Dec 21, 2003
நாட்குறிப்பு எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் எனக்கும் காகிதங்களுக்கும் நடுவில் யாரும் நிற்பதில்லை. இப்போது இந்த வலைப்பூவில் எழுதும்போது நிறைய முகங்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு வரியையும் வார்க்கும்முன் அதற்கான விமர்சனங்கள் மனசுக்குள் தெரிகின்றன. இன்னும் விமர்சனங்களின் பிடியிலிருந்து விடுபடமுடியவில்லை. இது எல்லாருக்கும் இருக்கும்தானே?
எல்லாவற்றையும் எழுதிவிட முடியாதோ? அதற்காகத்தான் கதைகளும் சித்திரங்களுமா? நம்மை யார் முதுகிலாவது ஏற்றிவிட்டு விடுவதா? இது கொஞ்சம் சுற்றி வளைக்கிறது. உள்ளதை உள்ளது மாதிரி எழுதக் கூடாதா? எனக்கொன்று உங்களுக்கொன்று என்று எப்படி இருப்பது அல்லது எனக்கென்று சில மிட்டாய்களைத் தனியே வைத்துக்கொண்டு உங்களுக்கு வேறொன்றைக் கொடுப்பது எப்படி நியாயம்?
ஒரு சமானத்தில்தான் ஓட வேண்டும்.
எழுதுவதன் பொருள் (மேலே சொன்ன 'மேட்டர்') ஒரு பிரச்சனை என்றால் எழுதினது பல கணிணிகளில் தெரியாமல் போவது இன்னொரு பிரச்சனை. நேற்று சுரதாவின்சுரதாவின் குரலைக்கேட்டு அழும் நிலைக்கே போய்விட்டேன். வெப்ட் செயலியை இறக்கினேன். பாதி வரை போனேன். எங்கோ மாட்டிக் கொண்டேன். கணிணியும் படுத்துக் கொண்டது. சரி என்று திரும்பி வந்து தங்கமணியின் மூலத்திலிருந்து (source) scriptஐத் தூக்கிப் போட்டேன். விடமாட்டேன் என்று சபதம் வேறு. கணிப்புலியாய் இருப்பதில் நிறைய நலங்கள். (அய்யய்யோ தெரியாமல் அந்த வார்த்தையைச் சொல்லி விட்டேன். அதுதாங்க, புலி. நாளைக்கு நான் எதுவும் வலைப்பூவில் பதியலன்னா பொடாவில புடிச்சுக்கிட்டு போய்ட்டாங்கன்னு நினைச்சுக்கங்க!)
வெள்ளைக்காரன் காலத்திலிருக்கிறோமோ என்னுமளவுக்குப் பேச்சுச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் அற்றுப் போய்விட்டதா நம் நாட்டில்? எத்தனை வழக்குகள்? உள்ளே தள்ள வேண்டியது. அவர் வெளியே வருவதற்கு முயற்சி செய்தால் வெளியே விடாதே என்று இன்னொரு வழக்குப் போட வேண்டியது. பொடா விவாதத்தில் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கு கொள்ளக்கூடாது என்று வைகோவைப் படுத்திய பாடுதான் எத்தனை? இப்போது பிணையில் வெளியே வந்திருக்கும் நெடுமாறனைப் பிணையில் விடக்கூடாது என்று தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் போட்ட கூப்பாட்டைக் கேட்டு "அரசியல் தலைவர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக்கூடாது என்பதில்லை" என்று கண்டித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதெல்லாம் செவிடன் காதுல சங்கு ஊதுற கதை.
இது பனித் துருவலைப் பற்றிய ஒரு புத்தகக் குறிப்பிலிருந்து எடுத்த படம் (www.nature.com). எல்லாத் துருவல்களுக்குள்ளும் மில்லியன் கணக்கில் நீர் மூலக்கூறுகள் இருக்குமாம். அவை அமைந்துள்ள விதமும் வெவ்வேறாக இருக்குமாம். விளைவு? எல்லாத் துருவல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லையாம். மனிதர்களைப் போலவே. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் உணர்வின் வடிவங்களைப் போல. ஒவ்வொன்றும் ஒரு ரகம். எல்லாவற்றிலும் அழகு இருக்கத்தானே செய்கிறது.
விருமாண்டிப் பாடல்கள் என்னையும் வசியப் படுத்திவிட்டன. சில மனசைத் தழுவும் பாட்டுக்கள். அந்தத் தேனி குஞ்சம்மாவின் குரல். நாலு வரி என்றாலும் நறுக்கென்று. எங்கேயோ சென்று தைக்கிறது. இவர், பரவை முனியம்மா...இது போன்ற நாட்டு ரத்தினங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோருக்கு ஒரு வந்தனம்.
இப்படியாக என் ஞாயிறு விடிகிறது. உங்கள் நாளைக் கொண்டாடுங்கள்.
ஞாயிறு காலை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment