பல்கலைக் கழகங்களும் பாதுகாப்பும்

Dec 19, 2003

ஓரிரு நாட்களுக்கு முன் படித்தேன் (மன்னிக்க, சுட்டி கிடைக்கல). மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வேதியியல் ஆய்வுக்கூடத்தில் தீ விபத்தென்றும், பல லட்ச ரூபாய்கள் சேதமென்றும். கருவிகள், புத்தகங்கள், ஆய்வேடுகள், ஆராய்ச்சி மாணவர்களின் குறிப்பேடுகள் மற்றும் முடிவுகள்...எத்தனை விரயம்.

நம்மூரில் இருக்கும் நல்ல ஆராய்ச்சிக் கூடங்களே சொற்பம். அவற்றுக்குக் கிடைக்கும் பண உதவியோ சொல்லவே வேண்டாம். இந்த மாதிரி நிலையில் நம்மால் தீ விபத்துக்களுக்கும் இன்ன பிற இழப்புகளுக்கும் ஈடு கொடுக்க முடியுமா? சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வுக்கூடங்கள் கண்டிப்புடன் செயல்படுத்துமானால் இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தகுந்த மாதிரியும், நடுவனரசின் பரிந்துரைக்கு ஏற்ற மாதிரியும் ஆய்வக விதிமுறைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் சேருகின்ற ஒவ்வொரு நபருக்கும் முதல் வேலையாக, ஆமாம், சில இடங்களில் வேலையைத் தொடங்கும் முதல் நாளன்றே தற்பாதுகாப்பையும், சுற்றுப்புறப் பாதுகாப்பையும் பேணுவது எப்படி என்பதற்கு வகுப்பு நடத்துகிறார்கள். இவற்றை முடித்த பின்னர்தான் நீங்கள் ஆய்வுக்கூடத்துக்குச் சென்று உங்கள் வேலைகளைத் தொடங்க முடியும்.

உதாரணத்துக்கு உயிரியல் ஆய்வகங்களில் வேலை செய்வோர், ரத்தம், நோய்களை உண்டாக்கும் கிருமிகள், கதிர்வீச்சுப் பொருட்கள் மற்றும் நச்சு வேதிப் பொருட்கள் ஆகியவற்றை முறையாகப் பயன் படுத்துவது எப்படி என்பது பற்றியும், பயன்படுத்தி முடித்த பின்னர் அவற்றை முறையாக எப்படி சுற்றுப்புற மாசுபாடில்லாமல் (அல்லது குறைத்து) கழிவகற்ற வேண்டும் என்பது பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள். இதற்கான விதிமுறைகள் கண்டிப்பானவை. அவற்றைக் கண்காணிக்க ஒரு படையும் இருக்கும். இவர்கள் திடீரென வந்து சோதனை செய்வதுண்டு. குறைபாடுகள் இருந்தால் அந்த ஆய்வகம் தண்டத் தொகை செலுத்த வேண்டும்.

நம்மூரில் இது போன்ற விதிமுறைகளும் கண்காணிப்புக் குழுக்களும் இருக்கலாம். ஆனால் அவை எந்த அளவுக்கு விழிப்புடனும் கண்டிப்புடனும் செயலாற்றுகின்றன என்பது கேள்விக்குரியதே. மாறிவரும் அறிவியல் ஆராய்ச்சி அணுகு முறைகளில் தம்மையும், தம்மோடு வேலை செய்பவர்களையும், சுற்றுப் புறத்தையும் காக்க வேண்டியது அவசியம். அதற்கான விழிப்புணர்வை ஒவ்வொரு மாணவரிடமும் துவக்கத்திலேயே ஏற்படுத்துவது பல்கலைக் கழகங்களின் பொறுப்பு.

0 comments: