ஒரு கொழுப்பில்லாச் சுண்டெலியின் கதை

கொலஸ்டிரால் இல்லாத சுண்டெலிகளைப் பற்றிச் சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையின் சாரம்.

உடம்புல இருக்க செல்ல சுத்தி ஒரு சவ்வு இருக்கு. இந்த சவ்வுதான் செல்லோட வடிவமைப்பையும் வேலைகளயும் கட்டுப் படுத்துது. வெளியிலிருந்து உள்ளுக்கும் உள்ளிருந்து வெளிக்கு சேதிகளையும் இதான் கடத்துது. இந்த சவ்வுல இருக்க முக்கியமான பொருள்தான் கொலஸ்டிரால். ஆனா இதே கொலஸ்டிரால் அளவுக்கு மிஞ்சினா அது இதய நோய்க்கு வழி வகுக்கும் அப்படின்னு உங்களுக்குத் தெரியும்.

கொலஸ்டிரால் ரொம்பக் குறைஞ்சு போனா அது சாவடிச்சுரும்னுதான் பரவலான கருத்து இருந்துச்சு. இப்ப ஆராய்ச்சியாளர்கள் கொலஸ்டிரால் இல்லாத சுண்டெலிகளை உருவாக்கிருக்காங்க. அந்த சுண்டெலிகள் எல்லாரும் நெனச்ச மாதிரி சாகலயாம். பாக்க நல்லாத்தான் இருக்காம். "இந்த சுண்டெலிகள் இந்த அளவுக்கு வளந்தது எங்களுக்கு ரொம்ப ஆச்சரியம்"னு சொல்றார் எலனா ஃபெயின்ஸ்டெய்ன். இவரு இஸ்ரேல்ல இருக்க குவார்க் உயிர்த் தொழில் நுட்ப நிறுவனத்துல இந்த சுண்டெலிகளை உருவாக்குனவர்.

இந்த கொலஸ்டிரால் மூலக்கூறு உடம்புக்குள்ள என்ன வேலை செய்யுதுன்னு புரிஞ்சுக்கிட்டா இதைக்குறைக்கிறதுக்கு மருந்து கண்டுபிடிக்க உதவியா இருக்கும், அப்படின்னு ஃபெயின்ஸ்டெய்ன் சொல்றாரு. உடம்புல கொலஸ்டிரால் உற்பத்திக்கு dhcr (desmosterol reductase) அப்படிங்கற நொதி முக்கியம். இவங்க ஆராய்ச்சிக்குழு dhcr24 அப்படிங்கற மரபணுவ மாத்தி அந்த சுண்டெலிய உருவாக்கிருக்காங்க. அப்ப என்ன செஞ்சுச்சாம், கொலஸ்டிராலுக்குப் பதிலா அந்த சுண்டெலிகள் உடம்புல டெஸ்மோஸ்டிரால் அப்படிங்கற கொழுப்பு மூலக்கூறு உற்பத்தி ஆனுச்சாம். அதனால ஃபெயின்ஸ்டெய்ன் குழு என்ன சொல்லுதுன்னா, சில கொழுப்பு மூலக்கூறுகளை மாத்தி மாத்தி வச்சுக்கலாம்னு.
பொறந்தப்ப அந்த சுண்டெலிகள் சாதாரண சுண்டெலிகளை விட 25% சின்னதா இருந்துச்சாம். அதுகளுக்கு கொழுப்புச் சத்தை உணவுலேருந்து உறிஞ்சுக்கற தன்மையும் குறைஞ்சு போயிருச்சாம். ஏன்னா கொழுப்பை உறிஞ்ச கோலிக் அமிலம் வேணும். கோலிக் அமிலம் தயாரிக்க கொலஸ்டிரால் வேணும். அதனாலதான் கொழுப்பை இந்த சுண்டெலிகளால உறிஞ்ச முடியலயாம். அதோட அதெல்லாம் வளந்ததுக்கப்புறம் இனப்பெருக்கம் செய்யக்கூடியதா இருக்கலயாம். ஏன்னா இனப்பெருக்க உறுப்பெல்லாம் சரியான வளர்ச்சியில்லாம சின்ன சின்னதா இருந்துச்சாம்.

மனுசங்கள்ல ரெண்டு பேருக்கு இது மாதிரி dhcr நொதியில பிரச்சனை இருந்துச்சாம். அவங்க ரெண்டு பேருமே பொறக்குறதுக்கு முந்தியே செத்துப் போனாங்க. இப்படி மனுசங்க சாவறதுக்கும் சுண்டெலிகள் கருவுல சாகாம இருக்கதுக்கும் காரணம் என்னன்னா சுண்டெலிகள் அம்மாவோட உடம்புலேருந்து கொலஸ்டிரால எடுத்துக்குமாம். மனுசப் புள்ளயால அது முடியாதாம். எது எப்படியோ கருவின் வளர்ச்சிக்கு கொலஸ்டிரால் முக்கியம். இன விருத்தி செய்ய கொலஸ்டிரால் முக்கியம். கூடிப்போனாலும் குறைஞ்சாலும் சிக்கல் அப்படிங்கறதுக்கு கொலஸ்டிரால் நல்ல உதாரணம், இல்லயா?

அமெரிக்காவுல மட்டும் 105 மில்லியன் மக்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருக்கு. இந்தியா மாதிரி நாடுகள்லயும் கொஞ்ச கொஞ்சமா ஏறிக்கிட்டு வருது. ரத்தத்துல கொலஸ்டிரால் அதிகமானா அது இதயத்துலயும் மத்த இடங்கள்ல இருக்க ரத்தக் குழாய்களையும் அடச்சுரும். அடச்சுதுன்னா வர்றது மாரடைப்போ அல்லது வாதமோ. ஒழுங்கா உடற்பயிற்சியும், ஆரோக்கியமான சாப்பாடும் கொலஸ்டிராலக் கொறச்சு நோய்நொடி இல்லாம வச்சுக்கும்.

கொழுப்புப் பொருளான கொலஸ்டிரால் மனுச உடம்புல எப்புடி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்க இந்தக் கொழுப்பில்லாச் சுண்டெலிகள் உதவலாம்.

0 comments: