மாத்திருவோம்ல!

ஏய் மாத்திப்புடுவேன்
அன்னக்கி வாங்குன மாத்து பத்தாதா?
மாத்துடா அவனை...

இவையெல்லாம் மதுரைப் பக்கத்தில் 'அடி' என்பதற்கு 'மாத்து' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதைக் காட்டும் சில சொற்றொடர்கள். உங்களுக்கே தெரியும், மாத்து என்ற வார்த்தையின் தூய வடிவம் 'மாற்று'. எப்படி 'காத்து' என்பது 'காற்று' என்பதைக் குறிக்கிறதோ அதைப்போலத்தான் இதுவும் மாத்து=மாற்று. இந்த மாற்று என்ற வார்த்தை மாறு என்ற வார்த்தையிலிருந்து பிறந்திருக்கக் கூடும். மாறு என்பதற்கு பிறம்பு, மிலாறு என்ற பொருட்கள் உண்டு. இவை நாணல் வகை. தடித்தவற்றைத் தடியாகக் கொள்ளலாம். பிறம்புத் தடி. மெலிந்த நாணலை ஒன்று சேர்த்துக் கட்டுவது விளக்கு-மாறு. மிலாறு என்றும் சொல்லப்படுவதுண்டு. அடிப்பதற்குப் பயன்படுவது பிறம்பு. மேய்ப்பர்கள், காவலர்கள், வேட்டைக்காரர்களிடமிருந்தது பிறம்பு. அதையே அடிப்பதற்கும் பயன்படுத்தினார்கள். "மாற்றை"க் கொண்டு அடிப்பதனால் அது மாற்று என்றாகிப் பிறகு மாத்து என்று திரிந்தது. (இந்தியில் அடிப்பதற்கு "மார்" என்றுதான் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை தமிழிலிருந்து போயிற்றா என்பதை ஆராய்வதல்ல என் நோக்கம். மாறாக, மாறு என்பதைச் சுற்றியமைந்திருக்கும் வேறு சில தமிழ்ச் சொற்கள் எப்படித் தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன என்ற வியப்பே இவ்விடுகையின் நோக்கம்!).

பழம்பாண்டி மண்டலத்தில் மாறை என்றொரு நாடு இருந்திருக்கிறது (மண்டலம் என்பது பெரும்பகுதி, நாடுகள் என்பவை மண்டலத்தின் உட்பகுதிகள்). அக்காலத்தில் நிலத்தின் பண்புகளைக் கொண்டே பெரும்பாலும் ஊர்களின் பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாறு நிறைய வளர்ந்திருந்த இடம் மாறை என்பதாக இருந்திருக்கலாம். மாறோகம், மாறோக்கம் என்பனவும் கொற்கையைச் சூழ்ந்த பகுதிகள் (பழம்பாண்டி நாடு). இப்பகுதியை ஆண்டவர்கள் (ஆண்ட மன்னர்கள்) பாண்டியர்கள். இவர்களில் பலருக்கு மாறன் என்ற பெயர் உண்டு. நெடுமாறன், இளமாறன் போன்றவை. பிறம்பு என்பது தடி மட்டும் அல்ல. அதுவே கோலும் கூட. கோலைக்கொண்டு நல்லது செய்பவன் செங்கோலன். அல்லது செய்தவன் வெங்கோலன். கோலைக்கொண்டு (மாறைக் கொண்டு) ஆட்சி செய்தவன் என்பதால் அவன் மாறன் என்றும் அறியப்பட்டிருக்கலாம்.

வார்த்தைகளின் பின்னே சுழன்று சுழன்று ஓடுவது ஒருவித மயக்கத்தையும் கிளுகிளுப்பையும் தருகிறது. எதையோ கண்டுகொண்டது மாதிரியான நிறைவையும் தருகிறது. அறிதோறும் அறியாமை காண்பது அறிவு என்ற விழிப்பையும் தருகிறது. விழித்துத் தோண்டத் தோண்டச் சுரந்து தருவதற்கு எந்தாய்த் தமிழிருக்கிறது!

உசாத்துணை: செந்தமிழ் அகராதி, தொகுப்பாசிரியர் - ந.சி.கந்தையா, 1987. EVS Enterprises, Singapore.

0 comments: