தமிழர்கள் ஓம் என்று சொல்லலாமா?


வயலிலே இருக்கின்ற பயிர்களிலே ஒவ்வொன்றுக்கும் நீர் தேவை. வாய்க்காலில் ஓடி வரும் தண்ணீர் வாய்மடையை அடைந்து வயலுக்குள் நுழைகிறது. பயிர் ஒவ்வொன்றையும் நனைக்கிறது. தண்ணீரைக் காணாத பயிர் வாடும். அதனைப் போலத்தான் நம்முடலின் செல்களும். ஒவ்வொன்றுக்கும் உயிர்வாயு (ஆக்சிஜன்) தேவையாயிருக்கிறது. காற்றில்லாத இடம் மரணிக்கிறது. ஒவ்வொரு செல்லுக்கும் காற்றைக் கொண்டுபோகத்தான் நாளங்களும், நுண்குழல்களுமிருக்கின்றன. அவை காற்றைச் சரிவர ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுபோகும் வழிமுறைகள்தான் யோகாசனங்களும், மூச்சுப் பயிற்சிகளும். சில யோகாசனங்களைச் செய்யும்போது, வளையாத இடங்களை வளைத்துப் பிடிக்கும்போது அங்கே இரத்தம் பாய்வதை உணரமுடியும். இரத்தம் பாய்வது புதிய காற்றைத் தரவும், பழைய கசடுகளை அடித்துக் கொண்டுபோய் வெளியேற்றவும். உடலை வளைக்காது ஒரே வேலையை வருடம் முழுக்கச் செய்யும் இன்றைய சாமானியர் ஒவ்வொருவருக்கும் தேவையானது இத்தகைய இரத்த ஓட்டம். இதனைச் செய்யும் ஒரு முறைதான் ஓம் என்ற உச்சரிப்பு. மூச்சை நன்றாய் இழுத்து ஓ.....ம்........என்று சொல்லிப் பாருங்கள். ம்....என்று குறைந்துகொண்டே போய்க் கடைசியில் ஓசையும் வராத ஓரிடம் வரை செல்லுங்கள். அப்போது உங்கள் செல்கள் காற்றைக் கேட்டுக் கெஞ்சுவதைக் காணலாம். பசிக்கின்ற வயிற்றைப் போல் அது ஏங்கும். காற்றுக் குறைந்த இந்நிலையை hypoxia என்பார்கள். இந்நிலையில் செல்கள் தமது பாதுகாப்புச் செயற்பாட்டை முடுக்கிவிடுகிறன்றன. சாவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளைக் கையாளுகின்றன. இதுவரை சாவென்றால் என்னவென்றே அறியாத, கஷ்டமென்றால் என்னவென்றே அறியாத செல்கள் ஏதோ ஆபத்து என்று தம்முடைய வாழும் திறத்தையெல்லாம் உசுப்பிவிடுகின்றன. இப்போது மீண்டும் காற்றை இழுத்துக் கொள்ளுங்கள். Reoxygenation என்பது இந்நிலை. அது எல்லா செல்களுக்கும் மீண்டும் காற்றை அனுப்புகிறது. இதைப் போலத் திருப்பித் திருப்பிச் செய்வது செல்களின் உயிர்ப்புத்தன்மையைக் கூட்டும். இது செல்களைப் பெரும் ஆபத்துக்களிலிருந்து (severe hypoxia) தப்பிக்க வைக்குமளவுக்கு முன்கூட்டியே தயார்நிலையில் வைத்திருக்கிறது (preconditioning).

ஓம் என்பது ஒரு உச்சரிப்பு. ஒற்றைச்சொல் மறை. மறையென்பது மந்திரம். இவ்வுச்சரிப்பிலிருந்தே அண்டம் பிறந்ததென்பர், மந்திரங்கள் பிறந்ததென்பர், யாவும் இதனுள்ளே அடக்கமென்பர். இவ்வோசையின் பிறப்பையோ, இதிலிருந்து பிறக்கின்றவற்றையோ குறித்து எழுதும் கல்வி எனக்குக் கிடையாது. ஆனால் இவ்வுச்சரிப்பையே பண்டைய தமிழர்கள் தம் உடலை வலிமையாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்தினர். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் பலவிடங்களில் இந்த ஒற்றைச் சொல்லின் மகிமையைப் பேசுகிறார். வளியெங்கும் நிறைந்திருக்கும் காற்றை மட்டும் அள்ளிப் பருகியே உயிர் வாழலாமென்கிறார். இன்றைய ஆராய்ச்சிகளில் மூலச்செல் (stem cell) பற்றிய அறிவு வளர்ந்துகொண்டே வருகிறது. மனிதவுடலில் எல்லா வயதிலும் இந்த மூலச் செல்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. கருவிலே குழந்தையாயிருந்தபோது இருந்த செல்களின் ஒரு தொகுதி இன்னமும் அழியாமல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருந்துதான் உடலின் மற்ற இடங்களுக்கு மூலச்செல்கள் நகர்ந்து சென்று மாறுபாடடைந்து வெவ்வேறு வகையான வேலைகளைச் செய்யக்கூடும் என்கிறது இன்றைய அறிவியல். இந்த மூலச்செல் டெப்போவைத்தான் திருமூலர் "மூலாதாரம்" என்கிறாரா? "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து" என்கிறது விநாயகர் அகவல். கால் என்பதற்கு காற்று என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த மூலாதாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழிமுறைகள்தான் ஓம் என்ற உச்சரிப்பின் வழியான மூச்சுப் பயிற்சியும், மற்றபிற யோகாசனங்களும் என்று தோன்றுகிறது. இதனைக் குறித்த முறையான அறிவியல் ஆய்வுகள் பெரிதும் இல்லை. பண்டைத் தமிழர்கள் கைக்கொண்டிருந்தவைதாம் இந்த முறைகளெல்லாம். சித்தர்களும், மொழியறிஞர்களும் தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்தவைதாம். ஆனால் இன்றைய நிலையில் இப்பயிற்சிகள் மதங்களுக்குள் சென்று பிணைந்துகொண்டதால், மதம்சாரா தமிழர்கள் விலகியே நிற்கிறார்கள். நாம் நம்மைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குட்பட்ட, அரசியல் நிலைகளால் திசைதிருப்பப்படுகின்ற சமூகமாக உணராமல், அதற்கும் முற்பட்ட செல்வ, இலக்கிய, வாழ்வியல் செழிப்புற்ற சமூகமாக உணரவேண்டும். யோகாசனம், மூச்சுப் பயிற்சி முதலான இத்தகைய பயிற்சிகளை நம்முடையன என்ற உரிமையோடு மீண்டும் கைக்கொள்ள வேண்டும். வலிமையான வாழ்வினை நாமும் வாழ வேண்டும். அழகிய, வலிய உடலை நாமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். பதினெட்டுச் சித்தர்களும் நம்முடையவர்கள் என்ற உரிமை நமக்கு வேண்டும். அவர்கள் போதித்த மருத்துவமும், ஆன்மீகமும் தமிழரதுதான் என்ற விழிப்பு வேண்டும்.

6 comments:

said...

சைவத்தின் பெருமைகள் இன்று சிதறிக் கிடப்பதனாலும் பல்வேறு உட்புகுத்தல்களாலும் வாய்ப்பான பொழுதுகளில் எல்லாம் வசைபாடுகிறார்கள். கேட்டால் பகுத்தறிவாம்... பகுத்தறிதல் என்பது என்னவென்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
சைவம் கூறுவதைக் கலப்படமில்லாது கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்

நன்றி உங்கள் ஆக்கத்திற்கு.

said...

சுமன், சைவம் என்பது சிவநெறியின் திரிபு என்பதாகப் படித்திருக்கிறேன்.
//கலப்படமில்லாது // ஆமாம், நிறுவனமயப்படுத்தல் என்ற கலப்படமின்றி!
நன்றி.

said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து ஓர் அறிவியல் சார்ந்த கட்டுரை!! அருமை!!

said...

வாழ்வின் அழுத்தங்கள் கூடியிருந்த நாட்களில் இந்த யோகா, மூச்சுப் பயிற்சிகளுக்காவது நீ இவ்வகுப்பில் சேர்ந்து பார் என நண்பர் ஒருவர் வற்புறுத்த சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டிருந்தேன். அப்போதும் குருவை ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை:)) அது ஒரு மதம் சாராத அமைப்பு என அவர்கள் சொல்லிக்கொண்டாலும், இன்றைய தேதியில் ஒர் பெரிய வணிக நிறுவனம் போல்தான் வளர்ந்து நிற்கிறது. உங்களின் இந்த இடுகையைப் படித்த பின்பு இதில் ஏதாவது செயல்வடிவில் இயங்க வேண்டும் என உந்துதல் ஏற்படுகிறது, ஆர்வக் கோளாறில் ஆரம்பித்த சிலதை பாதியில் விட்ட புத்தி உறைத்த போதும்:)) நன்றி.

said...

சுந்தரா,
நிறுவன மயப்படுத்துததல் என்ற கூற்றின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

திருமூலர் கூறிய அத்தனையும் உடலறிவியல் சார்ந்ததுதான் என்பது உன் நிலையா?

said...

அறிவு:
தாமதமான பதிலுக்கு மன்னிக்க.

//நிறுவன மயப்படுத்துததல் என்ற கூற்றின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.//

முதலில் நான் அவ்வார்த்தையை ஏன் பயன்படுத்தினேன் என்ற சூழலை நோக்குகிறேன். சுமன் என்பவர், மேலே கூறிய மறுமொழியில், சைவ சமயத்தின் பெருமைகளைக் குறைகூறுவதைக் குறித்துத் தான் வருத்தப்படுவதோடு, பகுத்தறிவு என்று சொல்பவர்கள் அனைவரையும் ஒதுக்கித்தள்ளிப் போவதுபோல் ஒரு தொனி எனக்குத் தென்பட்டது. மேலும் சைவம் கூறுவதைக் கலப்படமில்லாது கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இக்கூற்று தெளிவாகவே இருப்பினும், அதனை இந்துமதக் காவலர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள்/ பகுத்தறிவுவாதிகளை இகழும் நோக்கம் கொண்டவர்கள் "ஆமாம், இது எங்கள் மரபு" என்று வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடக்கூடும் என்ற உணர்விலேயே, நிறுவனமயப்படுத்தல் இதில் கலந்துவிடலாகாது என்று குறிப்பிட்டேன். நிறுவனமயம் என்பது இந்துமதமாயிருக்கலாம், அல்லது இன்னும் சிலகாலத்தில் அமெரிக்க மிஷனரிகள் தங்கள் தேவாலயத்திலேயே யோகா வகுப்பு நடத்தி அதற்கு வேறொரு அடையாளம் தர முற்படலாம், அல்லது வேறு எந்த மதமோ தம்முடைய சொத்து இதுவென்று கூறிக்கொள்ள முற்படலாம். அத்தகைய ஆக்கிரமிப்பிலிருந்து இப்பயிற்சி முறைகளைக் காத்துப் "பொதுமை"யிலேயே வைத்திருக்கவேண்டும் என்பதுதான் அம்முனிகளின் நோக்கமாயிருக்கக் கூடும். அடையாளங்கள், மதங்கள், நம்பிக்கைகள் என்பவற்றோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களாக அவர்கள் தெரியவில்லை. உதாரணமாகத் திருமூலர் சொல்லும் சிவனை அவரைப் போலவேதான் நாமும் புரிந்திருக்கிறோமா என்று கேட்டுக்கொண்டால், அவருக்கும் நமக்கும் (அல்லது இன்றைய ஷிவ்சேனாவுக்கும்) இருக்கும் வித்தியாசம் புரிந்துவிடும். அவர்கள் பயின்றதும் பயிற்றுவித்ததும் 'மானுடம் பயனுற வாழ்வதற்கே'. இவற்றை 'இந்து'மத அடையாளமென நினைத்து/மயங்கிப் பகுத்தறிவாளர்கள் பலர் தம் உடலைப் பேணாதொழிவதோடு அதனூடாகக் கிடைக்கும் ஆன்மீக அனுபவத்தையும் இழக்கிறார்கள் என்ற எனது ஏக்கமே இப்பதிவின் நோக்கம். நிற்க. நிறுவனம் என்பதை நான் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் மேல் நிறுவப்பட்ட அமைப்பு என்றே கொள்கிறேன். இவை பெரிதும் மாறுவதில்லை. உதாரணமாக கிறிஸ்தவம், இசுலாம், இந்து போன்ற மதங்கள். அவற்றுக்கான தர்மங்கள், நூல்கள் என்பன வரையறுக்கப்பட்டுவிட்டன. அதன்படி ஒழுகினால் போதுமானது. நிறுவனத்துக்கு மாறானது இயக்கம் என்று நினைக்கிறேன். இயக்கம், அதன் பெயருக்கேற்றாற்போல் கால நிலைகளுக்கேற்றாற்போல் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்கிறது. இதன்மூலம் மாற்றம் என்பதன் பின்னுள்ள இயற்கைத் தத்துவத்தைப் புரிந்துகொள்வதோடு, அதனோடு இயைந்திருக்கும் மனிதர்களின் மாறுதல்களையும் உள்வாங்கிக்கொண்டு மாறிக்கொள்கிறது. இயக்கமானது புனித நூல்களென்று எதையும் கொள்வதில்லை. பெரியாரின் பகுத்தறிவு இயக்கமானது இயக்கம் என்ற பெயரிலிருந்தாலும் அது நிறுவனத்திற்கான சகல பண்புகளோடும் சுருங்கிவிட்டதென்றே தோன்றுகிறது.

//திருமூலர் கூறிய அத்தனையும் உடலறிவியல் சார்ந்ததுதான் என்பது உன் நிலையா?
நிச்சயமாக இல்லை. அவரது/சித்தர்களது பயிற்சி முறைகள் உடலைத் தாண்டிய ஒரு அனுபவத்தை, அதனை ஆன்மீகமென்றும் சொல்லலாம், மெய்யறிதலென்றும் சொல்லலாம், தருகின்றன என்பதே மெய். அவையே உடலையும் பேணுகின்றன. உண்மையில் பார்த்தால், மனமின்றி உடலோ உடலின்றி மனமோ இயங்குவது இயல்பாக இராது. ஒன்றினுக்குக் கொடுப்பது இன்னொன்றுக்கும் கொடுப்பதாகிறது. உடற்பயிற்சி செய்தால் மனமும் கனமற்றுப் போகிறதைப் பலரும் சொல்லக் கேட்கிறோமல்லவா?! கேள்விகளுக்கு நன்றி!