்சுக்கிட்டு அவனால தாத்தாவை ஒன்னும் செய்ய முடியாது. ஒவ்வொரு கருப்பய்யா கோயில் திருவிழாவிலும் தாத்தாவோட சிலம்பம் சுழலும். ஒரு நாள் அப்பா என்னை விக்கினித் தாத்தா வீட்டுக்கு அனுப்புனார். சிலம்பம் கத்துக்கடான்னு சொல்லி. நானும் போனேந்தான். ஆனா பய புள்ளக்கி கத்துக்கற மனசை விட கருப்பய்யா கோயில் திருவிழாவுல ஆடிப்புடனும், நம்ம கிளாஸ் புள்ளயெல்லாம் பாத்து அசறனும்னே நெனப்பு இருந்ததாலயோ, இல்ல வளக்கமே அம்புட்டுதானோ என்னமோ தெரியல, நாலு நாளக்கப்புறம் போவல. ஆனா அவர் சிலம்பு மேல இருக்க மோகம் மாறல. இப்பவும் எதாச்சும் குச்சியப் பாத்தா எடுத்துச் சுத்தணும் போல இருக்கும்.

போன முறை ஊருக்குப் போயிருந்தபோதும் வீட்டுக்கு வந்திருந்தார், அந்தக் காலத்தில் சுழற்றி வீசின சிலம்பிலொன்றை ஊன்றுந்தடியாய்க் கொண்டு. இப்போ அவருக்கு ஒரு போர்வையும் தேவையாயிருந்தது. தாத்தா நீங்க வெள்ளக்காரனக் கண்டிருக்கீங்களான்னு கேட்டேன். அவன் இங்கயெல்லாம் ரொம்ப வரமாட்டான், புதுக்கோட்டையோட சரி. ஒருக்க வந்தான். சிலம்பம் ஆடிக் காமிச்சோம். நல்லாருக்குன்னுட்டு போனான். என் தாத்தாவோடு அவர் எங்கோ ஒரு ரயிலில் போனதையும் அப்போது ஒரு பெண் பையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனித்ததைக் கண்டுகொண்டு பிடித்ததையும் பற்றிச் சொன்னார்.

விக்கினித் தாத்தா மாதிரி எத்தனையோ தாத்தாக்கள். இல்லயா. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது அவரை ஒரு போட்டோவாச்சும் எடுத்து வக்யனும்.[16/12/2003 05:49:43]

எங்கம்மாவின் பழமொழிகள் (பாகம் 2)

என் மாமியார் வந்திருக்கிறார். பாகம் 2 இவருக்கு. எங்க ஊர்லயெல்லாம் மாமியாரும் மருமகனும் பேசிக்கிறது ரொம்பக் குறைவு. மாமியார்-மருமகன் சொந்தம் அப்படி ஒரு வரையப்படாத கோட்டுக்குள் நின்றுகொண்டு பிராணனை வாங்கும். வாங்க. ம், வர்றேன். அம்புட்டுதான். மாமியார் அடுப்படிக்குள்ள போயி இடியப்பம் பண்ணுவார். மகள் எடுத்து வைக்க மருமகப்பிள்ளை சாப்பிடுவார். மருமகன் கொல்லயில நின்னா மாமியார் திண்ணைக்குப் போவார். இவர் அங்கென்னா அவர் இங்கெ. ஊருக்குப் போகும்போது வீட்டு உத்திரத்தைப் பாத்துக்கிட்டே போயிட்டு வாரேன் என்பார். மாமியாரும் சரி என்பார்.

அது என்னமோ தெரியல. என்னதான் பேசுறதுன்னு தெரியாம இருப்பாங்களோ. அல்லது பொது விடயங்கள் குறைவோ. என்னன்னு தெரியல. நகரங்கள் கொஞ்சம் தேவலாம்னு நெனக்கிறேன். எங்க மெட்ராஸ் சித்தப்பா மகளின் கணவர் தன் மாமியாரோடு சாதாரணமாகத்தான் பேசுவார். ரொம்பச் சின்ன கிராமங்களிலும் நிலைமை நன்றாய் இருக்கலாம். இந்த நடுவில மாட்டிக்கிட்டதுகள்தான் கிடந்து திணறுறது.

நல்ல காலம் என் மாமியாரும் நானும் பேசிக்கொள்ளும்படி வாய்த்தது நல்லதுதான். அதுக்கும் மேல, இந்த நாட்டில பேசுறதுக்கு ஆள் கிடைக்கிறதே பெரிய சங்கதி. இதுல மாமியாரோடு பேசக்கூடாது மருமகனோடு பேசக்கூடாதுன்னா எங்க போக. சரி. எங்கம்மாவின் பழமொழிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சம்மந்திபுரமும் சளைத்ததில்லை. தன் பங்குக்கு எடுத்து விட்டார் ஈழத்துப் பழமொழிகளை. நமக்குக் கொண்டாட்டம்தானே, விஷயம் கிடைக்கிறது, இன்றைய எழுத்துப்பாடும் தீர்ந்தது. உங்களுக்கும் பழமொழிகளுக்கும் நடுவில நான் நிக்க விரும்பலதான். ஆனாலும் புரியலன்னா என்ன செய்றதுன்னு அடைப்புக்குள்ள சிறு விளக்கங்கள் தந்திருக்கேன்.

தேனைத் தொட்ட கை நக்கத்தான் செய்யும்

கோயில் பூனை சுருவத்துக்கு அஞ்சாது (சுருவம்னா சிலை)

யான வாழ்ந்தா என்ன பூன தாலிய அறுத்தா என்ன (எனக்கென்ன எக்கேடோ கெட்டுப் போங்க)

ஆயிரம் பீத்தச் சுளவு கூடினாலும் ஒரு அப்பத்துக்கு மாத் தெள்ளாது (சுளவுன்னா முறம். மான்னா மாவு. தெள்ளுறதுன்னா புடைத்துச் சுத்தம் செய்றது)

கோனாத மாமியுமில்ல, கோனாத தென்னயுமில்ல (எல்லார்கிட்டயும் குறை இருக்கத்தான் செய்யுமாம். இதெல்லாம் சகஜமப்பாங்கறாங்க)

மழைக்கால் இருண்டாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது (மழை இருட்டிக்கிட்டு வர்றபோதும் குரங்கு சரியாத்தான் பாயுமாம், கொப்பை நழுவ விடாதாம். எந்த சூழ்நிலையிலயும் சமத்தா இருக்கவருக்கு)

அப்பனுக்குக் கச்ச கட்டத் துணியில்லயாம், மவன் தஞ்சாவூர் மட்டுக்கும் வெள்ளை விரிச்சானாம் (தகப்பனின் கஷ்டத்தப் புரிஞ்சுக்காம செலவு செய்யும் ஊதாரிப் பிள்ளைக்கு. வெள்ளைன்னா விரிப்புக் கம்பளம்)

வந்தவுடன் மாமியா பந்தலிட்டாளாம், வர வர மாமியா நொந்து போனாளாம்.

வேலயக் கெடுத்துதாம் சாரம் (கைலி இல்ல. வீடு கட்டுறப்ப கட்டும் சாரம். யாரோ ஒருத்தர் எழுதின பழைய கவிதை வருது. காற்றுக்காக சன்னலைத் திறந்தேன், காற்றே சன்னலை மூடியது)

உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு இல்ல (இங்க உடையார்னா வாரி வழங்கும் வள்ளல். கணக்கில்லாம குடுப்பாராம்)

ஈண்ட மாடு இரைப்பையைக் கடிக்குமாம் (குழந்தை பெத்தவுடன் தாய்க்கு ரொம்பப் பசிக்குமாம்)

கொக்கு டொக்கறியும் காக்கா நோக்கறியும் (சின்ன சத்தம் கேட்டாலும் கொக்குக்குத் தெரிஞ்சிரும், காக்காய்க்கோ நம்ம கண்ணைப் பாத்தாலே என்ன செய்யப் போறோம்னு தெரிஞ்சிருமாம்)

அம்மாக்களோட பழமொழிகள் இன்னும் வரும்.[15/12/2003 06:11:39]

டயபரும் ஜென்னும்

அன்றைக்கு அப்படித்தான் எனக்கும் என் மனையாட்டிக்கும் ஒரு பிணக்கு. பிள்ளைக்கு டயபர் (diaper) மாற்றுவதைப் பற்றிய பூதாகரமான பிரச்சினை. நான் கொஞ்சம் நல்ல அப்பந்தான். ஆனா அது என்னமோ தெரியல, 1ன்னா மாத்திருவேன். 2ன்னா கொஞ்சம் பின் வாங்குவேன். அப்படி இருக்கப் படாதுதான். ரெண்டையும் மாத்தியிருக்கேந்தான். ஆனாலும் பாருங்க என்னமோ ஒரு இது.

அன்னக்கி என்னமோ நடக்கக் கூடாதது நடந்த மாதிரி அதைப் பார்த்து, இல்லை அது மூக்கிலடிக்க, அலறினேன். இந்த ஜென் கதையில படார்னு வருமே அது மாதிரி எதிர்த்தரப்பிலிருந்து ஒரு பதிலடி, மாத்தினா என்னா. மூக்கிலடிச்ச அதை விட இது படு காரம். கையில என்னமோ வேலையாய் இருந்தவர் போட்டுவிட்டு விறு விறுவென வந்து பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போக, நான் மனப்பூச்சியின் குடைச்சலுக்கு ஆளானேன். மனசுக்குள் தலையால் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்த ராமகிருஷ்ணர் வந்து போனார். இந்த மாதிரிதான் மனசுக்குள்ள நிறைய பாத்திரங்கள் ஒளிஞ்சிக்கிட்டிருக்கும். அப்பப்ப காட்சிக்குத் தகுந்த மாதிரி திடீர்னு தோன்றி ஒரு கலக்கு கலக்கிட்டு போவும்.

அப்புறம் நான் ஒரு ஜென் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அங்கு வந்தவர் கையிலிருப்பதைப் பார்த்துவிட்டு ஆகா வீட்டுக்காரரு நெலம மோசமாயிருச்சு, பேச்சுவார்த்தையில தீத்துடனும்னு (ஆளை இல்லை, பிணக்கை) சொல்லி இருதரப்புப் பேச்சு நடத்தி சட்டு புட்டுன்னு சமாதானம் வந்துச்சு. நான் ஜென் புத்தகத்தைக் கையில் எடுத்தால் பிரச்சினைன்னு அர்த்தமாம். என் மனைவி சொன்னார். எனக்கே அப்போதுதான் புரிந்தது, அது ஒரு வகையில் உண்மையோ?

ஒரு காலத்துல அந்தப் புத்தகத்தைப் போரிலும் சமாதானத்திலும் படித்துக் கொண்டுதானிருந்தேன். இப்ப நிலைமை இப்படி ஆயிருச்சு. நேத்தும் எடுத்து ஒரு கதை படிச்சேன். சண்டையெல்லாம் ஒன்னும் இல்ல. வந்தான் வென்றான் சென்றான் மாதிரி நேத்து பனி ஒரு மணி நேரத்துல ரெண்டு இன்ச் கொட்டிட்டு போயி மழையை இப்ப நீ அப்படின்னு அனுப்புனப்ப, அந்த சன்னலுக்குப் பக்கத்துல உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன். அப்பதான் இந்தக் கதை படிப்பு.

ஒரு மாணாக்கன். குருகிட்ட போறான். வாள் வித்தை கத்துக்கனும். எவ்வளவு நாளாகும் குருவேன்னான். பத்து வருஷம்னார். குருவே நான் நல்லா கத்துக்கற பயல், அதோட எங்கப்பாவுக்குத் தள்ளா வயது. நாந்தான் திரும்பிப் போயிப் பாத்துக்கனும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில். முப்பது வருஷமாகும் தம்பீன்னார். என்ன ஐயா நீர், சரி நான் ரொம்பக் கடுமையா, நிறைய வேலை செய்வேன். கஷ்டப்பட்டு சீக்கிரமே கத்துக்குறேன். இப்ப சொல்லுங்க எம்புட்டு நாளாகும். எழுபது வருஷம் தம்பி.

இயல்பாயிருப்பது டாவோ.

பதறினா நடக்காது. இது மாதிரி படிச்சுப்புட்டு கொஞ்ச நேரம் அப்புடியே திரிவது. விடிந்தால் அய்யோ இந்த வேலை, அந்த வேலைன்னு கிடந்து ஆடுறது. ஆனாலும் பாருங்க அந்தக் கதைகள் என்னமோ செய்யுது. அதை அறிமுகப் படுத்தினானே ஒரு நண்பன், தங்கமணி , அவனுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.[14/12/2003 07:52:06]

எங்கம்மாவின் பழமொழிகள் (பாகம் 1)

இதெல்லாம் எங்க அம்மாவோடது இல்லை. அவர் சொல்லி நான் கேட்டது, பல சந்தர்ப்பங்களில். அனேகமாய் எல்லா உணர்ச்சிகளுக்கும் பழமொழி வச்சிருப்பார், சந்தோசத்தைத் தவிர. சுலபமாப் புரிஞ்சுக்க ஒவ்வொரு பழமொழிக்கும் சின்னதா ஒரு சூழ்நிலை உதாரணம் சொல்றேன்.

வந்ததும் அப்படி, சிவன் தந்ததும் அப்படி
(வந்ததுன்னா எங்கப்பா. சிவன் தந்தது நாங்க. அம்மாவைத்தவிர குடும்பமே எதாச்சும் தப்பு பண்ணுற சமயத்தில்.)
இருந்த வெள்ளத்தத் தள்ளூச்சாம் வந்த வெள்ளம்
(இது விருந்தாளிப் பிள்ளைகளின் அட்டகாசம் எங்களுடையதை விஞ்சும்போது.)
தச்சன் அடிக்கிறான் கிடா உறுமுது
(எங்கப்பா எதாச்சும் கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது நாங்க சும்மா ஆடும்போது)
வந்ததெல்லாம் கொள்ளும் மகராச(ன்) கப்ப(ல்)
(வீட்டுக்குள்ள எவ்வளவு வந்தாலும் அது கொள்ளும்)
தொட்டுட்டாளாம் மீனாச்சி, தொடந்துட்டாளாம் காமாச்சி
(இது என் அடிக்கும் அதைத் தொடர்ந்த என் தங்கையின் ஓலத்துக்கும்)
ஊருக்கு ஒமலுப்பு ஊட்டுக்கு வயித்தெரிச்ச
(ஊர்ல அவங்களுக்கென்ன குறைன்னு பேசுவாங்க. வீட்டுக்குள்ள இருக்க பிரச்சனை
வீட்டுக்குத்தான் தெரியும்)
யோக்யா யோக்யா வான்ர குர்ர்...
(இது அடியேனுக்கானது. எதாச்சும் குறும்பு செஞ்சுட்டு நல்ல பிள்ளை மாதிரி பேசும்போது)
தலையெழுத்துடா சண்டாளா, போட்டெழுத்துடி பொண்டாட்டி
(இது அம்மாப்பா உள்விவகாரம்.)
யான குசுவுது குசுவுதுன்னாங்ய கடைசியில அது குசுவிப்புட்டு போயிருச்சு
(ரொம்பப் பெரிசா எதிர்பார்த்து அப்படி நடக்காம போறப்ப)
கண்ணுல கண்டேன் கையில வழிச்சேன்
( நாளைக்கு வேணும், சேமிக்கனும்கற பழக்கமில்லாம அப்பவே தீர்க்கறதுக்கு)
பொழுது விடிஞ்சிருச்சு பொன்னனுக்கு மாலையிட
(காலங்காத்தால நானும் என் தங்கச்சியும் போரைத் தொடங்கும்போது)...

இன்னும் வரும்.[13/12/2003 18:46:15]

அதிகாலை மனவோட்டம்

அதிகாலை அரைகுறைத் தூக்கம். ஊ...ஊ...உ.....நரியின் ஊளை கேட்டது. ஊரிலா இருக்கிறேன். என் வீட்டிலா படுத்திருக்கிறேன். இன்னும் நரிகள் திரிகின்றனவா. ஒரு ஆச்சர்யமான குழப்பம். அந்த அழகான குழப்பத்திலிருந்தும் அரைகுறைத்தூக்கத்திலிருந்தும் எழுப்பிவிட்டது ஊளையிட்டுக்கொண்டு போன அமெரிக்கத் தீயணைப்பு வண்டி ஒன்று. சட். இந்த நாட்டில்தான் இருக்கிறேன்.

நரி. ஊரில் அந்தப் பெயரோடு இருக்கும் நரியாறு... விழிப்பில் நினைவுகள் அலைய ஆரம்பித்தன. நரியாற்றில் நான் தண்ணீர் பார்த்து வருடங்கள் பல. ஒன்று தண்ணீர் ஓடும்போது நான் ஊரில் இருப்பது இல்லையா அல்லது தண்ணீரே ஓடுவது இல்லையா என்று தெரியவில்லை. பல வருடங்களுக்கு முன் புயலடித்து ஆற்றின் கரை கொள்ளாமல் வெள்ளம் வந்து ரோடு உடைபட்டபோது அதில் தண்ணீரைப் பார்த்தேன்.

அந்தக் கரையிலிருந்துதான் எங்கள் ஊரிலிருக்கும் பலரையும் சிவலோகத்துக்கும் வைகுந்தத்துக்கும் ஏற்றிவிடுவார்கள் (கவனிக்க: உயர்சாதிகள் தெற்குக் கரையிலும், கீழ்ச்சாதிகள் வடக்குக் கரையிலும். மாறினால் 'மேலிடத்தில்' உள்ளே விட மாட்டார்கள் போல). ஒரு மங்கிய மாலைப் பொழுதில் நான் சைக்கிளில் அந்தப் பக்கம் போனபோது நாயின் அளவில் ஒன்று தடித்த வாலோடு சாலையின் குறுக்கே ஓடியது. அதை நான் இன்றளவும் நரி என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன். எங்க வீட்ல சொன்னேனான்னு தெரியல. அப்படிச் சொல்லியிருந்தா, பொழுதுபட்ட நேரத்துல அங்கிட்டு எதுக்குப் போறன்னு கேட்டிருப்பாங்க.

நாங்கள் முன்பு வசித்த தென் கரோலினாவில் செவ்வோனாய்கள் (red fox) திரியும். காட்டுப் பக்கங்களில். எங்கள் கால்பந்துத் திடலின் ஓரத்தில் காடு மாதிரிதான் இருக்கும். இரவு நேரத்துப் போட்டிகளின் போது அவை அந்த ஓரத்தில் ஓடித்திரியும். பந்தை எடுக்கப் போனால் ஒன்றும் செய்யாது, ஓடிவிடும். சின்னதாத்தான் இருக்கும். அந்த செவ்வோனாய்களுக்காக அரசாங்கம் இந்த ஊரில் அஞ்சல் தலை ஒன்றுகூட வெளியிட்டது. சரி காலங்காத்தால இதுல உக்காந்துட்டா பொழுது இப்படியே போயிரும். கிளம்பி கொஞ்சம் வேலையைக் கவனிக்கிறேன்.

[06/12/2003 16:39:55]

பனி

பனி பெய்கிறது. நேற்று இரவு ஆரம்பித்தது. ராவெல்லாம் பெய்து, இன்னமும் தொடருது. முந்தி சிவாகிட்ட சும்மா கதை விட்டுக்கிட்டு இருப்பேன், டேய், கரம்பக்குடியில பனி கொட்டும், -20 டிகிரி இருக்கும்னெல்லாம். இப்ப நிஜத்துல கொட்டுது. ஆனா கரம்பக்குடியில இல்ல. க்னெக்டிக்கட்ல.

இதையும் இன்னும் சில வட மேற்கு மாநிலங்களையும் சேர்த்து New England அப்படின்னு சொல்லுவாங்க. இங்க பனி நிறைய பெய்யும். பனி பாக்க அழகா இருக்கு. எல்லாக் காட்சிகளையும் ஒரு வெள்ளை நிறத்தைப் பின்னணியா வச்சு வரைஞ்ச மாதிரி இருக்கு. காத்துல பனி பறக்குது. மரக்கிளைகள்ல, வீட்டுச்சுவர் விளிம்புகள்ல, கூரையில, படர்ந்துக்குது. காலையில சின்னக்குருவிகள் சில பனி மேல தத்தித் திரிந்தன. காரை எடுப்பது கொஞ்சம் கடினம். ஓட்டுவதும்தான். வழுக்கும். பிரேக்கைப் பிடித்தால் எனக்கென்ன என்று போகும்.

குட்டி குட்டியா தள்ளு வண்டிகள் (bulldozer) அங்கும் இங்கும் ஓடி ஓடிப் பனியைச் சாலயிலிருந்து ஓரத்துக்கு தள்ளும். பனியும் நீ தள்ளுறியா, தள்ளு, கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து பாருன்னு தன் பாட்டுக்கு கொட்டும். சாலைகளில் மணலையும் உப்பையும் கலந்து கொட்டுகிறார்கள், வழுக்காமல் இருக்க. இந்தக் கலவை கறுப்புத் தாரை மூடி எல்லாச் சாலைகளையும் மண் சாலைகள் மாதிரித் தெரிய வைக்கும். மண் சாலையின் அழகே அழகுதான். ஊர்ல பேருந்துல போயிக்கிட்டு இருக்கப்ப பக்கவாட்டுல வந்து சேருமே ஒரு சின்ன ரோடு. அந்த மாதிரி.

ஒவ்வொரு வீட்டுக்காரரும் தன் வீட்டின் முன்னுள்ள நடை பாதையிலிருக்கும் பனியைத் தள்ளி விடணும். இல்லன்னா யாராச்சும் வழுக்கி விழுந்துட்டா அந்த வீட்டுக்காரன் மேலதான் பழி. அதுக்கு சின்னச்சின்ன வண்டிகளை உருட்டிக்கொண்டும், வாரிகளைத் தூக்கிக்கொண்டும் வீட்டுக்காரர்கள் திரிவார்கள். இந்தப் பனியில் வீட்டுக்குள்ளிருந்துகொண்டு சாளரத்தின் வழியே பார்த்துக் கொண்டே பொழுதைப் போக்கலாம். பனியைப் பொருட்படுத்தாமல் வேலையாய் அலையும் ஆத்மாக்களும் உண்டு.

சின்னப் பிள்ளைகளுக்குப் பனி பிடிக்குமாம். நேத்து பாத்தேன். ஒரு குட்டிப் பயல் விழுந்து புரண்டான். இல்லை, அவன் விழுந்து கிடந்தான், அவன் அப்பா அவனைப் புரட்டினார். பனியில் எல்லாம் அமைதியாய், ஏதோ ஒரு தியானத்தில் இருப்பது மாதிரி இருக்கும். காற்றின் மடியிலேறிப் பனித் துருவல்கள் பயணிக்கும். போக்கிடம் தெரியாப்ப்பயணம். எங்கேனும் முட்டி ஒட்டிக்கொள்ளும் வரை. ஒட்டிக் கொண்ட பின்னரும் காற்று வந்து ஊதிக் கிளப்பும். யாருக்குத் தெரியும் பயணங்களின் பாதைகளை.


[05/12/2003 07:32:07]

மந்த வாதம்

பக்க வாதம், திமிர் வாதம், முக வாதம், முடக்குவாதம், அந்த வாதம், இந்த வாதம் என்றெல்லாம் பல ரகங்கள். இப்போது உலகத்து அரசியல்வாதிகள் எல்லாருமாய்ச் சேர்ந்து எண்ணெய் ஊற்றி வளர்ப்பது தீவிரவாதம். முறையின்றிக் கட்டவிழ்த்துவிடப்பட்ட தீவிர வாதம்.

சுபாஷ் சந்திரபோசும் தீவிர வாதிதான். ஆனால் அவருடையது ஏற்றுக்கொள்ளப் படுவது. ஒரு அடக்குமுறையை, தன் இனத்துக்கு இழைக்கப்படும் அநீதியை, ராணுவத்தை ராணுவத்தால் எதிர் கொண்டது. அது பொது இடத்துல குண்டு வக்யல. கட்டிடத்து மேல விமானத்தை விட்டு இடிச்சுக் கொல்லல. ஆனால் நெறிப் படுத்தப் படாத தீவிர வாதம் மனிதத் தன்மை அற்றது. மனித குலத்தின் வளர்ச்சிக்குக் கேடானது.

இந்த மாதிரி நெறியற்ற தீவிர வாதத்தை விட மோசமான இன்னொரு வாதம் உண்டு. அதை யாரும் அதிகம் கண்டு கொள்வதில்லை. அதன் பெயர் மந்த வாதம். இது கல்லாய் இருக்கும் மனிதக் கூட்டம். அல்லது மனித குணம். இதை ஏன் யாரும் கண்டு கொள்வதில்லையென்றால் இதனால் யாருக்கும் பிரச்சினை இல்லை, மேம்போக்காகப் பார்த்தால். பாதையோரத்துல ஒரு கல்லு கிடந்தா நமக்கு என்ன பிரச்சினை? இன்னும் சொல்லப் போனால் அரசாங்கங்களூக்கு மந்த வாதிகளை ரொம்பப் பிடிக்கும். இவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள். எதுவும் பேச மாட்டார்கள். இவர்களுக்குத் தேவையானதெல்லாம் ரொம்பவும் மலிந்த சரக்குகள். அவற்றைக் கொடுத்துவிட்டுப் பேசாமல் இரு என்றால் மிட்டாய் வாங்கிக் கொண்டு அழாமல் இருக்கும் குழந்தைகள் மாதிரி சமத்தாய் இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் நாட்டில் எல்லாருமே மந்த வாதிகளாகிவிட்டால் எப்படி இருக்கும் என்று கனவும் கண்டு அதை முடிந்தவரை செயலாக்கமும் செய்யப் பார்க்கும் அரசுகள்.

மனித சக்தியைத் திசை திருப்பத்தான் ஆயிரம் வழிகள் இருக்கின்றனவே. பலவிதமான போதைகள். அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும் பித்துப் பிடித்த மாதிரி ரேடியோவும் கையுமாய் அலயும் கிரிக்கெட் 'விசிறி'களைச் சொல்லலாம். மந்த வாதத்தினால் நீண்டகாலப் பாதிப்பு அதிகம். ஒரு வர்க்கத்தைச் செயலிழக்கவும், சிந்தனையோட்டத்தைத் தடை செய்யவும் அல்லது திசை திருப்பவும் முடியும். இது எல்லாக் காலங்களிலும் விழிப்பாய் இருக்க வேண்டும் என்ற விதியைக் கொல்லும். இந்த மந்த வாதிகள் பரிணாம வளர்ச்சியின் ஓட்டத்திலிருந்து விலகியவர்கள். இவர்களிலிருந்து, நியெட்சே சொன்ன மகாமனித இனம் தோன்றாது. ஏனென்றால் பரிமாண வளர்ச்சி, விழிப்புணர்வின் கனியே. மந்த வாதம் ஒவ்வொருவருக்குள்ளும் தலையெடுக்கும்தான். அதற்குத் தீனி கிடைத்துவிட்டால் ருசி கண்ட பூனையாட்டம் கிளம்பாது. விழிப்பு. ஒவ்வொரு வினாடியும் விழிப்பு. இதுதான் நமக்கு வேண்டும்.[03/12/2003 21:58:20]

ஆடும் தலைகள்

சின்னப்பிள்ளயில சீரங்கம் மாடுன்னு சொல்லிக்கிட்டு ஒரு மாட்டை ஓட்டிக்கிட்டு வருவார் அந்த பூம்பூம் மாட்டுக்காரர். மாட்டுக்கு அழகா சோடனை பண்ணி இருக்கும். கொம்புல எல்லாம் மணி கட்டி, துணி சுத்தி இருக்கும். சங்கு வச்சு தச்ச துணியால முதுகைப் போத்தியிருக்கும். இந்த வீட்டு பொன்னுக்கு வர்ற தையில கல்யாணம் நடக்குமான்னு அவரு அந்த மோளத்தை தட்டிக்கிட்டே கேப்பாரு. அதுவும் தலையை ஆட்டும். அவரு ஒவ்வொரு வீட்டு அம்மாகிட்டயும் எதையாச்சும் சொல்லி அரிசி வாங்கிக்கிட்டு போவார். இது ஒரு தலையாட்டம்.

டேய் படிச்சுக்கிட்டு வந்தியான்னு வாத்தியார் கேக்குறப்ப முழிக்கிற பய தலை அரையும் குறையுமா ஆடும். ஆமாவா இல்லையா வாயத் தொறந்து சொல்லுடா, வாயில என்ன கொளுக்கட்டயான்னு வாத்தியார் பாய்வார். இது மாதிரி பயலுகளோடது ஒரு வகைத் தலையாட்டம்.

பொண்டாட்டிக்கு ஆட்டுறது, முதலாளிக்கு ஆட்டுறது, முதல்வருக்கு அமைச்சர்கள் ஆட்டுறது இது மாதிரி பல வகையான தலையாட்டங்கள் இருக்கு.

ஆனா நான் கேள்விப்பட்டது ஒரு வித்தியாசமான தலையாட்டம். என் மனைவி சொன்னது. திடீர்னு ஆமிக்காரன் (இராணுவம்) ஊருக்குள்ள வருவான். ஊர்ல இருக்க எல்லா ஆம்பிளயும் பள்ளிக்கூடத்துத் திடலுக்கு வரணும். அப்போ ஆமிக்காரன் ஒருத்தனைக் கூட்டிக்கிட்டு வருவான். அவனுக்கு மூஞ்சியில கருப்புத்துணி போட்டு மூடியிருக்கும். ஒவ்வொரு ஆம்பிளயும் அந்த முகமூடிக்காரனுக்கு முன்னாடி போயி நிக்கனும். ஆமிக்காரன் அவன்கிட்ட கேப்பான் "இவன் புலியா?". முகமூடி தலையை ஆட்டுவான். ஆமாம் அல்லது இல்லை என்று. இல்லை என்றால் நீ போய்விடலாம். ஆமாம் என்று தலை ஆடினால் தனியாய் நிற்க வைப்பான். அப்புறமா ஆமி காம்ப்புக்குக் கூட்டிக்கொண்டு போவான். திரும்பி வந்தால் அது உங்க அப்பத்தாவோட நல்ல நேரம், அய்யனாரு கோயிலுக்குப் படையல் போட்டதால வந்து சேந்த புண்ணியம். இல்லைன்னா நீ பத்தோட பதினொன்னாவதா காணாமல் போனவன். இந்த மாதிரி காணாமல் போனவங்களைச் சில நேரம் எண்ணுவாள், சித்தியோட தம்பி, மணி அண்ணா, குணா...

தமிழ் நாட்டுல நாங்க எல்லாரும் அரசாங்கத்துக்குத் தலையை ஆட்டிக்கொண்டு 'உன் விழி அசைந்தால் மலையைப் பேர்ப்போம், மட்டையைச் சாய்ப்போம்'னு காதலிகளுக்குக் கவிதை எழுதிக்கிட்டு இருந்த அதே நேரத்துலதான் அங்க ஒரு தலை அசைப்புல ஒவ்வொரு தமிழனின் உசிரும் ஊசலாடிக்கிட்டு இருந்திருக்கு. அந்தத் தலையாட்டிக்கு முன்னாடி நிக்கிற மாதிரி கற்பனை பண்ணிப் பார்க்கிறேன், மனசு திக்கு திக்குன்னு அடிச்சுக்குது. கொஞ்ச நஞ்சமில்லை அவர்கள் பட்டது, படுவது. இன்னேரம் எங்கெங்கே என்னென்ன மாதிரி தலைகள் ஆடிக்கிட்டு இருக்குமோ.
[02/12/2003 05:35:38]

நிகழ்வின் குறும்படம்

வாய்க்கால் தண்ணீரில்
சிறு தூறல் விழும் காட்சியை மறந்தே போயிருந்தேன்
அன்றொரு நாள் கண்ணாடி சன்னல் வழியே
அது தெரிந்தது
விழும் ஒவ்வொரு தூறலும் வட்டமொன்றைப் போட்டுவிட்டு
வாய்க்காலோடு சங்கமமானது
தன்னில் ஆயிரமாயிரம் வட்டங்களைப்
போட்டுக்கொண்டும் அழித்துக்கொண்டும்
ஓடிக்கொண்டிருக்கிறது வாய்க்கால்.[01/12/2003 05:16:28]

எருமை மாடுகள்

தமிழ் நாட்டில் இனிமேல் அரசாங்கமே சாராய விற்பனையை நடத்தும்.

சீனி விற்றார்கள், மண்ணெண்ணெய் விற்றார்கள், அரிசியும், பாமாயிலும் விற்றார்கள். அந்த சேவையினால் மக்களுக்குக் கிடைத்த அதீத திருப்தியினால் உந்தப்பட்டு இப்போது அவர்கள் சாராய வியாபாரத்தையும் பொறுப்பாக ஏற்று நடத்தப் போகிறார்கள். கிடைக்காத கோதுமை, நாற்றம் பிடித்த அரிசி, அளவு குறைந்த எண்ணெய் இதெல்லாம் கிடந்துவிட்டுப் போகட்டும், சாராயம் மட்டும் இனி குறைவின்றித் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கிடைக்கும். உங்கள் ஊரில் குடிக்கத் தண்ணீர் இல்லையா, குளமெல்லாம் தூர்ந்து கிடக்கின்றனவா, போன மாசம் போட்ட ரோடு பல்லிளிக்கிறதா, ராத்திரிகளில் விளக்கில்லாமல் குண்டு குழிகளில் விழுந்து பல்லையும் இடுப்பையும் உடைத்துக்கொண்டீர்களா...மனு கொடுக்கலாம். (கொடுத்து என்ன பயன் என்று கேட்கலாம், அது வேறு விசயம்). மனு கொடுப்பதற்கு நீங்கள் தாசில்தாரையோ மாவட்ட ஆட்சியரையோ பார்க்கப் போகும்போது, அங்கே அவர்கள் இல்லயென்றால் கவலை வேண்டாம். நேரே பக்கத்திலிருக்கும் புதிய அரசாங்க சாராயக் கடைக்குப் போங்கள். அங்கே அவர்கள் முதல் பாட்டிலை விற்று போணி பண்ணிக்கொண்டிருப்பார்கள். (இன்னும் கொஞ்ச நாட்களில் அரசாங்கம் வேறு 'தொழில்'களையும் தொடங்கலாம். அங்கும் இவர்கள் போணி பண்ணிக் கொடுக்கலாம்).

அரச எந்திரத்தின் பற்சக்கரங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை நசுக்குகின்றனவா, இந்தியாவில் தமிழ் நாட்டிலேதான் மனித உரிமைகள் மிகவும் மோசமாக மீறப்படுகின்றன என்று உயர்நீதி மன்ற நீதிபதி சொல்கின்றாரா, சேர்வராயன் மலைப் பகுதியில் பள்ளிப் பிள்ளைகள் ஒரு வாளித் தண்ணீருக்காக காலை நாலரை மணியிலிருந்து எட்டு மணிவரை பூச்சி மருந்து நெடியில் தோட்ட வேலை செய்கிறார்களா...இதெல்லாம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லை. மாலத்தீவில் மாட்டிக்கொண்ட ரெண்டு பேரும்தான் தமிழர்கள். (அவர்கள் நிரபராதிகள் எனும் பட்சத்தில் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்பது வேறு விசயம்). அவர்களுக்காக விடும் முதலைக்கண்ணீர் வணிக முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் வியாபாரத்தில் சில இளகின மனசுகளின் ஓட்டுக்களை வாங்கிக்கொள்ள இது அவசியம்.

எங்கோ படித்தேன், ஒரு அன்பர் சென்னயில் கழுதையைப் பார்ப்பதற்காக அலையோ அலை என்று அலைந்தாராம். அவருக்குக் கழுதையைக் கண்டுபிடிப்பதில் அனேக சிரமங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எருமை மாடுகளைக் கண்டுபிடிக்கப் பஞ்சமே இருந்திருக்காது. எங்களைத்தான் சொல்கிறேன். நாங்கள், தமிழர்கள், பாரதி சொன்னது போல, எருமை மாடுகள். எங்களுக்குச் சுரணை இல்லை. எங்கள் சேவகர்களாகிய அரசு நடத்துபவர்கள் (ஆமாமய்யா, அதைத்தான் சன நாயகம் என்பது. ஆனால் அவர்கள் எங்கள் எசமானர்களாகியது எப்படி என்றுதான் தெரியவில்லை) எங்கள் முதுகு மேல் ஏறிச் சாட்டையடி கொடுத்துச் சவாரி செய்வது கூடத் தெரியாமல் நாங்கள் நடக்கிறோம். சாணி போடுகிறோம், அதன் மேலேயே படுக்கிறோம். நாங்கள் எருமை மாடுகள். எருமை மாடுகளுக்குக் கேள்வி கேட்கவும், புரட்சி செய்யவும் தெரியாது. ஆனால் சாராயம் குடிக்கவும், கிரிக்கெட்டையும் சினிமாவையும் டிவியில் பார்த்துக்கொண்டே பசியை மறக்கவும், தண்ணீர் இல்லையென்றால் மானத்தை விட்டுத் தெருக்களில் தண்ணீர்ப் பிச்சை எடுக்கவும் தெரியும். ஆனால் ஒன்று, எல்லா எருமை மாடுகளும், எல்லா எருமைக் கன்றுகளும் ஒரு நாள் மிரளும். போதை தெளிந்து எழும். அன்று எருமை மாடுகளின் குளம்புகளுக்கடியில் போலி எசமானர்களின் பற்கள் தெறிக்கும். அதற்கு எருமை மாடுகளாகிய எங்களுக்கு யாரேனும், சன நாயகத்தைப் பற்றியும், மனித உரிமைகளைப் பற்றியும், முக்கியமாக, சுரணையோடு வாழ்வதைப் பற்றியும் போதியுங்கள்.


[30/11/2003 06:09:03]

அவன்

அவனை எனக்கு ரொம்ப காலமாகத் தெரியும். கல்லுக்குள் சிலையைக் காட்டிய உளி. அவனைக்கண்ட பின்னர்தான் எனது இருப்பையும் எனக்குள் இருப்பதையும் அறிந்தேன். உன்னதங்களை அறிமுகமும் செய்வான். அவ்வுன்னதங்களின் சன்னிதிக்குள் நாம் சென்று நிற்கையில் அதே உன்னதத்தின் கழுத்தைப் பிடித்துத் திருகித் தோலை உரித்தும் காட்டுவான். அய்யோ இத்தனை காலமும் இதையா சாமீ சாமீ எண்று சுற்றி வந்தோம் என்று நினைக்கத் தோனும்.

அவன் சொல்லுபவை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாய் இருக்காது. ஏனென்றால் சாதாரண மனுச வரைமுறைகள் எப்போதுமே இப்படித்தான், சக்கையை எடுத்துக்கொண்டு சாறு என்று ஆடும். பன்னாடையின் குணத்தைக்கொண்டு ஞானம் தேடி அலையும். அல்லது சாமர்த்தியமாய் நீதி தேவதையையே மரபுரு மாற்றம் (mutate) செய்து ஒரு கண்ணில் வெண்ணெயையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கச்செய்யும். கலிலியோ, டார்வின், பாரதி, இயேசு...நடைமுறைப் போலி ஞானங்களைத் துணிவோடு எதிர்க்கவில்லையா? அந்தத் துணிவு இவனுக்கு இருக்கிறது. நான் ஒரு சீடப்பிள்ளை இடத்தைப் பிடித்து வைத்துக்கொண்டேன். உங்களுக்கும் வர விருப்பமிருந்தால் வரலாம்.[29/11/2003 07:46:05]

அக்கரப்பச்ச

அங்கே
இந்நேரம் வயலுக்குத் தண்ணி பாச்ச ஒருத்தன் போவான்
தூக்குச்சட்டியும் பழய சோறுமாய்க் களயெடுக்க ஆளு போவும்
சைக்கிள்ல கூடய வச்சு கிடாயத் தூக்கிட்டு விக்கப் போவான் ஒருத்தன்
8 மணி டவுன் வண்டி லேட்டா போயிக்கிட்டு இருக்கும்
மூணாவது அழைப்புக்கு பொன்னு மாப்பிள்ளை கிளம்பும்
ராத்திரி செத்துப் போன கிழவிக்கு ஒப்பாரி வைக்கும் மைக் செட்டு...
வாழ்க்கை அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும்

இங்கே
வண்ண வண்ணமாய் வடிவடிவாய் ஓடும் கார்கள்
ஒரு காரை முட்டும் இன்னொன்று
அடிபட்டவனைத் தூக்கியோடும் மற்றொன்று
கார் மெக்கானிக், இன்சூரன்சு
க்ரெடிட் கார்டு, கட்டணங்கள், கடன்கள்
மீட்டிங்குகள், செய்ய வேண்டியவை, படிக்க வேண்டியவை
பட்டியல்கள், மனிதர்கள், அந்நியர், நாட்டவர்
வேண்டியோர், வேண்டாதோர்
வீட்டுக்கு வரும்போது ஒன்னரை வயதுப் பையனோடு
மல்லுக்கட்டி அயர்ந்து நிற்கும் மனைவி
அயராமல் ஓடித்திரியும் பிள்ளை...
வாழ்க்கை இங்கேயும் நிகழத்தான் செய்கிறது.
[28/11/2003 08:18:20]

நானும் கடலும்

ரொம்ப வியப்பா இருக்கு. மலைப்பு. இந்த அறிவியலைக் கண்டா. செல்லுக்குள்ள நடக்குற வேலைகளைக் கண்டா.

என்னத்துக்கு இத்தனையாயிரத்தப் படச்சி , இத்தினியையும் கட்டி இளுத்துக்கிட்டு, ஆடுறவனை அமுக்கி, அமுங்குனவனை ஆட்டி, நடந்து, இருந்து, படுத்து, அணைத்துக்கிடந்து...என்னத்துக்கு இதெல்லாம் நடக்குதுன்னு தெரியல.

சாகுமளவுக்கும் இந்த செல்லெல்லாம், புரதமெல்லாம் ஓடியாடி வேல செஞ்சு வேலயே வழ்வா இருந்து மரிச்சுப் போயி, மூலக்கூறுல முக்காவாசி திரும்பி வந்து வேற உருவமாகி, இதே சுழற்சி தொடர்ந்து தொடர்ந்து... இது என்னமோ அந்த பிரபஞ்சக் காட்சியோட குறுவடிவம் மாதிரி இருக்கு.

இதப் பாத்து வியக்கத்தான் முடியுதே தவிர இதுல கால வக்ய முடியல. கடல் பொங்கியடிச்சு அலை முழங்கிக் கிடக்குறதைப் பாத்துக்கிட்டே கரையில நிக்கிறத மாதிரி. முங்கிக் குளிக்கலாம். முத்தும் எடுக்கலாம். துணிச்சலும், வாயில வெளக்கெண்ணைய ஊத்திக்கிட்டு கடலுக்கடியில போயித் துப்பி (எங்கம்மா சொல்லுவாங்க, முத்து எடுக்கறவங்க இப்படித்தான் செய்வாங்களாம்) அந்த மாதிரி தேடுனா பிடிபடும்.

எது வேணும்? கரையில நின்னு பாக்குறதா, முங்கி முத்தெடுக்குறதா? இந்தக் கேள்வியும் பதிலும் பலமுறை பட்டிமன்றம் போட்டுப் பாத்துப்புடுச்சுக. இதேதான் உள்ள. எப்ப பாரு ஒரு கேள்வி. கடைசியில இப்புடித்தான் வந்து முச்சந்தியில நின்னுகிட்டு இதுவா அதுவான்னு யோசிச்சு யோசிச்சு குழம்பிக் கூத்தாடி, கடைசியில இதுவுந்தான் அதுவுந்தான்னு சொல்லிக்கிட்டு ரெண்டு பக்கமும் போவாம முச்சந்தியிலேயே நின்னுக்கிட்டு இருக்கும். அப்ப யாராச்சும் வருவாங்க. என்னடா தம்பி இங்கின நின்னுகிட்டு இருக்கன்னு கேப்பாங்க. ஒன்னுமில்ல, சும்மாதான். ஆனா அவங்களுக்குத் தெரியும். சரி சரி வான்னு கூட்டிக்கிட்டு போயி முக்கத்து டீக்கடையில ஒரு டீ வாங்கிக்குடுத்து அனுப்புவாங்க.

இந்த டீ கொஞ்சம் நேரத்துக்கு வேலை செய்யும். நானும் போயி சுறுசுறுப்போட நாலு முங்கு முங்கிட்டு வருவேன். எல்லாத்திலயும் ஒரு மனங்கொள்ளாத சந்தோசம் இருக்கத்தான் செய்யுது. முச்சந்தி, டீ, முங்குறது, உங்களுக்கு இப்படி எளுதுறது, எல்லாத்திலயும்தான்.


[27/11/2003 06:16:42]

ஒரு செவ்விந்தியத் தாக்கம்...

இன்றைக்கு நன்றி சொல்லும் நாள். அமெரிக்காவில. யாரு. யாருக்கு. புதுசா அமெரிக்காவுக்குள்ள நுழைஞ்ச வெள்ளைக்காரனுக்கு சாப்பாடு கிடைக்கலயாம். எதைச் சமைக்க, எப்படிச் சமைக்க, எதைப் பயிரிட. ஒன்னும் விளங்காம திரிஞ்சப்ப செவ்விந்தியன் சோளம் போடவும், வான்கோழி சமைக்கவும், இன்னும் நிறையவும் சொல்லித் தந்தான். அதுக்கு நன்றி சொல்ல ஆரம்பிச்ச நாள்.

ஆனா இப்ப அதுக்கு அர்த்தம் வேற. ஒவ்வொருத்தரும் தங்களுக்குக் கிடைச்சிருக்கும் காருக்கும், வாழ்க்கைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறாங்க.

எங்க பன்னென்டாப்பு ஆங்கில வாத்தியார் நடத்தின ஒரு பாட்டு நினைப்புக்கு வருது. அது கொலம்பசின் கப்பலைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு செவ்விந்திய சின்னப் பையனைப் பற்றியது. அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, தன் இனம் நசுக்கப் படப் போகிறது என்பது.

வடக்கு கரோலினா மானிலத்தில் செரோக்கி என்றொரு இடம். மூனு வருசத்துக்கு முந்தி இளங்கோவோடு போயிருந்தேன். செவ்விந்தியர்கள் வரலாறாய் அந்த அருங்காட்சியகத்தில். சிலைகளாய். படங்களாய். ஒளியும் ஒலியும் காட்சிகளாய். செரோக்கியிலிருந்து, சொந்த மண்ணிலிருந்து, மந்தை மந்தையாக விரட்டி விடப் பட்டார்கள். ஆக்கிரமிப்பு இல்லாத வரலாறு என்பது இல்லையோ? வலிமை என்பது உடல் அல்லது படை வலிமை மட்டுமா? அடுத்தவர் அறையில் நுழைய அனுமதி கேட்கும் இன்றய 'நாகரீகத்தின்' அடியில் அழுகி உரமாகிப் போனது இன்னொரு நாகரீகம்தானே? கேள்விகளோடு செரோக்கியைச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அவர்களுக்கு அரசாங்கம் கொடுத்த வாக்குகள் எத்தனையோ. நம்ம ஊர் மாதிரியே அத்தனையும் காற்றில். ஒரு காரொட்டி (bumper sticker) பார்த்தேன். "You Should Trust the Government. Ask an Indian" (இங்கு இந்தியன் என்பது செவ்விந்தியனை). இன்றும் இருக்காங்க. கொஞ்சமாய். மதுவும் போதைமாய். கொஞ்சம் பேர் சூதாட்ட விடுதி நடத்திக்கிட்டு. சில பேர் ஆசுகார் விருது வாங்கிக்கிட்டு. கனத்த மனசோட வீட்டுக்கு வந்தப்ப ஒரு கவிதை வந்தது:

உன்னோடு, உன்னுள்
ஒரு தோழியாய் விளயாடிக்கொண்டிருந்த
அந்தக் கால்கள்
கடைசியாய்க் கடக்கும் போது
உன்னிடம் என்ன சொல்லிப் போயின, ஓடையே?

0 comments: